நாயகன் ஆதித்யா, முன்னேறி வரும் சிறந்த தொழிலதிபன். அவனுடைய திருமண வாழ்க்கை தோழ்வியில் முடிந்ததால், பெண்கள் மீது வெறுப்பாக இருப்பவன். எவ்வளவு தான் அவன் அம்மா வற்புறுத்தியும் மற்றொரு திருமணத்தை மறுத்து வருபவன். நாயகி பாரதி, கிராமத்து பெண். குடும்ப சூழ்நிலை காரணமாக குடும்பத்தின் பொறுப்பை ஏற்க வேண்டியதாகிரது. அதற்காக, ஆதித்யாவின் அம்மா திட்டப்படி , அவன் குழந்தைக்கு வாடகை தாயாகிறாள்.. ஆரம்பத்தில் ஆதித்யா பாரதியை வெறுத்தாலும், அவனுடைய குழந்தையின் வளர்ச்சியை பாரதியின் வயிற்றில் காணும் பொழுது, அவன் மனம் தானாக பாரதியின் பக்கம் சாய்கிறது. பாரதி அவன் காதலை ஏற்றுக் கொண்டாளா?? என்று தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்...
அன்பு என்ற வார்த்தை கொண்டு தான் பலரின் உணர்வுகள் மறுக்கப்படுகிறது. நன்றிக்கடன் செலுத்த வேண்டிய கடமையில் வாழ்வின் மீதான கோட்பாடுகள் உடைத்தெறியும் அவலமும் நிகழ்கிறது.
தான் காதலித்து மணந்த பெண்ணிற்கு தன் பணம் மட்டுமே குறிக்கோள் என்பதைப் பணம் போன பின்பு தெரிந்து கொண்டாலும் அவளால் உண்டாகும் மனக்காயத்தில் இருந்து ஆவியால் தப்பவே முடியவில்லை. விவாகரத்து முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்தாலும் தான் ஏமாற்றப்பட்ட வலியை உள்ளுக்குள் உணர்ந்து தவித்துக் கொண்டே தான் இருக்கிறான். மகனின் தவிப்பு தனிமையில் இருப்பதால் தான் என்று வாடகைத் தாய் மூலம் அவனுக்கு வாரிசை உண்டாக்கி தனிமையைத் துடைக்க ஜானகி முயலும் போது அவரின் கண்ணில் பாரதி விழுகிறாள்.
தந்தையின் ஆப்ரேஷனுக்கு பணம் செலுத்திய ஜானகிக்கு உதவி செய்ய வந்த வாய்ப்பாகக் கருதி வீட்டிற்குத் தெரியாமல் வாடகைத் தாயாகி பின் ஆதியின் மனதில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து அவனின் மனைவியாகிறாள்.
தன்னிரக்கத்தாலே துவண்டு போகும் ஆதிக்கு பாரதியின் வரவு மிகப்பெரிய ஆறுதலை அளித்துக் கடந்த காலத்தைப் பிடித்துக் கொண்டு தொங்குவதால் யாதொரு பலனுமில்லை என்பதை அவளுடனான நேரங்கள் புரியவைக்கிறது.
கொஞ்சம் கூட மாறாத குடும்ப நாவல் கட்டமைப்பு. திரும்பத் திரும்ப எழுதிய பக்கத்தைக் குறைத்து இருக்கலாம். கதாநாயகி பாத்திர வடிவமைப்பு குறைவே. பல நேரத்தில் அரைகுறை புத்தியோ என்று எண்ண வைக்கிறாள்.
எழுத்தாளர் தான் எழுதிய கதையை மீண்டும் ஒருமுறை வாசிக்காதவரை இம்மாதிரியான நீண்ட கதைகளிலிருந்து நமக்கு விடுதலையே இல்லை. பக்க அதிகரிப்புக்குப் பின்னே இருக்கும் அரசியலை அனைவரும் புரிந்து கொண்டு தான் இருக்கிறோம் அதற்காகச் சொல்லியதையே திரும்பத் திரும்ப சொல்வதற்குப் பதில் புது புது காட்சியமைப்புகளை உண்டாக்கலாம்.