"கொலை அரங்கம்" - சுஜாதா
(புத்துணர்ச்சிக்காக மீண்டுமொரு வாத்தியார் நாவல்)
1984ல் சென்னை விமான நிலையம் குண்டுவெடிப்புக்குள்ளானது., ஈழத்து மக்கள் சிங்களவர்களால் படும் அழித்தொழிப்பிற்கு, உலக கவனத்தை பெற்று தர, குண்டு வெடிப்பு நிகழ்த்தப்படுகிறது, விடுதலைப்புலிகள் அந்நிகழ்விற்கு பொறுப்பேற்கின்றனர்.
அந்நிகழ்வை ஒட்டி, அப்போதே இந்நாவலை, 'குங்குமம்' வார இதழில் புனைந்துள்ளார், திரு சுஜாதா.
சென்னையில் ஒரு அரங்கத்தின் திறப்பு விழாவில் குண்டு வெடிப்பு நிகழ்வதாக நாவல் தொடங்குகிறது. உத்தம் மற்றும் பீனா என்பவர்களது அரங்கம் அது. அதன்பின் நடக்கும் கொலைகளும், கொலைமுயற்சிகளும் அரங்கேறுகிறது அவர்களது வாழ்வில் . அதனை, தி கிரேட் 'கணேஷ்-வசந்த்' துப்பறியும் விதமாக திரு சுஜாதா அவர்கள் அட்டகாசமாக எழுதியுள்ளார்.
படிக்கும்போதே ‘களுக்’கென சிரிப்பை வரவழைக்ககூடிய சின்ன சின்ன வினாக்களையும் பதில்களையும் தரும் வசந்த். அவனை அவ்வப்போது செல்லமாய் கண்டிக்கும் கணேஷ் என ரசகளமாய் செல்கிறது கதை.
ஒரே வீச்சில் படித்துவிடக்கூடிய சூப்பர்சோனிக் வேக எழுத்து நடை கொண்ட பொழுதுபோக்கு நாவல்.
கூடவே அப்போதைய ஈழப்பிரச்சனையில், சுஜாதாவின் கரிசனமும் இதில் தெரியக்கூடும்.
இந்நாவல், 38 வருடங்களுக்கு பிறகு, இப்போதைய வாசிப்பாளர்களையும் கவரும் விதமாக 'லைவ்'வாக இருப்பதால்தான், சுஜாதா இன்றும் நம்முடன் இருக்கிறார் என்பதை உணர வைக்கிறது.
புத்தகத்திலிருந்து(Spoiler too)...
\
"வர்றப்ப இன்னொரு முகத்தை கவனிச்சியோ?"
"யாரு?"
"நோட்டீஸ் கொடுத்துட்டு இருந்தானே இலங்கைத் தமிழன்!"
"கவனிக்கலை பாஸ்."
"அந்தாளும் ஒரு மாதிரியா டென்ஸாகத்தான் இருந்தான். என்னவோ நடக்கப் போகுது இங்க!"
"ஏதாவது சிக்கலை எதிர்பார்க்கிறீர்களா? கெட்ட காரியத்தை?"
"போலீஸ் பாதுகாப்பு அதிகமாகவே இருக்குது."
"சிலோன் தமிழங்க பிரச்சினை தீரும்ங்கிறீங்களா?"
"கஷ்டம். ஒரு மெஜாரிட்டிக்கு மைனாரிட்டி காம்ப்ளக்ஸ் இருக்குது."
"யாருக்கு?"
"சிங்களவருக்கு! அவங்க மெயின்லேண்ட் தமிழர்களையும் சேர்த்துக்கறாங்க. இந்த சிங்கள-தமிழ்ப்பகை ரெண்டாயிரம் வருஷம் இருக்கிறதா சொல்றாங்க. காமினின்னு ஒரு சிங்கள அரசன் சோழர்களை எதிர்த்த போது அந்தப் போரை சிங்கள இன எழுச்சி சரித்திர ஆசிரியர்கள் வர்ணிக்கிறப்ப ஆரம்பிச்சது வினை!"
/
\
மொசைக் தரை முழுவதும் கண்ணாடித் துண்டுகள் இறைந்திருக்க நடுவில் ஒரு ரத்தக் குதறல் தெரிந்தது. காலணிகள், கால்கள், இடுப்பு பெல்ட் வரை எல்லாம் தெளிவாக இருந்த அந்த உடலின் மேற்பாகம் உருத்தெரியாமல் செஞ்சிதறலாக இருந்தது. கணேஷ் கூரையை பார்க்க, அதில் கூட ரத்தக் கோலம் போட்டு சதைப் பிச்சல் ஒட்டி கொண்டிருந்தது. கண்ணாடிச் சுவற்றில் பொத்துவிட்டிருந்தது. செங்கற் சுவர் உடைந்தபகுதியில் பல்லவன் பஸ்கள் தெரிந்தன.
"மை காட், திஸ் இஸ் டெர்ரீபிள்."
"ஆள் செத்துப் போய்ட்டான்னு நினைக்குறேன்! பல்ஸ் பாக்கலாம்னா கையே இல்லையே!"
கணேஷ் வசந்தை முறைத்தான்.
/
\
" உங்க கூடத்தான் கதைக்கணும்."
பீனா புரியாமல் வசந்தை பார்க்க, அவன் "கதைங்க" என்றான்.
"நிம்மட பண நஷ்டத்துக்கு எண்ட இயக்கத்தின் சார்பிலும், என்ர சார்பிலும் ஆயிரம் மன்னிப்புக்கள். தமிழ் ஈழம் இண்டைக்கில்லை, நாளைக்கு வரும்! ஈழத்தமிழர்கள் மானமாய் சீவிக்கும் வேளை வரத்தான் போவது. ஓம், அண்டைக்கு உங்கள் நஷ்டத்துக்கு ஈடு கொடுக்க ஏலும். ஒன்றும் மனசில வெச்சுக்க வேணாம்!"
பாண்டியன், "அப்பன்னா வெடி வெச்சது நீங்கதானா குமரேசன்?"
"ஓம்" என்றான்.
"இதனால் உங்க பேர்ல இரக்கம் வருங்கிறீங்களா?"
"இரக்கம் எங்களுக்குத் தேவையில்லை."
"பின்னே என்ன வேணும் உங்களுக்கு?"
"கவனம்" என்றான். "வெல்வெட்டித்துறையில் பாய்ண்ட் பெட்ராவிலும் இன்றைக்கு நடக்கிறது தெரியுமா?"
வசந்த், "நண்பனே, அங்க நடக்கிறது அக்ரமம் தான். கேள்வி கேட்காமல் ஒப்புத்துக்கறோம். ஆனா, நீங்க அதுக்காக மோபிரிஸ் ரோட்டில வெடி வெக்கிறதால என்ன லாபம்? உடனே அம்மா மிலிட்டரிய அங்க அனுப்புவாங்கன்னு நினைப்பா?"
பாண்டியன், "பங்களாதேஷ்ல அனுப்பிச்சமே" என்றான்.
/
\
"பாண்டியனே அவங்க(ஈழம்) அனுதாபி போலத் தோணுது."
"பாண்டியன் மட்டும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழனும் தான் ஒன்றும் செய்ய முடியவில்லையேன்னு வருத்தப்படுறாங்க அவ்வளவுதான்."
/
\
ஸ்ரீலங்கா - இந்தியத் தமிழர்கள் தேசிய சனத்தொகையில் பதினெட்டு சதமாக இருந்தாலும், வடக்கு மாநிலங்களில் 92 சதவிகிதமும், கிழக்கே 68 சதம் இருக்கும்போது தனிஈழம் கேட்பதில் என்ன தப்பு...
/
\
லவுஞ்சில காத்திருந்தேன். 'வீல்'னு ஒரு சத்தம் - 'வீலை' நோக்கி போனேன்.
/
\
"இந்த கேஸ்ல நமக்கு என்ன ஜோலி? பட்டரைல ஈ !"
/
\
"...(அவர்களுடைய) அறையில சத்தமில்லாம வந்து, சதக்குன்னு குத்தப்போறான்!"
"என்ன பாஸ் இந்த வேளையில கவிதையா!"
/
\
"பட்சி சொல்லுதுன்னா, அந்த பட்சியை கேட்டு எப்ப கல்யாணம் பிராப்தின்னு கேளுங்க. உடம்பு அடிவாங்கி தாளலை. அப்பப்ப தாளில குங்குமம் தடவி பிரார்த்திக்கிறதுக்கு கைவசம் ஒரு மனைவி இருந்தா நல்லது. வாம்மா மேரி, ஊணு கழிஞ்சோ?"
மேரி வசந்தை முறைத்து பார்த்து, "வசந்த் ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்கிறது" என்றாள்.
/
\
"பேப்பர்ல ஒரு விளம்பரம் கொடுக்கணும், இலங்கைத் தமிழர்களுக்காக வருத்தப்பட்டு கவிதை எழுதாமல் இருக்கிற தமிழ் கவிஞர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்னு..."
/