இதுவரை எழுதப்படாத மௌரியப் பேரரசன் சாம்ராட் அசோகனுக்கும், தமிழகத்தின் மூவேந்தர்களுக்கும் கி.மு 261ல் நடைபெற்ற பெரும் போரே 'வென்வேல் சென்னி' புதினம். மௌரியரின் தமிழகப் படையெடுப்பிற்கும், மூவேந்தர்கள் மற்றும் வேளிர்கள் சேர்ந்து மொழிபெயர் தேயத்தில் நிலை நிறுத்தியிருந்த தமிழக கூட்டுப் படைகள் மோரியரைத் தடுத்து நிறுத்திய பெரும் போருக்கும் வரலாற்றில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.கலிங்கப் போர் நடைபெற்ற பிறகு ஒன்றரை ஆண்டு காலம் கழித்தே அசோகன் தனது 'தம்மா' மதக் கொள்கையை அறிவித்தான். அசோகன் கலிங்கப் போரை முன்னெடுத்தது முதல் அவனது பெளத்த மதமாற்றம் நடை பெரும் வரை இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் நடைபெற்ற பெரும் போரே 'வென்வேல் சென்னி' புதினம்.
இரண்டாம் பாகத்தில் இரத்த ஆறு ஓடியது என்றால் மூன்றாம் பாகத்தில் இரத்த கடலே காணக்கிடைத்தது. அவ்வளவு ஆக்ரோஷமான போராகப் பல உடல்களை வெட்டி சாய்த்து அதன் மீது தமிழர்கள் மோரியர்களைத் தடுத்த நிகழ்வாக இந்த இறுதி பாகம் முடிகிறது.
பின்னால் இருக்கும் பலரின் தியாகத்தின் மூலமே அரியணை அலங்கரிப்படுகிறது. இதில் முக்கிய மூவரின் தியாகமே சோழ நாடு பிளவுபடாமல் தடுக்கப்படுகிறது. மற்ற இருவரைவிட இந்திரசேனையின் அரசியல் புரிதலே அவளைத் தியாகம் செய்ய வைத்துத் தனிமனுஷியாக நிற்க வைக்கிறது.
துளுவில் இருந்து தமிழகத்திற்குள் மோரிய படைகள் நுழைய போடும் செயல் திட்டத்தில் இருந்து தொடங்குகிறது இப்பாகம்.
வென்வேல் சென்னியிடம் காதலில் இந்திரசேனை வீழ்ந்ததால் இதுவரை மோரியர்களுக்கு அவள் செய்த நல்லவை அனைத்தும் காணாமல் போக அவளைத் தீர்த்துகட்டும் வஞ்சத்தைக் கையில் எடுக்கும் தலைமையால் வெறுத்து போனவள் தனித்தன்மையை இழக்காமல் போராடி இறக்கும் நொடிக்காகக் காத்திருக்க, காதலனின் கைசேர்கிறாள்.
பெண்களிடம் காமம் மட்டுமே பார்க்கும் சென்னிக்கு காதல் பார்வையை அளித்தவள் நடக்கப் போகும் போரால் சேர்ந்திருக்க முடியாது என்பதை அறிந்தே தான் இருக்கிறாள். சோழ வாரிசு இந்திரசேனை வயிற்றில் என்பது உள்ளுக்குள் கலக்கத்தை உண்டு செய்து அவளை அழிக்க அரசியல் ரீதியாகச் சோழ அரசே கட்டளையிட பாதுகாக்கும் பொருட்டு வனத்திற்குள் நுழைந்தவள் வாரிசு சேரவேண்டிய இடத்திற்கு அனுப்பி வைத்து தன் அடையாளத்தை உலகத்தில் இருந்து முற்றிலும் துடைத்துவிடுகிறாள். காதல், இது பெண்களுக்கு ஒரு சாபக்கேடாகவே அமைகிறது அவளின் அடையாளத்தை அழிக்க. இந்திரசேனையும் விதிவிலக்கல்ல...
தன் தமையனுடன் சண்டை வேண்டாம் என்று ஒதுங்கி படைத்தலைவனாகவே காலத்தைக் கடக்க விரும்பிய வென்வேல் சென்னியை காலம் அரியணையிலே அமர்த்திவிடுகிறது. இரட்டையர்களுக்குள் பிரிவு இல்லையென்றாலும் சுற்றி இருப்பவர்களின் வஞ்சக பேச்சு ஒரு முடிவை எட்ட வைக்க, சூழல் வேறு ஒரு முடிவின் முன்னே நிற்க வைக்கிறது.
சிற்றரசர்களின் கோபம்,பேராசையால் தன் தமையனை இழந்த சென்னி நாட்டைப் பாதுகாக்க அவனின் அடையாளத்தையே தன் அடையாளமாக்கி எஞ்சிய வாழ்வை வாழ தொடங்குபவன் மனிதர்களை வேட்டையாடுவதை மட்டும் நிறுத்தவில்லை.
நிம்மதியில்லா மோரிய பேரரசன் அசோகனின் வாழ்வும் சென்னியின் அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
சரித்திரத்தை திரும்பி பார்த்தால் எவரோ ஒருவர் பகடையாக மாறி முற்றிலும் அழிந்து போய் இருப்பர். இதில் இந்திரசேனை என்பவள் அப்படி ஒரு அடையாளமற்றவளாகப் போவதற்கு மேம்போக்காக காதல் தான் என்று சொன்னாலும் ஆண் மனதின் உள்ளே ஒளிந்திருக்கும் அகங்காரமே காரணம். பெண் தலைமை ஆணுக்குள் எப்பொழுதும் சுரண்டிக்கொண்டே இருக்கும் வலி.
ஒருவழியாக மோரியர்களுக்கும் தமிழர்களுக்குமான போர் இந்த இறுதி பாகத்தில் முடிவடைந்து விட்டது. இறுதிவரை சாம்ராட் அசோகனால் தமிழகத்தை அடிபணிய வைக்க முடியவில்லை என்பதை நினைக்கையில் நம் நெஞ்சங்களில் துளிரும் பெருமிதத்தை வார்த்தைகளால் கூற இயலாது.
இப்புத்தகத்தின் சிறப்பம்சம் தமிழ் மண்ணில் மோரியர்கள் நடத்திய இறுதி போர் மட்டுமல்ல! அரியணைக்காக ஏகப்பட்ட பாவங்களைச் செய்த அசோகன் இறுதியில் மனம்மாறி பௌத்த மதத்தைத் தழுவிய அத்தியாயமும் திறம்பட கையாண்டுள்ளார் ஆசிரியர். கடைசி 200 பக்கங்களில் விவரிக்கப்பட்ட இறுதிப்போரைத் தவிர்த்து, ஆங்காங்கே போர் காட்சிகள் சில இருந்தாலும் இரண்டாம் பாகத்தின் அத்தியாயங்கள் மனதைக் கவர்ந்தது போல் அவை அமையவில்லை. எனினும் சுவாரசியத்திற்கு குறைவின்றி இப்பாகத்தைப் படைத்திருக்கிறார் எழுத்தாளர்.
மூன்று பாகங்களிலும் எனக்கு மிகவும் பிடித்தது இரண்டாம் பாகமே! தமிழ் மண்ணில் வாழ்ந்து மறைந்த பல வீரர்களைப் பற்றி இக்கதை மூலம் அறிந்து கொள்ளலாம். அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய, மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாற்றை அறிய வேண்டுமா?!? இந்த படைப்பை அவசியம் வாசிக்கவும்!
பகுதி - 3 🐯🗡️ வேங்கையின் வேட்டை 🗡️🐯 கரும்பெண்ணை நதிக் கரையில் சென்னியும், பாழிக் கோட்டையில் இந்திரசேனையும் வெற்றி பெறுகிறார்கள். மோரியர்களுக்கு உதவ திசியனின் மகன் தேவவர்மன் வருகிறான். அசோகன் விதித்த கட்டளையை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். பின்பு சென்னியை வீழ்த்த திட்டம் தீட்டுகிறார்கள் அதற்கு தூண்டிலாக இந்திரசேனையை பயன்படுத்துகின்றனர். இதன் முடிவில் அரசியல் களங்கள் மாறுகின்றன. மீண்டும் பெரும் யுத்தம் நடத்த மோரியர்கள் தேவவர்மன் தலைமையில் திட்டம் தீட்டுகிறார்கள். இரண்டு இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்துகிறார்கள். தங்களின் கடற்படையை கொண்டு தாக்குதல் நடத்துகிறார்கள், அதை துங்கலோரியன் தடுத்து நிறுத்துகிறான். வஞ்சக முறையில் தமிழகத்தில் அரசர்கள், சிற்றரசர்கள், வேளிர்களை கொல்கிறார்கள். இதை அறிந்த அறிந்த சென்னி மோரியர்களை கொல்வதாய் சபதம் எடுக்கிறான். தேவவர்மன் போர்களத்தில் இருந்து தப்பித்து பாழிக் கோட்டையில் தஞ்சம் அடைகிறான். சென்னி கோட்டையை முற்றுகை இடுகிறான். பின்பு என்னென்ன எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கின்றன என்பதே இக்கதை. ⚔️செண்டுகளத்தில் இந்திரசேனையை கொல்ல மோரியர்கள் முயல்கிறார்கள். அவள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள், இந்திரசேனையும் அவளால் முடிந்த வரை தடுக்கிறாள் , யாரும் எதிர்பாராத விதமாக சென்னி களத்தில் நுழைந்து அனைவரையும் வீழ்த்தி இந்திரசேனையை கவர்ந்து செல்கிறான். இந்த காட்சி மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டது.💘 ⚔️ வழக்கமாக ரதசாரதியாக ஆண்கள் இருப்பார்கள் ஆனால் இங்கு சென்னியின் சாரதியாக எழினி இருக்கிறாள், அவனது வேகம் அறிந்து திறம்பட தேரை செலுத்துகிறாள் 🔥 ⚔️ எவ்வளவு பெரிய அரசனாக இருந்தாலும் நாம் செய்த பாவங்கள் நம்மைச் சார்ந்தவர்களை தாக்கும் என்பதற்கு அசோகன் ஒரு உதாரணம். அவனது மகன்களை இழந்து மனைவியின் துரோகத்தால் வேதனையடைந்து பின்பு அமைதியை வேண்டி புத்த மதத்தை தழுவும் காட்சிகள் சிறப்பு. எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும் என்பதை காலம் கடந்து உணர்கிறான். ⚔️நாட்டைவிட்டு விரட்டப்பட்டு வீரர்களால் காயம்பட்ட அன்னி மிஞிலியை காப்பற்ற வரும் சென்னி , பின்பு அவர்களுக்குள் நடக்கும் உரையாடல் ஆகியவை உணர்ச்சி பூர்வமான தருணம். ⚔️நாட்டுக்காக தியாகம் செய்யும் எழினி, இந்திரசேனை ஆகியோரின் கதாபாத்திரங்களை அழகாக எழுதியுள்ளார் ஆசிரியர். ⚔️அன்னி மிஞிலியன், மகேந்திர வளவன், இரும்பிடர்த்தலையன், நித்திலவள்ளி , துங்கலோரியன் , காமக்கணியாள், வெற்றி, செங்கோடன், சித்திரக்கன்னி ஆகியோரின் வீரம், நண்பர்களுக்காக செய்யும் தியாகங்கள், அவர்களின் அறிவுத்திறன் ஆகியவை பாராட்டத்தக்கவை. மொத்தத்தில் ஒரு தரமான படைப்பை வழங்கிய ஆசிரியருக்கு நன்றி🙏🏼