1916-17இல் இரண்டு பாகங்களாக பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகம் , பல்லவர்களின் வரலாற்று புத்தகம் அல்ல. இந்தப் புத்தகத்தில் , அவர் பல்லவர்களின் காலத்தையும் , அரசர்களின் பட்டியலை சரி பார்க்கவும் சில புதிய முறைகளை கையாண்டு அது குறித்து விவரிக்கிறார்.
இந்த முறைகள் ஒவ்வொரு அரசனின் கட்டிட / சிற்பக் கலைப் பாணியை கண்டறிந்து அதையும் , கல்வெட்டுகளில் உள்ள எழுத்துருக்களின் மாற்றத்தை நோக்கி , அதை கொண்டும் , கல்வெட்டுகளில் உள்ள விவரத்தை சரி பார்ப்பது ஆகும். இது அன்றைய காலகட்டத்தில் முற்றிலும் புதியதான முறையாக இருந்திருக்க வேண்டும். இதன் மூலம் அவர் ஒரு கலை சின்னத்தின் வரலாற்றை வெவ்வேறு தரவுகளைக் கொண்டு சரி பார்த்து நிறுவுகிறார்.
"பல்லவர்கள் தொன்மையியல் வரலாறு " - கபிரியல் ஜுவே-துபிரியே (தமிழில்:வானதி)
பிரெஞ்சு தேசத்தை சேர்ந்த திரு 'கபிரியல் ஜுவே-துபிரியே'தென்னிந்தியா கட்டிட சிற்ப கலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டு, ஆராய்ந்து, அவற்றின் காலத்தை நிர்ணயம் செய்ய முயலுவதாக இப்படைப்பு அமைந்திருக்கிறது. 1916-17இல் இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. பல்லவ அரசர்களின் காலத்தையும், அவர்களின் பட்டியலை சரி பார்க்கவும், அந்தந்த அரசர்களின் கட்டிட/சிற்பக் கலை பாணியைக் கண்டறிந்து விளக்கப்பட்டுள்ளது. அதை கல்வெட்டுகளில் உள்ள எழுத்துருக்களின் மாற்றத்தை கொண்டு சரி பார்த்து, தகுந்த படங்களுடன் விவரிக்கிறது இப்புத்தகம்.
கற்கோவில்கள், குகைகள் என கீழ்வரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மகேந்திரவாடி(அரக்கோணம்) பனைமலை கோயில் (ஆற்காடு) கைலாசநாதர் கோயில்(காஞ்சிபுரம்) தளவனூர்(திண்டிவனம்) சீயமங்கலம், மாமண்டூர் (தேசூர், உத்தரமேரூர்,வந்தவாசி) பல்லாவரம், (செங்கை மாவட்டம் ) திருக்கழுக்குன்றம் மஹாபலிபுரம் செஞ்சி திருச்சி என வடக்கே காளஹஸ்தி, மேற்கே மேற்கு தொடர்ச்சி, தெற்கே தற்போதைய புதுக்கோட்டை மாவட்டம் வரையுள்ள பழமைவாய்ந்த கோயில் சிற்பங்களையும் குடைவரைகளையும் ஆராய்கிறது இந்நூல்.
மேலும் எழுத்துருக்கள்(பிராமி-கிரந்த), தூண்களின் வடிக்கப்பட்ட சிற்பங்களின்(குறிப்பாக துவாரபாலகர்கள், விஷ்ணு மூர்த்திகள்) வேற்றுமை, அதனை கொண்டு கால வேறுபாடு, ஆட்சி வேறுபாடு அறிதல் எனச் செல்கிறது.
சிம்மவிஷ்ணு மகேந்திரவர்மன் நரசிம்மவர்மன் பரமேஸ்வரவர்மன் ராஜசிம்மன் அப்ராஜிதவர்மன், என பல்வேறு பல்லவ அரசர்களின் காலங்களையும் அறிந்துகொள்ளமுடிகிறது
காலத்தால் சோழர்களை விட முன்னோடிகள், மற்றும் பல நூற்றாண்டுகள் தமிழ் நிலப்பகுதியை ஆண்டவர்கள் பல்லவர்கள். ஆனால் சோழர்களை கொண்டாடிய அளவிற்கு, பல்லவர்களை தமிழ்ச்சமூகம் கொண்டாடவில்லை என்பது பெருங்குறையே. காலத்தாலும், பின்வந்த ஆட்சியாளர்களும் பல்லவர்களின் கலைச்சின்னங்களை பராமரிக்க தவறியதால், எஞ்சிய சிதிலங்களை கொண்டு, பல்லவர்களை தெரிந்து கொள்கிறோம். இனி, எந்த கோவில் பிரகார சுற்றுசுவரில் 'சிங்க'த்தின் சிலையை பார்த்தாலும், சிங்கம் பொறித்த கொடி கொண்ட பல்லவர்களின் ஆட்சியே நினைவிற்கு வரும் என்பதில் சந்தேகமில்லை.