ஒரு மாத காத்திருப்புக்கு பின் தனிமையில் கண்டதும், அவள் முகத்தை விட்டு பார்வையை விலக்க இயலாமல் நின்றான்
"பார்வைய பாரு, கண்ணா முழிய நோண்டனும்" என நினைத்தவள், "பழம் எடுத்துக்கோங்கனு சொன்னேன்" என்றாள் சற்றே சத்தமாய்
இன்னும் பார்வையை விலக்காமல், "நம்பி சாப்பிடலாமா? இல்ல இந்த சீரியல் வில்லி மாதிரி எதுனா ஊசி கீசி ஏத்தி வெச்சுருக்கியா?" என பிரதீப் கேலியாய் வினவ
"நல்ல ஐடியா, எனக்கு தோணாம போச்சே. அடுத்த வாட்டி பண்ணிடறேன்" என திருப்பிக் கொடுத்தாள்
வாய் விட்டு சிரித்தவன், "நான் இன்னும் இருப்பேன்னு தெரிஞ்சுருந்தா இன்னும் லேட்டா வந்திருப்ப, இல்ல தாரணி" என அவள் மனதை படித்தவன் போல் கேட்க
"இதொண்ணு இவன்கிட்ட, மனசுல நினைக்கறத எப்படி தான் கண்டுபுடிக்கறானோ?" என முணுமுணுத்தவள்
"என்ன பண்றது? விதி வலியது" என சலித்தாள்
"எவ்ளோ நாளைக்கு இப்படி தப்பிக்க முடியும் தாரணி. இன்னும் இருபது நாள் தான், அப்புறம் என் கூட தான இருந்தாகணும்" என அவன் வம்பிழுக்க, அவள் முறைத்தாள்
அதையும் ரசித்தவன், "அது சரி, உங்கப்பா என்னமோ நீ வாயில விரலை வெச்சா கடிக்க தெரியாத பாப்பா ரேஞ்சுக்கு நெனச்சுட்டு இருக்காரே, எப்படி இப்படி ஒரு இமேஜ் மெய்ன்டெயின் பண்ற?" என பரிகாசம் செய்ய
"வேண்டாம், வம்பிழுத்தா அப்புறம் நானும் பேசுவேன்" என முறைத்தாள்
அவனுக்கு வேண்டியதும் அது தானே, எனவே மேலும் சீண்டினான், "ஓ அப்படியா? உனக்கு பேசத் தெரியுமா? நான் ஊமைனல்ல நெனச்சேன்" என கேலி தொடர
"தேவை இல்லாம என்னை சீண்டினா அப்புறம் பீல் பண்ணுவீங்க?" என அன்று போலே விரலை நீட்டி மிரட்ட, இவனும் அன்று போலவே அவளை நெருங்கி வர, அதை அனுமானித்தவளாய் விலகி நின்றாள்
"லிஸ்ட் ரெடியா?" என அவன் கேட்க
"என்ன லிஸ்ட்?" என விழித்தாள்
"இல்ல, என்னை எப்படி எப்படியோ பழி வாங்க போறதா சொல்லிட்டு இருந்தியே. அந்த லிஸ்ட் ரெடியானு கேட்டேன்" என கேலியாய் பார்க்க
"இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல மிஸ்டர் பிரதீப். நீங்க என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகறதுக்கு இன்னும் இருபது நாள் டைம் இருக்கு" என்றாள்
முதல் முறை அவள் தன்னை பெயர் சொல்லி அழைத்ததை ரசித்தவன் "என்ன பேர் சொல்லி கூப்பிடற?" என வேண்டுமென்றே முறைத்தான்
"ஓ....பேர் சொல்லி கூப்பிட்டா புடிக்காதா? இரு இரு, உன்னை வெச்சு செய்யறேன்" என நினைத்தவள்
"ஏன் மிஸ்டர் பிரதீப்? கூப்பிடறதுக்கு தானே பேர் வெச்சு இருக்காங்க, கரெக்ட் தான மிஸ்டர் பிரதீப்?" என வேண்டுமென்றே இருமுறை அவன் பேர் சொன்னாள்
அவன் எதிர்பார்த்தும் அது தானே, ஆனால் அதை வெளிக்காட்டாமல், "ஓ... எனக்கு புடிக்காதத நீ செய்வியா? அப்போ உனக்கு புடிக்காதத நானும் செய்வேன்" என வம்பு செய்தான்
"எனக்கு என்ன புடிக்காதுனு உங்களுக்கு தெரியாதே?" என அவள் சிறுபிள்ளையாய் சிரிக்க
அவள் சிரிப்பை ரசித்தவன், "அதுக்கென்ன, அத்தையை கேட்டா சொல்றாங்க" என்றவன்
"அத்தை..." என உள் நோக்கி குரல் கொடுக்க
"ஏய்..." என அவன் வாய் பொத்தினாள்
அனிச்சையாய் நேர்ந்த அந்த நெருக்கத்தில், அவளை அவன் ரசிக்க, அதை உணர்ந்தவள் விலகினாள்
அவளை விலக விடாமல் அவள் பிரதீப் கையைப் பற்ற, அடுத்த கணம் அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டு உள்ளே ஓடினாள் தாரணி
மென்மையான சிரிப்புடன் அவளை பின் தொடர்ந்து வீட்டிற்குள் வந்தவன், அவள் பெற்றோரிடம் விடைபெற்று கிளம்பினான் To read the complete novel, its available in Amazon
- “அபூர்வ ராகம்” என்ற சஹானாவின் நாவல், பிரபல வார இதழான கண்மணி இதழ் நடத்திய நாவல் போட்டியில் வெற்றி பெற்று, ரூபாய் முப்பதாயிரம் பரிசுத் தொகை வென்றது. அதோடு, செப்டம்பர் 25, 2019 தேதியிட்ட கண்மணி இதழில் அந்த நாவல் வெளியானது
- 2018 செப்டம்பரில், Newstn.in என்ற இணைய இதழில், சஹானாவின் ஆசிரியர் தின சிறப்புக் கட்டுரை வெளியானது
- 2016ம் ஆண்டு மங்கையர் மலர் நடத்திய "ஜெய்ஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டி"யில், சஹானாவின் "இரண்டாவது அத்தியாயம்" என்ற சிறுகதை பரிசு பெற்றது
- அதே ஆண்டு "தமிழ் வலைப்பதிவர் குழுமம்" நடத்திய சிறுகதை போட்டியில் சஹானாவின் சிறுகதை பரிசு பெற்றது
- 2013ம் வருடம், மார்ச் மாதம் தினகரன் நாளிதழின் இணைப்பு இதழான "வசந்தம்" இதழில், "இணையத்தில் கலக்கிய இலக்கிய பெண்கள்" என்ற கட்டுரையில், சஹானாவின் பெயரும் இடம் பெற்று இருந்தது
- 2011ல் "நேசம் பவுண்டேசன்” நடத்திய கேன்சர் விழிப்புணர்வு சிறுகதைப் போட்டியில் சஹானாவின் சிறுகதை முதல் பரிசு பெற்றது
- அது மட்டுமின்றி, சஹானாவின் சிறுகதைகள் பல "வல்லமை", "அதீதம்", "திண்ணை" போன்ற இணைய பத்திரிக்கைகளின் புத்தாண்டு / பொங்கல் / தீபாவளி சிறப்பிதழ்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன
- யூத் விகடன் இணைய இதழில், சஹானாவின் கவிதைகள் சில வெளியாகியுள்ளன
- இரண்டரை லட்சத்திற்கு மேல் ஹிட்கள் பெற்றுள்ள சஹானாவின் “அப்பாவி தங்கமணி” என்ற பெயர் கொண்ட எனது வலைப்பூவில் (BLOG - not available to public view now), சஹானா எழுதிய தொடர்கதைகள், சிறுகதைகள், கவிதைகள், நகைச்சுவை பதிவுகள், கட்டுரைகள் என 200க்கும் மேற்பட்ட பதிவுகள், பலரால் தொடர்ந்து விரும்பி வாசிக்கப்பட்டு, சஹானாவிற்கென ஒரு வாசகர் வட்டத்தையும், எழுத்துலக நட்புகளையும் பெற்றுத் தந்தது