பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்களின் தமிழகம் பற்றிய பொருளாதார, அரசியல் சமூக மாறறங்கள், குறிப்பாக நில உறவுகளை பற்றிய மிக சிறந்த ஆய்வு இங்கு நூல் வடிவம் பெற்றுள்ளது.
“நிலச்சீர்த்திருத்தம் என்ற திட்டம் தமிழகத்தில் படுதோல்வியைச் சந்தித்த ஒரு முயற்சி. இதனை ஆய்வு செய்து பல புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன. அப்படியானால் காவேரிப் படுகையில் பரவலாக நிலவி வந்த நிலப்பிரபுத்துவ உறவு முறைகள் அப்படியே இப்போதும் தொடர வேண்டும் அல்லது வேறு வடிவத்திலாவது தொடர வேண்டுமே, இதனைத் தேடி அலைந்த எனக்குக் கிடைத்த விடை ‘முடிந்து போன ஒன்றை நீங்கள் தேடுகிறீர்கள்’ என்பதே. ஆனால் மிகுந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட காவேரிப் படுகைப் பகுதியிலிருந்து வந்த ஒரு ஆய்வுகூட இதனை ஆவணப்படுத்தவில்லை. இந்த இடைவெளியை நிரப்ப எடுக்கப்பட்ட சிறிய முயற்சியே இந்நூல். நிலப்பிரபுத்துவம் இப்பகுதியில் எப்படி வீழ்ந்தது என்பதை இதில் ஆவணப்படுத்தியுள்ளேன். தமிழகத்தின் எழுதப்படாத வரலாறுகள் ஏராளமாக உள்ளன என்பதை நாளும் உணர்கிறேன். அதனை ஆவணப்படுத்தும் வாய்ப்பு பலருக்கும் வாய்த்தால் தமிழகத்தின் நல்லூழ் ஆகும்.”
J. Jeyaranjan (ஜெ. ஜெயரஞ்சன்) is an economics professor who has been looking at the patterns of progressive economic policies and how they have pulled the masses from poverty. In his book, Thamizhagathil Nilaprabhuthuvam Veendha Kadhai, he details the policies that ultimately ended the Zamindari system.
சமூக (சாதி) பொருளாதார படிநிலைகளும் அவற்றிற்கிடையில் நிலவும் உறவுமுறைகளும், வலைப்பின்னல்களும், அதிகார இயல்புகளும், அரசியல் கட்சிகளின் சமூக கருத்தியல்களும் ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், அதிலுள்ள நிறைகுறைகளைத் தாண்டி அதன் அடிப்படை நோக்கங்களை நோக்கி மாற்றங்களுக்கு வித்திடவும், எவ்வாறெல்லாம் இணைந்து இயங்குகின்றன என்பதனை பொதுமக்களும் புரிந்துகொள்ளுமாறு 'தமிழகத்தில் நிலபிரபுத்துவம் வீழ்ந்த கதை'யின் மூலம் புலப்படச்செய்யும் புத்தகம்.
சமீப காலங்களில் தொலைக்காட்சி விவாதங்களில் தோன்றி விவசாயம், நிர்வாகம், வணிக நிலவரங்கள், பொருளாதாரம் என்பதான தலைப்புகளில் மிக முக்கியமான கருத்துக்களை எடுத்து வைத்து வருபவர், பொருளாதார அறிஞர் திரு.ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள். பல கள ஆய்வுகளும் மேற்கொண்டு உள்ள இவரின் கருத்துக்களின் பால் ஈர்க்கப்பட்டு இந்த புத்தகத்தை பற்றி தற்செயலாய் அறிந்து கொண்டேன்.
முக்கியமாக காவிரி படுகை பகுதியிலிருந்து வந்த காரணத்தினால், இந்த கள ஆய்வு புத்தகத்தை வாங்கினேன். இந்த புத்தகம் தமிழக காவிரிப்படுகை கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலப்பிரபுத்துவம் குறித்த கள ஆய்வின் விளக்க நிலை என்று வைத்துக்கொள்ளலாம். நிலப்பிரபுத்துவதில் யார் யாரெல்லாம் அங்கம் வகித்தனர், ஆங்கிலேயர் காலம் தொடங்கி இன்று வரை என்னென்ன மாற்றங்கள் இருக்கின்றன அல்லது எப்படியெல்லாம் அவை உருமாறின என்பதற்கான சாதிய கட்டுமான அடிப்படையிலான விரிவான ஓர் ஆய்வுப்புத்தகம்.
100 வருடங்களோ அல்லது அதற்கு முன்னரோ நிலப்பிரபுக்களோடு அதில் வேலை செய்யும் தொழிலாளர்களும் அதில் வேலை செய்யும் தொழிலாளர்களும் சேர்ந்தே நிலத்தோடு அடிமைகளாய் விற்கப்பட்டு வந்திருக்கின்றனர். சாதிய நிலைமைகளில் மேல்தட்டு என்று கருதப்பட்டு வந்தவர்களிடம் வரைமுறை இன்றி ஏக்கர் கணக்கில் நிலம் சொந்தமாக இருந்திருக்கின்றது. இவர்கள் யாருக்கும் அல்லது பெரும்பான்மை நிலப்பிரபுக்களுக்கு நிலத்தில சாகுபடி செய்யவோ அல்லது நிலம் எங்கே இருக்கிறது என்பதே தெரியாத நிலையே இருந்து வந்திருக்கிறது.
தஞ்சையின் காவிரிப்படுகையில் குறுவை, சம்பா முறையில் அன்றைய சாகுபடி நடந்திருக்கிறது. ஒன்று 110 நாட்களிலும், மற்றொன்று 150 நாட்களிலும் சாகுபடி செய்து விளைச்சல் செய்துள்ளனர். அடிமைகளாய் மாறி மாறி நிலத்தோடு நிலமாக விற்கப்பட்ட பண்ணையாட்கள் சிறுவர்களிலிருந்து எவ்வாறு கூலிக்கொடுத்து வளர்க்கப்பட்டார்கள் என்பதை பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"பண்ணையாள் சிறுவனாக இருக்கும்போதே தன்னுடைய பணியை கால்நடைகளை வளர்ப்பவராகத் தொடங்குவார். அவருக்கு மாதம் ஒன்றுக்கு 7 கிலோ என்று அவருக்கு ஒரு துண்டு அளவு துணி வழங்கப்படும். இந்த சிறுவன் சற்று வளர்ந்தவுடன் அரை உழைப்பாளியாக உழைப்பு படைக்குள் சேர்த்துக்க்கொள்ளப்பட்டு மாதம் ஒன்றுக்கு 14 கிலோ நெல் வழங்கப்படும். சில ஆண்டுகள் கழிந்து அந்த சிறுவன் ஒரு முழுமையான பண்ணையாள் என அங்கீகரிக்கப்பட்டு மாதம் ஒன்றுக்கு 29 கிலோ நெல் அவருக்கு வழங்கப்படும். இதை தவிர, அறுவடை காலத்தில் போது ஒரு பண்ணையாளுக்கு 86 கிலோ நெல் வழங்கப்படும். இந்த ஊதியத்தை களவடி என்று கூறுவார்".
இப்படியெல்லாம் அடிமைப்படுத்தப்பட்ட பண்ணையாட்கள் அந்தப் பண்ணைகளில் இருந்து ஓடிப்போக நினைத்தால் பிடித்துக்கொடுக்கப்படுகின்ற தண்டனைகள் மிகக்கொடுமையானவை. வரலாற்றின் அடிமைத்தனத்தின் பக்கங்கள் எப்போதும் மிக வேதனையானதும் வலி மிக்கதாகவும் தான் இருக்கின்றன.
சாகுபடிக்கான விளைநிலங்களில் சாகுபடி கண்டு எடுப்பதற்கு நிலப்பிரபுக்கள், குத்தகைதாரர்கள், வேளாண் தொழிலாளர்கள் என்ற படி நிலைகளில் மக்கள் இருந்திருக்கிறார்கள். இந்தப்புத்தகத்தின் கள ஆய்வு வழி ஆசிரியர் சொல்ல வருவதாக நான் புரிந்த கொண்டவைகளை கீழே தொகுத்துள்ளேன்:
- நிலப்பிரபுக்களின் அதிகாரம் எவ்வாறு மெதுவாக பிடுங்கி எறியப்பட்டது? - இதற்கான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது முக்கியமாக தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு பின்னர்தான். - நில உச்ச வரம்பு சட்டம், நிலஉடைமை சீர்திருத்தம், குத்தகைதாரர்களுக்கான உரிமைகளை மீட்டல், சமூக சட்டங்கள் அல்லது சாதிய கட்டுமானங்கள் மூலம் நிகழ்ந்த நில உடைமை மாற்றங்கள். - வார முறை அமலாக்கம், அதாவது குத்தகைதாரர்கள், நிலப்பிரபுக்களுக்கு கொடுக்க வேண்டிய வருடாந்திர நெல் அளவு அல்லது பணமாக கொடுக்க வேண்டிய நிலுவைகள். - திராவிடக் கட்சிகளின் நிலப்பிரபுக்களுக்கு எதிரான சட்டங்கள். அவை எப்படி குத்தகைதாரர்களையே நில உடைமையாளர் ஆக்கியது? - கம்யூனிஸ்டுகளின் பங்கும், எப்படி அதுவே பின்னர் திராவிடக் கட்சிகளால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன என்பதற்கான விளக்கங்கள். - இன்றைய நிலையில் எப்படி நிலப்பிரபுத்துவம் என்பது முற்றிலும் ஒழிந்து, ஆனால் அதே சமயத்தில் கோவில்களிலும், அறக்கட்டளைகளிலும், குத்தகைதாரர்களிடமும் பரந்துபட்டு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கான கள ஆய்வு விவரங்கள் உள்ளன.
1967 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகான "நில உச்ச வரம்பு சட்டத்தில் 1970 ஆண்டு சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலமாக இருந்த நில உச்சவரம்பு 15 ஏக்கர் ஸ்டாண்டர்டு நிலமாக குறைக்கப்பட்டது. நில உச்சவரம்பு சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட நிலங்களை விட அதிகமாக நிலங்களை வைத்துக் கொண்டிருக்கும் நிலப்பிரபுக்களுக்கு வழங்கப்படும் இழப்பீடுகள் வெகுவாக குறைக்கப்பட்டன".
அடுத்ததாக, காவிரிப்படுகையின் நீர்ப்பாசன ஆதாரம் காவிரியாக இருந்து வந்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் 320 கிலோமீட்டருக்கு, தமிழகத்தில் 416 கிலோமீட்டரும் ஓடுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல கிளை துணையாறுகளோடு காவிரி, இந்தப்படுகைப் பகுதியின் நீர் நாடியாக இருப்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். 1896 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் காவிரி நீர் குறித்த மிக முக்கியமான ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. இந்த தலைப்பில் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் நிரம்ப இருக்கின்றன. இனி தேடிப் படிக்கலாம் என்ற ஆவல் எழுவதைத் தடுக்க முடியவில்லை.
மிக முக்கியமானதொரு உண்மை என்ற புத்தகத்தின் கள ஆய்வு போட்டு உடைப்பது எவ்வாறு நில உடைமை சாதிய நிலையிலிருந்து மாறி மற்றுமொரு சாதிய நிலைக்கு சென்றுள்ளது என்பதையும், அடிமைத்தனம் சற்றே ஒழிந்த நிலைமையையும் தான் என்னுடைய புரிதல் நிலை. பேட்டை, குறிச்சி போன்ற கிராமங்கள் தான் இந்த பிரதான ஆய்வுக்கான களங்கள். மேற்கு மற்றும் கிழக்குப் படுகைகளில் இருக்கின்ற தற்போதைய சூழல் வெகுவாக சாதிகளின் வாரியாக தொகுக்கப்பட்டுள்ளன.
புத்தகத்தின் நிறைவுப்பகுதியில் சர்வோதயா தொண்டு நிறுவனமான லாஃப்டி, எவ்வாறு உழுபவர்களுக்கே நிலத்தை சொந்தமாக்க திட்டங்கள் கொண்டு வந்தன என்பது பற்றியும், அதில் மெல்ல மெல்ல அவர்கள் சந்தித்த சிக்கல்களையும் ஆசிரியர் விளக்குகிறார். வழக்கம் போல கையாடல்கள், வங்கியின் கடன் பிரச்சனைகள் என்பவை வந்த காரணத்தினால், நிலம் வாங்��ி நிலமற்றவர்களுக்கு கொடுப்பதிலிருந்து வீடற்றவர்களின் தேவைக்கு வீட்டு வசதி செய்வதை நோக்கி அதன் சேவை மாற்றம் கண்டது.
சிறு பொருளாதாரக் கணக்கினை குறிப்பிட்டு என் இடுகையை முடிக்கிறேன். 2014-15 ஆண்டில் குறிச்சியில் ஒரு குத்தகைதாரருக்கு ஏக்கர் ஒன்றுக்கான சாகுபடி செலவு 20,220 ரூபாய். இதைத்தவிர நில உரிமையாளருக்கு வாரமாய் (வாரம் என்பது வாரத்துக்கு செலுத்த வேண்டிய நெல் கணக்கு என்ற சொல் வழக்கு) ஆண்டுக்கு செலுத்த வேண்டிய 6 மூட்டை நெல் அல்லது 4800 ரூபாய். இது ஒரு ஏக்கருக்கான நிலைமை. மொத்தம் 25,020 ரூபாய். அன்றைய நிலைமைக்கு லாபமோ நட்டமோ இல்லாமல் இருக்க ஏக்கருக்கு 31 முதல் 32 மூட்டைகள் விளைச்சல் வேண்டி இருக்கும். அன்றைய வருடத்தின் வறட்சி காரணமாக நிறைந்த பற்றாக்குறை 12 மூட்டைகள் என்றும் அதற்கான நிவாரணம் ஏக்கருக்கு 1400 ரூபாயாக இருந்தது.
இப்பொழுதும் சாகுபடி என்பது மிகவும் ஆபத்தான, பல முறைகளில் விரிவான சிரமங்களுக்கு இடையே தான் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றன என்பதை விளக்கும் நூலாகவே இதைப்பார்க்கிறேன்.
"சமூக நடவடிக்கைகளானது அமைப்பை மேலும் மாற்றியமைத்தது. நிலப்பிரபுக்கள், வேளாண்மையை விட்டு வெளியேறி விட்டதுடன் குத்தகைதாரர்கள் நிலவுடைமையாளர்களாக மாற்றம் பெற்று இருப்பதை பேட்டை கிராமத்தில் நாங்கள் மேற்கொண்ட சிற்றளவு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதே போல, கடந்த காலத்தில் செய்தது போல தொழிலாளர்கள் தங்களுடைய கூலி உயர்வுக்காக போராட வேண்டிய அவசியம் இல்லை... கூலிக்காக நெடுங்காலமாக நடத்தப்பட்ட போராட்டங்கள் எல்லாம் கடந்த காலமாக, காலத்தை சேர்ந்த ஒன்றாக மாறிவிட்டன".
பல விதமான கருத்துக்களை சுமந்து வரும் முக்கியமான ஆய்வு நூல் இது. நேரம் இருப்பின் படித்துப்பாருங்கள்...
தன்னுடைய அனைத்து பேட்டிகளிலும் "நிலசீர்திருத்தம் ஏன் தமிழ்நாட்டில் irrelevant" என்ற பாயிண்டை ஜெயரஞ்சன் தொட்டு செல்வார். இப்பொழுது புத்தகமாகவே வந்துவிட்டது.
நாட்டில் எந்த பிரச்சனை என்றாலும் கடுமையான சட்டங்கள் வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கும். சட்டங்கள் தேவை தான். ஆனால் அந்த சட்டங்களுடன் சமூக மாற்றமும் தேவை என்பது தான் இப்புத்தகத்தின் மூலம் நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது. ஏற்கனவே இருந்த சட்டங்களை நீர்த்துப்போக விடாமல் திராவிட இயக்கத்தின் ஆட்சி எப்படி மேம்படுத்தயது என்பதே இப்புத்தகத்தின் பேசுபொருள்.
நிலசீர்திருத்தம் தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடுகள் என்ன? மற்ற மாநிலங்களின் நிலை என்ன? பிற மாநிலங்கள் எடுத்த முயற்சிகள் என்ன? என்பது பற்றியும் சில பக்கங்களாவது பேசியிருந்தால் நாம் மாற்றி சிந்தித்தது எது என்று தெளிவாக உணர்த்தியிருக்கும்
முதல் வரியிலேயே அசமத்துவம் என்ற sanskritized பதம். கீழ்நிலை சாதிகள் போன்ற சொற்கள், 19343, எதார்த்தை என்று எழுத்து பிழைகள். கொஞ்சம் proof read பண்ணியிருக்க கூடாதா?
ஜெயரஞ்சன் எழுதியிருந்தாலும் திராவிட கட்சிகளின் சாதி பண்பை விமர்சித்து தான் இந்த கட்டுரை முடிவு பெற்றிருக்கிறது :)