பித்தன்களின் ஆலாபனை: கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றி அறிவுமதி, என்.லிங்குசாமி, பழநிபாரதி, யுகபாரதி நினைவுப்பகிர்வு
நான் பிறைநிலா நீதான் என்னை நிரப்புகிறாய் உன்னை ஊற்றி. அய்யா கவிக்கோ ரகசியப்பூவில் எழுதியது. அவர் வாழ்விலும் அதை நிகழ்த்தி பல நிலாக்களை ஒளிவீசச் செய்தவர். என் இலக்கியமுயற்சிகளுக்கு மட்டுமல்லாமல் தொழில்முயற்சிகளுக்கும் மிகுந்த அக்கறையோடு துணையிருந்தார். ஆயிரம் தாய்மையைத் தனக்குள் கொண்ட கவிக்கோ, என்னை ஊக்கப்படுத்தி தமிழ்அலையை சென்னையில் தொடங்க ஆலோசனை வழங்கியதோடு தொடக்க நிகழ்விலும் பங்கேற்று அளவற்ற அன்பை அள்ளித்தந்து தொடர்ந்து உற்சாகப்படுத்தினார். இன்று கவிக்கோ நம்மிடையே இல்லை. ஆனால், படைப்புகளாக பசுமையான நினைவுகளை எமக்குள் நிரப்பிச் சென்றிருக்கிறார். அவற்றில் சிலவற்றை வாசகர்கள் பார்வைக்கு வைப்பதில் தமிழ்அலை ஆறுதல் கொள்கிறது. தன் நினைவுப்பகிர்வுகளை ‘பித்தன்களின் ஆலாபனை’ என்னும் சிறுவெளியீடாக்க ஒப்புதலளித்த பாவலர் அறிவுமதி, இயக்குநர் லிங்குசாமி, கவிஞர் பழநிபாரதி, கவிஞர் யுகபாரதி மற்றும் தயாரிப்பில் உதவிபுரிந்த செம்மொழி ஆசிரியர் எம். இலியாஸ், சிராங்கூன் டைம்ஸ் ஆசிரியர் ஷாநவாஸ் உள்ளிட்ட உறவுகளுக்கு ஆழ்மன நன்றி. இசாக் தமிழ்அலை