மிக இளைய வயதிலேயே முதிர்ச்சியான மனமொன்றை இந்நாவலின் ஆசிரியர் குணா கவியழகன் பெற்றிருக்கின்றார். பிறர் அனுபவங்களை, அவர்களின் குணவில்புகளை, நடையுடை பாவனைகளை ஒரு பகுத்தாய்வு செய்யும் ஒரு பகுப்பாளனாக பயிற்சி முகாமில் இருந்த போராளிகளை, அதன் பொறுப்பாளர்களை வருணிக்கும், மெல்லிய நகைப்புடன் அவர் விபரிக்கும் பாங்கு மிக நேர்த்தியாக உள்ளது. அதேவேளை எத்தகைய பல்வேறுபட்ட பின்புலங்களிலிருந்து போராளிகள் வருகின்றனர் என்கின்ற கதையையும் வெளிவரச் செய்துவிடுகின்றார்.
வனத்தின் வனப்பையும் அதன் தனிமையையும் – கத்தியால் வெட்டி எடுக்கக்கூடிய இருள் – என்றும் – காட்டின் மௌனமும் அந்த மௌனத்தின் ஒலியும், காட்டின் இருளும் அந்த இருளின் ஒளியும் – என்றும் அவர் சொற்களில் இட்டுக்கட்டும் விதம் இதுவரை காடுகள் பற்றி எழுதிய எழுத்தாளர் வரிசையிலேயே அவரையும் சேர்த்துவிடத் தூண்டுகின்றது. நஞ்சுண்ட காடு முழுவதும் ஒரு வலி பரவிக்கிடக்கின்றது. வாழ்வின் இருண்ட பக்கங்கள், வறுமை, இல்லாமை என்கின்ற பெரும் துயர், இதற்குள் வாழத்துடிக்கும் மனிதர்கள் என வெகு யதார்த்தமான பதிவுகளின் தொகுப்பாகின்றது. மனிதத் தேடலின் ஒரு பகுதிதான் நஞ்சுண்ட காடு. நஞ்சுண்ட காடு முழுவதும் இழையோடும் தத்துவ விசாரங்கள் வாசிப்பாளனை பலவித கேள்விகளுக்கும், நெருக்கடிகளுக்கும், அந்தரத்திற்கும் உட்படுத்தி விடுகின்றன. ஏதோவொரு வகையான குற்றவுணர்வு பரவுகின்றது.
‘புற மெய்மைகளை படிமங்களாக்கி நிஜஉலகின் உணர்ச்சிக் கொந்தளிப்புக்களை வன்மையுடனும் இரத்தத்துடனும் சதையுடனும் உண்மைசொட்ட யதார்த்தமாகத் தரும்போதே ஒரு படைப்பாளியின் படைப்பாளுமை, ஆக்க ஆளுமை தெரியவரும்' என்பதற்கு கவியழகன் இந்நாவலில் சான்றாகிறார்.
Kuna Kaviyalahan has written three novels. His first novel Nanchundakaadu won the Tamil literary garden fiction award for 2014. His third novel Appaal oru Nilam won the Vasaga Salai best novel award for 2016 . Vidameriya kanavu / The Poisoned Dream is a harrowing tale of a Tamil tiger facing incarceration, torture, the possibility of death, and the faint hope for escape
பதின்வயதுப் பையன்கள் சிலர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர முடிவெடுப்பதின் பின்னாலுள்ள சமூகக் காரணிகள்; பயிற்சி முகாமின் ஒழுங்கு, அவர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், தண்டனைகள்; போராளிகளை இழக்கும் குடும்பங்கள் சந்திக்கும் இன்னல்களென, பல பரிமாணங்களில் ஈழ அரசியலை அலசும் உணர்வுப்பூர்வமான நாவல் குணா கவியழகன் அவர்களின் நஞ்சுண்டகாடு.
நஞ்சுண்டகாடு ❤️ • ஈழத்தவன் என்ற மட்டில் எங்கட கதைகளை வாசிப்பதில் எனக்கு தனி ஆர்வம். அந்த வகையில் நஞ்சுண்டகாடு நான் பலகாலமாக எதிர்பார்த்திருந்த ஒரு புத்தகம். கையில் கிடைத்ததுமே காட்டுக்குள் களமிறங்கிவிட்டேன். ஆரம்பத்தில் அங்கும் இங்கும் அழகை ரசித்து, உணர்வலைகளில் ஊஞ்சலாடியவன் மெல்ல இருள் சூழ்ந்ததும் வனத்தின் ரணத்தை உணர்ந்துகொண்டேன். கனத்த மனத்துடன் கரைசேரும் போது வழியில் பெய்திருந்த கண மழையின் சாட்சியாய் சில நீர்த்துளிகள் மட்டும் இன்னும் காயாமல் என் விழிகளில். • விடுதலைப் போராட்டத்திற்காக எங்கோ ஒரு காட்டில் பயிற்சிக்காக புதிதாக இணைந்துகொள்ளும் முன் அறிமுகமில்லா பதின்வயதினர், பயிற்சிக்களம், பயிற்சிக்கள ஒழுக்கங்கள், மீறலுக்கான தண்டனைகள், பயிற்சிக்களத்தில் அவர்களுக்குள் நடக்கும் சம்பவங்கள் என ஆரம்பத்தில் நகைச்சுவையையும் எங்கட தமிழின் அழகையும் வரிகளில் வடித்த கவியழகன் கொஞ்சம் கொஞ்சமாக வரிகளை விடுத்து வலிகளை வடிக்கிறார். ஒவ்வொரு இளைஞனும் ஒரு கதையை சுமக்கிறான். அவர்களிற்குப் பின்னால் இயக்கத்தில் இணைந்ததற்கான வலுவான காரணிகள் ஒவ்வொன்றாயிருக்கிறது. கனவு மட்டும் ஒன்றாகவே இருக்கிறது. தன் ஏழைக்குடும்பத்தின் விடிவிற்காய் போராடிய ஒருவன் அக்குடும்பத்தையே கைவிட்டுவிட்டு விடுதலை வேட்கைக்கு வேட்டைக்கரம் கொடுக்க வருகிறான். ஒரு போராளியை இழந்த குடும்பத்தின் அவலம், யுத்தத்தின் துயரம் என வரிகளின் கணமேறி கதைமுடிந்த பின்னும் ரணங்களும் கதாப்பாத்திரங்களும் மனத்தில் தொடர்கின்றன. • வெளிநாடு செல்லவென முயன்று தோற்ற ஒருவனின் கதையை “கடைசியில, பாரின் என்ற நாட்டில் வைத்து இவனை திருப்பியனுப்பிப் போட்டாங்கள்” என்று சொன்ன விதமாகட்டும், “கால்கஸ்ரோ” ஆயுதம் தொடர்பாக வரும் காட்சிகளாகட்டும், பயிற்சிக் கடினத்தில் கள்ள மயக்கம் போடும் ஒருவனின் நிலை, காட்டிக்கொடுப்பொன்றை “கோடிக்க சொன்னது கொழும்புவரை கேட்டிட்டு” என்று சொல்லும் விதமாகட்டும் எல்லாம் நான் மிக ரசித்தவை. எனை மறந்து சிரித்தவை. கதையில் ஒரு இடத்தில் “அருள் 89” என்ற கைக்குண்டைப்பற்றி ஒரு வரி வரும். அந்த நாட்களில் “நல்லூர்க் கந்தா அருள்’ கொடப்பா” என்று பம்பலாக சொல்வார்கள் என்று முன்னாள் போராளியும் எழுத்தாளருமான வெற்றிச்செல்வி அக்கா சந்திப்பொன்றில் பகிர்ந்ததை நினைவூட்டியது. இடையிடையே தத்துவங்களும் மனிதமும் தேவையான அளவு(தேவையும் கூட) பகிரப்படுகிறது. “விதிக்குத் துக்கமும் இல்லை வெட்கமும் இல்லை” என்ற வரிகள் போர்ப் பெருந்துயரின் ஒற்றை விளக்கம். இவ்வாறாக குணா கவியழகனின் எழுத்து நேரம் நகர்வதே தெரியாமல், இயற்கை அழைப்பையும் இறுக்கிப்போட்டுவிட்டு ஒரே இரு(ழு)ப்பில் வாசித்துமுடிக்கச் செய்துவிட்டது. • “பத்துப்பேர் சுமக்கிற ஒரு பொருளை இருபதுபேர் சுமந்தால் வேகமாயும் பழு ஆற்ற தோளையும் சேதப்படுத்தாமலும் கொண்டுபோகவேண்டிய இடத்துக்குப் பொருளை கொண்டுபோயிடலாம்தானே. அப்பிடிப் பார்க்கேக்க கொஞ்சப்பேர் சுமக்கிறதும், சுமக்கேக்க இழப்பு வாறதும், இழப்பால முன்னேற முடியாமல் போறதும், தோத்துப்போறதும் சுமக்காதவனாலதானே?”
பதின் வயதுப் பருவத்தில் உள்ள வாலிபர்கள் எதனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருக்கின்றார்கள் அங்கு அவர்கள் எவ்வாறு பயிற்சியினை மேற்கொள்கிறார்கள் அவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகள் அவர்கள் எதனால் இந்த இயக்கத்தில் சேர்ந்தவர்கள் இது அவர்களை உந்தித் தள்ளியது அவர்களின் குடும்ப சூழ்நிலைகள் என்பதை இந்த நாவல் மிகத் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றது இந்த நாவலில் சுகுமார் மற்றும் அவரது அக்காவும் மனதினில் இடம் பிடிக்கிறார்கள் மேலும் நாவலின் இறுதியில் நமக்கும் கண்ணீர் வரும் என்பதை குணா கவியழகன் அவர்கள் உணர்த்தியுள்ளார் மிகச்சிறந்த ஈழம் சார்ந்த நாவல் கண்டிப்பாக வாசிக்கலாம்
ஆரம்பிக்கும் போது கொஞ்சம் பிசிறுவது போல இருப்பினும் தொடர்ந்து முன்னேறிச்செல்லும் போது கதையூடே ஒன்ற வைத்து விடுகிறார் எழுத்தாளர். நல்லதொரு ஈழக்கதை வாசிப்பனுபவம். மேலும் குணாவின் மற்ற புத்தகங்களையும் வாசிக்க உந்துகிறது.