இந்த நாவல் யதார்த்தத்தைப் பரிசீலிக்கவில்லை; மாறாக, இருத்தலின் சாத்தியங்களைப் பரிசீலிக்கிறது. பொதுவாக, புறச் சூழல்களினால் தீர்மானிக்கப்படுபவர்களாக நாம் இருக்கிறோம். அவற்றிலிருந்து தப்பிக்கும் சாத்தியங்களை நாம் அறியாதிருக்கிறோம். அதனால் நாம் மேலும் மேலும் ஒருவரைப் போலவே ஒவ்வொருவரும் இருந்துகொண்டிருக்கிறோம். நிர்ணயிக்கப்பட்ட ஒரு வாழ்வெளிக்குள் சிறைப்பட்டிருக்கிறோம். பொதுவாக, நம் வாழ்க்கை ஒரு பொறியில் சிக்கிக் கொண்டிருக்கிறது. அதேசமயம், இந்த உலகம் மிக விசாலமானதாகவும் வாழ்க்கை எண்ணற்ற கோலங்களுக்கு இடமளிப்பதாகவும் இருந்து கொண்டிருப்பதால் தப்பிப்பதற்கான சாத்தியங்களும் இருந்துகொண்டிருக்கின்றன. அவற்றைப் பரிசீலிக்கும் ஒரு கலைச்சாதன
சி. மோகன் (C.Mohan) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூல்தொகுப்பாளர், கலை இலக்கிய விமர்சகர் என்று பன்முகங்களுடன் இயங்கும் ஒரு தமிழ் இலக்கியவாதியாவார். 2014 ஆம் ஆண்டு சி.மோகனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விமர்சனக்கருத்துக்கள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் கவனத்தை ஈர்த்துள்ளார். ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என்ற சிறியநாவல் ஒன்றையும் கமலி என்ற ஒரு நாவலையும் எழுதியிருக்கிறார். இவரது மொழியாக்கத்தில் வந்த ‘ஓநாய்குலச்சின்னம்’ என்ற மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும். எழுத்து தவிர, ஓவியம், சிற்பம், திரைப்படம் ஆகிய துறைகளிலும் கவனத்தைச் செலுத்திவருபவர்.
ஒருசில படைப்புகள் மிகவும் சிறியதாக இருந்தாலும் அதன் தாக்கமும், அது தரும் அனுபவத்தின் வீரியமும் மிகவும் அதிகமாக இருக்கும்! அந்த மாதிரியான ஒரு படைப்பு தான் சி.மோகன் அவர்களின் இந்த புத்தகம்!
ஓவியக்கலையை பற்றிய எந்த ஒரு அறிமுகமும் இல்லாத எனக்கு இந்த புதினத்தை வாசித்து முடித்ததிலிருந்து ஓவியத்தைப் பற்றியும், அதன் உள்ளே உறைந்திருக்கும் ஓவியனின் மன ஓட்டங்களை பற்றியும், அவனது விஸ்தாரமான விந்தை உலகை பற்றியும் பார்த்துப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆவல் எழுகிறது!
சற்றே மனப்பிறழ்வு கொண்ட ஓவியரான ராமானுஜத்தின் வாழ்வை அடைப்படையாக வைத்து எழுதப்பட்ட புனைவு இந்த நூல்... சென்னை கவின்கலை கல்லூரியில் ஓவியம் பயின்று அதன் உச்சங்களை அடைந்த ராமானுஜத்தின் வாழ்வை ஒரு அழகிய எழுத்துச் சித்திரமாக கொடுத்திருக்கிறார் சி.மோகன் அவர்கள்!
இளம் வயதிலேயே கலையின் உச்சத்தை அடைந்து மரணத்தை தழுவிய ராமானுஜத்தின் வாழ்வை அவருடன் பழகிய, வாழ்ந்த தன்னுடைய ஓவிய நண்பரான டக்லஸ் அவர்களின் வாயிலாக கதையாக்கி இருக்கிறார்...
ராமானுஜத்தின் சிறு வயதில் கோயிலில் இருக்கும் சிற்பங்களை பார்த்து ஓவியமாக்குவதில் மனம் லயித்து ஒரு தியானத்தைப் போல வரைந்து வருகிறார்... அந்த ஓவியங்களில் அவரின் படைப்பாற்றலும், அவருக்கே காட்சியளிக்கக் கூடிய அந்த விந்தையான உலகத்தின் காட்சிகள் விரிவதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது!
ராமனின் படைப்பு மனவெளியை மோகனின் வார்த்தைகளில் சொல்வதென்றால் "இப்போதெல்லாம் மனிதர்கள் வானத்தைப் பார்ப்பதில்லை என்று அப்போது நினைத்துக்கொள்வான். கட்டிடங்களால் வானம் மறைக்கப்பட்டுவிட்டது. யாராலும் பார்க்கப்படாது புறக்கணிப்பட்ட நிலா அவனுடைய படைப்புகளில் வந்து ஓய்வெடுப்பதாக அவனுக்கு அப்போது தோன்றும். ஏளனம் செய்யும் மனிதர்களும் லௌகீக வாழ்க்கையும் அவனைப் புறக்கணித்துவிட்ட நிலையில் அவன் தன் கனவுலகில் நிலவுக்குச் சென்று ஓய்வெடுப்பதைப் போலத்தான், நிலவும் பெரும் ஏக்கத்தோடு தன் படைப்புகளில் வந்து தங்கியிருப்பதாக அவனுக்குத் தோன்றும். நிலவின் துணையோடும் கருணையோடும் நேசத்தோடும் நெருக்கடியான ஆறு ஆண்டுப் படிப்புக் காலத்தைக் கடந்தான்."
இந்த படைப்பாற்றலை கூர் தீட்டும் பட்டறையாக கவின் கலைக்கல்லூரி திகழ்ந்தது! அதன் முதல்வர் கே.சி.எஸ்.பணிக்கர் பின்னாளில் கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ள சோழ மண்டலம் கலைஞர்கள் கிராமத்தை உருவாக்குகிறார்... அந்த கிராமத்தில் தஞ்சம் புகுந்து தன்னுடைய படைப்புகளின் மூலம் புதிய பரிணாமங்களை உலகிற்கு கொடுக்கிறார் ராமன்...
இந்த நாவல் வெறும் கதையாக மட்டுமில்லாமல் சென்னை கவின் கலைக்கல்லூரி மற்றும் சோழ மண்டலம் கலைஞர்கள் கிரமத்தைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் கொண்டிருப்பதும் எனக்கு புதிய தகவல்களாக கிடைத்து!
கலையின் உச்சத்தை அடைந்த ராமனின் மரணத்தைப் பற்றி குறிப்பிடும் மோகன் அவர்களின் வார்த்தைகள் "பூமியில் மனிதன் தன் பணி முடிந்ததும் உலக வாழ்விலிருந்து துண்டித்துக்கொண்டு, விடைபெற்றுக்கொள்ள முடிந்தால் அதுவே விவேகமான காரியமாக இருக்க முடியுமென்று தோன்றுகிறது. இளம் மேதைகள் விஷயத்தில் இதுதான் நிச்சயம் அழகான முடிவாக இருக்கமுடியும். இளம் மேதைகள் இளம் பிராயத்திலேயே தங்கள் கனவுகளின் உச்சத்தை எட்டிவிடுவதோடு அவ்வுலகில் பரிபூரணமாக வாழ்ந்தும் விடுகிறார்கள். தங்கள் துறை சார்ந்த மேதைமையின் சிகரத்தை எட்டிவிட்ட பிறகு, முதலில் மரணம் நேர்வது அவர்களுடைய கனவுகளுக்குத்தான். கனவுகளின் மரணத்துக்குப்பின் வாழ நேர்வது துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்ல; அவலமும்கூட. அப்படி நேராமல் தடுத்தாட்கொள்ளும் அழகிய சாதனம்தான் மரணம்." இந்த கூற்றின் படி பார்த்தால் ராமானுஜத்தின் வாழ்வு கலையினால் நிறைவெய்தி இன்னுமும் ஓவியங்களாக மூச்சில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறது!