இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் தாழ்தப்பட்ட பெருமக்கள் நிலமற்ற கூலிகளாகவும் பண்ணையடிமைகளாகவும் விளங்கியதையும், பஞ்சமி நிலங்களிலிருந்தும் துரத்தப்பட்ட கதைகளை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் நாவல். தன் நிலங்களில் இருந்து வேருடன் பெயர்த்து எடுத்து, சொந்த நாட்டிலேயே எந்த பிடிப்பும் அற்ற அகதிகளை போல் வாழும் பூர்வகுடிகளின் உள்ளவேட்கையை ஆசிரியர் நமக்கு கடத்துவதில் வெற்றிக்கொண்டிருக்கிறார்.
நிலமற்ற அமாச்சி - அபரஞ்சி அவர்களின் வாழ்க்கை பாடுகளை விவரிக்கும் நாவல். அவர்களின் நிலம் திருமலயன் அபகரித்து தனதாக்கி கொள்கிறான். பிறகு நிலமற்றவர்களாக வாழ்க்கையை எவ்வாறு கடத்துகிறார்கள் என்று விவரிக்கிறது நாவல். திருமலயன் இடம் பண்ணை அடிமையாக இருக்கும் அம்மாசி அங்கிருந்து துரத்தப்பட்டு நாதியற்று ஊரை விட்டு வெளியேறி சாராயம் காய்ச்சி,தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்று,கூத்து ஆடி, மாடு விற்பனை செய்யும் தரகு வேலை பார்த்து திரும்ப ஒருவரிடம் பண்ணை அடிமை வேலைக்கு சென்று கணத்த போராட்டத்தோடு வாழ்வை நகர்த்துகிறான். ஒடுக்கப்பட்டவர்களிடம் இருந்து பண்ணையார்களுக்கு சென்ற நிலம் இன்று யாரிடம் இருக்கிறது என்பதை அறிய முடியவில்லை. கிட்டத்தட்ட பத்து லட்சம் பஞ்சமி நிலங்கள் இன்று என்ன ஆனது என்று தெரியவில்லை. அதிகாரம் ஆத்திகத்திற்கு எதிராக மெல்ல தங்கள் முதல் அடியை ஒடுக்கப்பட்டவர்கள் எடுத்து வைக்க தொடங்கியதில் தொடங்குகிறது கதை, நாய்கீர் கட்சி(ஈ வே ராமசாமி நாயக்கர்), அம்பேத்கர் என்று போய் இழந்த நிலத்தை அடி பட்டு உதைபட்டு மீட்டு எடுக்கிறான். சிறிது காலம் பயிர் செய்துவிட்டு பிறகு வறட்சியால் விட்டு விடுகிறான் இந்த இடத்தில் நிலத்தின் மீது அவனுக்கு இருந்த பிடிப்பு போய்விடதா? அல்லது அவனுக்கு இருந்தது ஆத்திக மனோபாவத்திற்கு எதிரான வெரும் கூச்சல் மனமா என்று நினைக்க தோன்றுகிறது. ஒடுக்கப்பட்டவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை பதிவு செய்ததும். அவர்களின் கொடுர வறுமையும் பதிவு செய்திருப்பது ஒரு பலமாக இந்த நாவலுக்கு அமைந்திருக்கிறது.( தோல் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்பவர்கள் அந்தத் தோலில் ஒட்டி இருக்கும் மாட்டுக்கறியை அறுத்து எடுத்து சென்று சமைக்கிறார்கள் )இதில் வரும் வட்டார வழக்கு பேச்சி மொழி தமிழ் தானா என்று தோன்றுகிறது. பதிக்கு பாதி புரியவில்லை. அம்மாசி தவிர வலுவான கதாபாத்திரம் உருவாக்கப்பட்டவில்லை. இரண்டாம் கதாபாத்திரம் அபரஞ்சி கூச அவ்வளவாக மனதில் நிற்கவில்லை. வலுவற்ற கதாபாத்திரங்களின் உருவாக்கம் நாவலின் பலவீன தன்மையாக அமைந்து விடுகிறது. இரண்டு தொடர்பற்று கதை தாவி தாவி செல்கிறது. மிகத் தீவிரமான இலக்கிய வாசகர்கள் அல்லாத பிறர் இந்த நாவலை முயற்சிக்க வேண்டுமா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், உள்வாங்க கடுமையாக இருக்கிறது .
சரி இப்போது நூலில் இருந்து ஒரு விடுகதை ..
""பகலுல சுருட்டிக்கெடப்பாளாம். பாதிராவுல விரிச்சிகெடப்பாளாம். பட்டப்பகல்ல கூப்பிட்டாலும் வந்து சொகந் தருவாளாம் ""