இலக்கியப் பரிச்சயம் ஏற்பட்ட இளம் வயதிலிருந்து, நாவல் கலையின்மீது என் மனம் அலாதியான ஈடுபாடும் உறவும் கொண்டிருந்திருக்கிறது. நவீன யுகத்தின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு நாவல் கலை என்ற எண்ணம் இன்றளவும் என்னிடம் தீர்க்கமாக இருந்துகொண்டிருக்கிறது. நாம் அதுவரை அறிந்திராத, நம் இருபிபிற்கான மாறுபட்ட சாத்தியங்களை நாவல் தன் ஞானப் பாதைகளின் வழி கண்டடைகிறிது. இந்தக் கண்டுபிடிப்பைக் கொண்டிருக்கும் நாவல் கலை நம் வாழ்வுக்கு உவந்தளிக்கும் கொடை மிகவும் பெறுமதியானது. இந்த இ-புத்தகம் இரண்டு பகுதிகளால் ஆனது. பகுதி ஒன்று, நாவல் கலையின் தனித்துவ குணாம்சங்கள், அதன் மகத்துவம், அது கண்டடையும் சாத்தியங்கள், உள்ளுறைந்திருக்கும் கனவுகள் பற்றிய பொதுவான மூன்று கட்ட&
சி. மோகன் (C.Mohan) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூல்தொகுப்பாளர், கலை இலக்கிய விமர்சகர் என்று பன்முகங்களுடன் இயங்கும் ஒரு தமிழ் இலக்கியவாதியாவார். 2014 ஆம் ஆண்டு சி.மோகனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விமர்சனக்கருத்துக்கள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் கவனத்தை ஈர்த்துள்ளார். ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என்ற சிறியநாவல் ஒன்றையும் கமலி என்ற ஒரு நாவலையும் எழுதியிருக்கிறார். இவரது மொழியாக்கத்தில் வந்த ‘ஓநாய்குலச்சின்னம்’ என்ற மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும். எழுத்து தவிர, ஓவியம், சிற்பம், திரைப்படம் ஆகிய துறைகளிலும் கவனத்தைச் செலுத்திவருபவர்.
இலக்கியத்தின் பிற வடிவங்களை விட எனக்கு நாவல் மிகவும் பிடித்தமான ஒன்று! சிறுகதை, கவிதை போன்ற குறு வடிவங்கள் இருந்தாலும் ஒரு நாவலை வாசித்து முடிக்கும் போது கிடைக்கும் மனநிறைவு அதில் கிடைப்பதில்லை!
இந்த புத்தகத்தில் மோகன் அவர்கள் நாவல் கலையை பற்றியும், அவர் வாசித்த மிகச் சிறந்த நாவல்களின் வாசிப்பனுபவங்களையும் தொகுத்து ஏழு கட்டுரைகளாக கொடுத்துள்ளார்!
புத்தகம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது முதல் பகுதியில் நாவல் கலையைப் பற்றிய விவரிப்புகளும், அவற்றின் அவசியமும் நாவலின் ஊடாக வாசகன் பெரும் தரிசனங்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார்! அதில் எனக்கு பிடித்த சில வாக்கியங்களை கீழே கொடுக்கிறேன்...
"ஒரு கலைஞனின் கலை வெளிப் பாட்டில் தன்னை ஈடுபடுத்துகிற ஒருவனுக்கு அது அவன் வாழ்வில் ஒரு புதிய அனுபவச் சேர்க்கையாகிறது. இந்த அனுபவச் சேர்க்கை அவன் வாழ்வைப் புதிய பாதைக்கு நகர்த்துகிறது. வாழ்வின் ஒவ்வொரு அனுபவமும் - அனுபவம் என்பது தீவிரத்தன்மை கொண்ட நிகழ்வு - தனிமனித வாழ்வில் புதிய மாறுதல்களை நிகழ்த்தியவண்ணமிருக்கிறது. ஒவ்வொரு கலை அனுபவமும் அப்படியான தீவிர குணம் கொண்டதுதான்."
"அனுபவங்களினூடே உருவாகிய மதிப்பு ஓவியம், கவிதையில் அனுபவங்களின் பொறிகளை உள்ளடக்கி மதிப்புகளை முன் வைத்துக் கலைவடிவம் பெறுகிறதென்றால் நாவலில் அனுபவங்கள் முழு வீச்சுடன் வெளிப்பட்டு மதிப்பை உள்ளடக்கி கலைவடிவம் பெறுகின்றன."
"சங்கீதம், நாட்டியம், ஓவியம், கவிதை, சிறுகதை முதலியவற்றின் உன்னதங்களில் ஈடுபட்டு அவற்றை அனுபவச் சேர்க்கைகளாகக் கொண்டு தன்னை மேம்படுத்த முடிகிற தனிமனிதனுக்கு நாவல் இன்னொரு மனிதனின் முழுமையான வாழ்வையே அனுபவமாக்கி விடுகிறது. தனிமனிதர்களாகிய நாம், நம் வாழ்க்கை அனுபவங்களிலிருந்துதான் இந்த வாழ்வின் சிக்கலான பல கணங்களையும் குழம்பிப் புரியவேண்டி இருக்கிறது. நாவல் சாதனம் இப்படியான தனிமனிதர்களுக்கு இன்னும் பல தனிமனிதர்களின் வாழ்க்கையை முன்விரிக்கிறது. இது, இக்கலையின் பேறு. தன்னிலிருந்து புரிகிற முயற்சி மட்டுமே கொள்ள முடிகிற மனிதனுக்குப் பலதரப்பட்ட புதிய மனிதர்களின் அனுபவ உலகமும் இணைகிறபோது அவன் முயற்சி லகுவாகிற வாய்ப்பு கிட்டுகிறது."
"அனுபவம் என்பது வாழ்வின் தன்மையை உணர்த்துகிற தீவிர குணம் கொண்ட நிகழ்வு. ஒவ்வொரு கலை அனுபவமும் இத்தகைய தீவிரத்தன்மை கொண்ட நிகழ்வுதான். இத்தகைய தீவிர நிகழ்வுகள் தாம் தனிமனித வாழ்வில் மாறுதல்களை நிகழ்த்தியவண்ணம் இருக்கின்றன. இதன்மூலம் வாழ்வுடனான அவன் உறவு நெருக்கம் பெறுகிறது. மாறுபட்ட சாத்தியங்கள் அவன்முன் விரிகின்றன. இத்தகைய கலைக் குணத்தில் ஒரு சிகரத்தை எட்டுகிறது நாவல் கலை. ஏனெனில், வேறெந்தக் கலைச் சாதனத்தை விடவும் வாழ்க்கைக்கும் நாவல் கலைக்குமுள்ள உறவு நேரடியானது; பாந்தமானது; விசாலமானது."
நான் மேலே குறிப்பிட்டிருக்கும் வாக்கியங்களின் தாக்கத்தை நான் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு நாவலை வாசிக்கும் போதும் உணர்ந்திருக்கிறேன்!
இரண்டாவது பகுதியில் மோகன் அவருடைய சில வாசிப்பனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்...இதில் தாஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதர்கள், ஜி.நாகராஜனின் படைப்புலகம், சம்பத்தின் இடைவெளி, தி.ஜாவின் படைப்புலகம், பா.சிங்காரத்தின் இரு நாவல்களைப் பற்றி தான் அனுபவப் பகிர்வை கொடுத்திருக்கிறார்!
முதல் பகுதியின் முடிவில் தமிழ் வாசகர்கள் வாசிக்க வேண்டிய சில முக்கியமான படைப்புகளின் பட்டியலை கொடுத்திருக்கிறார்...தமிழில் வாசிக்க வேண்டிய படைப்புகளின் அறிமுகம் இந்த சிறு நூலின் முலம் கிடைக்கிறது...அந்த விதத்தில் நாவல் கலை கட்டுரைத் தொகுப்பு வாசகர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது!
சி. மோகன் அவர்களின் இக்கட்டுரை தொகுப்பு நம்மிடம் கூறுவது, நாவல் என்ற மிகச்சிறந்த கலை படைப்புயையும், அவற்றில் சிறந்த சில படைப்புகளையும் பற்றியுமே! நாவல் வாசிப்பைச் சலிப்பெனவும், அது தரவிருக்கும் உன்னத உணர்வுகளையும் ஒதுக்கும் இக்காலச் சமூகத்திற்கு இத்தொகுப்பு படிக்க வேண்டிய ஒன்று