There are still simple human folks amidst extremists and revolutionaries in the Islamic society. This is sensitive story, mingled with subtle humour, the ordinary people who went to Arab countries to earn their livelihood.
முடித்த பின் ஒரு மாதமாகியும் மதிப்புரை எழுத முடியாவிட்டாலும் அஜ்னபி இன்னும் மனப்பரப்பில் ஓர் ஓரத்தில் மிதந்த படியே இருந்தது. பிழைப்பு தேடி வந்த பிறநாட்டவரை அரபியர்கள் அலட்சியமாக அழைக்கும் சொல் அஜ்னபி. தமிழகத்தில் இஸ்லாமியர் வாழ்க்கையும், அவர்கள் அரபுதேசம் சென்றால் சந்திக்கும் கொடுமைகளும், ஈட்டும் பெரும்பொருளும், அந்நியர்களாக அவர்களுக்கு நேரும் துயரங்களும், மனிதனின் பல்வேறு முகங்களைப் பற்றி அவர்கள் கண்டுகொள்ளும் உண்மைகளுமே அஜ்னபியின் கரு. அற்புதமான வேகத்துடன் நகரும் கதை தன் சுழலில் பல கதாபாத்திரங்களின் கடந்தகால வரலாற்றையும் நிகழ்கால நிதர்சனத்தையும் மோதவிட்டு ஏற்படுத்தும் தாக்கங்கள் பல. ரஜினியை ஓர் இஸ்லாமியக் கதாநாயகனாகக் கற்பனை செய்யும் ஓர் அட்டகாசமான அத்தியாயம் தமிழ் நாவல்களின் பக்கங்களில் இதுவரை அடையப்படாத ஒரு நகைச்சுவை உச்சத்தைத் தொடுகிறது. இந்திய மற்றும் தமிழ் இஸ்லாமிய வாழ்வின் பல அறியாப்பக்கங்களும், அவர்கள் சந்திக்கும் தனித்தன்மையுடைய சிக்கல்களும், அடையாளத்தைச் சூழ்ந்து தொடர்ந்து எழுப்பப்படும் கேள்விகளும் உளைச்சல்களும், அவர் சமூகங்களுக்குள் நிலவும் அரசியலும் விமர்சனமும் மொழியும் − இப்படி நாம் பொதுவாக அறியாத பற்பல விஷயங்கள் அஜ்னபில் கொட்டிக் கிடக்கின்றன. சுவாரஸ்யமான கதையோட்டமும், அருமையான மொழியும், மிக இயல்பான வசனமும், மிகவும் கவனிக்கப்பட வேண்டிய பேசுபொருளும், நினைவில் நிற்கும் மாந்தர்களும் அஜ்னபியை தமிழின் சிறந்த புதினங்களில் ஒன்றாக உயர்த்திப் பிடிக்கின்றன. ஒரு குறை: பெண் பாத்திரங்கள் பிரதானப்படுத்தப்படவே இல்லை - கதை இந்தியாவில் நகரும் போதும் சரி, அரபுலகில் நகரும் போதும் சரி. இந்ந குறை இவ்வாண்களின் உலகத்தை அடிக்கோடிட மைதீன் உள்நோக்கத்துடன் எடுத்த முடிவா, இல்லை சமூகத்தின் இயல்பான பிரதிபலிப்பா எனத் தெரியவில்லை.
இப்படி ஒரு நாவல் வந்து ஏழு வருடங்கள் ஆகியும் இப்போது சமீபமாக வெற்றிமாறனின் பரிந்துரையால் மட்டுமே பொதுவெளிச்சத்திற்குள் அது நுழைந்திருப்பது தமிழில் தரமான, பிரபலமான இலக்கிய விமர்கர்கள் இல்லாத வெற்றிடத்தை அப்பட்டமாக்குகிறது.
அரபு தேச மக்கள் பணம் படைத்த செல்வந்தர்கள் அவர்கள் என்னிடம் இவ்வளவு செல்வம் உள்ளது என பெருமைபடுவதில்லை மாறாக அவர்களிடம் எத்தனை பேர் அடிமைகளாக(அஜ்னபி) உள்ளனர் என்கிற எண்ணிக்கையை வைத்தே பெருமைபடுபவர்கள்.
பிரிவு, ஏக்கம், இன்பம், துன்பம் எல்லாம் கடிதம் வழியாகவும், டெலிபோன் பூத் மூலமாகவும் நடந்த காலத்தில் நடைபெறும் கதை. அரபு தேசத்தில் வேலைக்கு சென்ற மகனின் முகத்தை ஐந்து ஆண்டுகளாக பார்க்காத குடும்பம் மகனக்கு திருமணம் முடிக்க ஏற்பாடு செய்து வைத்து மகன் வருவானா என ஏங்கி தவிப்பது, தந்தை அரபு வாழ்க்கை போதுமென ஊர் திரும்பி தனது ஒரே மகனை அரபு நாட்டு வேலைக்கு அனுப்ப மகனோ தந்தையின் இறப்புக்கு ஊர் செல்ல அரபியிடம் அனுமதி கிட்டாததை நினைத்து அறையில் துக்க கண்ணீர் வடிப்பது,.... இது போல பல நிழ்வுகளை உள்ளடக்கிது இந்த அஜ்னபி.
நாவல் சில இடங்களில் நம்மை அவர்களுடன் சேர்ந்து சிரிக்க வைக்கும், அழவைத்தது, ஏக்கப்பட்ட, தனிமையில் வெறுப்படைய வைக்கிறது. பொதுவாக மக்களுக்கு தெரிந்தெல்லாம் பாய்(இஸ்லாம் மதத்தினர்)ங்க இசியா துபாய் போயி நல்லா காசு சம்பாரிச்சுட்டு வத்துருவாங்க என்பது. ஆனால் இந்த நாவலை படித்தபின் உங்கள் எண்ணம் மாற்றமடையும். -கலைச்செல்வன் செல்வராஜ்.
ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்தவுடன் ஹாஸ்டலை காலி செய்துவிட்டு அடுத்து என்ன செய்வதென்று தெரியாமலிருந்த நேரத்தில் உடன் படித்த நண்பன் பேங்கில் வேலை வாங்கி தருவதாக சொல்லியிருந்தான், அவனும் உடன் வருவதாக சொன்னதை நம்பி ஆகஸ்ட் 2005-ல் ஒரு கட்ட பையில் ஒரு போர்வை, புத்தம் புதிதாக இரண்டு சட்டை பேண்ட்டுகளுடன், சென்னை பழவந்தாங்கலில் உள்ள ஒரு வீட்டில் வந்திறங்கினேன், உடன் வருவதாக சொன்ன நண்பன் அன்று வரவில்லை இரண்டு நாள் கழித்து வந்தான்... அந்த அறையில் எட்டு நபர்களுக்கு மேல் இருந்தனர், ஒத்த வயதினர் என்ற போதிலும் அனைவரும் அந்நியர்களாக தோன்றினர்.... அதுவரை சென்னைக்கு வராத எனக்கு (இரண்டு முறை கவுன்சலிங்கை தவிர) புது உலக்கத்துக்கு வந்த உணர்வை தந்தது... இந்த ஆகஸ்ட் வந்தால் 15 வருடம் நிறைவடைகிறது... இந்த 15 வருடங்களில் பழவத்தாங்கல் மற்றும் குரோம்பேட்டையில் பேச்சுலர் நாட்களை பெரிதாக நினைத்து பார்ததில்லை... ஆனால் இந்த நாவலை படிக்கும் போது என்னுள் இருந்த மொத்த நினைவுகளையும் இழுத்து வெளியே போட்டுவிட்டது... இந்த கதையில் அரபு நாட்டில் வேலைக்கு சென்ற ஃபைசலை போல் தான் நான் சென்னைக்கு வந்தேன், பேங்கில் வேலை என்றவுடன் என்னுள் எழுந்த கற்பனைக்கு அளவே இல்லை ஆனால் முதல் நாளே தெரிந்து விட்டது சரியாக வந்து மாட்டிக் கொண்டோம் என்று... நாள் முழுக்க பேங்க் வாசலில் இருந்த புங்க மரத்தடியில் நிற்க வேண்டும்.. எப்படியாவது இந்த மார்கெட்டிங் உலகத்துலயிருந்து தப்பித்துவிட வேண்டும் என்று போராடிய நாட்களை நினைவு படுத்தியது இந்த நாவல்... வேறு ஊருக்கு சென்று வேலை செய்யும் அனைவருக்கும் மிக நெருக்கமான நாவலாக இருக்கும்...
சவுதி அரேபியாவில் நடக்கும் கதை, உரிய விசா இல்லாமல் அரபு நாட்டிற்கு சென்று அங்கே பல இடங்களில் வேலை செய்து, எதுவும் பிடிக்காமல் எப்படியாவது இந்தியாவுக்கு சென்று விடவேண்டும் என்று துடிக்குற ஃபைசிலின் கதைதான் அஜ்னபி... கதை நான்-லீனியராக நகர்கிறது, நினைவில் நிற்கும் கதாபாத்திரங்கள் நிறைந்த இந்த கதையில் என்னை கவர்ந்த கதாபாத்திரம் ‘கருத்தான் காதர்’, அவன் வரும் அத்தியாயங்கள் அனைத்தும் சிறப்பானதாக அமைந்துள்ளது.. அனைத்து வகையான மனிதர்களையும் இந்த கதையில் வருவார்கள்.. உலகின் மோசமான மனிதனும் இதிலிருப்பான், உன்னதமான மனிதனையும் பார்கலாம். ஒரு பேச்சுலர் ரூம் வாரயிறுதியில் எப்படி குதூகலம் நிறைந்ததாக இருக்கும் என்பதை பல்வேறு உரையாடல்களின் வழியாக சொல்லப்பட்டிருக்கும். அப்படி என்னை கவர்ந்த ஒரு விவரணை “அனைவரும் உறங்கிய பின்னும் தொலைக்காட்சியின் ஒளி அறையின் இருளை கூட்டியும் குறைத்தும் கொண்டிருந்தது” .. இந்த காட்சி இல்லாமல் ஒரு பேச்சுலர் அறை இருக்காது... நாவலை முடித்த விதம் அற்புதமாக இருந்தது. ��டைசி மூன்று அத்தியாயங்கள் திரைபடத்தின் கிளைமேக்ஸ்கான பதட்டத்துடன் முடிந்தது.
பி.கு : இந்த நாவலை தழுவி வெற்றிமாறன் அடுத்த படம் எடுப்பதாக சொல்லியிருக்கிறார்.
என் தாத்தா வீடிருப்பது திருவனந்தபுரத்தில். தாத்தா காலையில் எழுந்தவுடன் "சலாம் காக்கா" என்பார். அவரிடம் நான் "அதென்ன தாத்தா, என்னப் போயி காக்கானு சொல்ற" என்று கேட்ட பொழுது, "இது அந்த காக்கா இல்ல, மரியாதையா சொல்ற காக்கா" என்று சொன்னார். கதை மாந்தர்கள் பேசிய மொழியினுயூடே தாத்தாவும் வந்து போனார்.
ஃபைசல், மம்மலிகா , மம்மக்கண், குமரி இக்பால், கருத்தான் காதர், பிரபு, மிஷிரிக்கிழவன், அபு அப்துல்லா, ஆருஷா, பணியடிமை இன்னும் எத்தனையெத்தனை முகங்கள் தீட்டும் அற்புதமான, பாலை நிலத்தில் பூவின் ஓவியமாக, நமக்குள் நிறைகிறது அஜ்னபி. குடும்ப நிலை காரணம் வெளிநாடுகளில் குறிப்பாக அரபு தேசங்களில் கிட்டத்தட்ட அடிமை வாழ்க்கை வாழ்த்தாலும் மனிதர்களுக்குள் தளும்பும் காதல், காமம், கோபம், பொறாமை, நட்பு, பணிவு, நன்றி, நினைவு, மனிதம் ஆகியவற்றை மிக சிறப்பாக நம் கண் முன்னே விரிக்கிறது.
காத்திரமான அரபிகளும் கனிவான அரபிகளும் அவர்களினூடே நிரம்பியிருக்கும் அஜ்னபிகளும், கூடவே அவர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளும், ஒளிவு வாழ்க்கை, தப்பித்தோடும் வாழ்க்கை இதனூடே துளிர்க்கும் காதல், அதன் பிரிவு, திருமண நினைவுகள், நடவாத திருமணம் முடிந்து பிரிந்து வரும் தருணங்களின் கனவுகளை பரந்த மணல்வெளியில் அசை போட்டு நடக்கும் ஒட்டகத்தின் பயணம்போல் மைதீன் நம்மை கூட்டிச்செல்கிறார். அரபு தேசங்களில் வாழும் அஜ்னபிகள் பற்றிய மிக நுணுக்கமான விவரணைகளிருந்தாலும், பெண்கள் நினைவுகளாக மட்டுமே வந்து போகிறார்கள். ஒரு வேளை நிஜத்திலும் அப்படித் தானோ.
பொதுவாக ஊரில் தெரிந்தெல்லாம் இக்காங்க சுலபமா துபாய் போயி நல்லா காசு சம்பாரிச்சுடுவாங்க என்பது. ஆனால் மைதீனின் இப்பதிவுக்குப் பிறகு அவர்களின் துயரங்களும் நமக்கு பரிச்சயமாகும்.
இரவுநேரத்தில் ஏசியின் பச்சை விளக்கு தன் இருப்பை அறையினுள் நிறப்பிவிடுகிறது போல இந்நாவல் அதன் இருப்பை என் மூலையில் நிறப்பிவிட்டுவிட்டது. பைசலும் ஆருஷாவும் மனதில் நிரம்பி இருக்கிறார்கள்.
சில வருடங்களுக்கு முன் இணையத்தளத்தில் ஒரு தகவலை படித்தேன். இயக்குனர் வெற்றிமாறன் ‘அஜ்னபி’ எனும் நாவலை அடிப்படையாக கொண்டு ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் என்று. நான் அவரின் படங்களை ரொம்பவும் ரசித்து இருந்ததால் ஒரு ஆர்வத்தில் அந்த நாவலை வாங்கினேன். வாங்கி சில வருடங்கள் கழிந்து விட்டன.
வெற்றிமாறனின் ‘விடுதலை’ எனும் திரைப்படத்தை பார்க்கையில் எனக்கு அஜ்னபி புத்தகத்தை வாங்கியது ஞாபகம் வந்தது. அதன் அடிப்படையில் திரைப்படம் வெளிவருமா என தெரியவில்லை. அனால் அந்த கதையை படிக்க வேண்டும் என்று ஒரு ஆர்வம் என்னுள் எழுந்தது. நாவல்களை பொதுவாக இரண்டு வகைகளாக பிரிக்க கூடும். ஒரு வகையில் கதையின் விறுவிறுப்பும், அதில் வரும் திருப்பங்களும், ஆச்சரியமூட்டும் காட்சிகளும் நம்மை பக்கங்களை திருப்பி கொண்டே இருக்கும் படி தோன்ற வைக்கும். மற்றோரு வகையில், கதையில் விறுவிறுப்பு கம்மியாக இருந்தாலும், ஆழமான கதாபாத்திர அமைப்பினாலும், இடம் மற்றும் பின்னணியின் விவரத்தினாலும், கதையினுள் நாமே பயணிப்பது போல ஒரு அனுபவம் கிடைக்கும். ‘அஜ்னபி’ இரண்டாவது வகையை சேர்ந்தது.
ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணூறுகளில், சவுதியில் பிழைப்பை தேடி போகும் ஒரு தமிழ்நாட்டு இளைஞன் தான் இந்த கதையின் நாயகன். அவனுக்கு அந்த புதிய நாட்டில் ஏற்படும் சங்கடங்கள், சேரும் நட்புக்கள், நேரும் அனுபவங்கள்ல், துரோகங்கள், ஏமாற்றங்கள், காதல், அன்பு என பல உணர்ச்சிகளை கதையாசிரியர் மீரான் மைதீன் வெளிகொண்டுவருகிறார். அந்த இளைஞன் தான் முக்கிய கதாபாத்திரம் என்றாலும், கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்களும் மனதில் நிற்கக்கூடும் விதத்தில் எழுதப்பட்டுள்ளன. இக்பால், மம்மலி, மம்மனிபா, மற்றும் பல, பல கதாபாத்திரங்கள் ஒன்றொன்றும் தன்னிதன்மையுடனும், நிஜ மனிதர்களை போல் ஒரு நம்புமத்தன்மையும் கொண்டுள்ளன.
நாவலில் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம் அதன் காட்சிகளின் உருவாக்கம். புத்தகத்தின் சில பகுதிகளின் ஆரம்பத்தில் ஒரு காட்சியை நாம் படிக்கும் பொழுது, 'இது எப்பொழுது, எப்படி நிகழ்ந்தது?' என நம்முள் ஒரு கேள்வி எழும். அந்த கேள்வியை கதாசிரியரும் புரிந்து கொண்டது போல், பகுதியின் அடுத்த பக்கத்திலிருந்து அந்த காட்சிக்கு முன் என்ன நடந்தது, எப்படி கதாபாத்திரங்கள் இந்த காட்சியில் வந்து சேர்ந்தார்கள் என்பதை அந்த பகுதியின் மிச்ச பக்கங்கள் விளக்குகின்றன.
குறைகள் இல்லாத எந்த புத்தகமும் இருப்பதில்லை. இந்த நாவலை நான் பெரும்பாலும் ரசித்திருந்தாலும், ஒரு சில இடங்களில் ரொம்ப நீடித்து கொண்டு போனது போல ஒரு உணர்வை ஏற்படுத்தியது. முன்பு சொன்னது போல், இது வேகமும் விறுவிறுப்பும் கொண்ட நாவல் இல்லை. இதை பொறுமையுடனும், சரியான எதிர்பார்ப்புடனும் படித்தால், ஒரு சிறப்பான அனுபவத்தை தர கூடும்.
I have been working in dubai for the past 16 years this novel very much relates my entire gulf life , the multinational friends, Indians room friendship, back home thinking of everyone all the time , the weekend celebrations, the shopping, cars , lifestyle, sea breeze, highways, heat, cold, and its relation with sand storm, the real good and sad moments we miss, sacrifices we make , beauty of desert . Its an epitome of gulf expatriate life. Salute to the author for such a fabulous work.
Very elaborate documentation, per se, of the life style of people living in middle east for employment. The story deals with all shades of a human being who goes through difficulties for survival. The story is in a way tiringly detailed that I felt digressed the narrative.
சிறப்பான புத்தகம்... வேற்றுமொழி கலப்பின் காரணமாக முதல் சில அத்தியாயங்கள் சரியாக புரியவில்லை... சற்றும் எதிர்பாராத முடிவு.. ஆருஷாவின் முகமும் பைசலின் தாடியும் நினைவில் நிற்கின்றன,குமரி இஃபாலின் கதைகள் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது...