லஷ்மி சரவணகுமார் என்று பெயர் வைத்துக் கொள்வதற்கு முன்பிருந்தே கட்டுரைகள் எழுதியவன் என்ற போதிலும் இதுநாள் வரையிலான கட்டுரைகளை தொகுக்க வேண்டுமெனத் தோன்றியதில்லை. கதைகள் மீதிருந்த விருப்பத்தில் கட்டுரைகள் எழுதுவதை ஒரு கட்டத்தில் தவிர்த்தேன். 2008க்கு முன்பாக எழுதிய கட்டுரைகளில் ஒன்றுகூட இப்பொழுது கைவசமில்லை. வெளிவந்த இதழ்கள் தொலைந்துபோனதோடு கையெழுத்துப் பிரதிகளும் இல்லாததால் அதை வாசிக்கும் துர்பாக்கியம் வாசகர்களுக்கு நேரவில்லை. இந்தத் தொகுப்பிலிருக்கும் கட்டுரைகளுமே கூட கைவசமிருந்ததில் பாதி தான். சொல்லப்போனால் இதுவரையிலுமான கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. சினிமா, இலக்கியம் என வெவ்வேறு வகைமைகளில் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய இக்கட்டுரைகளை வாசிக்கையில் அவ்வப்போது தொகுப்பாக்கி இருக்கலாமோ என இப்பொழுது தோன்றுகிறது.