இரத்த ஆறாகப் பாயும் இரண்டாம் பாகம் போரின் சூழலை கண் முன் கொண்டு வருகிறது.
மோரியப் படைகள் கலிங்கத்தில் நடத்திய போர் முறைகளையும் எப்படி அதைத் தன் வசமாக்கியது என்பதை முழுமையாக இந்தப் பாகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
சென்னிக்காக எழுதப்பட்ட புதினம் என்பதால் கலிங்கப்போரிலும் சென்னியின் தலையீடு எவ்வகையில் இருந்தது என்பதும் அங்காங்கே கோடிட்டுக் காட்டப்படுகிறது.
பாரதம் முழுவதும் மோரியப் பேரரசு ஆளவேண்டும், தான் அதில் பட்டத்துராணியாகவும் தன் மகன் வாரிசாகவும் இருக்க வேண்டும் என்ற இந்திரசேனையின் கனவை இளவரசன் குணாளன் பொசுக்கியவுடன் அரசியல் வாழ்வையே வெறுத்துப் போய்த் தன்னை அடிப்பணிய வைக்கும் ஆணுக்காக இவள் காத்திருக்கும் மாற்றத்தை அடுக்கடுக்கான நிகழ்வில் மூலம் உணரவைக்கப்படுகிறது.
கலிங்கப் போரின் வெற்றிக்குப் பிறகு தமிழகத்திற்குள் நுழைய மோரியப் படைகளின் காத்திருப்பும் அதற்காகப் போடும் சூழ்ச்சிகளுடனான திட்டத்தையும் அணு அணுவாக வார்த்தை வடிவம் பெற்றிருக்கிறது. நடுவில் காதல், காமம், துரோகம், ஏமாற்றம், நட்பு என்ற உணர்வுகளும் வந்து வந்து செல்கிறது.
சென்னியை ஒரு அசூரனாகவே காட்டப்படுவதால் அந்த அளவிலே மனதில் நின்று போகிறான்.
காவளாலியும் கனவை துரத்துபவளும் சந்தித்த பிறகே மற்றொரு அரசியல் விளையாட்டு இருக்கும் போது அதைச் சாத்தியப்படுத்தித் தானே ஆகவேண்டும். பெண் பித்தில் கரை கண்ட சென்னிக்கு இந்திரசேனையின் அழகை பார்க்க வேண்டும் என்ற ஆசை எழ, தேடி வந்து அவளைத் தன் காமத்தாலே வீழ்த்திவிடுகிறான்.
பொதுபுத்தியில் ஒரு எண்ணம் இருப்பது எக்காலத்திலும் மாறுவது இல்லை. முக்கியப்படுத்தும் ஆண் காம விளையாட்டில் கரைகண்டவனாகவும் அவனுக்கான பெண் காத்திருந்து அவனை மட்டுமே அடைவது. இதிலும் அந்தப் போக்கே நிலவுகிறது.
மோரியப் படைகளும் தமிழர் படைகளும் சேர்ந்து கரும்பெண்ணை ஆற்றையே இரத்த ஆறாக மாற்றி, வீரர்களை மாறி மாறி கொன்று குவித்துக் கொண்டு வந்து இவ்விடத்தில் தமிழர்கள் கை ஓங்குவதுடன் இப்பாகம் முடிகிறது.