பாரிவேள்
- கி.வா.ஜகன்னாதன்
வீரயுக நாயகன் வேள்பாரி படித்த பின் பாரியின் பால் கொண்ட பற்றால் படித்த நூல் இது. முல்லைக்கொடி, அவன் ஈந்த தேர் மேல் படர்ந்தது போல், இந்நூலைப் படித்த பின், பாரியின் பால் நான் கொண்ட பற்று, அவன் மேல் படர்ந்தது. அவன் மேல் பாப்புனைய என்னையும் தூண்டியது. புலியைப் பார்த்துப் பூனை கோடு(சூடு) போட்டுக் கொண்டது போல், கபிலரால் பாடப்பட்டவனை நானும் பாடலானேன். தான் இருந்த பொழுது, தன்னிடம் இருந்த பொருளை, இரந்தவர்க்குக் கொடுத்தவன், தான் இறந்த பின்னும், நான் பாட தன்னையே கொடுத்தான்.
கபிலர்-பாரி, இருவரிடையேயான நட்பு நாளும் எண்ணி நயக்கத்தக்கது. சில காட்சிகள் நம் கண்ணை விட்டு மறைந்துபோனாலும் அவை நம்க்கு மறந்துபோவதில்லை. நட்பு கொண்டோருடன் ஒன்றாய் மகிழ்ந்திருந்த நாட்களும் அத்தகையதே. அந்நினைவுகளை எண்ணிப்பார்க்கும் கணங்கள் கனமானவை. உயிருடன் இருப்பவர் பிரிந்து போயின், என்றோ ஒருநாள் மீண்டும் இணைவோம் என்று தேற்றிக் கொள்ளலாம். ஆனால் இருவரையும் பிரித்தது இறப்பாயிருந்தால் இனி இணைவதெங்கு என்ற எண்ணமே இமைப்பொழுதும் நீங்காமல் இன்னல் தரும். அத்தகைய இன்னலே கபிலரை வாட்டுகிறது. நாட்டிலுள்ள மக்கள் முதல் நட்பு கொண்ட கபிலர் வரை, பாரியின் இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவ்விழப்பால் தன்னையே இழக்கிறார் கபிலர்.
நூலைப் பற்றி நான் செய்யும் பதிவுகளில், கெடுப்பான்(spoiler) பல இருப்பதாக நண்பர்கள் குறைபடுகின்றார்கள். அவை கெடுப்பான்கள் அல்ல நண்பர்களே, இதுவரை அந்நூலைப் படித்திராதவரை நூலை நோக்கி இழுக்கும் ஈர்ப்பான்கள், ஏற்கனவே படித்தவர்களை நூல் படித்த நினைவுகளுக்கு மீண்டும் இட்டுச் செல்லும் காலக் கருவி.
இதோ இந்த நூலில் என்னைக் கவர்ந்த வரிகளும் உவமைகளும்(பக்க எண்களுடன்):
1. மலர்களின் மணத்தைத் தாங்கிக் கொண்டு, தான் பெற்ற செல்வத்தைப் பிறருக்கும் அளிக்கும் வள்ளலைப்போல எங்கும் பரப்புகின்றது காற்று - 1
2. சேர நாட்டிலிருந்தும் சோழ நாட்டிலிருந்தும் பாண்டி நாட்டிலிருந்தும் பல புலவர்கள் *ஆறுகள் கடலை நோக்கி வருவதுபோல* வந்துகொண்டே இருப்பார்கள் - 3
3. எங்கே பழம் கிடைக்கும் என்று தேடிச் செல்லும் பறவைகளைப் போலவும், தேன் உள்ள மலர்களை நாடிப் பறந்து போகும் வண்டுகளைப் போலவும் - 5
4. *வழிபடு தெய்வம் காட்சி தருவதாக இருந்தால்* எத்துணை ஆவலோடு எதிர்பார்த்திருப்பார்களோ - 11
5. அவர் மெல்ல நடந்தாரேயொழிய அவர் உள்ளம் மிக மிக விரைவாகச் சென்றது - 11
6. ஒரு சிறிய இடத்தில் இருந்துகொண்டு இத்தனை பேருடைய உள்ளத்தையும் பிணிக்கும் இய்டல்புடைய இப் பாரிக்கு எந்த முடி மன்னனும் ஈடாகமாட்டான் - 14
7. கபிலர் மலைமீது ஏறிக்கொண்டிருந்தார். அவருடைய உள்ளமாகிய சிங்காதனத்தில் பாரிவேள் ஏறிக்கொண்டிருந்தான். - 14
8. பூவும் புனலும், மானும் மரையும், காடும் பொழிலும் அவர்களோடு பேசும்; பேசாமல் பேசும் - 15
(அடுத்த மூன்றும் முல்லைக் கொடி படர ஒரு பற்றுகோடின்றிக் கிடந்தமைக்குக் கூறப்பட்ட உவமைகள்)
9. தளர்நடை பழகும் குழந்தை தட்டுத் தடுமாறி வந்து கீழே விழும் நிலையில் இருப்பதுபோல தளர்ந்து நின்றது - 21
10. குருடன் ஒருவன் கால் தளர்ந்து எதையேனும் பற்றிக் கொள்வதற்காக நாற்புறமும் கையால் வெறும் வெளியைத் துழாவுவது போல அசைந்தது - 21
11. நடு வழியில் துணையின்றி நிற்கும் கன்னிப் பெண்ணைப்போல அலைப்புண்டு நின்றது - 21
12. ஒரு கொடி தளர்வதைக் கண்டு அதைத் தாங்கத் தன் தேரை நிறுத்திய பாரியின் செயலையும், அதற்குக் காரணமாக இருந்த அவனது உயர்ந்த அருள் உள்ளத்தையும் உவமையைக் கூறித் தெரிந்துகொள்ள முடியாது. *அவற்றிற்கு அவைகளே ஒப்பு*. - 24
13. அப்போது அவன் தேரில் வராமல் நடந்து வந்திருந்தால் தானே கொழுகொம்பாகி நின்றிருப்பான் - 25
14. புலவர்கள் தம் வாயே முரசாக நாவே குறுந்தடியாகக் கொண்டு அறைந்து பரப்பும் இயல்புடையவர்கள் அல்லவா - 46
15. புலவர்களுக்கு வற்றாது மல்கிய ஊற்று வற்றியது. பொய்யாது பெய்த மேகம் வறண்டது. கற்பக மரத்தை அருமை அறியாத பாவி வெட்டிவிட்டான். காமதேனுவைக் கொன்றுவிட்டான் - 65
16. பறம்பு மலை உயிரை இழந்தது; பறம்பு நாடு தலைவனை இழந்தது - 66
17. இந்தக் குன்றம் மறைந்து போகும். ஆனால் இதை மறந்து போக முடியாது - 72
18. நிழல் இல்லாத பாலைவனத்தில் தனி மரம் ஒன்று கிடைத்தது போல இருந்தது - 94
19. பாரி புலவர் உள்ளத்தில் வாழ்ந்தான். - 96
20. பாரிவேள் புகழுடம்பில் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான் - 96
பாரி வாஅழ்க!
பாரியின் கொடை வாஅழ்க!
பாரியால் என் பாட்டும் வாஅழ்க!