தமிழகத்தில் இன்றுவரை நினைவுகூறப்படும் கலவரங்களில் ஒன்றான முதுகுளத்தூர் படுகொலை பற்றி சான்றுகளின் துணைக்கொண்டு நடுநிலையாய்க் கருத்துகளை பகிர தலைபட்டிருக்கிறார்.
காலங்காலமாக முக்குலத்தோருக்கும் நாடாருக்கும் பள்ளருக்குமான பகைமையை தெளிவுபடுத்துகிறது இந்நூல். அடக்குமுறையால் பள்ளர்கள் பட்ட துன்பங்களையும் கிறித்துவ மிஷனரிகளும், இம்மானுவேல் சேகரன் போன்றவர்களும் கல்வியறிவை அவர்களை அடைய உதவியதையும் சொல்கிறது.
இம்மானுவேல் சேகரன் கொலை பற்றியும், கீழத்தூவலில் காவலர்களால் சுடப்பட்ட ஐந்து தேவர்களையும் அத்துப்பாக்கி சூட்டின்போது காவலராய் இருந்த காவலர் ராய் பற்றியும், காமராசர் தலைமையிலான காங்கிரஸ் அரசின் மெத்தன போக்கையும், முத்துராமலிங்கத் தேவரின் வேறோர் உலகையும் காட்டும் புத்தகம்.
1865 ல் இந்திய வனச் சட்டம், 1871 ல் குற்றப்பரம்பரை சட்டத்தைத் தோற்றுவித்ததைப் பற்றியும், 1897 வரை அப்போதைய மதராஸ் மாகாணத்தில் அதற்கான தேவை இல்லை என அதை ஏற்க மறுத்து வந்த நிலையில் 1911 ல் அதை தமிழகம் ஏற்றதன் பின்னணியையும் வினவுகிறது.
தமிழகத்தின் இன்றைய தலைமுறை ஆச்சரியப்படுமளவான அடக்குமுறைகளை (பித்தளை குடத்தை உபயோகிக்க கூடாது, குடத்தை இடுப்பில் சுமக்க கூடாது, இடுப்பிற்கு மேல் ஆடை அணிய கூடாது, செருப்பணிய கூடாது, துண்டு போட கூடாது, தங்க வெள்ளி நகைகளை அணிய கூடாது, அடிமை முறை) பற்றி தெரிவிக்கிறது.
காமராஜரின் இன்னொரு பக்கத்தையும் அறிய முடிகிறது. 1843 வரை தமிழகத்தில் பண்ணை அடிமை முறை இருந்தது என்பதும், நிலத்தை பிறருக்குக் கொடுக்கும்போது அந்த பண்ணையாளையும் முன்தொகை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு விற்பதும் நம்மை திகைப்படைய செய்வனவாகும்.
கிழக்கு ராமநாதபுரம் அக்காலத்தில் எப்படி இருந்ததென்பதை நமக்கு காட்சிப்படுத்தும் ஓர் ரத்தசரித்திரம். தாம் பிறந்த இடத்தின் விதியின் அடிமைகள் என இனியும் மனிதனுக்கு மனிதன் அடிமைப்பட்டு கிடப்பதிலிருந்து வெளிவர துடித்த ஓர் கூட்டத்தினையும் காணலாம். கிறித்துவத்திற்கும் இஸ்லாத்திற்கும் மக்கள் மாறியதன் நோக்கத்தினையும் அறிய இந்நூல் உதவுகிறது.
தமிழ்ப் பதிப்பின் நூலின் கடைசியில் முக்குலத்தோர் எனும் மறவர், அகமுடையார், கள்ளர் மற்றும் நாடார் பள்ளர் ஆகியோரது வரலாற்றுப்பின்னணி பற்றி விவரிப்பது நமக்கு தெளிவக்கொடுக்கிறது.