விமானத்தின் சக்கரத்தில் தன்னை பிணைத்துக் கொண்டு ஆப்கானிஸ்தானை விட்டு தப்பித்து செல்ல முயற்சித்து கீழே இருவர் விழுந்த காணொளியை பார்த்தபோது, "இப்டி போனா சாவு சர்வநிச்சயம்ன்னு தெரிஞ்சும் ஏன் இப்டி பன்றாங்க. அதுக்கு அங்கேயே இருந்து சமாளிக்கலாமே" என்று தான் முதலில் யோசித்தேன். ஆனால் கடந்த முறை (1996 - 2001) தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்த போது அவர்கள் செய்த அட்டூழியங்களை புத்தகத்தில் வாசித்த போது அந்த விமான சம்பவத்தின் பின்னே இருந்த மக்களின் பீதியை புரிந்து கொள்ள முடிகிறது.
வேறொருவனை விரும்புகிறாள் என்பதற்காக காச நோயால் பாதிக்கப்பட்ட 70 வயது கிழவனை பணத்திற்கு ஆசைப்பட்டு பெற்றோர் திருமணம் செய்து வைத்துவிட தன் காதலோனோடு ஆப்கானிஸ்தானை விட்டு தப்பி பாகிஸ்தான் செல்ல முற்படும் பெண்ணும் அவளது காதலனும் கட்டி வைத்து கல்லால் அடித்துக் கொல்லப்படுவது காட்டுமிராண்டித்தனம் என்றால் ஹஸாராக்கள் (ஒரு இனக்குழு) அதிகம் வசித்த மஸார் ஈ ஷரிஃப் என்ற ஊரில் இரண்டே நாளில் 8000 பேரை கொன்றொழித்த இனப்படுகொலை காட்டுமிராண்டித்தனத்திற்கும் அப்பாற்பட்டது. ஜனநாயகம் வேண்டாம் அதற்காக ஷேவ் செய்ய கூடாது, ரேடியோ கேட்க கூடாது, பெண்கள் நெயில் பாலிஷ் போட கூடாது, சிரிக்க கூடாது, சத்தம் போட்டு பேச கூடாது என்ற வெகு சாதாரண அன்றாட பழக்க வழக்கங்களுக்கு கூடவா தடை விதிப்பது?
மத அடிப்படை வாதம் என்ற மனநோய் கொண்ட கும்பலிடம் சிக்கி சீரழிந்த மக்கள் மீண்டும் அவர்கள் கைகளில் சிக்கி இருப்பது நிம்மதி, சுதந்திரம் என்ற வார்த்தைகளின் பொருளை ஆப்கனுக்கும் ஆப்கன் மக்களுக்கும் உணரவே முடியாதோ என்ற எண்ணத்தை தான் கொடுக்கிறது. தனிப்பட்ட நாடுகளின், இன குழுக்களின் அரசியல் மற்றும் பொருளாதார நோக்கங்களுக்காக ஆப்கானிஸ்தான் மக்கள் எத்தனை காலத்திற்கு பந்தாடப்படுவார்களோ தெரியவில்லை. இவை அனைத்தையும் மதத்தின் பேரை சொல்லிக் கொண்டு அவர்கள் செய்வது தான் கொடுமை.
தாலிபன்களின் வளர்ச்சியும் (தற்காலிகமாக அவர்கள் அப்போது அடைந்த) வீழ்ச்சியும் பா.ராவின் எழுத்தில் பரபரப்பான த்ரில்லர் நாவலுக்கு உரிய பாணியில் சொல்லப்பட்டிருக்கிறது. bynge-ல் கடந்த வெள்ளி முதல் அவர் எழுத தொடங்கி இருக்கும் "மீண்டும் தாலிபன்" தொடர் வாசிப்பதற்கு முன் இதனை வாசித்துவிடுவது தாலிபன் குறித்த நல்ல அறிமுகத்தை கொடுக்கும்.