ஆசிரியர் : க .வீரபாண்டியன் நாவல் 150 பக்கங்கள் யாவரும் பதிப்பகம்
இலக்கியம் இந்த உலகை காலம் காலமாக உற்று கவனித்து கொண்டே வருகிறது . அந்த பார்வைக்கு எந்த அளவுகோலும் கிடையாது .பார்வை படும் அனைத்து மனிதர்களையும் இலக்கியம் தனக்குள் அழிவில்லா மலை முகடுகளாக பதிவுசெய்து விடும் . அந்த மலைகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் நிமிர்ந்து நின்று தனக்கென ஓர் இடத்தை தக்கவைத்து கொள்ளும் . சங்க காலங்களில் இலக்கியம் மன்னர்களுக்கும் . அவர்களின் குடும்பங்களுக்கும் மட்டுமே இடம் கொடுத்து வந்தது , அப்படி ஒரு நிர்பந்தத்தில் இலக்கியம் இருந்தது என்று கூறலாம் .ஆனால் இலக்கியத்தின் இயல்பு அதுவல்ல . இலக்கியத்திற்கு கடிவாளம் கட்டிய பார்வை எப்பொழுதும் கிடையாது . மெல்ல தனக்கு விலங்கிட்ட கடிவாளத்தை அகற்றி தன் பார்வையை பறந்து விரிய செய்தது .தன் பார்வையில் இருந்து மறைத்துவைக்கப்பட்ட எளிய மனிதர்களை அது தன் எழுத்தாளர்கள் மூலம் தேடி தேடி தனக்குள் நிறைத்துக்கொண்டது .என்னை பொறுத்த வரை சொற்களுக்கு அணிகலன் சூட்டி காட்டும் இலக்கியங்களை விட ,வாழ்விலும் சரி , இவ்வுலகிலும் சரி வெறுத்து ஒதுக்கப்பட்டு , தினமும் ஒடுக்கப்பட்டு இருக்கும் விளிம்பு நிலை மனிதர்களை கதை மாந்தர்களாக நிறுத்தி எழுதப்படும் இலக்கியங்களே சிறந்தவை . அப்படி இதுவரை இலக்கியத்தில் இடம்பெறாத சில மனிதர்களை பற்றிய கதையே இந்த சலூன் நாவல் .
பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் ஆனந்த் ,தன் குழு தலைவர் கேத்ரீன் என்ற அயல்நாட்டு பெண் , மற்றும் தன் நிர்வாக குழுவுடன் பணி நிமித்தமாக வாஷிங்டன் நகருக்கு பயணிக்கின்றனர் .பயணம் சென்ற இடத்தில ஆனந்த் தன் வேலை பளு காரணமாக நீண்ட நாட்களாக முடிவெட்ட முடியாமல் போய்விட்டதால் ,அங்கு முடிதிருத்தும் செய்ய ஒரு கடையை தேடி டுபான்ட் CIRCLE என்ற இடத்தை சுற்றி சுற்றி திரிவதோடு கதை தொடங்குகிறது . அங்கிருந்து அவரது நினைவுகள் மேலெழும்பி டெல்லியில் அவர் வசித்த நாட்களில் அவருக்கு நெருக்கமான ஒரு சலூன் தொழிலாளியான தாகூர் என்ற மனிதரை நோக்கி பறந்து செல்கின்றன.அவர் அலுவல்கள் முடிந்து இந்தியா திரும்பும் விமான பயணத்தில் அவருக்கு தன் வாழ்வில் தான் சிறுவயது முதல் இன்று வரை அவர் சந்தித்த முடிதிருத்தும் தொழிலார்கள் நாகண்ணா .குட்டி,முத்தையா தாத்தா ,தாகூர் ,செல்வா அண்ணன் என ஒருவர் பின் ஒருவராக அவரின் வாழ்வின் நினைவுகளோடு சிலந்தி வலைபோல பின்னி பிணைந்து தோன்றிமறைகின்றன .இறுதியில் தன் ஊரான மதுரைக்கு திரும்பி தான் மிகவும் நேசித்த கரிச்சான் மண்டை செல்வா அண்ணனிடம் முடிவெட்ட அமர்ந்து ,செல்வா அண்ணனும் சீப்பையும் கத்தரியையும் தன் கையில் எடுத்து வெட்டுவதோடு கதை முடிகிறது .
இந்த கதை ஆனந்த் என்ற ஒரு தனி மனிதனின் நினைவுகளோடு மட்டுமே பயணிக்கும் கதை அல்ல , என்பதை இதனை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் தன் நினைவுகளுக்குள் சஞ்சரிக்கும் தருணம் உணர முடியும் .என் கண்கள் இந்த புத்தகத்தின் சில பக்கங்களை வாசிக்கையில் என் மனம் என் நிகழ் உலகத்தை விட்டு அகன்று நினைவு உலகத்துக்குள் எங்கோ அலைந்து திரிந்து அந்த நினைவுகளின் வாசத்தை கடத்தி எனக்குள் புகுத்தியது . அந்த பசுமையான இளமை நினைவுகளின் வாசனையோடு நான் முழு புத்தகத்தையும் வாசித்தேன் .புத்தகத்திற்கு வாசம் உண்டா ? என்று கேட்பவர்களுக்கு இந்த புத்தகம் தன் பதிலை உங்கள் வாழ்வின் நினைவுகளின் மூலம் உரைக்கும் .
நினைவுகளை மட்டும் இந்த கதை பேசுவதாக இருந்தால் இலக்கியத்தில் இந்த புத்தகத்திற்கு தனி இடம் கிடைத்திருக்காது . இந்த கதை தனித்து நிற்க காரணம் நாவிதர்கள் என்ற ஒரு பெரும் சமூகத்தையம் , அவர்கள் வாழ்கை முறையையும் ,அவர்கள் உணர்வுகளையும் இலக்கியத்தில் பதிவு செய்ததே . தமிழகம் மட்டுமில்லாமல் வடஇந்தியா , ஆந்திர என்று தான் வசித்த இடங்களில் வாழ்ந்த வெவ்வேறு மாநிலத்தின் நாவிதர்கள் வாழ்கை முறையை உண்மையாக பதிவுசெய்திருக்கிறார் . தமிழகத்தில் முன்னொரு காலத்தில் மருத்துவர்கள் என்றழைக்கப்பட்டனர் என்பதும் , வடஇந்தியாவில் ஒரு காலத்தில் ராஜாவம்சத்தை சேர்ந்தவர்கள் இன்று நாவிதர்களாக இருப்பதும் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒரு பதிவு. தன் தொழிலை ஒரு கலையாக பாவித்து பெரும் அர்ப்பணிப்புடன், தொழில் நியதியுடன் அவர்கள் நடந்து கொண்டாலும் இந்த உலகம் அவர்களை தள்ளி வைத்து தன்னால் முடிந்த வலிகளை அவர்களுக்கு கொடுத்து வேடிக்கை பார்த்தது. இந்த வலியையும் வேதனையையும் தன் வாழ்வில் தான் சந்தித்த மனிதர்கள் மூலம் பதிவிடுகிறார்.இதில் வரும் ஒவ்வொரு மனிதர்களும் ஒரு தனி உலகம். விளையாடும் வயதில் தன் தந்தையின் இறப்பிற்கு பின் கத்தரியை கையில் எடுக்கும் குட்டியின் வலியை நாம் புரிந்து கொள்வது கடினம் உலகமும், உறவுகளும் கைவிட்டாலும் - கொடுக்காபுளி மர நிழல், கூன் விழுந்த கூரையுள்ள கடை,பக்கத்து பள்ளி குழந்தைகள், என தனக்கென ஒரு தனி உலகை தானே அமைத்து வாழ்ந்து வரும் முத்தையா தாத்தா தன் இனம், தன் இனத்தின் உரிமைக்காக நாம் போராட வேண்டும் என்று வீறுகொண்டு எழுந்த போராளியை இந்த உலகம் எந்த நாளும் ஆதரித்தது இல்லை என்பதற்கு நாகண்ணா மட்டும் என்ன விதி விலக்கா? தள்ளாடுகிற உடல் நிலையிலும், வயது மூப்பிலும் கூட தன் மகன் சீப்பையும், கத்தரியையும் தொட்டதற்கு பொரிந்து விழும் அந்த செல்வா அண்ணன் ஒரு சில நிமிடங்கள் நமக்கு தந்தையாக வாழ்ந்துவிட்டு போகிறார். இவர்கள் எல்லோருடைய கண்களில் தொலைந்து போன ஒரு வரலாறு கண்ணீராக தேங்கி கிடக்கிறது. இவர்களுடைய மறைக்கப்பட்ட அல்லது மறைந்து போன கடந்த கால வாழ்க்கை இவர்கள் உடல் மொழியிலும், மனக்குமுறலிலும் புதைந்து கிடக்கிறது.இதனை புரிந்து கொள்ள முயற்சி செய்து அதனை நமக்கும் கடத்த முயற்சி செய்துள்ளார் ஆசிரியர்.
இந்த கதை, களம், எழுத்து, இவையெல்லாம் தாண்டி நான் ஒரு கதை மாந்தரை பற்றி நிச்சயம் பதிவு செய்ய வேண்டும். "கேத்ரின் "- இலக்கியத்தில் இவளுக்கென ஒரு தனி இடம் உண்டு. ஜெயகாந்தனின் பெண்களும், தி ஜா வின் பெண்களும் இந்த கேத்ரினும் எங்கோ ஒத்து போகின்றனர். இந்த இளம் வயதில் உலகின் எந்த மூலைக்கும் தன்னை உருமாற்றி ஒப்புக்கொடுத்து வேலை செய்து, பாதிக்கப்படும் பெண்களுக்காக குரல் கொடுப்பது, நிர்வாக திறன், ஆண் பெண் உறவை வேறு கோணத்தில் பார்ப்பது, திருநம்பி, திருநங்கை பற்றிய மாறுபட்ட முற்போக்கான கருத்து என ஒரு புதுயுக புதுமைப்பெண்ணாகவே நான் கேத்ரினை பார்க்கிறேன். இந்த கதையில் கேத்ரினுக்கு இடம் கொடுத்ததற்கு ஆசிரியருக்கு மிக்க நன்றி. கேத்ரினை மையமாக வைத்து ஒரு முழு நாவலை படைக்க வேண்டும் என்று ஒரு வாசகனாக நான் அவரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
மனிதன் தன் வாழ்வாதாரத்திற்காக ஒரு தொழில் செய்கிறான். அது வெறும் தொழில் மட்டுமே. அதை தாண்டி அவனுக்குள் ஒரு மனமும் மனிதமும் உயிர்ப்புடன் உள்ளது. ஆனால் அவன் செய்யும் வேலைக்கு கூலி கொடுக்கும் நாமோ அவனின் அனுமதி இன்றி அவன் மனதிற்கும், ஏன் அவனுக்கும் சேர்த்தே கூலி கொடுப்பதாக நினைத்துக்கொள்கிறோம். மனிதன் என்ற சிற்பத்திற்கு தொழில் மூலம் சாதி என்ற சாயம் பூசி அவர்களை சாயம் பூசப்பட்டவர்களாக ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்க்கிறோம். அந்த தொழிலிலும் பல பண முதலைகள் குதித்து அவர்களை தனியார் மயம் என்ற�� சொல்லி வேட்டையாடுகின்றன. நம் அனைவரின் மேலும் ஏதோ ஒரு சாயம் பூசப்பட்டு கொண்டுதான் உள்ளது. சாயத்தை கரைத்து விடுவோம் கண்ணீரால் அல்ல மனிதனின் ஆதி உணர்வான அன்பென்ற மழையால்.