அழகிய இயற்கைச் சூழலை தங்கள் உயிரென பாதுகாக்கும் ஆதிமக்களின் பேரன்பு, மன ஒழுக்கம் ததும்பும் காதல்,வியப்பூட்டும் அரசியல், இவைகளுக்குள் ஊடுருவி நிற்கும் மலைமக்களின் கொண்டாட்டங்கள் நம்பிக்கைகள் இவைகளைச் சொல்லிச்செல்கிறது. இந்நாவல்.கேரளதமிழக எல்லையின் இயற்கைப் பேரெழிலின்பின்னணியில் பாண்டிச்சியின் ஆளுமையில் விரிகிறது இக்கதை.!
முதல் அத்தியாயத்திலேயே பிடிப்பை உண்டாக்கிய புத்தகம், சமூக மாற்றங்களுடன் வாழும் மக்களை தவிர்த்து, மாற்றங்களை மறுக்கும் மக்களை பற்றிய கதை, கதையில் காதலை எதிர்பார்த்தால் மழை தூறலாய் கதை முழுவதும் பயணிக்கும், காதலின் இடி மின்னலுக்கு தான் கதையில் காட்சி இல்லை.
பரிணாம வளர்ச்சி: ஆதி மனிதன், தான் செய்யும் செயல்களினால் வரும் விளைவுகளை அறிந்து சீர்திருத்தத்துடன் அமைத்து பல பழக்க வழக்கங்களை கட்டுப்பாடுகளுடன் பிணைத்து வாழ்ந்தவன் படிப்படியாக நாகரிக வளர்ச்சி அடைந்து, சட்ட அமைப்புகளில் அடைந்து, ஏட்டு கல்வியில் உலகை அறிந்து, சூழ்நிலையுடன் தன்னை இணைத்து, கட்டுப்பாட்டினை தளர்த்தி சீர்திருத்தப்பட்ட பல பழக்கங்களை மூடநம்பிக்கையாக முடக்கப்பட்டு மனஒழுக்கம் மறந்து உடல் ஒழுக்கம் பேணப்பட்ட சட்டத்துக்கு கட்டுப்பட்டு வாழ ஆரம்பித்தது மனித இனம்.
இன்றும் புதுமையை ஆராயாமல், ஏற்காமல் தங்களது முன்னோர்களின் வழக்கங்களை பின்பற்றும் ஒரு இயற்கை வாழ் மக்களின் வாழ்வியலை உணர்த்தும் கதை. தேவைகளை அறிந்து வாழ்வது பெரும் வரம், கல்வி அறிவினால் தேவைகளை மட்டுமே வளர்க்கும் நாம் அடிப்படை தேவைகளை நாடாத மக்களைப் பற்றி சிந்திக்கவும் தயாராக இல்லை, அவ்வாறான தன் அடிப்படை தேவைகளையும் அறியாமல் ,பொருள் தேடி தேசம் செல்லாமல் வாழும் ஒரு பழங்குடி மக்களின் வாழ்வியல். எல்லாருக்கும் காட்டை சுற்றிப் பார்க்க ஆசை உண்டு, ஆனால் இயற்கையோடு ஒன்றிய வாழ்வை வாழும் வரம் அனைவருக்கும் வாய்ப்பதில்லை, இக்கதையின் வாயிலாக நாமும் சில மணிநேரம் அவ்வரத்தைப் பெற்று காட்டில் வாழலாம்.
இசையின் வாசம்... வார்த்தைகளின் கோர்வையே ஒரு புதுமை, நிச்சயம் புதிய உணர்வாக என் நுரைஈரலையும் நிரப்பியது...
இயற்கையை அறிந்து, இயற்கையை அழிக்காமல் தானாக கனிந்து வரும் வளங்களை பயன்படுத்தி வாழும் முறையை 'தாத்தையின்' மூலமாக மிக அழகாக சொல்லப்பட்ட வார்த்தைகள்..."ஏனக்கு ஏதும் தெரியாது.. அந்தச் சத்தம் அதுக்குள்ளதான் இருக்கு" என்ற வரிகள்.. எல்லாமே இயற்கையில் அடக்கம் மூங்கிலின் இசை மூங்கிலை செப்பனிடுவதால் உருவாக்க முடியாது, அது மூங்கிலின் தன்மை!!! பாட்டியின் தளர்வான தோல்களில் தெரியும் காதலும், நாணமும் எழுத்துக்களில் நம்மை சிறுது நாணம் கொள்ள செய்தது.😊 காதல் இளமையின் தேடல் அல்ல உயிர் பிரியும் இறுதி நொடி வரை தொடரும் பந்தத்தை உணரும் உணர்வு என்ற பாண்டிச்சியின் வரிகள் நம்மில் இருக்கும் காதலை தேடச் சொல்லியது. இயற்கையை அறிந்தவன் இயற்கையின் அழைப்பையும் உணர்வான் அவனுக்கு அவனே மரணப்பாய் பின்னுதல் என்பது நிச்சயம் பக்குவமும் தெய்வநிலை அடைந்தவனுமே , அவனை நாகரிகம் அறியா 'காட்டுவாசி' என்று சொல்வது நம் மூடத்தனம்... நாகரிக வளர்ச்சியில் மக்கள் ஆவிகள், பேய்கள், என்பதை மூடநம்பிக்கை என்று ஒதுக்கப்பட்ட பல செயல்கள் இன்று soul , sprit , ara என்று அறிவியல் விளக்கங்களால் இன்று மறுபடியும் நாம் நம்புகின்றோம்... பழமை மாறா முதுகுடி மக்கள் இன்றும் முன்னோர்களின் ஆத்மாக்களை வழிபட்டு, இறந்தவர்களின் ஆவிகள் தங்கும் என்ற நம்பிக்கைகளை கலையா வண்ணம் வாழ்கின்றனர். தீட்டு என்பது உடலுக்கு மட்டுமே, மனதுக்கு அல்ல என்ற மக்களின் கூற்றில் நிமிர்ந்த ‘நீலி’, ராமனின் ஆட்சியை தூசிக்கு சமமாக நிணைக்க தோன்றியது.
ஒரே குறையாக கதை முற்று பெற்ற உணர்வை தரவில்லை, இதயத்துடிப்பாய் காதல் உணர்வை துடிக்க வைத்த எழுத்தாளர் இதயங்களை இணைந்து துடிக்க வைத்திருக்கலாம்...
பல தமிழ் சொற்கள் புதுப்பிக்கப் பட்டு வழக்கில் காணாமல் போன வார்த்தைகள் மலையாள மொழியில் வாழ்கின்றன என்பதை உணர்த்தும் பேச்சு வழக்கு மெய்சிலிர்க்க வைத்தது...
புத்தகத்தில் என்னை கவர்ந்த வரிகள்... “எழுத்து இந்த உலகத்தை ஆட்டிப்படைக்கும். ஆதாரமில்லாம எதையும் சொல்லாத.. ஆதாரத்தோட கிடைச்சா எதையும் விட்டு வைக்காதே...”
மதுரையில் ஏதோ ஒரு சிறு பத்திரிக்கையில் வேலை செய்யும் நான்கு பேர் மதுரையைத் தாண்டி கேரள எல்லையில் இருக்கும் வனப்பகுதியில் வாழும் பூர்வகுடிகளை சந்தித்து அவர்களுடன் தங்கி அவர்கள் பழக்க வழக்கங்கள் சடங்குகள் குறித்து தங்கள் பத்திரிகையில் கட்டுரை எழுதுவது தான் அவர்களது திட்டம். அவர்கள் இங்கிருந்து கிளம்பி பொண்வளகாடு என்னும் அந்தப் பகுதிக்கு செல்கிறார்கள். பிறகு எல்லாமே நீங்கள் அறிந்ததுதான் இங்கிருந்து போகும் அந்தக் குழுவில் ஒரு ஹீரோ இருக்கிறார் அந்த பூர்வகுடிகளின் தலைவருக்கு(மூப்பன்) ஒரு பெண் இருக்கிறாள் வழக்கம் போல அவள் அழகாகவும் அறிவு நிறைந்தவராகவும் இருக்கிறாள். ஹீரோவுக்கு அவள் மேல் காதல் ஆனால் அவளுக்கும் இந்த ஹீரோவை காதலிக்க முடியாது ஏனென்றால் அவர்களின் கட்டுப்பாடு அப்படி பிறகு கிளைமேக்ஸில் என்னாகிறது என்று நீங்கள் வேண்டுமென்றால் படித்து தெரிந்து கொள்ளுங்கள். அப்புறம் இயற்கையை பத்தி எழுதுகிற எல்லா புத்தகத்திலும் இருக்கிற அதே தான் இதிலும் உள்ளது .அழகான ஓடை சலசலத்து ஓடும் தண்ணீர் இனிமையான காற்று ,அழகான மரங்கள் ,அற்புதமான மக்கள், இயற்கையாக கிடைக்கும் கிழங்குகள், பழங்கள், தேன் இப்படியாக அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பாசிசம் பிறக்கும் ஊற்றுமுகம் எது என்றால் நான் உனக்கு நன்மை செய்கிறேன் என்று கிளம்பும் இடம்தான் அதேபோல தான் இவர்கள் நாங்கள் உங்களுக்கு நன்மை செய்கிறோம் எங்கள் கட்டுரையில் மூலமாக உங்களுக்கு நிறைய வளர்ச்சிகள் ஏற்படும் என்று நினைக்கிறார்கள். நகரத்தில் இருக்கும் ஒரு சராசரி மனிதன் காட்டில் வசிக்கும் ஆதி குடிகளை அவ்வாறுதான் நினைப்பான் அவர்களும் இந்த நகரத்தில் வந்து 9 to 9 அலுவலகத்திற்கு ஓடக்கூடிய ஒரு மனிதனாக மாற்றி ,வாகன நெரிசலில், டீசல் புகை நடுவில் விடவேண்டும், EMI கட்ட வைக்க வேண்டும், உணவை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பல நாட்கள் கழித்து உன்னை பழகி விட வேண்டும் , வாழ்நாளெல்லாம் பணத்திற்கு பின்னாலே ஓடிக்கொண்டு இருந்து விட்டு இறுதியில் சாக வேண்டும். இதைப் போன்ற நவீன மனிதன் அங்கு சென்றதும் காட்டில் இருப்பவர்களை திருத்துகிறேன் என்று இறங்கி விடுகிறான் அதில் ஒரு கூறாக இதில் வரும் பாண்டிச்சி என்னும் பாண்டிமா ( மூப்பன் மக்கள் ( மூப்பன் அந்த ஊர் தலைவர்)). நல்ல கல்வி கற்று கணினியில் பயன்படுத்த கூடிய பெண்ணாக வருகிறார் அதே கிராமத்தில் இருந்து கூட ஒருவர் மதுரைக்கு மருத்துவம் படிக்க வந்திருப்பார் இப்பொழுது இந்த பாண்டியம்மா ஊர் தலைவியாக ஆனதும் செய்யும் முதல் காரியம் அந்த மக்களிடையே புழக்கத்தில் இருக்கும் கல்லையும் கஞ்சாவையும் பயன்படுத்த தடை விதிப்பதுதான். இதை நான் நவீன மனிதனின் உள நிலையோடு ஒப்பிட்டு பார்க்கிறேன். இதைப்போன்ற காட்டில் வாழும் மக்கள் கஞ்சாவும் கல்லும் பயன்படுத்துவது சாதாரணமான ஒன்று சொல்லப் போனால் ஆண்களும் பெண்களும் சமமாகவே பயன்படுத்துகிறார்கள் .அதன் விளைவாக அவர்களின் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடுவது கிடையாது ஆனால் நவீன மனிதன் நகரத்தோடு தொடர்பு ஏற்பட்டதும் இவ்வகையான பழக்கங்கள் குற்றங்களை ஏற்படுத்துகிறது என்று முடிவு கட்டி விடுகிறான் . அரசாங்கம் கலுக்கு தடை விதித்து விட்டு விஷத்தை கண்ணாடி புட்டியில் அடைத்து எப்படி தெருவுக்கு தெரு கடை விரித்து விற்பனை செய்துகொண்டு இருக்கிறதோ அந்த மூடத்தனம் அந்த பெண்ணிற்கும் வந்துவிடுகிறது. ஏனென்றால் அவளிற்கு நவீன உலகோடு தொடர்பு ஏற்பட்டு விடுகிறது. இயற்கையைப் பற்றிப் பேசுவது ஃகிலிசே ( ஒரு விஷயத்தைப் பற்றி பேசிப்பேசி மழுங்கடிக்கச் செய்வது) வாக போய்விட்டதாக எனக்கு தோன்றுகிறது ஆகவே எந்த விதத்திலும் இந்த நாவல் என்னை ஈர்க்கவில்லை என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது.
An excellent novel involving ancient Tamil tradition in tribal villages. The customs and practices followed are beautifully narrated. The story involves a journalists visits for a tribal village. There blossoms a nice love between a journalist and would be head of the village. Highly recommended. Prasannan. Coimbatore.
Super Narration.. Awesome creation. Your writing drawn me into the story. All the characters browsed before the eye. It made me feel like I lived in them too. Congrats and all the best for your future works.