எரியும் பனிக்காடு
ஆசிரியர் : பி எச் டேனியல்
தமிழில் : இரா முருகவேள்
நாவல்
334 பக்கங்கள்
ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்படும் இலக்கிய படைப்புகளில் உண்மையும் புனைவும் கலந்து படைக்க பட வேண்டுமா ? அல்ல உண்மையை மட்டுமே உள்ளபடி எழுத்துவடிவில் வெளிக்கொணர்ந்தால் போதுமானதா ? என்ற தர்க்கம் இலக்கிய உலகில் நிலவுவது உண்டு . இதற்கான பதில் அதனை எழுதுவது யார் என்பதில்தான் அடங்கியுள்ளது . அந்த சம்பவத்தில் பங்கெடுத்த அல்லது அதனால் நேரடியாக பாதிக்கப்பட்ட ஒருவரால் எழுதப்படும்பொழுது அதில் உண்மைகள் நிறைந்தும் புனைவுகள் குறைந்தும் காணப்படும் , அதுவே ஒரு படைப்பாளி பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை வைத்து அதன் பாதிப்பில் அந்த நிலத்தையும் மக்களையும் தன் புனைவுலகத்திற்குள் கொண்டுவந்து எழுதும் படைப்பில் புனைவும் உண்மையும் கலந்தே இருக்க கூடும் . பொதுவாக அடக்குமுறையை தோலுரிக்கும் படைப்புகள் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பதோடு கதையின் பெரும்பகுதிகள் அவர்களை சுற்றியே நிகழக்கூடும் . ஆனால் , இலக்கியம் என்பது இருபக்கமும் ஒரு சேர பரந்த பார்வை கொண்டு பார்ப்பது . அந்த வகையில் இந்த எரியும் பனிக்காடு வெறும் சரித்திர பதிவாக மட்டும் அல்லாமல் ஒரு சிறந்த இலக்கிய படைப்பாக விளங்குவதற்கு காரணம் ஒரு பரந்த கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதால்தான் . இதனை எழுதிய பி ஹெச் டேனியல் பாதிக்கப்பட்டவர்கள் வலிகளை நேரில் பார்த்தவர் என்பது அவருடைய படைப்பில் தெளிவாக தெரிகிறது . மொழிபெயர்ப்பு நூல் என்று எங்குமே நம்மால் சுட்டிக்காட்ட முடியா வண்ணம் சிறப்பான ஒரு மொழிபெயர்ப்பு . காடுகளை பற்றியும் , மலைவாழ் மக்களை பற்றியும் முருகவேள் அவர்கள் நன்கு அறிந்தவர் என்பதை அவருடைய முந்தைய படைப்புக்களை வாசித்தவருக்கு தெறியும் .
கதையின் முதல் அத்தியாயத்திலே கருப்பன் - வள்ளி குடும்பத்தின் வறுமை நம்மையும் சூழ்ந்து கொள்கிறது . அவர்களுக்கு ஒரு வேளை கஞ்சியாவது கிடைத்துவிடாதா என்ற ஏக்கம் நமக்கும் ஏற்படுகிறது . அந்த நிலையில் கருப்பனுக்கு வள்ளிக்கும் ஆனைமலை எஸ்டேட் வேலைக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை என்றாலும் நம் மனது அவர்கள் ஏமாற்றப்பட்ட போகிறார்கள் என்று புத்தகத்தின் வழி அவர்களை தடுத்து நிறுத்த துடிக்கிறது . நாம் நினைத்தது போலவே அவர்களை போல் அங்கு நூற்றுக்கணக்கில் ஏழை மக்கள் ஏமாற்றி அழைத்து வரப்பட்டு விலங்கை விட மோசமான ஒரு விதத்தில் நடத்தப்படுகின்றனர் . ஆங்கிலேய அதிகாரியின் குதிரை லாடத்தை விட அவர்களின் இருப்பிடமான லைன் வீடுகள் மோசமாக உள்ளன . உரைப்பணி , ஈரத்தில் ஊறிய கால்கள் , ஒட்டிய உடலின் மிஞ்சிய ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள் , கொட்டும் மழையிலும் ஒற்றை கோணி சாக்குடன் வேலை , ரேஷன் என்ற பெயரில் தரமில்லா உணவுப்பொருட்கள் , இத்தனைக்கு பிறகும் இவர்களுக்கு காலனாக திகழும் மலேரியா காய்ச்சல் , நிமோனியா காய்ச்சல், அதற்கு மருத்துவம் செய்ய மருத்துவன் என்ற பெயரில் ஒரு கம்பௌண்டர் , மருத்துவமனை என்ற பெயரில் ஒரு பாழடைந்த குப்பைமேடு என நினைத்து பார்க்க முடியாத ஒரு சூழலில் அவர்களுக்கு தினமும் 12-14 மணி நேர வேலை . இப்படி ஒரு வருடம் முழுக்க அவர்கள் உழைத்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் கூலியோ 40 ருபாய் கூலி அதில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கடன்கள் போக அவர்களுக்கு மிஞ்சுவது சொர்ப்ப பணம் , ஊர் திரும்புவதற்காக அவர்கள் ஒவ்வொரு வருடமாக தங்கள் வேலையை நீட்டித்து நீட்டித்து இறுதியில் அந்த மண்ணிற்கும் தேயிலைக்கும் உரமாக புதைக்கப்படுகிறார்கள் .
உலகின் மூலையில் எங்கோ ஒரு யூதனுக்கும் , ஆப்ரிக்கனுக்கும் , நடந்த அடக்குமுறையையும் , இனப்படுகொலையையும் தேடி வாசித்து மனம் வருந்தும் நாம் இங்கு நம் தமிழகத்தில் நம்முடைய முன்னோர்கள் அதை விட அணுஅணுவாக துடிதுடித்து , எதிர்த்து போராட எந்த சக்தியும் இல்லாமல் , உதவியும் இல்லாமல் மடிந்த எண்ணற்ற மக்களின் துயரை வாசிக்க தவறிவிட்டோம் . இந்த புத்தகத்தின் ஒரு சில பக்கங்களை வசித்து கடப்பது மிகவும் கடினம் , ஒரு குடுபத்தில் மூத்த பிள்ளை மலேரியா காய்ச்சலால் படுத்த படுகையை கிடக்க , மற்றொரு பிள்ளை காய்ச்சலுடன் ஒரு கைக்குழந்தையை வைத்துக்கொண்டு இருக்க இவர்களி தனிமையில் விட்டு , கங்காணியின் அச்சுறுத்தலுக்கு பயந்து பெற்றோர்கள் வேலைக்கு சென்று திரும்பி வரும் தருணம் , இறந்த இரண்டு பிள்ளைகளின் சடலங்களை சுற்றி அந்த மழலை விளையாடிக்கொண்டிருக்கும் அந்த காட்சி நம்மை உறையவைக்கும் ஒன்று . இந்த கதையின் ஆழத்தை, அந்த மக்களின் துயரை ஒரு வரியில் கூறவேண்டுமென்றால் " ஒரு பெண்ணிற்கு தன் வாழ்வில் இரண்டு முறை புதுச் சேலை கிடைத்தது ஒன்று அவள் திருமணத்திற்கு மற்றொன்று அவள் பிணத்திற்கு "
இந்த படைப்பு சிறந்து விளங்குவதற்கு இன்னுமொரு காரணம் , பாதிக்கப்பட்டவர்களாக கூலிகளை மட்டுமே சித்தரிக்காமல், கண்காணிப்பு பணியில் , எழுத்து பணியில் , அலுவலக பணியில் அமர்த்தப்பட்ட இந்தியர்களும் எவ்வாறு ஆங்கிலேயர்களால் அடக்கியாளப்படுகிறார்கள் என்பதையும் கதை விரிவாக விவாதிக்கிறது . அதிகாரத்தின் பக்கம் நின்றாலும் இந்தியர்கள் நிறத்தாலும் , பிறப்பாலும் எவ்வாறு வெவ்வேறு முறைகளில் அவமானப்படுத்தப்பட்டு , சுரண்டப்பட்டு , ஏவிய வேலைகளை அடிபணிந்து செய்யவும் , ஊழல் மூலம் மட்டுமே அதிகாரத்தின் விருப்ப வட்டத்திற்குள் வர முடியும் என்ற எண்ணம் எப்படி விதைக்கப்படுகிறது என்பதையும் அவர்கள் பார்வையில் கூறப்படுவது கதைக்கு உண்மைத்தன்மையை அதிகப்படுத்துகிறது .
இந்த புத்தகத்தின் வாசிப்பு அனுபவத்தில் எனக்கு ஒரு சில இடங்கல் நெருடல்களாக இருந்தன . மக்களின் துயரத்தை , அதிகார வர்கத்தின் கோரமுகத்தை பதிவிடும் பொழுது இயற்கையை பற்றிய வர்ணனைகள் தேவையான ஒன்றா ? வள்ளியின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் அத்தியாயத்தை தொடர்ந்து அந்த அலுவலர்களும் - மருத்துவர் ஆப்ரஹாம் -உம் செல்லும் இன்பச்சுற்றுலா பற்றிய விரிவாக ஒரு அத்தியாயமாக எழுதுவது அவசியமா ? கதையின் பிற்பகுதியில் அந்த அடர்ந்த இருளுக்குள் சிறு ஒளி போல தோன்றிய டாக்டர் ஆப்ரஹாம் மக்களின் துயரை கண்டும் , மருத்துவ வசதிகளின் குறைபாடுகளையும் முறையிடும் பொழுது ஏன் வள்ளியை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பவில்லை , மக்களின் பக்கம் நின்று அதிகாரத்தை எதிர்க்க ஒரு சிறு முயற்சியும் எடுக்கவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை .
வள்ளியின் இறப்பிற்கு பின் கருப்பனுக்கு உண்டாகும் தனிமை ஏனோ வாசிக்கும் நம்மையும் சூழ்ந்துகொள்கிறது . இதனை வாசித்த நாட்களில் என் உடலிலும் மனதிலும் சில மாற்றங்களை உணர முடிந்தது . ஒரு புத்தகம் நம்மை என்ன செய்யும் என்ற கேள்விக்கு - அது நம்மை அறுதியான ஒரு நிலைக்கு இட்டுச்சென்று உணர்வுபூர்வமான பதிலை கொடுக்கும் . பனிக்காடுகளில் வறுமையின் தீயில் அணுஅணுவாக எரிந்த நம் மக்களின் வலி மிகுந்த நினைவுகள் இன்றும் அந்த காடுகளிடையே அலைந்துகொண்டுதான் இருக்கும் . இன்று நாம் பருகும் ஒரு மடக்கு தேநீரின் வெப்பத்திற்குள் ஓராயிரம் மக்களின் எரியும் உயிர்களின் ஓலங்களும் கலந்துள்ளன என்பதை இந்த படைப்பு நமக்கு நினைவுபடுத்தும் .
- இர.மௌலிதரன்
20-1-2025
10.35 am