தமிழகச் சரித்திரத்தில் கலைகள் என்று சொன்னாலே பல்லவர்கள் தான் ஞாபகத்தில் வருவார்கள்.
வரலாற்றுக் கதைகளில் சோழர் மற்றும் பாண்டியர்களுக்குப் பிறகு பல்லவர்கள் பற்றிய புனைவுகளில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கவே செய்கிறது. அது ஆசிரியரின் கைவண்ணம் மட்டுமில்லை என்பது வரலாற்றைப் புரிந்து கொண்ட புரிதலாலே சாத்தியமானது.
இரண்டு பாகமாகப் பிரிக்கப்பட்ட இப்புத்தகத்தில் முதல் பாகத்தில் பல்லவர்கள் சாளுக்கிய நிலத்திற்கே சென்று அவர்களைத் தோற்கடித்த சம்பவத்தை அவ்வளவு நுணுக்கமாக வீரன் உதயசந்திரனுடனே நம்மை அழைத்துச் செல்லும் விவரிப்புகள் பிரமாதமாக எழுதப்பட்டிருக்கிறது.
சோழ வீரனான உதயசந்திரனை அவனின் தந்தை பெருஞ்சாத்தன் காக்கை மடுவில் இருக்கும் சமண விஹாரத்திற்கு அனுப்பித் துறவியாக மாறச் சொல்கிறார். தந்தையின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டவன் தனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அங்கே துறவியாவதற்கு வைத்த பரீட்சைகளில் தேறிவிடுகிறான்.
கதை தொடங்கும் காலகட்டம் பல்லவ சாம்ராஜ்ஜியத்தில் மழை பொய்த்துப் போய் பஞ்சத்தில் வாடிய காலம். சாளுக்கிய மன்னன் காஞ்சியைச் சூறையாடிச் சென்றதும் மக்களை வறுமையில் தள்ளிய நிகழ்வு.
தற்போதைய பல்லவ மன்னன் ராஜசிம்மன் தன் நேச நாடுகளுடன் செய்து கொண்ட உடன்படிக்கையால் போருக்கு தேவையான வீரர்களை நேரடியாகத் திரட்ட முடியாமல் காக்கை மடுவில் இருக்கும் சமண விஹாரத்தில் துறவிக்கு ஆட்கள் எடுப்பது போல வீரர்களை வரவழைத்துப் போர்ப் பயிற்சிக்கு அனுப்பும் வேலையைச் செய்கிறார்கள். இதற்கு உறுதுணையாக அந்த விஹாரத்தின் தலைவர் இருக்கிறார். அவரின் வளர்ப்பு மகளான பௌர்ணமி உதயசந்திரனைத் துறவியாகக் கூடாது என்று சொன்ன சொல்லை பற்றிக் கொண்டு அங்கிருந்து தப்பியவன் காஞ்சி வந்து சேர்கிறான். நடுவில் அவனைக் கடத்திய சுலைமான் இளவரசர் மகேந்திரரைக் கொலை செய்யும்படி குரான் மீது சத்தியம் வாங்கிக் கொள்கிறான். அப்படிக் கொன்றால் தான் உதயசந்திரனின் பிறப்பின் ரகசியம் வெளியிடுவேன் என்ற சொல்லை கேட்டு வேறு வழியில்லாமல் அவனிடம் உடன்படுகிறான்.
காஞ்சி வந்த உதயசந்திரனைப் பல்லவ மன்னன் ராஜசிம்மன் நேரடியாக வரவழைத்து நாட்டின் அவலங்களையும் அதைத் தீர்க்க தேவையான வழிகளையும், அவ்வழிகளால் பெறவேண்டி பொருட்களையும் பட்டியலிடும் போது தன்னையே பல்லவ நாட்டிற்காக ஒப்படைத்து நூறு வீரர்களுடன் சாளுக்கிய நாட்டை நோக்கிச் செல்கிறான். ஏற்கனவே இளவரசன் ஒரு பெரும் படைகளுடன் சென்றிருந்த நிலையில் பல்லவ சேனாதிபதியுடன் கைகோர்த்து உபதளபதியாகத் தன் முதல் போர் பயணத்தைத் தொடர்கிறான்.
வீரத்திலும் காமத்திலும் அடங்காத காளையான பல்லவ தளபதி தன் சூட்சும அறிவையும் காட்டி உதயசந்திரனின் மனதில் மாபெரும் மதிப்பில் உயர்ந்துவிடுகிறார்.
காஞ்சியிலிருந்து வெறும் நூறு வீரர்களுடன் புறப்பட்ட படை நடுவில் வந்து சேர்ந்த வீரர்களைச் சேர்த்துக் கொண்டே வந்து இருபதாயிரம் வீரர்கள் கொண்ட படையாக மாறுவதையும், உதயசந்திரன் தன் புத்திசாதூரியத்தில் எதிரிகளை வெற்றிக் கொண்டு படையை நடத்திச் செல்லும் அழகும் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.
தன்னைக் காமத்தில் பிணைக்க வரும் பெண்களிடம் இருந்து தப்பித்துக் கொண்டே வருபவன் பௌர்ணமியை மட்டும் மனதில் நிறுத்தி உடலையும் உணர்வுகளையும் அலைபாய விடாமல் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறான்.
நுணுக்கப் போர் முறைகளால் சாளுக்கியக் கோட்டையை அழித்த விதத்தை அழகியலாக்கி அந்நாட்டுச் சேனாதிபதியின் பேராசையாலும் அந்நாடு அழிவுப் பாதையில் பயணப்பட்ட விதத்தையும் முடிவில் அவனின் இறப்பை உதயசந்திரன் நிச்சயப்படுத்துவதையும், கூடவே பேராசைக்காரியான விஜயகுமாரியின் காமசாகசங்களையும் அதன் முடிவில் அவளின் அழிவையும் என்று நீண்டு கொண்டு செல்வதில் உதயசந்திரனின் பிறப்பு ரகசியமும் வெளிவருகிறது.
திபெத்தில் இருக்கும் பான் சமூகத்தைச் சேர்ந்தவன் தான் என்று தெரிந்தவுடன் சோர்ந்து போன உதயசந்திரன் அதை ஒதுக்கித் தள்ளிவிட்டு வளர்த்தவர்களின் அடையாளமே தன் அடையாளம் என்று உறுதி கொள்கிறான்.
சாளுக்கியர்களை வென்ற பிறகு பல்லவ இளவரசனை அனுப்பி விட்டு தன் பிறப்பு ரகசியத்தைத் தேடிச் சென்று மீண்டும் காஞ்சியை நோக்கி வரும் போது இளவரசன் கொல்லப்பட்டான் என்ற அதிர்ச்சி செய்தி தான் உதயசந்திரனின் காதில் மோதுகிறது. சாளுக்கிய நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட பொக்கிஷங்களை கொண்டு காஞ்சியில் கைலாச நாதர் கோவிலும் மாமல்லபுரத்தில் கடல் கோவிலும் நிர்மானிக்கப்படுகிறது.
தான் காவலில் பிழை செய்துவிட்டேன் என்று குற்றவுணர்வில் ஆட்கொள்ளும் உதயசந்திரனை மன்னன் ராஜசிம்மன் தேற்றி கடல் பயணத்தைப் பற்றி முழுவதும் அறிய மாமல்லபுரத்திற்கு அனுப்பி வைக்கிறார்.
பான் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தலைமுறை தலைமுறைகளாகப் பல்லவ மன்னர்களின் பாதுகாவலர்களாகவே இருப்பவர்கள் திடீரென இளவரசரைக் கொன்றதும் தானும் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவன் என்ற நினைப்பு அவனை அல்லாடவிட்டாலும் போருக்குச் சென்று ஒன்பது மாதங்களுக்குப் பிறகு திரும்பி வந்த உதயசந்திரன் பௌர்ணமியை மணந்து கொள்கிறான்.
அரபு நாட்டவர்களும் திபெத்தியர்களும் பூர்வக் கடல் தங்களுக்குச் சொந்தம் என்ற உரிமையில் பல இடர்களைத் தருவதைத் தடுத்து நிறுத்த உதயசந்திரனைக் கடல் பயணத்திற்குத் தயார் செய்ய, எதிர்பாராமல் வந்த சூறாவளியால் அவன் கடலில் விழுவதுடன் முதல் பாகம் முற்றுப்பெறுகிறது.
இரண்டாம் பாகம்:::: ***********
உதயசந்திரன் கடலில் விழுந்த ஒராண்டிற்குப் பிறகு நடக்கும் சம்பவங்களிலிருந்து இரண்டாம் பாகம் தொடங்குகிறது.
முதல் பாகத்தில் பல்லவ இளவரசனைக் கொலை செய்ய உதயசந்திரனிடம் சத்தியம் வாங்கியிருந்த அரபு நாட்டவனான சுலைமான் இரண்டாம் பாகத்தில் பூர்வக்கடலில் தங்களின் அதிகாரத்தைக் காட்டி இடைத்தரகர்களாக அனைத்து வாணிகத்திலும் நுழைந்து பெரும் செல்வத்தைச் சுரண்டி வருவதை விவரிக்கிறது.
முதல் பாகத்தில் பல்லவ சேனாதிபதியின் காமகளியாட்டங்களின் விவரிப்பு போல் இந்தப் பாகத்தில் தன் அடிமை பெண்களுடன் சுலைமான் ஆடும் காமவிளையாட்டுகளின் விவரிப்புகள் அடங்கியிருக்கிறது.
கடலில் விழுந்த உதயசந்திரனை அலைகள் காம்போஜ தீவில் சேர்த்துவிடுகிறது. மன்னனையும் மக்களையும் அறியாமையில் வைத்திருக்கும் அத்தீவின் மந்திரவாதி அழகனான உதயசந்திரனை நரபலி கொடுத்தால் அங்கே இருக்கும் தொல்லைகளிலிருந்து விடுபடலாம் என்ற வார்த்தையை விட எதற்காகப் பல்லவ மன்னன் தன்னை அனுப்பினானோ அதைச் செய்து முடிக்க உயிர்வாழ்வது தேவை என்றுணர்ந்தவன் தன் முகத்தைச் சிதைத்துக் கொண்டு நரபலியிலிருந்து தப்பிப்பதுடன் அத்தீவிற்குப் பல நன்மைகளையும் செய்து இளவரசி பூவிதழின் மனதிலும் இடம் பிடிக்கிறான்.
இந்தப் பாகத்திலும் உதயசந்திரன் மீது காம அம்புகளை விட்டு அவனுக்காக ஏங்கும் பெண்கள் வந்து நிராசையுடன் மடிந்தும் போகிறார்கள்.
தன் முகத்தைச் சீர்படுத்திக்கொண்டு சீன அரசரின் உதவியுடன் பூர்வக்கடலில் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கும் அரேபியர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துப் பயத்தைக் காட்டி பின் மொத்த கடற்படையுடன் தாக்குத���ை நடத்தி எந்த நோக்கத்திற்காகக் கடல் பயணத்தை மேற்கொண்டானோ அதை நிறைவேற்றிவிடுகிறான்.
முதல் பாகத்திலிருந்து ஏதோ பிறப்பு ரகசியம் இருக்கிறது என்று சொல்லியது எல்லாம் உதயசந்திரனை குழப்பவே, அவன் பெருஞ்சாத்தனின் மகன் தான்.
வெற்றி வீரனாகப் பல்லவ மண்ணைத் தொடும் உதயசந்திரனை அவனின் பச்சிளம் குழந்தை வரவேற்கிறது. வெற்றியின் அடையாளமாகப் பௌர்ணமியின் சம்மதத்துடன் காம்போஜ தீவின் இளவரசி பூவிழி இவனின் மற்றொரு பாதியாகிறாள்.
ஒரு போர் நடத்த தயாராகும் முறைகளை நுணுக்கமாகவும் அங்கே நிகழும் சம்பவங்களை விரிவாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இப்பொழுதெல்லாம் சிறிய புத்தகங்களை மனம் வாங்க மறுக்கிறது. குறைந்த பட்சம் 600 பக்கங்கள் இருந்தால்தான் இரு வாரங்களாவது தாக்குபிடிக்கிறது. மேற்கூறிய இரண்டையும் பூர்த்தி செய்தது உதயணின் கடல் கோட்டை புத்தகம். எனவே அப்புத்தகத்தை புத்தக கண்காட்சியில் வாங்கினேன். முன்னுரையை படித்தபோதே ஒரு அசாதரணமான தகவலை படிக்க நேரிட்டது. இதுவரை சோழ மன்னர்கள் மட்டுமே கடல் தாண்டி தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வந்ததாக எண்ணியிருந்தேன். பல்லவர்களும் கடல் ஆதிக்கத்தை செலுத்தியவர்கள் என்பதே புதிய தகவலாக இருந்தது.
புத்தகம் அராபியர்களையும் திபெத்தியர்களையும் பல்லவ மன்னர் ராஜசிம்மன் வெற்றி கொண்டதை பற்றியது. அனைத்து வரலாற்று புதினங்களை போலவே இந்த புத்தகத்திலும் மன்னர் நாயகன் அல்ல. ஒரு உபதளபதி தான் கதை நாயகன். நாயகிகளும் ஒருவருக்கு மேற்ப்பட்டவர்கள். :)