கார்த்திகைப் பாண்டியன் (மா. கார்த்திகைப் பாண்டியன்) (மே 28, 1981) தமிழில் கதைகளையும் மொழியாக்கங்களையும் செய்துவரும் நவீன எழுத்தாளர். ஆங்கிலம் வழி நவீன இலக்கியப்படைப்புகளை மொழியாக்கம் செய்கிறார். பெங்களூருவில் பொறியியல் கல்லூரி பேராசிரியராகப் பணிபுரிகிறார். தேசிய மற்றும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் துறைசார்ந்த பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார்
இந்த புத்தகத்தின் தலைப்பை பார்த்து பிடித்துப் போய் எடுத்த புத்தகம். இந்த புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றிய விவரங்கள் வாங்கிய பின்னரே அறிந்து கொண்டேன். கார்த்திகைப் பாண்டியன் அவர்களின் மொழியாக்கங்கள் பற்றியும் இந்த புத்தகத்தின் வழியே உலகச் சிறுகதைகளின் உலகத்தை என் வீட்டில் அமர்ந்தபடி சுற்றி வர துவங்கினேன். இந்த புத்தகத்தில் 15 சிறுகதைகள் உள்ளன.
இந்த சிறுகதைகளின் வழியே உலக சிந்தனை எந்த வகையில் பிரயாணிக்கிறது, எந்த வகையான எண்ண ஓட்டங்கள் அவர்களின் கதைகளில் மேலோங்கி இருக்கிறது, எந்த வகையில் மனித மனங்கள் பிரதிபலிக்கின்றன என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. இந்த புத்தகத்தை ஏதோ ஒரு 15 கதைகளை உள்ளடக்கிய நூலாக உதறி தள்ள முடியாது. "எல்லைகள் இல்லாத உலகம்" என்று இந்த புத்தகத்திற்கு க.மோகனரங்கன் அவர்களின் முன்னுரையே அதற்கு சான்று!
" A great age of literature is perhaps always a great age of translations" என்ற Ezra pound அவர்களின் வாக்கியத்தோடு தொடங்குகிறது புத்தகம். முன்னரை மிக முக்கியமான தமிழின் மொழி பெயர்ப்பாளர்களை அறிமுகம் செய்கிறது. பதிப்பகம் முதற்கொண்டு எந்தெந்த எழுத்தாளர்கள் இந்த பணியில் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்ற விவரணை மிகவும் முக்கியமானதாக எனக்கு தோன்றுகிறது. மிகவும் முக்கியமான எழுத்தாளர்களாக அறியப்பட்டவர்கள் அனைவருமே மொழி பெயர்த்து நூல்களைக் தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இப்படியான வகையில் மொழி பெயர்ப்பு என்பது எந்த ஒரு மொழிக்கும் மிக முக்கியமானதொரு உலகம்.
அந்த முன்னுரை பற்றி தனியே எழுதும் அளவுக்கு செய்திகள் இருக்கின்றன. அதை இன்னொரு முறை செய்கிறேன். 10 நாடுகளின் எழுத்தாளர்களின் சிறுகதை இந்த புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. அதை முதலில் குறிப்பிட்டு பின்னர் கதை உலா செல்லலாம்.
தொலைநோக்கி - டானிலா டேவிடோவ் - ரஷ்யா ஆறு கதைகள் (6 தனி கதைகள்)- கொன்சாலோ எம்.டவரெஸ் - போர்த்துக்கல் வாய் நிறைய பறவைகள் - சமந்தா ஸ்வெப்ளின் - அர்ஜென்டினா அந்த நிறம் - ஜோன் மெக்கிரகோர் - பிரிட்டன் சுல்தானின் கப்பற்கூட்டம் - சாதிக் நைஹோம் - லிபியா துப்புரவாளர் - ராபர்ட் மின்ஹிண்ணிக் - வேல்ஸ் பெஞ்சமின் செக்கின் கதை - எல்விஸ் ஹாஜிக் - போஸ்னியா துண்டிக்கப்பட்ட தலையின் கதை - முஹம்மது பர்ராடா - மொரோக்கோ கோமாளி - மஜீத் தோபியா - எகிப்து காவி - மிர்சா வஹீத் - இந்தியா
முதல் கதையிலிருந்து கடைசி கதை வரை வெவ்வேறு விதமாக அணுகப்பட்ட மனித சிந்தனை, ஏதோ ஒரு வகையில் தனிமையின் திறக்கப்படாத கதவுகளின் பால் அக்கறை கொண்டு அதை தட்டியபடி நிற்கும் மனிதர்கள், தனித்திருந்து இந்த சமூகத்தை பார்த்து ஒற்றைக்குரலை உயர்த்தும் ஒரு மனிதனின் எண்ணங்கள், படுகொலைகளின் நினைவுகள் என்று பல்வேறு நிலைகளில் இந்த கதைகள் பல உண்மைகளை சொல்லி செல்கின்றன.
சில கதைகளில் மேலோட்டமாக கூறப்பட்ட கருத்துக்களின் ஆழம், ஒன்றிற்கு மேற்பட்ட முறை படிக்கும் பொழுது விளங்குகிறது. அதில் தவறொன்றும் இருப்பதாக படவில்லை. சில எழுத்தாளர்களின் நடை நமக்கு பழக நேரம் பிடிப்பதை போலவே இதையும் பார்க்கிறேன். குறிப்பாக தொலைநோக்கி கதையின் முக்கியமான விளக்கப்புள்ளி, ஒருவன் வானில் தெரியும் அதியற்புத நட்சத்திரங்களை காண பேருந்து ஏறி பயணிக்கிறான். இப்படி ஒரு மனநிலையே அவன் எப்படிப்பட்ட மனதின் சுதந்திரத்தை அனுபவித்து கொண்டிருக்கிறான் என்பதனை சொல்கிறது. ஆனால் இப்படியான பயணத்தின் வேர்களை அறுத்து எறிகிறது அந்த பேரூந்தில் வேறு எதற்கோ, வேறு யாருக்கோ பாடம் புகட்ட வைக்கப்பட்ட குண்டு.
கொன்சாலோ எம்.டவரெஸ் அவர்களின் ஆறு கதைகளும் ஒவ்வொன்றும் ஒரு கருத்தை விதைத்து செல்கிறது. புனித கீதம் கதையின் கரு துப்பாக்கிகளை எல்லாவற்றுக்குமான முடிவாகவே மனிதர்கள் நினைத்திருப்பதை வேடிக்கையாய் சொல்கிறது. அம்மாவும் அவளின் மூன்று குழந்தைகளும் கதையில், ஓர் அம்மாவின் துண்டிக்கப்பட்ட தலையை தேடி செல்லும் மூன்று குழந்தைகள். தலையில்லாத அம்மா பேசுகிறாள், குழந்தைகளிடம் தன் தலையை பார்த்தீர்களா என்று வினா எழுப்புகிறாள். இந்த கதை முழுவதும் குறியீடுகளால் நிரம்பி இருக்கிறது.
"எப்படி அது வெட்டப்பட்டது?" என்று மூத்த குழந்தை கேட்கிறான். ஏன் ? என்று இளைய குழந்தை கேட்கிறான்.
அம்மா மறுமொழி உரைக்கிறாள்:
கோடாரியால்.
உங்கள் அப்பா.
ஏனென்றால் படுக்கையில் அதிக இடம் வேண்டுமென அவர் விரும்பினார்.
சில நிமிடங்களுக்கு குழந்தைகள் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள், ஆனால் பிறகு மூத்த குழந்தை அலறுகிறான், நடுவிலுள்ள குழந்தை அழுகிறான், மேலும் இளைய குழந்தை நடுங்குகிறான்.
வாய் நிறையப் பறவைகளின் கண்ணோட்டமே அதிர்ச்சி ஏற்படுத்த கூடும். எனினும் ஆழ்ந்த வாசிப்புக்கான கட்டத்தை நோக்கி சில கதைகள் நம்மை நகர்த்தும். அது போன்றதொரு கதையென இதை பார்க்கிறேன். தலைப்பிற்கு ஏற்ப நகரும் கதை. ஒரு குழந்தையின் உணவு பழக்கத்தை மையமாக கொண்டு நகரும் கதை.
இப்படி இந்த புத்தகத்தின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு எண்ண அலைகளை நம்மில் விதைத்து செல்கிறது. அதிர்வுற செய்கின்றன சில கதைகள், நின்று நிதானிக்க செய்கின்றன சில கதைகள், கோமாளி போன்ற கதை எப்போதும் நம் அருகில் நடக்கும் கதையாகவே தெரிகிறது. எகிப்தில் மட்டுமே நடக்கும் கதையல்ல அந்த கோமாளியின் கதை. ஊரில் எல்லோரையும் மகிழ்விப்பவனாக, கடைசியில் தன்னை தொலைத்து தேடி செல்பவன் எகிப்தில் மட்டுமா இருக்கப்போகிறான்?
கனவுகளின் உலகத்தில் துரத்தும் நாயை கருவாகக் கொண்ட சுல்தானின் கப்பற்கூட்டமும், மிகவும் விரும்பப்படாத சிறுவன் பெஞ்சமின் செக் காணாமல் போகும் கதையும், காவியும் எல்லாமுமே வேறு உலகத்தை அறிமுகம் செயகின்றன. புதிய கதைக்களங்கள், சில கதைகள் உண்மையாகவே இருப்பதாய் தோன்றுகிறது. சுவாரசியமாக தொகுக்கப்பட்ட புத்தகம். படித்துப் பாருங்கள்....
அரசியலை கலையின் வழியே உரக்கப் பேசும் காலம் இது. கலைக்கென தனிப்பட்ட அரசியல் ஏதும் கிடையாது.
புத்தக பின்னட்டையின் உரை. கலைக்கு அரசியல் கிடையாது என்பது உண்மை ஆனால் அந்த கலையின் பார்வையில் சாய்வுத்தன்மை தான் அரசியலை உண்டாக்குகிறது. இந்த புத்தகம எந்த அரசியலையும் பேசவில்லை என்பது ஆகச்சிறந்த அபத்தம்.
எடுத்துகாட்டாக saffron என்பதை காவி என்று மொழிப்பெயர்த்து தங்களது போலி அரசியல் மற்றும் நடுநிலைத் தன்மையின் முரண்களை வெளிக்கொணர்வது மொழிப் பெயர்ப்பாளனின் அபத்தம். இதன் கதையின் களம் காஷ்மீர் என்பதால் என்னவோ காவி அவர்களுக்கு பொருத்தமானதாகத் தோன்றியிருக்கலாம்..
அடுத்ததாக மொழிப்பெயர்ப்பிற்கு வருவோம். உலகச்சிறுகதைகளை மொழி பெயர்க்கிறொம் என்பது மட்டும் போதாது. அது எந்த விதத்தில் ஒரு இந்திய (தமிழ்) வாசகனின் மனத்தில் தொடுகிறது என்பது முக்கியம். இலக்கியத் தெய்வங்களைக் கடந்து விடுவோம். உடைந்த உரைநடை மொழிப் பெயர்ப்பும் சம்மந்த சம்பந்தமில்லாத நிகழ்வுகளின் தொகுப்புகளும் வாசிப்பதில் சலிப்பை மட்டுமே கொடுக்கிறது.
இந்த கதைகளில், கதை என்று சொல்வதின் அபத்தத்தைப் படிப���பவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆக மொத்தத்தில் வாசிப்பில் ஒரு புத்தகத்தை சேர்த்துக் கொள்ளல்லாம். நேரம் வீண்.
வாங்கி விட்டோம் வாசித்து வைப்போம் என்ற சலிப்பு மட்டும்தான் மிச்சம்.
இந்த கதைகள் படிக்கும் போது இருக்கும் உணர்வை விட..அது ஆழ்மனதில் ஏற்படுத்தும் தாக்கம் வியப்பானது. மணல்மேடாக அழிய போகும் என்று ஊரிலிருந்து அரசனும் மக்களுக்கு கடல்பயணத்திற்கு தயாராக... ஒரு விவசாயி ஈச்சமரங்களுக்கு தண்ணீர் ஊற்றி கொண்டு ஊரிலேயே தங்குகிறான். சூபி சொன்னது போல ஊரும் அழிகிறது மக்கள் திரும்பும் போது விவசாயி என்ன ஆனான்? அரசன் என்ன ஆனான்? அரசனுக்கு கனவில்லா நிம்மதியான தூக்கம் கிடைத்ததா?