நாற்பதாண்டு காலமாகச் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் முதல் நாவல் ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’. இந்த நாவலில் ஆதித்ய சிதம்பரம் என்ற எழுத்தாளரின் மனம், சிந்தனை, பால்யகால வாழ்க்கை, மண வாழ்க்கை ஆகியன சித்திரிக்கப்பட்டுள்ளன. அந்த எழுத்தாளரின் ஐந்து குறுநாவல்களின் பகுதிகள் இந்த நாவலில் உள்ளன. அக்குறுநாவல்களின் மீதப் பகுதிகளை ஒவ்வொரு வாசகரின் மனமும் அவரவர்க்கு ஏற்றவாறு கற்பனை செய்துகொள்ளும் சுதந்திரத்தை இந்த நாவல் வழங்குகிறது. புனைவும் யதார்த்தமும் நுட்பமும் கலந்த நாவல் இது. இந்த நாவலின் பின்னணியில் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கின்றன.
சுரேஷ்குமார இந்திரஜித் (அக்டோபர் 5, 1953) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். சிறுகதை, நாவல், குறுங்கதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதி வருகிறார்.
இயற்பெயர் என்.ஆர். சுரேஷ்குமார். சுரேஷ்குமார இந்திரஜித் ராமேஸ்வரத்தில் ராமநாதன், காந்திமதி இணையருக்கு அக்டோபர் 5, 1953-ல் பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்தபின் மதுரைக்கு குடிபெயர்ந்தார். மதுரை நாகமலையில் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் புதுமுக வகுப்பு பயின்றார். மதுரை மஜுரா கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
1979 முதல் சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது முதல் தொகுப்பு 'அலையும் சிறகுகள்’ 1982-ல் வெளியானது.எழுத்தாளர் ஜெயகாந்தன் கதைகள் வழி புனைவுலகம் அறிமுகம் பெற்றார். 1986-ல்'சந்திப்பு’ என்ற பெயரில் மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தினார். முதல் கூட்டத்தில் ராஜமார்த்தாண்டனும், இரண்டாவது கூட்டத்தில் இவரும் பேசியுள்ளனர். சு.ரா. கலந்து கொண்ட பெரிய கூட்டமும் இதன் மூலம் நடைபெற்றது. 80-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் இரு நாவல்களையும் எழுதியுள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் அறுபது குறுங்கதைகள் எழுதியுள்ளார். தொடர்ந்து சிறுகதை, நாவல், குறுங்கதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதி வருகிறார்.