எத்தனையோ மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது திருக்குறள். எத்தனையோ பேர் இதற்கு உரையும் எழுதியிருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவரான பரிமேலழகரின் உரையை அடிப்படையாகக் கொண்டு, மணக்குடவர், பரிதியார், காளிங்கர், கவிராஜ பண்டிதர், பரிப்பெருமாள் போன்ற உரையாசிரியர்களை ஒப்புநோக்கி ஆய்வுசெய்து பதிப்பிக்கப்பட்ட நூல் ‘திருக்குறள்: ஆய்வுப் பதிப்பு’. சிறந்த தமிழறிஞரான கி.வா. ஜகந்நாதன் தொகுத்து எழுதிய நூல் இது.
1950-ல் தி.சு. அவினாசிலிங்கம் தலைமையில் அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாதால் திருக்குறள் ஆராய்ச்சிப் பணி தொடங்கப்பட்டது. கி.வா.ஜ.-வின் கடும் முயற்சியால் ஆய்வு நிறைவுற்று, ராமகிருஷ்ணன் மிஷன் வித்யாலயம் வெளியீடாக 1963-ல் இந்நூல் வெளியிடப்பட்டது. 956 பக்கங்களுக்கு விரியும் இந்தப் பிரம்மாண்ட புத்தகம் 2004-ல் மறுபதிப்பு செய்யப்பட்டது. திருக்குறளை முழுமையாக உள்வாங்க விரும்புபவர்களுக்கு இந்த நூல் ஒரு பொக்கிஷம்!
கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர். இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.