வாஜ்பாய்க்கு இந்திய அரசியலில் என்ன பாத்திரம் என்பதையும் இந்துத்துவ அரசியலில் என்ன பாத்திரம் என்பதையும் இந்த புத்தகம் ஓரளவுக்குக் காட்டுகிறது. முட்டையாய் காட்சியளித்தவர், பின்னர் முட்டையின் ஓடாய் உடைந்து போனார்.உள்ளிருந்து அந்த பயங்கர டைனசர் எட்டிப் பார்த்தது. அந்தந்த நேரத்தில் வாஜ்பாயாக, மோடியாக காட்சியளித்தாலும், இந்துத்துவத்தின் மரபணுவிலிருந்து அந்த ஆதிக்கம் வெறிகொண்டு வெளிப்படுவதை துல்லியமாக புரிந்து கொள்ள முடிகிறது. நபர்கள் சார்ந்த அரசியலிலிருந்து சித்தாந்தம் சார்ந்த அரசியலை பேச வேண்டிய அவசியத்தைப் பெற முடிகிறது.முற்போக்கு இயக்கங்களும், ஜனநாயக சக்திகளும் தாங்கள் எங்கே தவறி இருக்கிறோம் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது.
பூர்வீகம் திருச்செந்தூர் அருகே செங்குழி என்னும் சிற்றூர்.
இதுவரை இராஜகுமாரன் (மீனாட்சி புத்தக நிலையம்) , போதிநிலா (வம்சி பதிப்பகம்)என்னும் இரு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.
சேகுவேரா (சி.ஐ.ஏ குறிப்புகளின் பின்னணியில்), காந்தி புன்னகைக்கிறார், ஆதலினால் காதல் செய்வீர், மனிதர்கள் நாடுகள் உலகங்கள், என்றென்றும் மார்க்ஸ் என்னும் Non-fiction நூல்கள் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
புத்தரைப் பார்த்தேன் என்னும் சொற்சித்திர தொகுப்பும், , உடைந்த முட்டையும் தலையெட்டிப் பார்த்த டைனசரும் என்னும் அரசியல் கட்டுரைகள் தொகுப்பும் அமேசானில் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
பள்ளம், இரவுகள் உடையும், இது வேறு இதிகாசம் ஆகிய மூன்று ஆவணப்படங்கள் இயக்கப்பட்டு இருக்கின்றன.
மண்குடம் என்னும் சிறுகதை இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது.
இரவுகள் உடையும் ஆவணப்படம், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஜான் ஆபிரகாம் தேசீய விருதுக்கான திரைப்பட விழாவில் பங்கு பெற்றது.