புதுக் கவிதை வரலாற்றில் மட்டுமல்ல, நவீன தமிழ் இலக்கிய வரலாற்றுப் பக்கங்களிலும் கலாப்ரியா ஒரு தவிர்க்க முடியாத அத்தியாயம். ஒரு வகையில் தீரா நதி. ஒரு வகையில் நகல் செய்ய முடியாத ஒரு வெளிச்சம். பின்தொடரமட்டுமே முடியும். எல்லாத் தீவிரமான படைப்புக்களும் கோருகின்ற தீவிரமான பின்தொடரல் அது.
– வண்ணதாசன்
நவீன தமிழ்க்கவிதையின் ஒரு அசல் முகம் கலாப்ரியா. மிக மிக இயல்பான நிகழ்வுகளை சராசரியான எளிய மொழியில் சொல்வது மட்டுமல்ல. அதன் அந்தரங்கத்தில் அணுத்தெறிப்பான ஓர் அவலம் வெடித்துத் திறப்பதிலும் கலாப்ரியாவின் கலை நுட்பமாகிறது.
கலாப்ரியா (பிறப்பு: ஜுலை 30, 1950). இயற்பெயர் டி.கே சோமசுந்தரம். எழுபதுகளி்ல் எழுதத்துவங்கிய நவீன தமிழ் கவிஞர். நேரடியாகச் சித்திரங்களை அடுக்கியபடியே போகும் பாணியை கொண்டது இவருடைய கவிதைகள். கவிதை, கட்டுரை, தன்வரலாறு, சிறுகதை, நாவல் என நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம், வண்ணநிலவனின் கையெழுத்து இதழான பொருநையில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். பின்னர் கசடதபறவில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார். கசடதபறவிற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய இதழ்களில் எழுதினார்.