குடும்ப நாவல் வகைகளில் குடும்ப வன்முறை பற்றி எழுதுவதில் உஷாராணி உச்சம் என்றால் அடுத்த இடம் இக்கதாசிரியருக்குத் தான். வன்முறை என்றால் அப்படி இப்படி இல்லை கணவன், மாமனார், மாமியார், நாத்தனார் போதாக்குறைக்குக் கணவன் வீட்டின் வேலைக்காரர்கள் கூடக் கதை நாயகியைக் கொடுமையோ கொடுமைப்படுத்துவார்கள். அனைத்தையும் ஏற்றுக் கொண்டு அன்பு உள்ளத்தோடு காத்திருக்கிறாள் என்று சொல்வதைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம் ஆனால் பத்து பக்கத்துக்கு ஒருதரம் அவளைப் போராளி போராளி என்று எழுதப்படுவதைத் தான் நம்மால் தாங்கவே முடியாது.
அப்பாவின் ஆசையான கூட்டுக் குடும்ப வாழ்க்கையை வாழ வீட்டின் தலைமகனான கதிர் சொந்தங்களுக்காகத் தன்னிலையிலிருந்து இறங்கி வருபவனுக்கு மனைவியை மட்டும் புரிந்து கொள்ள முடியவில்லை.
தன் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டது பிடிக்கவில்லை என்றாலும் அமைதியாக இருக்கும் உதயா வந்தவள் காட்டும் உதாசீனம் தாங்க முடியாமல் வெளியேறி பாட்டி வீட்டில் அடைக்கலமாகி வேலையைத் தேடிக்கொள்கிறாள்.
முதல் சந்திப்பில் கதிரவன் மீது கை நீட்டிய உதயாவை பழி வாங்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு வாய்ப்பாக அவளே மனைவியாக வர, அதன் பிறகென்ன ஓயாத பேச்சால் அவளைக் கண்ணீரில் குளிப்பாட்டினாலும் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் என்று தெரியுமா என்று அவனின் காலிலே விழுந்துகிடக்கிறாள். இதன் பெயர் தான் காதலாம்.
சரணாகதிக்கும் அடிமைத்தனத்திற்கும் இருக்கும் வித்தியாசம் எழுதுபவர்களுக்குத் தெரியாமல் போகலாம் வாசிப்பவர்களுக்குத் தெரியும் தானே?
வடிவேலு சொல்வது மாதிரி திடீர் திடீர்ன்னு உருளுதாம் என்பதின் முழு அர்த்தம் இங்கே காணலாம். முதல் பக்கத்தில் நல்லா போய்க் கொண்டிருக்கும் கதாபாத்திரம் அடுத்தப் பக்கத்தில் கொடுமை செய்பவனாக மாறிவிடும் எந்த வித காரணமும் இல்லாமல்.
சாதாரண வாசகர்களான நமக்கே லாஜிக் என்று ஒன்று இருப்பது தெரியும் போது 800 பக்கம் எழுதுபவர்களுக்கு அது தெரியாமல் இருப்பது ஆச்சரியம் தான்.