இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரோ அல்லது ஓராண்டிற்கு முன்னரோ பவா.செல்லதுரை அவர்களின் கதை சொல்லும் காணொளி ஒன்றில் இருந்து தான் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களைப் பற்றி அறிந்து கொண்டேன். "மரி என்கிற ஆட்டுக்குட்டி" என்ற சிறுகதையின் மூலமாக இவரின் எழுத்து எனக்கு அறிமுகம். நிறைய பேரை நிறைய நாட்கள் வாசிக்கவில்லை என்ற ஒரு குற்றவுணர்வு உறுத்தும்! சரி இப்போதாவது வாசிக்கிற நேரம் வந்திருக்கிறதே என்ற நிலையில் அதை கடந்து செல்கிறேன்.
அதன் பிறகு நிறைய உரைகளை வலைத்தளங்களில் கேட்டிருக்கிறேன். ஆர்ப்பாட்டம் சிறிதும் தென்படாத பேச்சு பிரபஞ்சன் அவ்ரகளுடையது. அதனின் பால் ஈர்க்கப்பட்டு மேலும் சில உரைகளைக் கேட்டு விட்டு, அவருடைய புத்தகங்களைப் புத்தகங்களை படித்திட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அவரது மரண செய்தியை தொலைக்காட்சியில் கண்டேன். மனித மனம் தானே, குரங்கதன் சேட்டைக் கொண்டு சிலகாலங்கள் மறந்து விட்டிருந்தேன்.
பின்னர் புத்தகங்கள் வாங்கிய பொழுது மறக்காமல் அவருடைய "பெண்" என்ற கட்டுரைத் தொகுப்புகள் அடங்கிய நூலினை வாங்கினேன். அதைப் படிக்கும் பொழுது, பெண் விடுதலை என்பதை தன் எழுத்தளவில் உரைக்காமல் அதையும் தாண்டி பல விஷயங்களை செய்திருப்பவராய் தெரிந்தார். பல கட்டுரைகள் இதில் பல கேள்விகளை எழுப்பிய வண்ணம் கடந்து செல்கின்றன.
ஏனோ தெரியவில்லை, இந்த புத்தகம் முழுதும் படித்து முடிக்கும் வரை பிரபஞ்சன் அவர்கள் குரல் ஒளித்துக் கொண்டே இருப்பதாய் ஓர் உள்ளுணர்வு. சில சமயங்கள் இப்படி அமைந்திடுவது விசித்திரத்தின் உச்சமாகவே
தோன்றுகிறது. உங்களில் யாருக்கேனும் இப்படியான அனுபவம் உண்டா?
சரி அவருக்கு எதனால் பெண் விடுதலைப் பற்றி எழுதிட தோன்றியது என்பதை இவ்வாறு முன்னுரையில் விவரிக்கிறார்:
"பெண் விடுதலை குறித்து நான் ஏன் கவலைப்படுகிறேன். என் விடுதலைப் பற்றி கவலைப்படுவதால் பெண் விடுதலைப் பற்றியும் கவலைப்படுகிறேன். பெண் விடுதலை இன்றி ஆண் விடுதலை இங்கு இல்லை". காட்டமான கேள்விகளும், வாளின் கூர்முனை போன்ற கருத்துக்களும் இந்த நூலில் புதைந்துள்ளன. பல இலக்கியச் சான்றுகள் சுட்டிக்காட்டப்பட்ட பெண்ணின் வாழ்க்கை முறைகளையும், முறையாக எப்படி அடிமை வாழ்வுக்காய் கொண்டு சென்றார்கள் என்பதனையும் 28 கட்டுரைகளில் விளக்குகிறார்.
ஆயிரம் பக்கங்கள் எழுதிடலாம், எடுத்துக்காட்டுக்களை அடுக்கிக் கொண்டே போகலாம், ஆயினும் மாற்றம் தனி மனித உள்ளத்து ஆழத்தில் இருந்தே தோன்றிட முடியும் என்பதனையும் சேர்த்தே விளங்கியிருக்கிறது இந்த கட்டுரைகளின் தொகுப்பு. அதிதியில் ஆரம்பித்து அகல்யா, சீதை, அம்பை, ஐயை என்ற புராணகால பெண்களில் தொடங்கி பல கட்டுரைகளில் எப்படி பெண்கள் அடிமைத்தளைகளில் கட்டுண்டிருந்தார்கள் என்று குறிப்பிட்டும் கேள்விகள் எழுப்பியும் புத்தகம் நகர்கிறது. இந்த புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை "தோழி" என்ற கட்டுரை.
"என் பெயர் தோழி. தோழமை என்கிற தொழிலைச் செய்கிற காரணத்தால் எனக்கு இப்படி ஒரு பெயர் ஏற்படலாயிற்று. தொழிலின் பெயர், ஒரு பெண்ணின் பெயராவது எப்படி என்பீர்கள். அது அப்படித்தான். பழங்காலத் தமிழ்நாட்டில் வாழ்ந்த எனக்கு முகமும் இல்லை. முகவரியும் இல்லை. எனக்கென்று தனிப்பெயரும் இல்லை."
இலக்கியமாக இருக்கட்டும், எந்த அரசக்கதைகளாக இருக்கட்டும், முகந்தெரியாத அந்த தோழிகள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். தலைவிகளோடு கூடவே வாழ்ந்து பின்னர் சுவடில்லாமல் போகின்ற தோழிகள். அப்படியான தோழிகளின் வாழ்க்கை எப்போதும் தலைவிகளின் வாழ்க்கையோடு தொடங்கி முடிந்து போகும் என்ற புரிதல் கண்டது உள்ளம். அப்படியாக முகம் தொலைந்த தோழிகள் கேட்கும் கேள்விகளை உள்ளடக்கிய கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது.
தோழியின் குமுறல்களின் ஒரு சிறு துளி:
"சூரியகிரகணம் நிகழ்ந்தது. சூரியனைப் பாம்பு விழுங்கி விட்டது" என்று ஊர்க்காரர்கள் பேசிக்கொண்டார்கள். நானும் தலைவியும் பஃறுளி ஆற்றுக்கு குளிக்கச் செல்கிறோம். குளித்து உடைமாற்றுகையில் தலைவி என்னிடம் சொன்னாள்... "தோழி, கொஞ்ச நாட்களாகவே தலைவனின் போக்கு வித்தியாசமாக இருக்கிறது. எனக்கும் அவனுக்கும் இருக்கும் உறவு பற்றி ஊரே 'அலர்' பேசுகிறது. என்னை விரைந்து மணந்து கொள்ளச் சொல்லி அவனிடம் சொல்ல வேண்டும் என்றாள். பசி ஆறிய கிளி. இலவம் காய் பழுக்கும் என்று வீணே காத்து இருக்க வேண்டிய அவசியம் என்ன! அவன் அறியாமையை அவனிடம் எடுத்து சொல்லி விட்டு வா...
நான் நினைத்து கொண்டேன், காதலனிடம் பேசுவதற்கு இவளுக்கு வெட்கம் தடுக்கிறதாம். அந்நியனிடம் இதைப்பற்றி பேச எனக்கு வெட்கம் இருக்காதா? வெட்கம், நாணம், கூச்சம் போல அடிப்படை மனித உணர்வுகள் கூட மேல் தட்டுக்கும், கீழ்த்தட்டுக்கும் வித்தியாசப்படுகிறதா? ஏழையாகப் பிறந்தேன் என்பதாலேயே எனக்கு மனித உணர்வுகள் இல்லாமல் போய் விடுமா? ஆமாம் அது அப்படித்தான்."
அனைத்து மாற்றங்களும், தன்னிலிருந்து தன் சொந்த வீட்டிலிருந்து தான் தொடங்கும், தொடங்கப்படவேண்டும் என்று உணர்ந்தே "பெண்" புத்தகத்தினை படித்து முடித்தேன். படித்து பாருங்கள்...