நான் பள்ளி மாணவனாக இருந்தபோதே கோயில்களுக்குச் செல்லும் பழக்கம் உடையவன். நான் தஞ்சையில் உத்தியோகம் ஏற்றிருந்த பொழுது, இந்த ஆர்வம் அதிகமாக வளர்ந்தது. தஞ்சை ஜில்லாவில் காவிரிக் கரையில் எத்தனை எத்தனையோ கோயில்கள். அக் கோயில்களில் எல்லாம் அழகு அழகான மூர்த்தங்கள்; சிற்பச் செல்வங்கள். அவற்றை எல்லாம் காணக் காண என் நெஞ்சு நிறைந்தது; உள்ளம் விம்மிப் பெருமிதம் அடைந்தது. இந்த நிலையில்தான் தஞ்சையில் கலைக்கூடம் உருவாக்கும் பணியை ஏற்றேன். கலை தேடி அலைந்த காதல் விரிக்கில் பெருகும். தமிழ் நாட்டின் சிற்ப வடிவங்களின் சிறப்பை உணர்ந்த போது, அவைகளைப்பற்றி முதலில் தமிழர்களுக்கும், பின்னர் உலக மக்களுக்குமே எடுத்துச் சொல்ல வேண்டும் என்னும் ஆர்வம் பிறந்தது.