சைவ சமயத்தில் 63 நாயன்மார்கள் என்பது நமக்குத் தெரியும். அப்படியே வைணவ சமயத்தில் 12 ஆழ்வார்கள் என்பதும் தெரியும். அவர்களுக்குப் பின்னர், காலத்தால் பிற்பட்ட சமய குரவர்களையெல்லாம் ஆசாரியார்கள். என்றே குறிப்பிட்டிருக்கிறார்கள். வைணவ சமயத்தில் 12 ஆழ்வார்களுக்குப் பின்னர், அந்த ஆழ்வார்களைக் கொண்டாடவும், அவர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள திவ்யப் பிரபந்தங்களுக்கு விளக்கவுரை தந்து, வைணவம் மேலும் பொலிவும் வலுவும் பெற, அரும்பாடு பட்டவர்கள் பலர். அவர்களை ஆசார்யார்கள் என்றே குறிப்பிடுகிறார்கள். ஸ்ரீ இராமானுசரைப் பற்றி ஓரளவுக்கு எனக்குத் தெரிந்தாலும், அவரை நன்கு எனக்கு அறிமுகம் செய்து வைத்தது பெரியவர் பி.ஸ்ரீ.