சரித்திரம் சொல்லும் சேதி!
வண்ணதாசனின் ஒரு கவிதை உண்டு.
" உனக்கு எத்தனை மனிதர்களைத் தெரியுமோ அத்தனை கவிதைகளையும் தெரியும்" என்பது. இக்கவிதையில் அவர் குறிப்பிடும் கவிதைகள் என்பன சாதாரண கவிதைகள் இல்லை. ஒவ்வோர் வாழும் மனிதனும் சுமந்து திரிகின்ற அத்தனை கதைகளை, துயரங்களை, சுகங்களை, சங்கடங்களை, வெகுள்ச்சிகளை, கண்ணீரை, தீரா உறுதிப்பாடுகளை, மன ஆழ்இருக்கங்களை, மென்னுணர்வுகளை இவையெல்லாம் சேர்த்துதான் கவிதை என பொருட்பட ஒரே வார்த்தையில் அடக்கிவிட்டார்.
சாதாரணமாக எளிய மனிதர்களின் கதையை விட சரித்திரம் மிகவும் ஒரு இறுக்கமான மனிதர்களின் பெயர்களை நீண்ட நாள் தாங்கிக்கொள்ளும் இயல்பிலேயே இருந்து வந்துள்ளது. சரித்திரம் அம்மனிதர்களின் மூர்க்கத்தனங்களையும், கொண்ட காரியத்தின் காட்டிய அதீத செயல்பாடுகளின் விளைவுகளையும், ஒரு ஆர்ப்பரிக்கும் கடலின் அலையை கலங்கரை விளக்கம் பார்த்துக்கொண்டு இருப்பது போல் பார்த்துக்கொண்டிருக்கிறது.
இந்த நூலில் ஒரு பத்து நாற்றாண்டுகளின் புரிந்து கொள்ள இயலாத சில பயணப்பாட்டாளர்களின் கதைகளை எஸ்ரா கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். இக்கதைகள் எதுவும் கூறக்கேட்டதும், புனைவுகளுமில்லை. முழுக்க முழுக்க வரலாற்று நூல்களின் தொகுப்பிலிருத்து எடுத்து அளிக்கிறார்.
நாமறிந்த வரலாறு என்பது வரலாற்றின் வாயிலாக எல்லைகளில் கால் வைத்த வெகு சிலரைத்தான். இன்றைய தொழில்நுட்ப காலம் அன்றி ஆயிரம் மைல்களின் கடல்வழிப்பயணங்களின் எத்தனையோ கப்பல்கள் திக்குத்திசையின்றி கடலடியில் புதையுண்டு இருக்கின்றன. இக்கப்பல்களில் பயணித்த ஒரு சில ஆயிர மனிதர்களின் நினைவுகளை சுமந்து, இக்கடல் ஒரு மென் காற்றை கரைக்கு மெளனமாக அளித்துக் கொண்டிருக்கிறது. மார்க்கோ போலோ, இபின் பாதுதா, வாஸ்கோடகாமா, அல்பெர்க்யூ என சில யாத்திரிகர்களின் பயணங்களும், அவற்றின் சவால்களையும் இந்நூல் விவரிக்கிறது.
"ஏன் இந்நூலை வாசிக்க வேண்டும்? " என்ற கேள்விக்கு பதில் எழுத வேண்டுமானால், இந்த வரலாறு தாங்கியுள்ள நேரடி, மறைமுக விவரங்கள், வேடிக்கைகள், மனித மனங்களின் உறுதிப்பாடு, அவர்களின் குறிப்பேடுகள், அவர்களின் சமுதாய அரசியல் சூழல் இவைகள் குறித்து எண்ணற்ற எண்ணங்களை ஆய்வும் மீளாய்வும் செய்ய என எழுதிக்கொள்ளலாம்.
5600 மைல்கள் கடந்து வந்த மார்க்கோ போலோ அவரின் பயணப்பாட்டாளர்களின் கதைகள் குறித்தும் பயண நினைவுகள் குறித்தும், தனது நூல்களில் விவரிக்கிறார். அந்நூல் "தங்கம் தேடும் எறும்புகள்", யானை உண்ணும் மனிதர்கள்" என அதீக கற்பனைகளை கொண்டிருந்தாலும் ஒரு சலிப்பற்ற தன் வாழ்நாளின் அரைபாதிக்கு மேல் பயணம் செய்த ஒரு யாத்திரிகனின் அனுபவங்களை உங்களுக்கு அளிக்கிறது.
தனது மார்க்கத்தை பரப்ப 44 தேசங்களுக்கு பயணப்பட்ட "பதூதா" தான் கடந்த தேசங்களின் மக்கள்தன் வாழ்வியல் முறைகளை தனது குறிப்புகளின் மூலம் படம் பிடித்துக் காட்டுகிறார். பதூதாவின் குறிப்புகள் 14ஆம் நூற்றாண்டு இந்தியாவை கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் அளவு துல்லியமான முறையில் கோர்க்கப்பட்டு இருந்திருக்கின்றது. அவரது குறிப்புகள், இந்தியாவில் வெற்றிலைகளின் செல்வாக்கு போன்ற சின்னச்சின்ன விஷயள் தொடங்கி துக்ளக் மன்னரின் ஈவு இரக்கம் அற்ற விசித்திரமான கடுமையான தண்டனைகள் ஆகியவற்றை தாங்கியுள்ளன.
"இந்திய கிழக்கிந்திய கம்பெனி" வருகையே இந்திய அடிமைப்படுத்துதலின் முதற்புள்ளி. அது குறித்த குறிப்பேடுகள் அல்பெர்க்யூ கைகளால் எழுதப்பட்டிருக்கிறது. போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள் என வாசனைத் திரவியங்கள் தேடிய பயணத்தில் இந்தியா எவ்வாறு கண்டெடுக்கப்பட்டது குறித்த குறிப்புகள் சரித்திரத்தின் பக்கங்களில் இருந்து நினைவு கூறப்படுகிறது. இக்கடலோடியின் வாழ்வு கடைசியில் அதே கடலின் அலைகளினால் தான் முடித்து வைக்கப்படது. இவரது குறிப்புகளால் நாம் 15ஆம் நூற்றாண்டு இந்தியாவை கற்பனைக்கு கொண்டு வர இயல்கின்றது.
உலகின் வடதுருவங்களின் 300 வருட மனித இனத்தின் பயணங்களின் இறுதி முடிவை எழுதிய "ராபர்ட் பியர்", புத்த வாழ்வியல் முறைகள் குறித்த எண்ணற்ற குறிப்புகளையும், தர்க்க சாஸ்திரங்களையும் நமக்கு அளித்த, சீனப் பயணி "யுவான் சுவாங்",
எட்டாயிரம் மைல் தூரத்தை உலகம் முழுவதும் தனது வெற்றுக் கால்களில் நடந்தே பயணப்பட்ட ராஜஸ்தான் "சதீஸ்குமார்" அவர் வெவ்வேறு தேசங்களில் சந்தித்த வெவ்வேறு மனிதர்கள் அவர்களின் இன்னல்கள் என பல்லவேறு வரலாற்று பக்கங்கள் இந்நூலின் வழியே ராமகிருஷ்ணன் நம்மில் கடத்துகிறார். மேலும் இந்நூலின் மூல நூல்கள், அதாவது இவ்வகையான பயணப்பாட்டாளர்களின் குறிப்புகளையும் இந்நூலிலேயே விட்டுச்சென்று இருக்கிறார். இவற்றைக் கொண்டு சரித்திரம் தனது அணையா கதைகளுக்கு உரமிட்டு மூண்டெழுந்து, மொளனங்களினால் நிரப்பிக்கொள்கிறது.
"கோடுகள் இல்லா வரைபடம்" - எஸ் ராமகிருஷ்ணன்