Psycho analysis -ஐ களமாக கொண்டு எழுதப்பட்டிருக்கும் தமிழ் நாவல். மருத்துவப் பட்டதாரி மாணவன் ஒருவனின் தற்கொலை என்ற புள்ளியில் இயங்கும் கதை, தற்கொலைக்கான காரணத்தை அறியும் அலைக்கழிப்பில், கடந்து வரும் மனித மனங்களுடைய அலைவுகளின் அத்தனை பரிமாணங்களையும் அதன் அவலங்களையும் சில்லுசில்லாக பகுப்பாய்வு செய்கிறது. அத்தனையும் கூறுப்போடப்பட்டப்பின் மிச்சமிருக்கும் உண்மையின் கசப்பு எந்தவொரு சமரசமுமின்றி அப்பட்டமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மயிலன் ஜி சின்னப்பன் (மயிலன் சின்னப்பன்) (ஜூன் 12, 1986) தமிழில் சிறுகதைகள் எழுதிவரும் எழுத்தாளர். மருத்துவராகப் பணிபுரிகிறார். தமிழ் வரலாற்றில் இருந்தும் மருத்துவத்துறையில் இருந்தும் உளவியல் கோணத்தில் புதிய கருக்களை எடுத்து சிறுகதைகள் எழுதிவருபவர்.
நூலின் பெயர் மற்றும் மொழி வளம் குறித்த விமர்சனங்கள் என்னை வாசிக்கத் தூண்டின. "Psycho Analysis" எனும் குறிப்பு புதிதாய் இருந்த போதும், பிரபாகரனின் சாவிற்கு யார் காரணம் என்ற கண்ணோட்டத்திலேயே வாசிக்கத் துவங்கினேன். சில பக்கங்களிலேயே அக்கண்ணோட்டம் தவறு என்றுணர்ந்து இவ்வொரு வார்த்தையையும் உள்வாங்க ஆரம்பித்தேன். உண்மையிலேயே அவ்வளவு ஆத்மாத்தமான, நான் ஏங்கும் கலப்படம் இல்லாத தூய தமிழ்! மற்றும் இக்காலத்தில் அரிதாகிப் போன வளமான மொழி நடை! இந்நூலின் ஒருவொரு வரியையும் அடிக்கோடிட்டுக் கொண்டே இருக்கலாம்...
ஓர் எதிர்மறையான விஷயத்தை மையமாகக் கொண்டு வாழ்க்கையின் பெரும் புரிதலை உணர்த்தி விட்டார் ஆசிரியர். ஒரு மரணம்/தற்கொலை சுற்றி உள்ளவர்களை எப்படியெல்லாம் பாதிக்கிறது, என்னவெல்லாம் செய்யத் தூண்டுகிறது என்பதைக் கண்முன் நிறுத்துகிறார். ஒரு மனிதனை முழுமனதுடன் பாராட்டக்கூட முடியாத, அவன் சாதனையில் குறை கண்டு அதில் தன் தாழ்வு மனப்பான்மையை சரி செய்து, இறந்தவன் தானே என்று அவன் மேல் அவதூறாக குற்றங்களை சுமத்தும் குரூரங்கள் அனைத்தும் எதார்த்தங்களே என்பதை ஓர் ஈன மனிதப்பிறவியாய் உணர்கிறேன்.
மருத்துவத் துறையில் இருக்கும் அரசியல் மற்ற துறைகளைக் காட்டிலும் அதிக விஷத் தன்மையோடு இருக்கிறது போல. ஆசிரியர் முன்னுரையில் சரியாகக் கூறியது போல நாம் வேலை செய்யும் துறைகள் யாவும் வசிக்கத் தகுதியற்ற, வேட்டையாடப்படும் இடங்களாகவே மாறிவிட்டன. நம் இருப்பையே சோதிக்கும் அளவிற்கு நச்சுத்தன்மையோடு இருக்கின்றன.
குட்ட குட்ட சகித்துத் கொண்டு குனியச் சொல்கிற உலகம் என்றும் குட்ட வேண்டாம் என்று சொல்வதில்லை. The world is not for the weak/inferior. - இதுபோல் நம் முன் வைக்கப்படும் சில வாழ்க்கைக் கருத்துக்கள் மனதை ஏதோ செய்கின்றன. முடிவில், தற்கொலைக் கடிதம் இருந்தால் என்ன ஆகும், இல்லையானால் என்ன ஆகும் என்று ஒரு பெரும் தாக்கத்தைத் தரக்கூடிய கருத்தை ஆசிரியர் வைத்துள்ளார். அதுபோல் நான் யோசித்தும் இல்லை, எங்கேயும் வாசித்தது இல்லை! அசந்தே விட்டேன்.
பல அதிர்வுகளை உருவாக்க கூடிய ஓர் அழுத்தமான படைப்பிது! இவ்வருடத்தின் சிறந்த வாசிப்பு இந்நூலே! மற்றுமோர் முறை கட்டாயம் வாசிப்பேன். I'm not sure if I will recommend it to others as it is a heavy subject with triggers like death & suicide. But I assure you that once you look past that in this book, it will definitely be a read that will shake you to your core. TRIGGER WARNING: DEATH, SUICIDE.
One of the best Tamil writing I've read in recent times. A breath of fresh air. Deeply articulate novel dealing with psychological analysis in the aftermath of a death, brilliantly capturing the diverse nature of human desires and characters. Absolutely razor-sharp wit and brilliance in the narration. I had to highlight lines that I liked almost in every page, such was the beauty and quality of writing.
சமீப காலங்களில் படித்த மிகச்சிறந்த நாவல். அநேகமாக மருத்துவ மேற்படிப்பு மாணவர்களை, அவர்களின் அல்லல்களை களமாகக் கொண்ட தமிழின் முதல் நாவலாக இது இருக்கலாம். ஒரு மருத்துவ மாணவனின் தற்கொலையில் தொடங்கும் நாவல், அவனின் நண்பனின் (அல்லது அவ்வாறு கருதப்படும்) பார்வையில் , தற்கொலைக்கான காரணத்தை தேடும் பெரும்பிரயத்தனமாக விரிகிறது. மனிதர்களின் உளவியலை பகுத்துப்போட்டு அதன்வழி உண்மையை கண்டறிய கதைசொல்லி முயல்கிறான். அதனூடாக நாவல் முழுவதும் விரவிக் கிடக்கும் உளவியல் தத்துவங்களும், மனிதர்களின் ஆழ்மன வஞ்சங்களும், இச்சைகளும், அந்தத் தற்கொலைக்கு பலகோணங்களை தருகின்றன. இறுதியில் வரும் "சாவு" என்ற அத்தியாயம் கனம் மிக்கது. நாவலின் உச்சமென அதை சொல்வேன். சமகாலத்தின் தவறவே விடக்கூடாத நாவல்.
நான், தன், சுயம் எனும் மிகச் சிறிய வார்த்தைகள் மிக மிகப் புதிரானது, புரிதலுக்கு அப்பாற்பட்டது, அனைத்தையும் விஞ்சி நிற்பது.
தன்னிலிருந்து எழுதல் ஆன்மீகம், தன்னைக் கைவிடுதல் லௌகீகம். இரண்டுமே சமூகத்தில் மிகப் பெரிய அதிர்வுகளை உண்டாக்குகின்றன. முன்னது பிரமிப்பை, பரவசத்தை, நேர்மறையைத் தருகிறது என்றால் பின்னது பதட்டத்தை, ஒரு நிலையின்மையை ஏற்படுத்துகிறது.
அதனால் தான் தற்கொலை என்கிற செயல் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் எனப் பாகுபாடின்றி அனைவரையும் புரட்டிப் போடுகிறது. ஏன், எதனால், எப்படி என ஆய்வு செய்யும் வேட்கையை அனைவரிடமும் உண்டாக்குகிறது. அது இறந்தவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக அல்ல மாறாக இருப்பவர்களை, நமது இருப்பைப் பற்றிப் புரிந்துகொள்வதற்காக.
ஒரு செயல், ஒரு நகர்வு, ஒரு முடிவு எதுவும் சட்டென்று, உடனடியாக நடந்துவிடுவதில்லை. அப்படியான உடனடிகளுக்கு முன் பின், நம் அறிதலுக்கு வராத பல்லாயிர விசைகள் இருக்கும்.
உச்சி முனை வரை ஒருவனைக் கொண்டு சென்ற, அழுத்திச் சென்ற விசைகள், நகர்வுகள் என்னென்ன எனக் கூறு போடுகிறது “பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்”.
வாழ்க்கையில் ஒருவர் எடுக்கும் முடிவுகளுக்கும் செயல்களுக்கும் அதுவரையிலான அவர்களின் அறிதலும், புரிதலும், வாழ்க்கைச் சூழலும், வாழ்க்கை முறைகளும் காரணமாகிறது. தனிமனிதனாகப் பார்க்கும்போது அது அவரவர் வாழ்க்கை.
ஆனால், ஒரு சமூகமாக ஒரு கூட்டு வாழ்க்கை முறையில் நம் செயல்களோ, முடிவுகளோ அடுத்தவரைப் பாதிக்குமெனில் அங்குத் தான் சில சட்ட திட்டங்கள் கட்டுப்பாடுகள் அவசியமாகிறது.
நாவலில் வரும் மருத்துவர் மயில்சாமி போன்றவர்கள் பொதுவாக எல்லாத் துறைகளிலும் இருப்பவர்கள். அடிமட்டத்திலிருந்து கஷ்டப்பட்டு உழைத்து வந்திருந்தாலும் தாங்கள் அடைந்த அவமானங்களை, கஷ்டங்களை, வன்முறைகளை அடுத்தவர்கள் மீதும் பிரயோகிப்பார்கள். Skillful, ஆர்டிஸ்டிக் என்பது அவர்களின் திறமையேயன்றி குணத்தை வரையறுப்பதில்லை.
அவர்கள் எத்துறையினராய் இருந்தாலும், அடிப்படை பண்புகள் மாறுவதில்லை… பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் கூட (Even though they are victim).
இந்தக் கதையில் வரும் சதாசிவம் தொடங்கி அன்வர் வரை அவர்களின் நடவடிக்கைகளுக்கும் செயல்களுக்கும் தனிமனிதர்கள் என்கிற சலுகையை அளித்து விட முடியாது. சட்டப்படியும் அவர்களுக்குத் தண்டனைகள் கிடையாது. ஆனால், அவர்களின் மனசாட்சியை இந்தச் சமூகம் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும்.
இந்த நாவல் பதிவு செய்திருக்கும் மனக்கூறு ஆய்வுகள் நம்முள் எண்ணற்ற கேள்விகளை எழுப்புகிறது. நாம் யார், பிரபாகரனா, சதாசிவமா, அன்வரா, மணியா, லீமாவா இல்லை கதைசொல்லியா… அல்லது பிரபாகரனின் பெற்றோரா?
ஒருவரின் பால்யகாலம் என்பது இந்த உலகத்தில் அவர்கள் வாழும் ஒட்டுமொத்த வாழ்க்கையை அவர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் காலகட்டம்.
அந்தப் பால்யகாலத்திற்கான பொறுப்பாளி பெற்றோர்களும் ஆசிரியர்களும் தான். இவை ஆரோக்கியமாக அமைந்தவர்களுக்கு மயில்சாமிகள் ஒரு பொருட்டே அல்ல.
அஸ்திவாரம் பலமாக இல்லாத கட்டிடங்கள் சாதாரணக் காற்றுக்கே சரிந்து தான் போகும்.
தம் ஆசைக்காக, கௌரவத்திற்காக, சமூகத்திற்காகக��� குழந்தை பெற்றுக்கொள்பவர்களும் சரி வளர்ப்புப் பிராணி வளர்ப்பவர்களும் சரி அதன் பொறுப்புகளையும் அந்தப் பொறுப்புகளின் முக்கியத்துவத்தையும் உணர்வதில்லை… தம் ஆசைக்காகக் கதை எழுதுபவர்களும் கூட.
மருந்துகளின் பாதகங்களையும் மீறி அதன் சாதகங்களே அதன் தேவையை முடிவு செய்கிறது. ஆனால், அந்த மருந்துகள் தேவைப்படுபவர்களின் உடல் கூறுகளைப் படித்து வரும் மருத்துவர்களுக்குத் தான் அதைத் தீர்மானிக்கும் பொறுப்புகள் உண்டு.
இது துறை சார்ந்த பிரச்சனையல்ல தினசரி வாழ்க்கையில் ஒழுங்கியலை கைக்கொள்வது அவரவர் குணம், மனம் சார்ந்தவை.
நம் இக்கட்டுகளுக்கான தீர்வுகளை நாம் வாழ்ந்த வாழ்க்கையின் தரமே நிர்ணயிக்கிறது.
ஒரு கூராய்வின் கூறு முறையோடும் மர்ம புனைவின் சுவாரசியத்தோடும் வேகமாக நகரும் கதையில் சொன்னதையே திரும்பச் சொல்லி ஆங்காங்கே தொய்வும் ஏற்படுகிறது.
ஒன்றின் மீது வைக்கும் விமர்சனங்கள் அந்த ஒன்றை மட்டுமல்ல அதை விமர்சிப்பவரையும் யார் என்று சுட்டுகிறது. அப்படியே பிரபாகரனை விமர்சிக்கும் கதைசொல்லியும்.
ஆரம்பத்திலிருந்து கதைசொல்லி பிரபாகரனைப் பற்றிய தன்னுடைய எதிர்மறை பார்வைகளைச் சொல்லும்போது அவை வலிந்து திணித்தவையாகவே உணர முடிகிறது.
அதிலொரு இயல்போட்டம் இல்லாமல் போவதற்குக் காரணம் கதைசொல்லியின் மனதில் ஏற்கனவே தொகுக்கப்பட்ட கதாபாத்திரம் பிரபாகரன் என்பதால் தான் என்பதைப் பின்னர் பகுதி இரண்டில் கதைசொல்லியே அதை விவரிக்கும்போது புரிகிறது.
பிரபாகரனின் திறமை மேலிருக்கும் மதிப்பை, அவனது ஆளுமை மேலிருக்கும் ஈர்ப்பை கதைசொல்லியின் எதிர்மறை வார்த்தைகள் மறைக்கவில்லை. மாறாக அது படிப்பவரின் மனதிலும் பிரபாகரனை ஒரு நாயகன் அந்தஸ்திற்கு உயர்த்துகிறது.
இந்த நாவல் ஒரு பார்வை மாற்றத்தை அல்லது நாம் உணர்ந்த ஒன்றின் மீது ஒரு அழுத்தத்தை நிச்சயமாக ஏற்படுத்துகிறது.
A wonderful psychological fiction in Tamil. The author delves deeper into the minds of all characters that revolves around the protagonist's life and goes on to explain the motives, internal action and circumstances that explain their external action - the figurative post-mortem of Prabakaran.
மருத்துவம், கணினி போன்ற துறைசார் பின்புலத்தில் இருந்து தமிழில் எழுதபவர்கள் குறைவு. அதில் புனைவு எழுதபவர்கள் குறைவு.அதிலும் குறிப்பாக மருத்துவத் துறையில் இருந்து புனைவு எழுத வருபவர்கள் என்பது மிகக் குறைவு.
அந்த வகையில், மருத்துவர் மயிலன் ஜி சின்னப்பன் எழுதிய, ''பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்'' சமீபத்தில் கண்ணில் பட்டது. அமேசான் கிண்டிலில் வாசித்தேன்.
ஒரு சாமானியன் தனது வாழ்க்கையை வாழ்வது என்பது ஒரு வெள்ளைத் தாளில் 'வாழ்க்கை' என எழுதி அழைத்துவிடும் விளையாட்டு அல்ல. அவன் விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்குக் கிடைத்த இந்த மனித இருப்பை அவன் மிகுந்த பிரயத்தனப்பட்டுத்தான் பயணித்து கடக்கவேண்டி இருக்கிறது. பிறப்புக்கும், இறப்புக்குமான இந்தப் பயணத்தில் தான் எத்தனை துயரம் ? எத்தனை துரோகங்கள், இடர்பாடுகள், கயமைகள் .. இவற்றை எல்லாம் அவன் சகித்துக்கொண்டுதான் இந்த வாழ்வை வாழ வேண்டியிருக்கிறது.
இந்த வாழ்வை எதிர்கொள்ள விரும்பாதவர்கள், இந்தக் கீழ்மைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள விரும்புபவர்கள் தற்கொலை எனும் பாதையைத் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்.
இதுபோன்றதொரு தற்கொலையில் தான் மயிலன் ஜி சின்னப்பனின்
‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ துவங்குகிறது. அந்த துர்மரணத்தின் மறுபக்கத்தை ஒரு நண்பன் அறிந்து கொள்வது தான் கதை. உண்மையில், வாழ்க்கையில் ஒருமுறையேனும் தற்கொலை எண்ணம் ஏற்படாதவர்கள் வெகு குறைவு என்பதே நிதர்சனம். மயிலனின் இந்தப் படைப்பு மருத்துவத்துறையின் உள்ளிருந்து இயங்குபவர்களின் சிக்கல்களைப் பல அடுக்குகளில் சொல்லிச் செல்கிறது . மருத்துவத் துறையை வெளியில் இருந்துப் பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு அதனுள் நடக்கும் பல விசயங்கள் அதிர்ச்சி தருகின்றன.
கதை துப்பறியும் நாவல்களைப் போல மேலோட்டமாக இல்லாமல் தத்துவார்த்தமான விசயங்களையும் அலசுகிறது. உண்மையில், ஒரு தற்கொலை என்பது மரணிப்பவர்களுக்குப் பூரண விடுதலையைத் தந்து விடுவது இல்லை. மரணித்தவனை அதுவரைத் தன் வாழ்வில் சந்தித்த மனிதர்கள் தங்கள் நினைவுகளின் வழியாக ஏதோ ஒருவிதத்தில் அவனைப் பின்தொடரவே செய்கிறார்கள். அவர்கள் தங்கள் கீழ்மையான எண்ணங்களின் ஊடாகவே அவனுக்குத் துலக்கம் அளிக்கிறார்கள் என்பதை அழுத்தமாக சொல்லும் கதை.
முதல் படைப்புகே உரிய ஓரிரு குறைகள் இருந்தாலும் (எ.டு. இறுதியில், இணைப்பாக ஆசிரியர் 'ஆசிரியராக' தன்மையில் சொல்லி இருக்கும் சில அத்தியாயங்கள். கண்ணில் படும் எழுத்துப் பிழைகள் -இது மயிலனின் தவறல்ல. இது பதிப்பக வேலை)
மற்றபடி, 'பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்' மூழமாக தமிழ் எழுத்துலகுக்கு மயிலன் ஜி சின்னப்பன் எனும் ஒரு சிறந்த படைப்பாளர் கிடைத்திருக்கிறார் எனத் தயங்காமல் சொல்லலாம். வாழ்த்துகள் மயிலன் !
ஒருமுகமான கருவை கொண்ட கதை என்றாலும் சிறிதும் தொய்வின்றி தங்கு தடையில்லாமல் கோர்வையாக எழுதியிருக்கும் மயிலன் ஜி சின்னப்பன் அவர்களுக்கு மனவுமந்த பாராட்டுக்கள்.
பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் என்னும் தலைப்பு சிலேடை தான். தற்கொலைக்கான காரணங்களை எந்த ஒரு கடிதத்திலும் எழுதாமல், எந்த ஒரு நண்பனிடமும் பகிராமல் இறந்து போகிறான் பிரபாகரன் என்னும் அறிவு ஜீவியான ஆனால் ஆன்டி சோசியலாக இருக்கும் மருத்துவ மாணவன்.
பிரபாகரனின் மற்ற நண்பர்கள் அதை பற்றி ஆராயாமல் இருக்கும் போது, கதையின் நரேட்டர் மட்டும் ஆர்வமிகுதியில் இந்த தற்கொலையின் பின்னணியை புரிந்து கொள்ள பெருமுயற்சி எடுக்கிறார்.
இந்த முயற்சியில் பிரபாகரை தெரிந்த பல மனிதர்கள் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களும் கதைகளும் கற்பனைகளும், அந்த மனிதர்களின் மன உளைச்சல்கள் மற்றும் சிறுமைத்தனங்களை போஸ்ட் மார்டம் செய்வது போல அமைகிறது. இந்த தேடலில் நரேட்டரரூம் தன்னை உணர்ந்து கொள்கிறார்.
அதே நேரம் ஒரு லட்சியவாத மருத்தவ மாணவன் இந்த வியாபார உலகத்தில் சந்திக்க கூடிய ஏமாற்றங்கள் அவனை தற்கொலை வரை தூண்ட கூடுமோ என்ற கேள்வியை வைக்கிறது.
இளைஞர்களின் மன தாக்கங்களை உணர்ச்சி பூர்வமாக கூறியதில் தேவன் எழுத்துக்களை ஞாபக படுத்துகிறார் ஆசிரியர்.
பெயர் என்னவோ "பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்" ஆனால் இது ஒரு சமூகத்தின், அதில் உயிருடன் வாழும், வலம்வரும் மனிதர்களின் போஸ்ட்மார்ட்டம்/psycho analysis. நமது சமூகத்தின் ஒரு அங்கமாக விளங்கும் மருத்துவ துறையை, குறிப்பாக, ஐந்தாண்டு படித்து முடித்தாலும் ஒரு பெரிய மருத்து��ருக்கு குறைந்தது மூன்றாண்டுகளாவது அடிமையை போல் உழைத்து தான் தனி ஒரு மருத்துவராக காலூன்றும் நிலையை, ஒரு மருத்துவர் வாயிலாக கேட்பது அதிர்ச்சியாக தான் உள்ளது. "நீங்க தான் doctor கடவுள் மாதிரி", இந்த வசனத்தை எத்தனை முறை எந்த வழியில் கேட்டிருபோம் ?
Dr . மயிலான் சின்னப்பன் அவர்கள் , நகுலன், ஆதவன் போன்றவர்களின் வாரிசு போன்ற ஒரு திருப்தியை தருகிறார்.
ஒவ்வொரு பக்கத்திலும் எவ்வளவு உண்மை, பக்கம் 58: ஒருவர் சொல்லும் உண்மையை நாம் நம்ப மறுத்தால் கூட அவர்கள் தாங்கிக்கொள்வார்கள், ஆனால் அவர்கள் கூறும் பொய்யை மறுத்தால், அவர்கள�� படும் வேதனையும், சோர்வும், ஏமாற்றமமும் பன்மடங்கு.
இதுவரை மரணம் குறித்தும் உயிர்வாழ்தல் குறித்தும் இத்தனை விரிவாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பேசிய புத்தகங்கள் எவையெனக் கேட்டால் ஆங்கிலத்தில் Atul Gawande எழுதிய Being Mortal, Paul Kalanithy எழுதிய When breath becomes air ஆகியவற்றைச் சொல்லலாம். இரண்டு புத்தகங்களை எழுதியவர்களுமே மருத்துவர்கள்; நரம்பியல் அறுவை சிகிச்சை வல்லுநர்கள். அன்றாடம் பிறப்பையும் இறப்பையும் ஒர் நாளின் சுழற்சியில் பல முறை கடக்கிறவர்களுக்கு அவற்றின் பின்னாலிருக்கிற உணர்வுகளும் மதிப்பீடுகளும் அற்றுபோய்விடும் என்ற பொது நம்பிக்கையை மாற்றிய புத்தகங்கள் இரண்டுமே. தமிழில் இவ்வகையான எழுத்துக்கு ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ ஒரு துவக்கமாக இருக்குமென நம்புகிறேன்.
An awesome medical-psychoanalysis-thriller in Tamil..and that's a first..! நிச்சயமாகத் தவறவிடக் கூடாத புத்தகம்...!
பிரபாகரனின் போஸ்ட்மார்டம் வாசித்து முடித்துவிட்டேன். எனக்கு மிகமும் பிடித்திருந்தது. Fallacy எனும் தர்க்பப்பிழைகள் இல்லாமல் எழுதப்பட்ட புத்தகம்.
தற்கொலை செத்துக்கொள்ளும் பிரபாகரனின் உடலை கூறாயும் எழுதல்ல இது, அவனை சுற்றியுள்ளவர்கள் அந்த தற்கொலையை எப்படி பார்க்கிறார்கள் எனும் மங்கூராய்வு நடத்தும் எழுத்து. வாசகர்களை தனது மனதையே ஆய்வுக்குட்படுத்தும் எழுத்து என்றே சொல்லவேண்டும்.
தகவல்களுக்கான துப்பறியும் நாவலாக இல்லாமல் மனப்போராட்டங்களை துப்பறியும் முயற்சி புதியது. வடிவம், வாக்கிய அமைப்பு. சிந்தனைகளை சொல்லில் கொண்டுவரும் அழகு என பல தளங்களில் ஆசிரியர் மயிலன் ஜி சின்னப்பன் வெற்றிபெற்றிபெற்றிருக்கிறார்.
மருத்துவரான ஆசிரியர் மருத்துவ சொல்லாட்சிகளை பயன்படுத்தி வாசகரை சோர்வடைய செய்யாமல் இருந்தது நிம்மதியளித்தது.
கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்... லவ் யூ மயிலன் சார்... தற்கொலைக்கு எதிரான ஒரு ஆழமான படைப்பு...இங்கு நிறைய பிரபாகரன்கள் இருக்கிறார்கள்... வாழனும் அதுவா நம்மை காலி பண்ற வரைக்கும் வாழ்க்கைய வாழனும்..
நாவல் அட்டைப்பட வடிவமைப்பில் என் பங்கும்கூட இருந்தாலும், சில முன்முடிவுகள் மனதில் தேங்கிக்கிடந்தமையால் வாசிப்பை ஒத்திப்போட்டுக்கொண்டேன் அல்லது கொஞ்சம் தயங்கினேன். ஒருவழியாக வாசிக்க எடுத்ததும் இரண்டு நாட்களிலேயே படித்துமுடிக்க முடிந்தது, இரண்டு நாட்கள் என்பது அதுவாக அமைந்தது, நேரம் தோதாக அமைந்திருந்தால் ஒரே சிட்டிங்கில் வாசிக்கக்கூடிய வகையில் தான் நாவல் வடிவம் இருக்கிறது, வாசிப்பில் நிறுத்தமேதும் அவசியப்படவில்லை.
Protogonist, பிரபாகரின் மரணத்தின் காரணப்புள்ளியை அடைய விழைகிறேன் என்கிற பெயரில் தான் சந்திக்கிற எல்லா மனிதர்களின் பிம்பங்களையும் ஏன் அக்குவேறு ஆணிவேராக கிழித்து போடுகிறான்? என்ற யோசனை, சாட்சியம் கூறும் ஒவ்வொருவரும் தன் திரிபுகளாலும் எண்ணஓட்டங்களாலும் பிரபாகரின் மீதான மதிப்பீடுகளாலும் இறந்துவிட்ட ஒருவனை ஏன் இப்படி பந்தாடுகிறார்கள்? என்ற யோசனை, எல்லாவற்றிற்கும் மேலாக பிரபாகர் உட்பட அத்தனை பேரையும் வாழ்வின் வழியில் எங்காவது சந்தித்து கடந்து வந்த நியாபகம், போன வாரம்கூட ஃபேஸ்புக்கில் கடந்துவந்த ஒருவரின் தற்கொலைச் செய்தி கொடுத்த அதிர்வின் வீரியம் இன்று குறைந்திருப்பதன் நியாயம் என படிக்க படிக்க இவையெல்லாமும்தான் என்னுள் நிரம்பி இருந்தன.
இதர கேரக்டர்களுடனான சொல்லாடல்கள் மூலம் தான் இதுவரை அறிந்திராத பிரபாகரின் சித்திரத்தையும் அவன் தற்கொலைக்கான காரணத்தையும் அடைய பாடுபடும் protogonist போல, படிக்கும் நாமும் எழுத்தின் வழி எழுதியவனின் சித்திரத்தையும் அவனின் நோக்கத்தையும் அடைய உந்தப்படுகிறோம், இது எனக்கு புது வடிவமாக இருந்தது. நாவலின் முதல் பாதியில் வரும் எல்லோரின் மீதும், பிரபாகரின் மீதும், எழுதியவர் மீதும் நமக்கும் நிறையவே முன்முடிவுகள் பிறக்கின்றன. எல்லாவற்றிற்குமான பதிலை இரண்டாம் பாதியில் தாமே கொடுத்திருக்கும் விதம் அருமை. இரண்டாம் பகுதியில் லீமா மற்றும் மயில்சாமி கேரக்டர்களை புகுப்பாய்ந்து அணுகிய விதம் அட்டகாசமாக இருந்தது போலவே எழுத்தாளர் தன்னைத்தானே பகுப்பாய்வு செய்துகொண்டு தான் வலிந்து சிக்கிக்கொண்ட போஸ்ட்மோர்ட்டத்தை முடித்துக்கொள்ளும் இடமும். இறுதியாக, எழுத்தாளர் நாவலில் வருகிற எல்லா கேரக்ட்டர்களையுமே ஒரு எதிர்மறை கண்ணாடி அணிந்து அணுகுகிறாரோ? என்பதையும்விட மயிலனின் எழுத்துப் பாணி இதுவாக இருக்குமோ? அல்லது நிஜத்திலும் மனிதர்களை இப்படி அலசி ஆராய்ந்து பல எதிர்மறை முன்முடிவுகளை எடுத்துக்கொள்கிறவரோ? என்கிற ஐயம் பற்றிக்கொள்கிறது. பாருங்கள் கடைசியில் நானும் இப்போது மயிலனை போஸ்ட்மார்ட்டம் செய்யத்துவங்குகிறேன்.
இறுதியாக, நாவல் குறித்து அநேகருக்கு இருக்கும் இரண்டு அனுபவங்களை நானும் உறுதிப்படுத்துகிறேன். 1. உண்மையில் ஒரு நல்ல சைக்கலாஜிக்கல்-த்ரில்லர் திரைக்கதைக்கு அச்சாரம் கொண்ட நாவல். 2. "விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை எப்படி போஸ்ட்மார்ட்டம் பண்ணுனாங்க? அது சம்பந்தமான புத்தகம்தானே இது?" போன்ற கேள்விகள் என்னிடமும் கேட்கப்பட்டன. :)
பல வரலாற்று நாவல்கள் படித்திருந்தும் Empresses in the palace என்ற சீன தொடரை பார்த்த பிறகு தான் அந்தப்புர பெண்கள், அதன் அரசியல் பற்றியெல்லாம் யோசிக்க தோன்றியது. அது போல காவல்துறையில், நீதித்துறையில் இருக்கும் orderly system பற்றி அதிகம் பேசப்படுகிறது. மருத்துவத்துறையிலும் சில விடயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் மருத்துவத்துறையிலும் orderly system அதிர்ச்சியளிக்கிறது. இப்படி பல துறைகளில் நடக்கும் அவலங்கள் வெளிவந்ததால் தான் அதை சரிப்படுத்தவோ, விழிப்புணர்வோ ஏற்படும்.
கதையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் யாராவது பிரபாகரை பற்றி ஒன்று அல்லது இரண்டு தகவல்கள் சொல்வார்கள். அதாவது நான்கு பக்க அத்தியாயத்தில், ஒரு சின்ன பகுதி தான். அது கொஞ்சம் சோர்வடைய வைத்தது.