ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சுடர்விட்டுக் கொண்டிருக்கக் கூடிய, சொல்லியும் தீராத இக்கதைகளுக்குள் உலைந்து கொண்டிருக்கும் மாந்தர்களின் காலடித் தடங்களை ஓர் வேட்டை நாயின் தீவிரத்துடன் துரத்திச் செல்லும் விளையாட்டையே இந்நாவலில் ஆடிப்பார்த்திருக்கிறார் வேல்முருகன் இளங்கோ. கடலும் நிலமும் சூழ்ந்த பரப்பில் வாழும் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட மனிதர்கள் தங்களிடையே ஏற்படுத்திக் கொள்ளும் உறவு, பகை, யுத்தம், சமாதானம், நீதி, அநீதி, ஆகிய எதிரெதிர் நடவடிக்கைகளுக்குள் இருப்புக்கும் வீழ்ச்சிக்கும் இடையே ஊடாடும் அவர்களது வாழ்வே நாவலின் பெருங்கதையாகப் பரிமாணம் கொள்கிறது. - எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி.
வேல்முருகன் இளங்கோவின் "மன்னார் பொழுதுகள்" என்ற புதினம் அவரின் ஊடறுப்பு என்ற அருமையான புதினத்துக்குப் பிறகான வெகுநேர்த்தியாக எழுதிய நூல். புத்தகத்தின் தலைப்பே நமக்கு கதையின் சாரத்தைச் சொல்லும்.ஒரே காலக்கட்டத்தைச் சேர்ந்த ஒன்றுக்கொன்று சாராத இரண்டு வெவ்வேறு விதமான குடும்பத்தின் மனிதர்களின் வாழ்க்கையை முன்னும் பின்னும் நகர்த்திச் செல்கிறது. மன்னார் கடற்பரப்பைச் சேர்ந்த தூத்துக்குடியும்,மணமேல்குடியும் இப்புதினத்தின் பிரதான களங்கள். முக்கியமான கால நிகழ்வுகள் மூலமாக கதைக்களத்தின் காலத்தை எழுத்தாளர் உணர்த்துகிறார். கதைக்களத்தைக் கூற நான் விரும்பினாலும் என்னால் இப்போதைக்கு எழுத இயலாது. படித்துப் பார்த்தால் தான் ஒரு சில நூல்களின் தரம் தெரியும். இது என்னுடைய சொந்தக் கருத்து. இவ்வருடத்தில் படித்த நூல்களில் என் மனதை வெகுவாக கவர்ந்த நூலாக இது உள்ளது. "ஊடறுப்பு"ப் போலவே இந்நூலும் வேல்முருகன் இளங்கோவின் அபரிமிதமான கற்பனை மற்றும் சொல்லாடல்களால் மிகச்சிறப்பாக வந்துள்ளது.
மண்ணையும் மனிதத்தையும் மணந்து மாண்புடன் வாழ்வதே வாழ்வு ......
உணர்வுகளை எழுத்து வடிவில் இவ்வளவு ஆழமாக வெளிப்படுத்த முடியுமா என நான் பார்த்து வியந்த சில எழுத்தாளர்களில் ஒருவர் வே.இ.
கதையையும் கதை தளத்தையும் வெவ்வேறு திசைகளில் தொடங்கி அதை ஓர் மையப்புள்ளியில் நிறுத்தி வரலாற்று நிகழ்வுகளுடன் கைகோர்த்து கதை சொல்வதில் கைதேர்ந்தவர் என தன் முதல் நாவலிலேயே நம் ஊடறுத்துச் சொன்னவர் . !!
இந்த நாவலில் வரும் நெய்தல் மாந்தரை மடியில் சுமக்கும் கடலின் ஆழத்தையும் அது சொல்ல விழையும் கதைகளையும் சமகாலத்தில் நாம் பயணித்த வழித்தடத்தில் முன்னும் பின்னுமாக உயிரோட்டம் நிரம்பிய ஓர் உணர்ச்சி களத்தில் , கதைமாந்தருடன் நம்மையும் கைபிடித்து நடத்திச் செல்கிறார் !!
அனு அனுவாய் காதல் கலந்த அந்தக்குருதியில் தான் கொழுந்து விட்டு எரியம் வஞ்சம் ! , பாசம், ஏக்கம், பயம் , ரௌத்திரம் என அனைத்தையும் எழுத்து வடிவில் தீட்டியிருக்கிறார் !!!
வெவ்வேறு நிலப்பரப்பில் கடல்கடந்து வாழ்ந்தாலும் தமிழ் மொழியின் மக்கள் நாம் ஓர் தாய் பிள்ளைகளே என நட்பின் இலக்கணமாக வாழும் பண்ணையாரின் மருந்து குப்பிகளுக்கும் , காலனை காக்க சொல்லி கனம் தவறாது காத்தல் என தன் வாழ்வை அர்ப்பணித்த அடுத்தாரைக் காத்தாருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல !!!!!