சிற்றிதழ்களின் வழியாய் எழுத்துலகில் நுழைந்தபோதிலும் ஆனந்த விகடன் இதழ்களில் தொடர்ந்து எழுதிய கதைகளின் வழியாகவே நான் அதிகமும் அறியப்பட்டவனாய் இருந்தேன். கடந்த இரண்டு வருடங்களுக்கும் ஆனந்த விகடனில் அதிகம் எழுதி இருக்காதபோதும் அதற்கு முந்தைய வருடங்களில் தொடர்ந்து எழுதுவதற்கான வாய்ப்பை விகடன் குழுவினர் வழங்கியிருந்தனர். அந்தக் கதைகள் நல்ல கவனத்தை உருவாக்கித் தந்ததோடு ஒவ்வொரு முறையும் புதிய தளங்களில் கதைகளைத் தேர்வு செய்வதற்கான உந்துதல்களையும் ஏற்படுத்தியது. ஆவாரம் பூ, ஒரு துண்டு வானம், நாய்வேட்டம், பர்மா ராணி, படையல் என ஒவ்வொரு கதைக்கும் ஒரு தனித்துவமுண்டு. ஒரு துண்டு வானம் சிறுகதை வெளியான வருடத்தின் சிறந்த கதை என்பதற்கான இலக்கிய சிந்தனை விருதையும் பெற்றது. விகடனில் வெளியான ஒன்றிரண்டு கதைகளைத் தவிர்த்துவிட்டு எனக்குப் பிடித்தக் கதைகளை மட்டும் இதில் தொகுத்துள்ளேன்.
புதினங்களை விட சிறுகதைகள் தான் எப்பொழுதும் சுவாரசியமானது.10 அல்லது 15 பக்கங்களில் குறைந்தபட்ச தாக்கங்களையாவது மனதில் ஏற்படுத்த வேண்டும்.லக்ஷ்மி அதில் பெருமளவு ஈடு செய்திருக்கிறார்.