நமது நிகழ் காலத்தின் எல்லாத் துயரையும் கேலி செய்து கடந்து பழகிவிட்ட நாம் அவற்றை கேள்விக்குட்படுத்தவும் நிஜமான பதிவுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் அக்கறை கொள்வதில்லை. வரலாறு நெடுகவே மக்கள் பிரச்சனைகளை முன்னெடுக்கும் போராட்டங்களை அரசியல் முக்கியத்துவத்தோடு நாம் அணுகுவதில்லை என்பது கசப்பான நிஜம். தனது நியாயமான உரிமைகளுக்காக வீதியில் இறங்கிப் போராடுகிற யாவரையும் அதிகார வர்க்கம் சமூக விரோதிகளாகவே தொடர்ந்து சித்தரிக்கிறது. அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் அதற்கு பணிய மறுக்கும் ஒவ்வொருவருமே தேசத் துரோகிகளாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் நாம் நம்மைச் சூழ்ந்திருப்பவர்களை அப்படியான தேசத் துரோகிகளாய் மாற்ற இன்னும் கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கிறதுதான். எந்த ஒன்றையும் மாற்றுவதற்கான முதல் வழி உரையாடலோடு நிற்காமல் செயல்பாட்டை நோக்கின முதல் படியைக் கடப்பதுதான். ஒவ்வொரு புதிய பிரச்சனையின் போதும் இந்த முறை நம்மோடு யார் நிற்கப் போகிறார்கள் என்கிற தயக்கம் களத்தில் நிற்கும் அந்த வெகு சிலருக்கு எப்போதும் இருக்கும். இங்கு விவசாயிகளின் பிரச்சனையோ, மீனவர்களின் பிரச்சனையோ, அணு உலைக்கு எதிரான பிரச்சனையோ ஒரு மாநில பிரச்சனையாக அல்லாமல் தொடர்ந்து அந்தந்த பிரதேச பிரச்சனையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. நாம் அதை நமது வாழ்வாதார பிரச்சனையாக கையிலெடுப்பதற்கான துவக்க விதைதான் இந்த தை மாதத்தின் மக்கள் எழுச்சி. யாரும் யாரிடமும் எந்த கோரிக்கைகளையும் வைக்காமலேயே எல்லோரும் அதை தமது அடிப்படை பிரச்சனையாக எடுத்து வீதியில் இறங்கிய போதுதான் இத்தனை நாட்களாக அவர்களுக்குள் தேங்கியிருந்த அரசியல் அழுத்தங்களை புரிந்து கொள்ள முடிந்தது. நமக்கு மிகப்பெரிய வரலாற்றுப் பின்புலமும், கலாச்சார பண்பாட்டு தொடர்ச்சியும் இருந்தும் நாம் இந்திய ஜனநாயக சமூகத்தால் விலக்கப்பட்டவர்களாகவே தான் இருந்து வருகிறோம். நமது உரிமைகள் தேசிய மைய நீரோட்டத்தில் இரண்டாம் பட்சமாக பார்க்கப்படுவதற்கு ஒருவகையில் நாமே தான் காரணமென்று தோன்றுகிறது. போராட எடுத்துக் கொள்ளும் அக்கறையில் கொஞ்சத்தையாவது அந்தப் போராட்டங்களின் சரியான பக்கங்களை பதிவு செய்வதிலும் காட்டியிருக்க வேண்டும். இந்த தலைமுறைக்கு சமூகம் குறித்த எந்தக் கவலைகளும் இல்லை என்கிற வெற்று கோஷங்களை எல்லாம் பொய்யாக்கின அந்த போராட்ட நாட்கள் வெறுமனே ஒரு ஒற்றை நோக்கத்திற்கானதில்லை, எந்த அரசியல் வாதிகளையும் நம்பக் கூடாதென்கிற தெளிவான அரசியல் அறிவும் இறுதித் தீர்வு கிட்டும் வரை களத்திலிருந்து மீள்வதில்லை என்கிற அவர்களின் உறுதியும் இதற்கு முன்பு அதிகார வர்க்கம் எங்கும் காணாதது. இத்தனை உறுதியைக் கொண்ட வலிமையானதொரு இளைஞர் சமூகத்தை உலகின் வேறெந்த சமூகமும் இன்று கொண்டிருக்கவில்லை. நமது அடுத்த கட்ட அரசியல் மற்றும் சமூக விடுதலைக்கான எல்லா விதைகளையும் நாம் இந்தப் போராட்டத்திலிருந்து கண்டெடுக்க முடியுமென்கிற நம்பிக்கையைக் கொடுத்த தருணங்கள் அவை. சென்னையில் மட்டுமல்லாது தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களில் வாடிவாசலுக்காக கூடிய கூட்டம் பின்னர் மெது மெதுவாக கூடங்குளம் பிரச்சனையயும் மீத்தேனுக்கு எதிராகவும் மூர்க்கத்துடன் முழங்கிய போதுதான் இந்தக் கூட்டத்தை அத்தனை எளிதில் களைக்க இயலாதென்கிற அச்சம் அதிகார மையத்திற்கு வந்தது. சமாதானத்தோடும் கொண்டாட்டத்தோடும் முடிய வேண்டிய போராட்டத்தை யுத்த களமாய் மாற்றி வன்முறைக்குள் தள்ளிவிட்டதற்கு பின்புறமாய் இந்த மக்கள் இன்னொரு முறை எதற்காகவும் கூடிவிடக் கூடாதென்கிற கவனம் அவர்களுக்கு இருந்தது. உண்மையில் அவர்கள் அடித்துக் களைத்த பிற்குதான் முன்னைவிடவும் எல்லோருக்குள்ளும் போராட்டம் குறித்தான தெளிவும் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் குறித்தான எச்சரிக்கை உணர்வுகளும் அதிகமாகி இருக்கின்றன. நமக்கு முன்னாலிருக்கும் பல்லாயிரம் பிரச்சனைகளை கடந்து செல்வதற்கான விதையாய் இந்தப் போராட்டம் குறித்த பதிவுகள் இருக்க வேண்டுமென்கிற விருப்பத்தில் தான் இந்த நூலைத் தொகுக்கும் எண்ணம் எங்களுக்கு வந்தது. இதில் இன்னும் நிறைய பேரின் கட்டுரைகளை சேர்த்திட விரும்பியிருந்தோம். ஆனால் அவகாசமில்லாமல் நிறைய பேர் எழுதமுடியவில்லை. எங்களைப் போலவே வேறு சிலரும் தை எழுச்சி குறித்த பதிவுகளை தொகுப்பதால் எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது ஒரு காலகட்டத்தின் அரசியல் எழுச்சி மிக்க தருணத்தின் முக்கிய ஆவணமாக இவை இருக்கக் கூடும். முழு ஒத்துழைப்போடு எங்களுக்கு கட்டுரைகளை வழங்கிய கட்டுரையாளர்கள் ஒவ்வொருவருக்கும் எங்களின் ஆத்மார்த்தமான அன்பை பதிவு செய்கிறோம். அதோடு போராட்ட நாட்களிலும் அதன் பிறகும் வெவ்வேறு சமூக பணிகளில் எங்களோடு இணைந்து பயணிக்கும் அத்தனை நண்பர்களுக்கும் இந்த நூல் உருவாக்கத்தில் சம பங்குண்டு. அவர்கள் எல்லோருக்கும் நன்றி.