என் முதல் கவிதைத் தொகுப்பான ‘தண்ணீர் சிற்பம்’ 2007ஆம் ஆண்டில் வெளிவந்தபோது, திகைப்பும் ஆச்சரியமும் எனக்காகக் காத்திருந்தன. சக படைப்பாளிகளால் அது வரவேற்கப்பட்ட விதம் நான் கொஞ்சமும் எதிர்பாராதது. அத்தொகுப்பை முன்வைத்து ஐந்து கட்டுரைகள் பிரசுரமாகின. விக்ரமாதித்யன், சமயவேல், ஷங்கரராம சுப்ரமணியன் ஆகியோரின் கட்டுரைகள் முக்கியமானவை. தமிழ்ச் சூழலில் எப்போதாவது நிகழும் ஓர் அபூர்வம் இது. மேலும், அந்த ஆண்டின் சிறந்த கவிதைத் தொகுப்பாக ‘ஆனந்த விகடன்’ அறிவித்ததை அடுத்து, குறைந்த பிரதிகளே அச்சடிக்கப்பட்ட அத்தொகுப்பு, அந்த ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சடுதியில் விற்றுத் தீர்ந்துவிட்டது. ஆக, ‘தண்ணீர் சிற்பம்’ தொகுப்பு சிலாகிக்கப்பட்ட அளவுக்கு பரவலான வாசிப்புக்கு உட்படவில்லை. புத்தகக் கடைகளுக்கு விநியோகிக்கப்படாமலேயே பிரதிகள் தீர்ந்துவிட்டதால் இது நேரிட்டது. அதனால், அத்தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகளோடு (ஒன்றை மட்டும் நீக்கிவிட்டு) அதன் பின்னர் எழுதிய கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளையும் இணைத்து புதிய தொகுப்பாக ‘எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை’ 2012இல் நற்றிணை வெளியீடாக வந்தது. அதன் இ-புத்தக வடிவமே இத்தொகுப்பு. இத்தொகுப்பில் பெரும்பாலானவை, உணர்ச்சிகளின் உள்ளார்ந்த தகிப்பிலிருந்து உருவாகியிருக்கும் தன்னுணர்ச்சிக் கவிதைகள். உணர்ச்சிகள் எண்ணங்களில் சரணடைவதும், எண்ணங்கள் வார்த்தைகளில் சரணடைவதுமான ஒரு மாய விளையாட்டுதான் கவிதை. முதல் தொகுப்பில் என் கவிதைப் பாதை பற்றி நான் முன்வைத்திருந்த சில எண்ணங்கள் இவை: “என் எல்லாக் கவிதைகளின் கவிப் பொருளாகவும் நானே இருக்கிறேன். என் சுயசித்திரத்தை வரையும் செயலாகவே என் கவிதைகள் உருவாகின்றன. என் அக உலகின் ரகஸ்ய சலனங்களைக் கைப்பற்ற கவிதை உதவியிருக்கிரது. இன்னும் சொல்லப் போனால் நான் மிகவும் நேசிக்கும் இளமைப் பொலிவு இதன்மூலம் என் வசமாகியிருக்கிறது. என் கவிதைகளில் விடாது ஒலித்துக்கொண்டிருக்கும் தனிமையின் ரீங்காரம் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். தனிமை வாழ்வு எனக்கு நேர்ந்ததா அல்லது தேர்வா என்று திட்டமாகச் சொல்வதற்கில்லை. எனினும் அதனோடு இசைந்து அதன் எல்லா வண்னங்களோடும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இந்த வண்ணங்களின் குரல்களாகவே கவிதைகள் உருக்கொள்கின்றன. காலத்தின் தனிமையும் காலமற்ற தனிமையும் ஒன்றுக்கொன்று மேவி என்னுள் உலவுகின்றன. இத்தனிமைவெளி எனக்கு உவப்பானதாக இருக்கிறது. இது ஒரு சுதந்திர வெளியும்கூட. சுதந்திரமென்பது தான் செய்ய விரும்புவதை ஒருவரால் செய்ய முடிவது என்று கொண்டால் அது ஓரளவு எனக்கு வாய்த்திருக்கிறது. இந்தத் தனிமையின் சுதந்திரத்தில் என் வார்த்தைகள் கனவு காண்கின்றன. அக்கனவின் வழியாகத்தான் கனவுப் பிரதேசத்துக்குள் நுழைகிறேன். அங்கு வார்த்தைகள் சுழலும் மாயத்தில் வியந்திருக்கிறேன். அவ்வியப்பின் ஒளியில் கவிதை புலர்கிறது.
சி. மோகன் (C.Mohan) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூல்தொகுப்பாளர், கலை இலக்கிய விமர்சகர் என்று பன்முகங்களுடன் இயங்கும் ஒரு தமிழ் இலக்கியவாதியாவார். 2014 ஆம் ஆண்டு சி.மோகனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விமர்சனக்கருத்துக்கள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் கவனத்தை ஈர்த்துள்ளார். ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என்ற சிறியநாவல் ஒன்றையும் கமலி என்ற ஒரு நாவலையும் எழுதியிருக்கிறார். இவரது மொழியாக்கத்தில் வந்த ‘ஓநாய்குலச்சின்னம்’ என்ற மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும். எழுத்து தவிர, ஓவியம், சிற்பம், திரைப்படம் ஆகிய துறைகளிலும் கவனத்தைச் செலுத்திவருபவர்.