இரண்டு மாதங்களுக்கு முன்புதான் "பிள்ளையார்பட்டி பிள்ளையார்” என்னும் ஒரு சிறு நூலை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதைப் படித்துப் பார்த்த அன்பர் ஒருவர், "நான் கந்த சஷ்டி தோறும் முருகன் தோத்திரங்கள் அடங்கிய சிறு புத்தகம் ஒன்றை வெளியிட்டு வழங்குவது வழக்கம். இந்த வருஷமும் அப்படி ஒரு சிறு நூலை வெளியிட விரும்புகிறேன். தாங்களே சின்னஞ்சிறிய புத்தகமாக முருகனைப் பற்றி எழுதிக் கொடுங்களேன்" என்றார். இப்படி அவர் கேட்டு, சில நாள் கழியும் முன்னரே, மனைவி மக்களுடன் திருச்செந்தூர் சென்று பேரக் குழந்தைகளுக்காகச் செலுத்த வேண்டிய பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டியிருந்தது. அங்கு இரண்டு நாட்கள் தங்கி செந்திலாண்டவனைத் தரிசிக்கும் பேறும் கிடைத்தது. “சரி.