இந்நாவல் கோடைகாலம் உருவாக்கிய காதல் கதை ஒன்றை சொல்கிறது. காதலின் இளநீல தினங்களை நம் கண் முன்னே காட்சிப்படுத்துகிறது.
ஒரு சமயம் தனிமை என் வீடாக இருந்தது. இன்று நான் அதன் வீடாகி விட்டேன் என்கிறது கமலாதாஸின் கவிதை வரி. அதுவே இந்நாவலுக்கு பொருத்தமான உதாரணம்.
உலகின் நிரந்தர மகிழ்ச்சியாக இருப்பது காதலே. இந்தத் தேசத்திலும் எந்தச் சூழலிலும் காதல் மனிதர்களை சந்தோஷப்படுத்தவே செய்கிறது. காதலுற்றவர்கள் கனவு காணுகிறார்கள். எல்லாக் கனவுகளும் நனவாகி விடுவதில்லை. எல்லாத் தத்துவங்களையும் வழிகாட்டுதல்களையும் தோற்கடித்து வாழ்க்கை தன் போக்கில் சுழித்தபடியே சென்று கொண்டிருக்கும் என்பதே உண்மை. அதுவே நாவலின் மையமாகவும் விளங்குகிறது.
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
எஸ். ரா. வின் எழுத்து, கரிசல் நிலத்தோட தன்மையும், பதின் பருவ காதல் அரும்புறதையும், கோடைவிடுமுறையும், புழுத்தில விளையாண்டதையும், இன்னும் பலவற்றையும் பற்றி படிக்க படிக்க அப்படியே என்னை இந்த நாவல் கட்டிப்போட்டுருச்சு, அவ்வளவு விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. பருவகால நினைவுகள் வந்து போனது. நிறைய தொடர்பு படுத்திக்கொள்ள முடிந்தது. 'சில்வியா' இந்த பெயர நான் மறக்கமாட்டேன்.
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் நாவல்களில் இடக்கை, யாமம் இரண்டையும் வாசித்திருக்கிறேன். இரண்டுமே இந்திய வரலாற்றின் சில நிகழ்வுகளை மையமாக கொண்டு எழுதப்பட்ட தீவிர கதைக்களங்களைக் கொண்டவை.
எப்போதும் காதலைப் பற்றி, பெண்களின் அகவுலகம் பற்றி மேன்மையான கருத்துக்களை கொண்டது எஸ்.ரா. வின் எழுத்துக்கள். அத்தகைய எழுத்தாளர் காதலை மையமாகக் கொண்டு படைத்திருக்கும் ஒரு நாவல் இது.
கோடைக்காலத்தில் இருவரிடையே உருவாகும் காதலை, காதலின் உன்மத்தத்தை தம்மையும் உணரச் செய்து விடுகிறது. சில தருணங்களில் கவிதைப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகமும் வந்து விடுகிறது.
எந்த அடையாளங்கள் இல்லாமலும் மனிதர்கள் பரஸ்பரம் அன்பு காட்ட முடியும், சில உறவுகள் நம் வாழ்நாள் முழுவதற்குமானது என்பது போன்ற நல்உணர்வுகளை வாசிப்பவர்களிடம் விதைக்கிறது இந்நாவல்.
தனது எழுத்துலகம் ரஷ்ய இலக்கியங்களிடமிருந்து உத்வேகம் பெற்று உருப்பெற தொடங்கியதாக தனது பல்வேறு உரைகளிலும், கட்டுரைகளிலும் எஸ்.ரா. கூறியிருக்கிறார். அந்த வகையில் தஸ்தயேவ்ஸ்கி, துர்கனேவ் போன்ற ரஷ்ய இலக்கியவாதிகளுக்கு தமிழ் எழுத்தாளன் ஒருவன் செலுத்தியிருக்கும் அஞ்சலியாகவும் இந்த நாவலை எடுத்துக் கொள்ளலாம்.
வாசித்து முடிக்கையில் கோடைக்காலத்தில் கருவான உங்கள் முதல் காதல் நினைவுக்கு வரக்கூடும். ஒரு மழை நாளின், ஜன்னலோர பேருந்து பயணத்தை அழகாக்குவதற்கு அந்த நினைவுகள் மட்டும் போதும் தானே.
நாவல் போன்று ஒரு கவிதை. கவிதை போன்றொரு நாவல். காதலில் கவிதை இல்லாமல் எவ்வாறு பக்கங்கள் பயணிக்கும் என்று எதிர்பார்த்த எனக்கு, மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது இந்த புத்தகம். சில்வியாவும் சுப்பியும் கடக்கும் ஒவ்வொரு கோடையும் மனதை பாரமாக்கி வெளி செல்கின்றன.
எஸ்.ரா அவர்களின் மொழி நடையும் சரி, பதின் வயதின் மாற்றங்களில் சிக்கி தவிக்கும் சுப்பியும் சரி, வயதில் குறைவாக இருப்பினும் இந்த உலகத்தை எளிமையாக, விசித்திரமாக, யதார்த்தமாக நோக்கும் சில்வியாவாக இருந்தாலும் சரி, மனதில் மெல்ல ஒரு சாரல் பட்டும் படாமலும் கடந்து செல்கிறது.
எல்லோர் வாழ்விலும் சஞ்சரித்து, மெல்ல எப்போதும் நகர்ந்து சென்ற கோடை காலத்தின் மறு வாசிப்பே இந்த ஒரு சிறிய விடுமுறைக் கால காதல்கதை. இதற்கு மேல் விளக்கங்கள் சொன்னால் முழு கதையையும் இங்கே சொல்ல வேண்டி வரும். சில மணி துளிகள் மட்டுமே கதையில் பேசும் நான்சி பற்றி நீங்கள் படிக்கும் பொழுதினில் உவகை கொள்வீர்கள். பொதுவா சொல்லனும்னா எல்லாரும் ஒரு முறை படிச்சே ஆகணும். நன்றி எஸ்.ரா அவர்களே.
ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை - எஸ் ராமகிருஷ்ணன் (எஸ்.ரா), 2019
எஸ்.ரா அவர்களின் பத்தாவது நாவல். எனக்கு உறுபசி, யாமம், சஞ்சாரம் பிறகு நான்காவது. எஸ்.ரா எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவரிடம் பிடித்து கரிசலையும் கோடை வெயிலையும் அவர் கொண்டாடும் அழகு. வெயிலின் நினைவுகள் பிராகாசமாய் இருக்கும். இந்த நாவலிலும் அந்த கோடை வெயில் முக்கிய பங்காற்றுகிறது.
கோடையில் உருவாகும் காதலின் இளநீல தினங்களை நம் முன்னே காட்சிப்படுத்துகிறது. அழகான பதின்வயது காதல் கதையாக மட்டுமில்லாமல், வானவில் போன்று பல பரிணாமமாய் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு பெயரில்லா அன்பை எளிமையான கதையாடல் வழியாக முற்போக்கான சிந்தனையுடன் கூறியது சிறப்பு. நிறைய இடங்களில் வெகுளியான சிரிப்பு, வெட்கம், மனதின் ஊடே கண்ணாடி கீறல் போன்ற கனத்த உணர்வுகள், ஆனந்தமான அழுகைகள் என்று உணர்ச்சிகளை கிளரும் தருணங்கள் நிரம்பிய ஒரு நாவலாக தோன்றியது. சிறு வயது கோடை சூரியனின் உக்கிரமும், அதை விரும்பி ஏற்று விடுமுறையின் வெக்கையின் வாசமும் நாவல் முழுதும் வீசியபடியே.....
பிடித்த வரிகள்: "எல்லாம் இந்த உடம்பு படுத்திற பாடு. உலகத்துக்கு யாரு யாருகூட படுக்கிறாங்கிறதுதான் கவலை."
"பகலில் ஹாக்கியோ, கால்பந்தோ, கபடியோ விளையாடும் பையன்கள் வெயிலை அண்ணாந்து கூடப் பார்ப்பதில்லை. பந்தோடு வெயிலையும் சேர்த்து உதைத்தார்கள்."
"(சில்வியா) தேங்க்ஸ் என்றால். அந்த நன்றியை சிரிப்பில் தோய்த்து எடுத்துக் கொடுத்தாள்."
"ஒரு பெண் நம்மிடம் நமக்கே தெரியாத நற்குணங்களைக் கண்டு கொள்கிறாள். அதை நமக்கும் அடையாளம் காட்டித் தருகிறாள்." 💐
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரே மூச்சில் முழுதும் படித்து முடித்த முதல் நூல் இந்த “ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை”
இதைப் படிக்கும் பொழுது நான் ரசித்த சில சொற்றொடர்களும் உவமைகளும் இதோ,
1. மறதி - தானாக மலரும் மலரைப�� போன்றது. விரும்பும் பொழுது வராது. 2. மரத்தின் இலை புலியைக் கண்டு அஞ்சுவதில்லை. புயல் காற்றைக் கண்டு தான் அஞ்சுகிறது. 3. நீ பார்க்காத ஒரு விண்மீன் உன் வீட்டைப் பார்த்துக் கொண்டிருப்பது போலவே நானிருந்தேன். 4. மழைத்துளி கன்னத்தில் படுவது போல... 5. அவன்: கனவை எப்படித் திருட முடியும் அவள்: முடியும். என் கனவை உன்னால் திருட முடியும். திருட்டுப் பயல் நீ. 6. எதை ஒரு வயசுல செய்ய மாட்டேன்னு சொல்றோமோ அத இன்னொரு வயசு செய்ய வச்சுருதுல்ல 7. சில்வியாவிடம் பிரார்த்தனை செய்யும் என்னைப் போன்றவன் இருக்கும் போது சில்வியா கடவுளிடம் என்ன பிரார்த்தனை செய்வாள். 8. போட்டோ செடி 9. ரோஸ்மில்க் கிணறு 10. ஆலங்கட்டி மழை பெய்தது. தன் மீது கல் எறிந்தது யார் என்பது போல ஏறிட்டுப் பார்த்தது தெரு நாய் 11. எந்த பெயரில் அழைத்தாலும் உறவு என்பது அன்பு காட்டுதல் தானே.
இப்படி இன்னும் சில சொற்றொடர் இந்த நூலில் கிடைத்தன... மனதை லேசாக்கிய ஒரு காதல் கதை.
இதுவரை எஸ்.ரா எழுதிய பலவும் மிக தீவிரமான கதைகளம் கொண்டவை , ஆனால் இதுவோ , மிக சிறிய , எளிய காதல் கதை . கோடைக்கும் , குளிருக்குமான வித்யாசமே நாம் வாழ நினைப்பதும் , வாழ்வதும். பதின் வயதில் தோன்றிய காதல் , வாழ்க்கையின் , பல திருப்பங்களுக்குள் அகப்பட்டு , நாம் வாழ்வது வேறொன்றாகவே இருக்கிறது. முற்றிலும் , புது கதைக்களமோ , இலக்கியமோ இல்லை, எனினும் ஒரு விடுமுறை நாளில் எளிதாக படித்து முடிக்கக்கூடிய ஒன்று .
மயில் இறகால் வருடுவதைப் போன்று மனத்திற்கு இதம் அளிக்கும் எளிய எளிமையான நாவல். உட்பொருள், உணர்ச்சிமயம், மனப்போராட்டம், வரலாற்றுப் பின்னனி எதுவும் இன்றி இன்றைய இளைய சமூகத்தின் பெருந்தன்மையான மனதை மிக நுட்பமாக அடிக்கோடிடுகிறது. உலகில் எளிமை என்றுமே அழகுதானே.