இமையம் (Imayam, nom de plume of Ve. Annamalai), என்ற புனைப்பெயரில் எழுதும் வெ. அண்ணாமலை நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர். இமையம் முதுகலைப் பட்டம் பெற்றுப் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தனது முதல் புதினமான கோவேறு கழுதைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார். இவர் எழுதிய செல்லாத பணம் என்ற புதினத்திற்கு 2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. எனினும் இராசு கௌதமன் போன்ற தலித் சமூக அறிஞர்கள் தலித்து சமூகத்தின் அவலநிலைகளை மட்டுமே முன்னிறுத்துவதாகவும் மேல் சாதியினர் புகழக்கூடிய வகையானதாகவும் இப்புதினம் உள்ளதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
He is also the recipient of the Agni Aksra Award, the Tamil Nadu Progressive Writers Association Award, the N.L.C. Award, and the Thamizh Thendral Thiru.V.Ka. Award, among others, and has been honored by the governments of Kerala, TamilNadu and India.
அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள் முழுக்க முழுக்க வணிகமயமாக்கப்பட்ட சூழலை அப்படியே பதிவு செய்கிறது இந்நாவல். ஆனால் அரசியல்வாதிகளின் மீதும் மட்டும் முழு விமர்சனத்தையும் வைக்கவில்லை. கூட்டத்துக்கு வந்திருக்கும் ஜனங்களின் பாயிண்ட் ஆஃப் வியூவில் இருந்து கதை நகர்கிறது.
பொதுவாக ஒரு கதையின் முதன்மை கதாபாத்திரங்கள் தங்களுக்கு என்று சமூகத்தின் மீது ஒரு மதிப்பீடு வைத்திருப்பார்கள், பெரும்பான்மையானவை விமர்சன பார்வையாக மட்டுமே இருக்கும், ஆனால் இதில் எந்த ஒரு கதாபாத்திரமும் முற்போக்காக இல்லை.
பறத் தெரு பெண்ணொருத்தி தங்கள் வரிசையில் சமமாக நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறாள் என நாற்காலிக்கு சண்டை போடும் பெண்களின் மூலம் அவர்களுக்கு இருக்கும் அதிகார பசியை கண்கூடாக காண முடிகிறது. முக்கியமாக "பழவங்குடியா இருந்தாலும் நீ பறத்தெரு. ஊரு வேற, பறத்தெரு வேற" எனும் வரி. இதில் என்னவென்றால் அனைவருமே அந்த 500 ரூபாய்க்கு தான் வந்திருக்கிறார்கள்.
யாரையும் புரட்சியாளராக ஆக்காமல் உண்மையான எதார்த்தமான மனிதர்களை அப்படியே காண்பித்திருக்கிறார். முக்கியமாக சாதிய பாகுபாடு, சுரண்டல்கள், அதிகாரம், பொறாமை (அவர்களுக்குள்ளாகவே). இந்நாவல் வெறும் அரசியல் என்ற பெயரில் கட்சிகள் நடத்தும் அவலங்களை மட்டும் பேசவில்லை.
இமையத்தை நான் தொடர்ந்து வாசிப்பதற்கான காரணம் அவரின் எழுத்து நடையும் அவர் காட்டும் உண்மை மனிதர்களுக்காகவும் தான்.🖋️
சாஹித்ய அகாடமி விருது பெற்ற திராவிட இயக்க எழுத்தாளர் இமயம் அவர்கள் எழுதிய "வாழ்க வாழ்க" என்னும் சிறு நாவல் அரசியல் கட்சி மாநாடுகளிலும் அதை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.
கட்சி மாநாடுகளுக்கும் பொது கூட்டங்களுக்கும் இயல்பாகவே தொண்டர்கள், தங்களின் வலிமையை காட்ட ஆட்களை அழைத்து செல்வது வழக்கமான ஒன்று. ஒரு காலத்தில் மக்களாக விரும்பி கூட்டங்களின் பங்கேற்றாலும், வேலை பளுவிற்கு இடையிலும் பரபரப்பான வாழ்க்கை சூழலுக்கு மத்தியிலும் அரசியல் கூட்டங்கள் என்பது மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறாமல் போன காலகட்டத்தில், கூட்டம் சேர்க்க பணம்/ பொருள் கொடுப்பது இன்றியமையாத ஒன்றாக மாற்றம் பெற்றது.
“குவாட்டர் - கோழி பிரியாணி” என்ற கேலிகள் எல்லாம் பொதுவெளியில் அதிகமாக பேசப்பட்டது. ஆனால் இதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை, ஒரு நிகழ்ச்சியில் மரியாதை நிமித்தமாகவோ அல்லது விருந்தாகவோ அளிக்கப்படும் உணவில் இருக்கும் நியாயம் அரசியல் நிகழ்வுகளில் அளிக்கப்படும் உணவுக்கும் இருப்பதாகவே நான் பார்க்கிறேன்.
சரி இந்த குறு நாவலுக்கு வருவோம், ஹெலிகாப்டரில் வரும் தலைவிக்கு, அதும் சரியான நேரத்திற்கு வராத தலைவிக்கு கூட்டம் சேர்க்கும் பணியில் ஒரு ஊராட்சி ஒன்றிய பதவி வகிக்கும் தொண்டன் ஈடுபடுகிறான். தன் தெருவில் வசிக்கும் மக்களிடம் பேரம் பேசி அவர்களை வண்டியில் ஏற்றி கொண்டு மாநாட்டுக்கு கொண்டு சேர்க்கவேண்டும். காலை 10 மணி மாநாடு என்று கூறி அழைத்து சென்றாலும் நூல் முடியும் வரை கூட தலைவி வந்ததாக தெரியவில்லை.
இந்த நாவல் கட்சி மாநாடுகளில் நிலவும் சாதிய மற்றும் பாலின பாகுபாடுகளையும் பேசுகிறது. பெண்கள் நலனின் அக்கறை கொண்ட தலைவி என்று தன்னை காட்டிக்கொண்டாலும் தனது கட்சி மாநாட்டில் பெண்களுக்கான கழிப்பறை ஒன்றை கூட ஏற்பாடு செய்யமுடியாத அவலத்தை இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
இத்தகைய மாநாடுகளை எதிர்க்கட்சி காரர்கள் எப்படி அணுகுவார்கள் என்பதையும் இந்நூல் பேசுகிறது. கட்சி பெயர்கள் எல்லாம் புனைவாக இருந்தாலும் அந்த கட்சியின் பண்புகளை வைத்தும் அங்கு நடக்கும் உரையாடல்களை வைத்தும் எந்த கட்சி என்பதை உணர முடிகிறது.
சி.சு.செல்லப்பா வின் வாடிவாசல் நாவலில் வரும் நிகழ்வுகளில் இருக்கும் மக்கள் அடர்த்தி இந்த நாவலிலும் இமயம் அவர்களின் எழுத்துக்கள் மூலம் உணர முடிகிறது. எளிமையான எழுத்து நடை, புரியும் வகையிலும் இணைத்துக்கொள்ளும் வகையிலும் அமைந்த இலக்கிய நடை எல்லாம் நூலை விரைந்த முடிக்க ஏதுவாக இருக்கிறது.
வெங்கடேசப் பெருமாள், கட்சி தேர்தல் பிரச்சார கூட்டத்துக்கு கட்சி தலைவி வராங்க அதனால தன் ஊர்ல இருந்த பொம்பளைங்களுக்கு தலைக்கு ₹500, கட்சி கரை போட்ட சேல, பிரியாணி பொட்டனம் தாரதா சொல்லி வேன்ல இட்டாந்து சனத்த உச்சி வெயில்ல உட்கார வைக்கிறான். மாபெரும் கட்சி தேர்தல் பிரச்சார கூட்டம் பொம்பளங்க குந்த தனி எடம், ஆம்பளங்க குந்த தனி எடம், பெரிய மேடை, கட்சி கொடி, பேனர், எல்.இ.டி திரை, என சகல வசதிகளை ஏற்பாடு செய்த கட்சிகாரன் பெண்கள் ஒதுங்க ஒரு கழிப்பறையை ஏற்பாடு செய்யல, இன்னம் அந்த எடத்துல என்னென்ன சிக்கல் வந்துச்சிங்கிற கதை வாழ்க வாழ்க -கலைச்செல்வன் செல்வராஜ்.
ஆசிரியர் : இமையம் குறுநாவல் க்ரியா பதிப்பகம் 94 பக்கங்கள்
அரசியல் பின்னனி கொண்ட கதைகள் இலக்கியத்தில் மிக குறைவு . அதிலும் இந்திய சமகால அரசியல் பின்னனி கொண்டு எழுதப்பட்ட புனைவிலக்கியங்கள் மிக மிக குறைவு . மக்களுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் இன்று அந்த மக்களையும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளையும் சூறையாட தொடங்கிவிட்டன . அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களிடம் தங்கள் ஓட்டுகளில் உள்ளது போல ஒரு மாயையை மட்டும் உருவாக்கி அவர்களை நிரந்தர முட்டாள்களாகவே இருக்க செய்வது அரசியல் மொழியில் ராஜ தந்திரம் . இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த சுரண்டலிலும் , அதிகார ஏவல்களிலும் சிக்கி தவிப்பது எளிய மக்கள் மட்டுமே . அவர்களிடம் எஞ்சியுள்ள மிச்ச உயிரையும் , உணர்வையும் , அறியாமையையும் தங்களின் அரசியல் லாபத்திற்க்காக உறிஞ்சிக்குடிக்கும் அடங்கா உறுபசி`கொண்ட இந்திய அரசியல் சூழலில் ஒரு நிகழ்வை அந்த பாதிக்கப்பட்ட மக்களின் பார்வையில் கூறுகிற ஒரு கதை தான் இந்த வாழ்க வாழ்க . விருத்தாசலத்தில் நடக்கும் ஒரு அரசியல் கட்சி கூட்டத்திற்காக அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பொருளும் பணமும் கொடுத்து அழைத்து சென்று அங்கு நிகழும் ஒரு நாள் நிகழ்வு தான் இந்த கதை . இதில் பெண்களுக்கு ரூபாய் 500 பணமும் , புது புடவையும் , பிரியாணியும் , ஆண்களுக்கு பணமும் , மதுவும் , பிரியாணியும் என மக்களின் தேவ��களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கூட்டம் திரட்டுகின்றனர் . 20 பேர் செல்லக்கூடிய வாகனத்தில் 40 பேரை ஆடு மாடுகளை போல் போட்டு அடைப்பது , மரசட்டகங்கள் கட்டி மக்களை எங்கும் நகர்ந்து விடாத படி விலங்குகளை போல் அடைத்து வைப்பது , மக்களின் அத்தியாவசிய தேவையான குடி தண்ணீருக்கு கூட வழியில்லாமல் அந்த கூட்டத்தில் அமரவைப்பது , விரும்பினாலும் விரும்பாவிடினும் கட்சி சின்னம் பொறித்த கைப்பலகைகள் , கொடிகள் , தொப்பிகள் என மக்களை அலங்கரிப்பது என ஒரு விலங்கு பண்ணை போலவே அந்த கூட்டம் காட்சியளிக்கிறது . கொடுமையிலும் கொடுமை பெண்களுக்கு கழிப்பறை வசதியுமில்லை , அந்த பெரும் திரளில் அவர்களால் அந்த இடத்தை விட்டு நகரவும் முடியாமல் அவர்கள் படும் அவஸ்தை வார்த்தைகளின் வழி கூட நம்மால் தாங்கமுடிவதில்லை . கட்சி தலைவியின் வருகைக்காக சுட்டெரிக்கும் வெய்யிலில் காலை முதல் மணிக்கணக்காக மக்கள் காத்திருக்கின்றனர் . அமரும் நாற்காலிகளுக்கு சண்டை நடக்கிறது , ஊர் சண்டை , சாதி சண்டை நடக்கிறது , போதை ஆசாமிகள் சலசலப்பினால் சண்டை நடக்கிறது , பெரும் திரளின் போக்குவரத்தினால் சாலை விபத்து நடக்கிறது , மாவட்டம் -வட்டம் என தங்கள் பங்கிற்கு கிடைத்த வாய்ப்பிலெல்லாம் பணம் சுருட்டல் நடக்கிறது (மக்களுக்கு கிடைக்கும் பிரியாணி வரை ) , இதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் அலங்கரிக்கப்பட்ட மேடை மேல் அரைகுறை ஆடைகளையோடு இளம் பெண்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடக்கிறது . இத்துணையும் நடக்கும்பொழுது இதற்கு சற்றும் பொறுப்பேற்காமல் பறக்கும் ஹெலிகாப்டரில் இருந்து ஒய்யாரமாக இறங்கி தேரில் பவனி வருவது போல வந்து மேடைமேல் ஏறி" என் உயிரினும் மேலான மக்களே " என்று பேசத்தொடங்கும் நேரம் இங்கே கூட்டத்தில் மரக்கட்டை சாரங்கள் அவிழ்ந்து விழுந்து மக்கள்கூட்ட நெரிசலில் மிதிபட்டு பல உடல்களை விட்டு உயிர் பிரிகின்றன .
இமையம் அவர்களின் எழுத்து எப்பொழுதும் காத்திரமாக இருக்கும் என்பது நாம் அறிந்த ஒன்றே . அவர் தன்னுடைய கதையில் பயன்படுத்தும் வட்டார வழக்கு கதையை உண்மைக்கு நெருக்கமாக கொண்டு செல்கிறது . அவர் எடுத்துக்கொண்ட கதைக்களம் நமக்கு புதிதில்லை என்றாலும் அதனை இத்தனை ஆழமாக ஊடுருவி பார்க்கும் பார்வையும் , பார்த்ததை எந்த தயக்கமும் அச்சமுமிமின்றி பதிவிடும் திறன் இமையம் அவர்களுக்கே உரியது . எளிமையான அடித்தட்டு மக்களுக்கு இடையேயும் சாதிய வேறுபாடுகளும் , தீண்டாமையும் இருக்கத்தான் செய்கிறது என்பதை ஒரு காட்சியின் ஊடாக தன் படைப்பில் பதிவிடுவது வெகு சிறப்பு . இது போல பல படைப்புகள் தமிழ் நவீன இலக்கியத்தில் படைக்க பட வேண்டும் .
இந்த கதையில் யாரை குறைகூறுவது ? தவறு எங்கு நிகழ்கிறது ? தவறு யார் பக்கம் ? இந்த தவறுகள் நிகழ காரணங்கள் யாவை ? என பல்வேறு கேள்விகள் வாசிக்கும் அனைவரின் மனதிலும் தோன்றும் . இந்த அனைத்து கேள்விகளுக்கும், தவறுகளுக்கும் காரணம் பணத்தின் மீதும் அதிகாரத்தின் மீதும் மக்களுக்கு இருக்கும் தீரா ஆசைதான் . இந்த பேராசை அவனை தன் இனத்தையே காவு வாங்க செய்கிறது . தீமைக்கும் , கொடுமைக்கும் அவன் உடலும் உள்ளமும் பழகி பழகி மரத்துபோகிறது. பணத்திற்காக மக்கள் அரசியல் கூட்டங்களில் பங்கு பெறுவதும் , ஓட்டு போடுவதும் தவறென்றால் அவர்களை அந்த வறுமை நிலைக்கு ஆளாக்கிய அரசும் , அரசியல் வாதிகளும் தவறு தான் . இதற்கு தீர்வு மாற்றம் மட்டுமே , அந்த மாற்றம் நம்மிடமிருந்தும் , நாம் வளர்க்கும் நம் அடுத்த தலைமுறையினரிடத்துமிருந்தே தொடங்க வேண்டும் .
இமையம் அய்யா அவர்களின் எழுத்து எப்போதும் விளிம்பு நிலையில் உள்ள மக்களை, பெரும்பாலும் பெண்களை சுற்றி அமையும். அந்த வகையில் இந்த நாவல் பேசும் தளம் அரசியல் என்றாலும், விளிம்பு நிலையில் உள்ள பெண்கள் எவ்வாறு ஆதாயம் தேடுகிறார்கள், இன்றைய அரசியல் எப்படி உதவி செய்கிறது என்பதை பேசுகிறது.
தேர்தல் சமயங்களில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யும் கட்சி பொதுக்கூட்டத்தில் உள்ள குறைகள், செயல்பாடுகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
நாவல் முழுவதும் நிறைய இடங்களில் இன்றைய கட்சியின் அவல நிலை, செயலாளர்கள், MLA க்களின் அதிகாரப்போதை, மக்களின் பணத்தை எப்படி இடைப்பட்ட ஆட்கள் திருடுகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டப்பட்டுள்ளது. எல்லாம் எல்லார்க்கும் தெரிந்த விஷயம் தான் என்றாலும் எழுத்தில் அதுவும் நாவல் வடிவில் வந்து இருப்பது இதுவே முதல் முறை. (வெட்டாட்டம் நாவலில் உள்ளது என்றாலும் இவ்வளவு வெளிப்படையாக இல்லை)
மக்களுக்காக என்று செய்யப்படும் எந்த காரியமும் எல்லாருக்கும் முக்கியமாக கடை நிலை மக்கள் வரை சென்று சேர்கிறதா என்பது ஒரு கேள்விக்குறி அதற்க்கு ஒரு முக்கியமான எடுத்துக்காட்டாக இருப்பது இந்த கட்சி மாநாடுகள் தான். மக்களை நேரில் சென்று துயர் கேட்டு அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்யவே நேரடி மாநாடு என்பதன் நோக்கம் மாநாட்டின் போதே அடிபட்டு போகிறது. மேலும் அவர்களின் பாதுகாப்பும் ஒரு கேள்விக்குறி யாக உள்ளது. இது ஒவ்வொரு முறையும் மாறாத ஒன்றாக இருந்துகொண்டு மீண்டும் மீண்டும் நடப்பது தான் உட்சம்.
ஒரு காலத்தில் கட்சி மாநாடு என்றால், கட்சி கொள்கைக்காகவும் , கட்சி தலைவர் மேல் கொண்ட அன்பின் காரணமாக கூட்டம் கூடும், ஆனால் இன்று கெஞ்சி, காசு, துணி , சாப்பாடு கொடுத்து வாகன வசதி ஏற்பாடு செய்து சேர்க்கும் அளவிற்கு மாறி இருப்பது சமூகம் மற்றும் அரசியலின் அவலநிலையை காட்டுகிறது.
அங்கங்கே தனிப்பட்ட முறையில் கட்சி சார்ந்த தாக்குதல்களை புறக்கணித்துவிட்டு படித்தால், நமது இன்றைய அரசியலின் அவலநிலை புரியும்.
சமகால அரசியலை பேசும், அதுவும் தேர்தல் நெருங்கும் இந்நாளில் அனைவரும் படிக்க வேண்டிய 101 பக்கங்களை கொண்ட குறுநாவல்.
(கல்லூரி படிக்கும் போது தலைக்கு கொடுக்கபட்ட 200 ரூபாய் மற்றும் பிரியாணி என்று சொல்லி ஏமாற்றி கொடுத்த தக்காளி சாதத்திற்கு ஆசைப்பட்டு அத்தையுடன் சென்ற கட்சி மாநாடு நினைவுக்கு வந்தது)
✍️ என்னை எழுத்துகளால் கவர்ந்த எழுத்தாளரில் ஒருவர் திரு .இமையம் அவர்கள் .நா மாதம் வாங்குற புத்தகத்துல கண்டிப்பா இவர் புத்தகமும் இருக்கும் .இந்த மாதம் "வாழ்க வாழ்க".
✍️ புத்தகத்தின் பின் அட்டையில ஒரு வாசகமிருக்கும் " அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் சாதாரண மக்களை எப்படி அலைகழிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டும்" அப்படி னு படிச்சிட்டு இது அரசியல் பற்றிய புத்தகமோ அல்ல அரசியல்வாதிகளை பற்றிய புத்தகமோ அல்ல.
✍️500 ரூபாய்க்கும்,ஒரு பிரியாணிக்கும் ஆச பட்டு கட்சி கூட்டத்துக்கு போற சாதாரண மக்கள் படுற கஷ்டத்த சொல்ற கதெ.
✍️அதுலையும் பிரியாணிக்கு பதிலா குஸ்கா கொடுத்து ஏமாத்திடாங்க னு குமுற கதெ.(என்னம்மா இப்படி பண்ணுறிங்களேம்மா).
✍️ஆனா ஒன்னு கதெயா இருந்தாலும் சரி ,நெஜமா இருந்தாலும் சரி "சரக்கு க்கு"மட்டும் பஞ்சமில்ல தமிழ்நாடு ல .(என்ன குறுகுறு பார்க்காதீங்க கதைல அப்ப��ி தான் எழுதி இருக்காரு).
✍️நடுத்தர மக்களின் எதார்த்த வாழ்க்கை எழுத்தாளர் இமையத்தை விட யாரும் இவ்வளவு நேர்த்தியாய் எழுதிட முடியாது.
✍️நான் படிச்சிட்டேன்.நீங்களும் படிச்சிடுங்க.
நான் படிக்க எடுத்து கொண்ட நேரம் : 1 மணி நேரம் 38 நிமிடம் .
தங்கத்தாரகையின் தேர்தல் பிரச்சாரம் ஒன்றில், வெயில் தாங்காமல் பொதுமக்கள் இறந்தது உங்களுக்கு நினைவில் இருக்கும். இப்படியான அரசியல் கூட்டங்கள் எப்படி பொதுமக்களை வாட்டி வதைக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து, இதன் பிண்ணனி, எப்படி மக்களை திரட்டுகிறார்கள், அதன் பின்னால் இருக்கும் பணம், வறுமை, ஜாதி அரசியல் என பலவற்றை இந்த குறுநாவலில் நமக்கு கடத்துகிறார் எழுத்தாளர் அண்ணன் இமையம் அவர்கள்!
மே மாசம் கடும் வெயியில் தேர்தல் நடத்தவேண்டிய தேவையென்ன என்கிற ஒரு கேள்வியை ஒரு கதாப்பாத்திரம் கேட்கும்.
பல கோடிகளை செலவு செய்து இப்படியான பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டிய தேவையென்ன?
பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கவும், வாக்குக்கு பணம் கொடுப்பதும் ஏன்? என பல கேள்விகள் இருக்கின்றன.
இங்கே சிஸ்டம் இப்படித்தான் இருக்கிறது. இதை மாற்றுவது எத்தனை எளிது என்று தெரியவில்லை. ஆனால், மக்களாட்சியில் மக்கள் தான் மன்னர்கள் என்றால், அவர்கள் மன்னர்களாக நடத்தப்படுகிறார்களா என்கிற கேள்வியை இந்த புத்தகம் எழுப்புகிறது!
Imaiyam's writing is so great, it is like a snowball it starts with a small size but in rolling it ends up into a large ball. and I am becoming a huge fan/reader of his work. the way he opens the narrative the first scene halfway way and you will find what happens before that, while you reach the end. another great stuff from him. this time with how the political parties meeting affects the normal and marginal people.