அனைவருக்குமே கட்டுக்கோப்பான ஆரோக்கியமான உடல் மீது ஆசை இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும், ஏன் எல்லோராலும் தொடர்ச்சியாக உடற்பயிற்சிகளை செய்ய முடிவதில்லை. அன்றாட நடைபயிற்சியைத் தொடங்கினாலும் கூடத் தொடர்ச்சியாக ஒருவாரத்திற்கு மேல் செய்ய முடியாமல் போவது ஏன்?
இந்தத் தோல்விகளுக்குப் பின்னால் இருக்கிற உடல், மனம், பழக்க வழக்கக் குறைபாடுகள் என்னென்ன என்பதை அனுபவங்களின் மூலமாகவும் அறிவியல்பூர்வமாகவும் ஆராய முயற்சி செய்கிறது இந்த நூல். இந்தக் குறைபாடுகளை சரிசெய்து எவ்விதமான உடற்பயிற்சியாக இருந்தாலும் அதை தொடர்ச்சியாக செய்வதற்கான எளிய வழிகளையும் தீர்வுகளையும் முன்வைக்கிறது.
ஆரோக்கியமான உடலை விரும்புகிற அனைவருக்குமான நூல் இது.
கல்லூரி முடிக்கும் காலம் வரை உடல் எடை சரியாகவே இருந்தது. கூடுதலாகவோ குறைவாகவோ இல்லை. அதனால் உடற்பயிற்சி செய்வது குறித்து எதுவும் யோசித்ததில்லை. ஆனால் அதன் பிறகு உடல் எடை சர்ரென கூடத் தொடங்கியது. அது குறித்தான வருத்தம் புது உடை எடுக்கச் செல்கையில் ட்ரைல் ரூமோடு முடிந்துவிடும். இப்படியே சென்று கொண்டிருந்த போது தான் 2018-ல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஞானயோதயம் வந்து அதற்கான முயற்சிகளில் இறங்கினேன். அப்படி ஒன்றும் நான் அதிக பருமன் இல்லை என்றாலும் எத்தனை முயன்றும் உள்ளே இழுத்துக் கொள்ள முடியாத தொப்பை நிச்சயம் உடற்பயிற்சி செய்தே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தை எனக்குப் புரிய வைத்தது. எனது அறை நண்பர் அவ்வப்போது நடைப்பயிற்சி செய்பவர். அவரது அறிவுறுத்தலின் படி முதல் சில நாட்கள் நடைப்பயிற்சி செய்தேன். முதல் சில நாட்கள் தொடர்ந்து நடக்கவியலாதபடி முதுகு வலி தொந்தரவு செய்தது. சிறிது நேரம் நின்று குனிந்து நிமிர்ந்து சில முறை செய்த பிறகே மீண்டும் நடைப்பயிற்சியை மேற்கொள்ள முடியும். அப்படியே சில நாட்கள் சென்ற பிறகு மெதுவாக ஓடத் தொடங்கினேன். ஆரம்பத்தில் இருந்த முதுகுவலி கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போனது. முதல் சில நாட்கள் தெரிந்த கால் வலி இல்லாமல் போய் களைப்பு தெரியாமல் நீண்ட தூரம் ஓடுவதற்கு பழகிக் கொண்டேன். ஓட்டப்பயிற்சி மட்டுமில்லாமல் உணவிலும் கறாரான கட்டுப்பாட்டைப் பின்பற்றினேன். நொறுக்குத்தீனிகளைத் உணவைப் போலத் தின்று பழகியிருந்த நான் முற்றிலுமாக நொறுக்குத்தீனிகளைத் தவிர்த்தேன். உணவு நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் எழும் பசியைப் போக்க பாதாம், கேரட், வாழைப்பழம், ஆப்பிள்(பட்ஜெட் இடம் கொடுக்காமல் சில நாட்களிலேயே தவிர்த்துவிட்டேன்) போன்றவைகளை சாப்பிட்டேன். 2018 மே மாதம் போலத் தொடங்கிய எனது உடற்பயிற்சி அக்டோபர் மாதம் போல அதற்கான பலனைக் கொடுக்கத் தொடங்கியது. சுற்றி இருந்தவர்கள் அதனை உறுதி செய்தார்கள். 2019 மார்ச்சில் "என்னடா.. உடம்பு சரியில்லையா.. இளைச்சிட்ட.." என நீண்ட நாள் கழித்து பார்க்கும் நண்பர்களும் உறவினர்களும் விசாரிக்கும் அளவிற்கு உடல் எடை வெகுவாக குறைந்திருந்தது. நல்ல இறுக்கமான சட்டைகளும் டி-ஷர்ட்டுகளும் வாங்கி உடுத்தத் தொடங்கினேன். சில நாட்கள் உடற்பயிற்சியினை வேலைப்பளு காரணமாகவோ, களைப்பினாலோ, தூக்கத்தினாலோ அல்லது சொந்த ஊருக்கு சென்றிருப்பதினாலோ மேற்கொள்ள முடியாமல் போனாலும் மீண்டும் தொடங்கிவிடுவேன். ஆனால் கடந்த நவம்பர் போல "அதான் உடம்ப குறைச்சி சிக்குன்னு ஆகிட்டோமே.. இன்னும் எதுக்கு லொங்கு லொங்குன்னு ஓடிக்கிட்டு.. தூங்குடா கைப்புள்ள.." என்ற மனவோட்டம் தொடங்கியது. நொறுக்குத்தீனிகளையும், உணவுகளையும் அளவு ஏதும் செய்து கொள்ளாமல் விளையாடத் தொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக சட்டைகளும், ட்-ஷர்ட்களும் இறுக்கமாகின. சுற்றி இருந்த நண்பர்களும் கூடி வரும் என் எடையை உறுதிப்படுத்த "சரி பழைய பன்னீர் செல்வமா கெளம்புவோம்" என மீண்டும் நான் ஓடத் தொடங்கிய சில நாட்களிலேயே கோரானா லாக்-டவுன் காரணமாக சொந்த ஊருக்கு வந்துவிட்டேன். ஹோட்டல் சாப்பாட்டிலேயே விளையாடிய நான் மூன்று வேளையும் கிடைத்த வீட்டுச் சாப்பாட்டை மட்டும் விட்டுவிடுவேனா? சிற்றுண்டியாக அவ்வப்போது தங்கை செய்து தரும் பஜ்ஜி, வடை, கேசரி, கேழ்வரகு புட்டு என என் காட்டில் அடை மழை. "எப்ப வீட்டுக்கு வந்தாலும் மூணு நாள் நாலு நாள்ல ஓடிடுவான்.. புள்ள இப்போ தான் வீட்டுல ரொம்ப நாள் இருக்குறான்" என வீட்டில் அவர்கள் வித விதமாய் சமைக்க "சரி நமக்காக பாசமா சமைக்குறாங்க.. அவங்க மனசு கோணாம நல்லா சாப்புடுவோம்" என நான் சாப்பிட 2018-ல் இருந்த எடைக்கும் அதிகமாக உடல் எடை எகிறிவிட்டது. பக்கத்து தெருவிற்கு நடந்து செல்வதே சிரமமாக இருந்தபோது தான் விழித்துக் கொண்டேன். சென்னையில் இருந்து அடித்துப் பிடித்து ஓடி வந்ததில் ரன்னிங் ஷூ எதுவும் கொண்டு வரவில்லை. பிறகு அமேசானில் ஆர்டர் செய்து கடந்து இருபது நாட்களாக என் வீட்டிற்கு அருகில் இருக்கும் பள்ளி மைதானத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன். ஒரு வாரம் நடைப்பயிற்சி மட்டுமே செய்து முதுகுவலியினை கடந்த பிறகே ஓடத் தொடங்கினேன்.
இந்த சமயத்தில்தான் அதிஷாவின் "நாம் ஏன் உடற்பயிற்சிகளை கைவிடுகிறோம் புத்தகத்தினை வாசித்தேன். உடற்பயிற்சிகளை தவிர்ப்பதற்காக நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட காரணங்களை பட்டியலிட்டிருக்கிறார். அந்த காரணங்களிலிருந்து வெளியேறி உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்கான எதார்த்தமான வழிகளையும் குறிப்பிட்டிருக்கிறார். உடற்பயிற்சியை மேற்கொள்பவர்கள் இலக்கை அடைந்த பிறகு செய்யும் தவறுகளையும் அதனை தவிற்ப்பதற்கான வழிகளையும் சொல்லி இருக்கிறார். மேலே இருக்கும் என் சுயபுராணத்தில் நான் குறிப்பிட்டிருந்தவைகள் தான் உடற்பயிற்சி மேற்கொள்ளும் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறுகள். உடற்பயிற்சி ஒரு இலக்கு அல்ல. அது நீண்ட பயணம். இலக்குகளை மாற்றிக் கொண்டே இருப்பது தான் உடற்பயிற்சியை நாம் கைவிடாமல் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் தக்கவைத்துக் கொள்ளும் வழி. புத்தகத்தில் அதிஷா பேசியிருக்கும் பல விஷயங்கள் உடற்பயிற்சிக்கு மட்டுமல்ல நாம் புதிதாக மேற்கொள்ள நினைக்கும் எல்லா பொதுவான விஷயங்களுக்கும் பொருந்துபவை.
மீண்டும் உடற்பயிற்சியை மேற்கொள்ளத் தொடங்கி இருபது நாட்கள் ஆனாலும் உள்ளுக்குள்ளே இருக்கும் சாத்தான் தினம் காலை வெளியே வந்து "இன்னைக்கு வேணாம்.. டயர்டா இருக்கு", "தூக்கம் கண்ணக் கட்டுது.. அப்டியே தூங்கிரு..", "நேத்து மழை பெஞ்சி கிரௌண்ட் எல்லாம் சேர்றா இருக்கும்.. அதனால நாளைக்கு போய்க்கலாம்.." எனப் பேசிக் கொண்டே இருக்க அவன் பேச்சைக் கேட்டு ஓரிரு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டேன். இனி அந்த சாத்தான் பேச்சை கேட்காமல் உடற்பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ள அதிஷா அவர்களையே பிரார்த்திக்கப் போகிறேன்.
அதிஷாவின் வலைப்பக்கத்தை மூன்று அல்லது நான்கு வருடங்கள் முன்பு வரை தவறாமல் வாசித்து வந்தவன் என்பதால் அவரது எழுத்துநடை மீது கொண்ட நம்பிக்கையினால் தான் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் "கண்டெண்ட்" அளவிலும் தரமான புத்தகமாக இருக்கிறது இது. குறைவான பக்கங்கள் என்பதும் புத்தகத்தின் இன்னொரு பலம்.
உடல் நலம் பேண வேண்டும் என்ற அக்கறை கொண்டவர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம். உடற்பயிற்சி செய்வதற்கான உத்வேகத்தை கண்டிப்பாக உங்களுக்கு ஏற்படுத்தும். இல்லையெனில் உடற்பயிற்சி செய்வது குறித்து பரிசீலனை செய்யவேணும் என்ற எண்ணத்தையாவது உங்களுக்குள் ஏற்படுத்தும்.
நான் 2022ல் வாசித்த 100 வது புத்தகம். இந்தப் புத்தகத்தை இந்தாண்டிற்குள் வாசித்து முடிக்க வேண்டும் என்கிற முனைப்பு இருந்தது.
இந்தப்புத்தகத்தின் தலைப்பு மட்டுமல்ல. இதன் ஆசிரியர் Athisa அவர்களையும் தொடர்சியாக படித்தும், பார்த்தும் வருபவன் என்கிற வகையில், இந்தப் புத்தகம் முக்கியமானதாக இருக்கும் என்பதை அறிவேன்!
தமிழ்ச்சமூகத்திடம் இருக்கும் சமூக விழிப்புணர்வே, நம்மை பாசிச சக்திகளை உள்���ே விடாமல் நிம்மதியாக வைத்திருக்கிறது. இது உண்மை தான்!
அதே வேளையில், தனிமனிதராக தங்கள் வாழ்வை எவ்வாறு வடிவமைத்துக் கொள்ளவேண்டும், தங்கள் வாழ்வை எப்படி மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வு நமக்கு கொஞ்சம் குறைவோ என்கிற சந்தேகம் எனக்கு உண்டு!
சரி.. இது விரிவாக பேசப்பட வேண்டிய டாபிக். இப்போது இந்தப்புத்தகத்திற்கு வருவோம்!
இந்த புத்தாண்டில், நீங்கள் உங்கள் உடல்நலனுக்காக உடற்பயிற்சியோ, நடைப்பயிற்சியோ, ஓட்டப்பயிற்சியோ, நீச்சல் பயிற்சியோ, யோகாவோ, டயட்டோ இருப்பதாக இருந்தால், அதற்கு முன்னர் இந்தப் புத்தகத்தை வாசித்து விடவும்!
இதைக்குறித்து எந்த அறிமுகமும் இல்லாதவர்கள், இந்தப் புத்தகத்தில் இருந்தே தொடங்கலாம்!
சுயக்கட்டுப்பாடு (self discipline) கொண்டவர்களின் எண்ணவோட்டம் ஒரே மாதிரி இருக்கும் போல. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கற்றல் 2.0 சேனலில் நான் பேசியவற்றில் பல இந்த புத்தக கருத்துக்களுடன் ஒத்துப் போகிறது!
அதிஷா அவர்களும் ஒரு life long learner. நீச்சலை கற்றுக்கொண்டு பயிற்சி எடுக்கிறார். அவர் Skip செய்வதை பார்த்து நானும் இந்தாண்டு skipping கற்றுக்கொள்ள வேண்டும் என உறுதி எடுத்திருக்கிறேன். கடந்த ஆண்டு, அதிஷா சமையல் கற்ற வேண்டும் என உறுதியெடுத்து கற்றிருக்கிறார். சமையல் கற்றல் - எனது இந்தாண்டு இலக்கு!
உடற்பயிற்சியை தினமும் ஏன் செய்ய வேண்டும் என்ற அடிப்படை கேள்வியிலிருந்து, எப்படி செய்ய வேண்டும், தேவையானவை என்னென்ன, எதை,எப்படி சாப்பிட வேண்டும், எதையெல்லாம் தவிர்க்க வேண்டும், உடற்பயிற்சிக்கு பின்னால் இருக்கும் உளவியல் என்று எல்லாவற்றையும் விரிவாக, எளிமையாக, சுவாரசியமாக எழுதியிருக்கிறார் அதிஷா. உடற்பயிற்சியில் ஆர்வம் இருப்பவர்கள் மட்டுமல்ல, (உடல் என்று ஒன்று இருக்கும்) எல்லோரும் அவசியம் இந்த புத்தகத்தைப் படிக்க வேண்டும். அருமை அதிஷா !
ஒரு நகைச்சுவை காட்சி. #Thangavelu பூரி சுடத்தெரியாத அப்பாவி மனைவிக்கு பக்குவத்தை சொல்லித்தருவார் தங்கவேலு . அதில் ‘அதான் எனக்கு தெரியுமே’ என்று மனைவி ஒவ்வொரு விவரனைக்கும் சொல்லுவார். இது 1963 வந்த அறிவாளி படத்தில் வரும் காமெடி.
இப்புத்தகத்தை படிக்கும் பொழுது எனக்கு அது தான் தோன்றிக்கொண்டு இருந்தது. ஏனெனில் அதிஷா சொல்வது எல்லாம் “அதான் எனக்கு தெரியுமே” ரகம். ஆனால், ஒருவர் ஆழ்ந்துவாசித்தால் புரியும் நாம் எல்லோரும் எங்கு கோட்டைவிடுகிறோம் என்று. உண்மையாக ஆழ்ந்து யோசித்து எழுதியுள்ளார் அதிஷா.
நான் தொடர்ந்து ஒரு 1.5 வருடங்கள் ஓடினேன். ஆனால் பழைய ஷுக்களை கொண்டு ஓடியதால் என் முட்டி மிகவும் பிரச்சனைக்கு உள்ளாகி 2.5 வருடமாக ஓடவேயில்ல்லை. பலதடவை தொடங்கினாலும் மனசோர்வு வந்து உட்கார்ந்துக்கொள்ளும். சமீபத்தில் மறுபடியும் உடற்பயிற்சிகளை சிறிய அளவில் துவங்கி யுள்ளேன். இந்த புத்தகம் எனக்கு ஒரு நல்ல brush-up ஆக இருந்தது என்றே சொல்வேன்.
தன்னுடைய தற்காலிக தோற்றத்தைப் பார்த்து மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று தாழ்வுணர்ச்சியில் வெட்கபட்டு வீட்ற்குள் இழுத்துபோத்தி தூங்குபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதிஷா சொல்வது மிகவும் உண்மை. நாம் ஆரோக்கியமாக இருக்க உணவு கட்டுபாடு, எளிய மிதமான உடற்பயிற்சிகளும் நல்ல தேவையான உபகர்ணங்களும் போதும். விலையுயர்ந்த trackers watches, விலையுயர்ந்த ஷூக்கள் எல்லாம் அவசியம் இல்லை. மிகுந்த தேவையானது ஒரு நாளும் விடாது எங்கு சென்றாலும் தினமும் செய்ய வேண்டிய ஊக்கமும் விடாமுயற்சியும்.
வழிமுறைகளும் உதாரணங்களும் ஆகச்சிறந்த சொற்கள் கையாளப்பட்டிருக்கின்றன. தேல்விகளையும் வெற்றியையும் சரியான அளவில் சமனாக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள் அதிஷா.தெடர்ந்து எழுதுங்கள்.எடுத்துகாட்டாக இருங்கள். வார்த்தைகள் இன்னும் பல மேஜிக்கை செய்ய மீண்டும் வாழ்த்துகிறேன்.
உடற்பயிற்சிகளை நம்மால் ஏன் தொடர முடிவதில்லை என்பதில் தொடங்கி, உடலியல், உளவியல், சமூக காரணங்களை சுருக்கமாக அலசுகிறார் ஆசிரியர். செய்யக்கூடியது, கூடாதது என பல முக்கிய யோசனைகளை எளிய நகைச்சுவை கலந்த எழுத்தில் கூறியிருக்கிறார். தமிழில் இப்படியான நகர வாழ்க்கையின் நெருக்கடிகளை தாண்டி மேலெழும்ப உதவக்கூடிய எளிய "சுயமுன்னேற்ற" புத்தகங்கள் வருவது வரவேற்கத்தக்கது. படிக்க வேண்டிய புத்தகம்.
உடற்பயிற்சி வாழ்க்கை முழுதும் நாம் கடைபிடிக்கவேண்டிய ஒன்று என்று மிகவும் அன்பாகக் அக்கறையாகக் விளக்குகிறார்.. உடற்பயிற்சி என்பது நமக்கு நம்பே கொடுத்துகொள்ளும் பரிசு ஆனால் நாம் இதை எப்படியெல்லாம் சாக்கு போக்கு சொல்லி கைவிடுகிறோம் அதிலிருந்து எப்படி விடுபடுவது என்று முழுமையாக விளக்கியிருக்கிறார்.. இவ்வளவு சொல்லி இருக்கிறீங்க so just try பன்றேன் bro.
A very practical book Athisha has gone through a self discovery.He has sustained the habits. being a writer and a marathon runner is rare combination. He had put the book in simple language,which is like a friend telling with a hand shoulder. I too stop on the workout routine after few months with new reasons... this book is helping me .
உடற்பயிற்சி செய்ய நினைக்கும் அனைவரும் கட்டாயப் படிக்க வேண்டிய புத்தகம். இந்த புத்தகத்தின் எழுத்தாளர் அதிஷா... சிறப்பாக எழுதியுள்ளார் உடற்பயிற்சி பயிற்சி எப்படி செய்ய வேண்டும் அதன் சாதக பாதகங்களை விளக்கியுள்ளார் .ஒரு மனிதனுக்கு உடற்பயிற்சி கட்டாயம், அவசியம் என்பதை தெளிவாக சொல்லி உள்ளார்
Exactly most of then are not continuing to do the exercise bcoz of so many reasons...all those are covered in this book. Good to read and follow and make it as a habbit.
There are thousands of distractions came when we decided to start exercise or some physical activities. This book clearly depicts what are all the causes for that distractions and how to tolerate those distractions and make exercise as a regular activity in a proper manner. After reading this, we can get the idea of searching for a proper way to do exercises and how to be mentally and physically prepare for any kind of workouts.