என்னுடைய 22ஆவது வயதில் சுந்தர ராமசாமியைச் சந்தித்தேன். என் இலக்கிய வாழ்வின் முக்கிய நிகழ்வு இது. என் கலை இலக்கிய வாழ்வின் தொடக்கத்தை வடிவமைத்த சக்தி. என் முதல் இலக்கிய ஆசான். அவருடனான முதல் சந்திப்பிலிருந்து, அவருடைய இறுதி நாளில் அஞ்சலி செலுத்தியது வரையான சில நினைவுகளின் பதிவுகள் இவை. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த உறவு. நெருக்கமும் இணக்கமும் மட்டுமல்ல; விலகலும் பிணக்கும் கொண்ட உறவு. ‘இந்து தமிழ் நாளிதழின் ஞாயிறு பதிப்பு நடுப்பக்கத்தில் வெளியான ‘நடைவழி நினைவுகள்’ தொடரில் சுந்தர ராமசாமி பற்றி எழுதிய 4 பதிவுகளின் விரிவாக்கமே இந்நூல்.
சி. மோகன் (C.Mohan) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூல்தொகுப்பாளர், கலை இலக்கிய விமர்சகர் என்று பன்முகங்களுடன் இயங்கும் ஒரு தமிழ் இலக்கியவாதியாவார். 2014 ஆம் ஆண்டு சி.மோகனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விமர்சனக்கருத்துக்கள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் கவனத்தை ஈர்த்துள்ளார். ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என்ற சிறியநாவல் ஒன்றையும் கமலி என்ற ஒரு நாவலையும் எழுதியிருக்கிறார். இவரது மொழியாக்கத்தில் வந்த ‘ஓநாய்குலச்சின்னம்’ என்ற மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும். எழுத்து தவிர, ஓவியம், சிற்பம், திரைப்படம் ஆகிய துறைகளிலும் கவனத்தைச் செலுத்திவருபவர்.
முதன் முதலாக சி மோகன் அவர்கள் சுராவை மதுரை ரயில் நிலையத்தில் சந்தித்ததிலிருந்து, தொடர்ந்த அவர்களின் உரையாடலின் வழியாக அந்த உறவின் பரிணாமம் சுருக்கமாக விவரிக்கப்பட்டிருக்கிறது.
'தனி மனிதனாகவும், குடும்ப மனிதனாகவும், சமூக மனிதனாகவும், உறவுகளிலும், நடத்தையிலும் சிந்தனைகளிலும், செயல்களிலும் ஒரு இசைமைக்காக பிரயாசைப்பட்டவர்ய
'தன் வாழ்நாளின் பெரும்பகுதிக் காலம், பெரும்பாலும் சமரசங்களோ முரண்களோ அற்றுத் தன் எண்ணம் போலவும், தன் கனவுகளின் வடிவமாகவும் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்'
'மார்ச் மாதம் இன்கம்டாக்ஸ்க்கு கணக்கு கொடுக்கும் போது மனம் எப்படி வேலை பார்க்குமோ, அப்படித்தான் இந்தப் பகுதியை எழுதும் போது மனம் வேலை பார்த்தது. '
ஜே ஜே குறிப்புகள் புத்தகத்தில் ஒரு பகுதியை எழுதியபோது இருந்த மனநிலையை விவரித்தபோது.
காலச்சுவடு துவங்கும் போது அவருக்கிருந்த கனவுகளும், திட்டங்களும். அந்த காலகட்ட ஆளுமைகளுடன் அவருக்கிருந்த உரையாடல். அவருடைய இல்லத்தில் நிகழ்ந்த விவாதங்கள். என சுந்தர ராமசாமி அவர்களின் ஆளுமையின் ஒரு கீற்றாக இந்தப் புத்தகம்.