பொன்னியின் செல்வன் - தியாகச் சிகரம் - பாகம் 5
---------------------------------------
நாகை புத்தவிகாரத்தில் தொடங்கிய ஐந்தாம் பாகம், வீரநாராயணபுரத்து ஏரியின் நீராழி மண்டபத்தில் முடிகிறது. ஆம், முதல் பாகத்தில் வந்தியத்தேவன் ஆடிப்பெருக்கு அன்று ரசித்த அதே வீரநாராயண ஏரி.
முந்தைய பாகங்களில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு முடிச்சுகள், இப்பாகத்தில் தெளிவுபடுத்தப்படுகிறது. மேலும், பல்வேறு கேள்விகளுக்கு பதிலும், சிலவற்றை வாசகரின் ஊகங்களுக்கும் விடப்பட்டிருக்கிறது. (உதாரணமாக, ஆதித்த கரிகாலரை கொல்ல பலரும் திட்டமிட்டிருந்தாலும், விபத்தின் மூலமாக இறந்தாதாகவும் காட்டப்படுகிறது. கதை நெடுகிலும் நந்தினியும் மதுராந்தகரும் சுந்தரசோழர்-ஊமைராணியின் வாரிசுகள் போல காட்டி வந்த போதும், கடைசியில் அவர்கள் வீரபாண்டியனின் வாரிசா? அல்லது பைத்தியகாரன் எனப்படும் கருத்திருமன் என்பவனின் வாரிசா? என கேள்விக் கொக்கி நிற்கிறது)
விறுவிறுப்புக்கும், எதிர்பாரா திருப்பங்களுக்கும் பஞ்சமில்லாமல், சில இடங்களில் கவித்துவமாக, சொற்ப இடங்களில் ஈசன் குறித்தும் சிவனடியார்கள் குறித்தும், ஆன்மீக இலக்கியங்களை தொட்டும் செல்கிறது இப்பெரும் நாவல் பாகம்.
நாவல் கடைசிகட்டத்தை நெருங்க நெருங்க, சில கதைமாந்தர்களுக்கு விடை கொடுத்து கொண்டே வந்துள்ளார், திரு கல்கி அவர்கள்:
* நந்தினி
* ரவிதாசன் & ஆபத்துதவிகள்
* மதுராந்தகன்
* கருத்திருமன்
* கந்தமாறன்
* பாரத்திபேந்திரன்
நாவலின் முடிவில், யாருக்கு மணிமகுடம், யாரால் சூட்டப்படுகிறது. யார் அதன்மூலம் 'தியாகச்சிகரம்' ஆகிறார்கள் என்பதற்கு விடை கிடைக்கிறது.
மொத்தத்தில்....
நாவலில் சொல்லப்பட்ட கதையின் கால அளவு என்பது, ஆடி மாதத்தில் ஆரம்பித்து, கிட்டதட்ட மாசி மாதத்தில் முடிகிறது. இந்நாவல் தொகுப்பை இந்த இடைபட்ட காலத்தில் வாசித்தால், காலசூழலுக்கேற்ப கதையில் ஒன்றி அதன் உணர்வைப் ஒருங்கே பெற்று மனத்தால் பயணிக்கலாம்.
மேலும், முதல் பாகத்தில் சொல்லப்பட்ட சம்பவங்களாயிருந்தாலும், அதை திரும்ப-திரும்ப பின்வரும் பாகங்களிலும் சொல்லிகொண்டே வரப்பட்டிருக்கிறது., வாசகர்களை இப்பெரும் சமுத்திர பக்கங்களில் தொலைந்து போகாமல், கதையின் முடிவுக்கு கொண்டு வந்ததிலேதான் இந்நாவலின் வெற்றி அடங்கியுள்ளதாக நாம் பார்க்கிறோம். வாசித்து முடிக்க குறைந்தது மூன்று மாதம்( ஐப்பசி - தை)எடுத்து கொண்ட நமக்கே இந்நினைவூட்டல்கள் தேவையென்றால், நான்கு வருடங்கள் வாரப் பத்திரிக்கையில் ஒவ்வொரு அத்தியாயமாக, வாசிப்பவர்களை தொடர்ந்து வாசிக்க வைக்க இந்த யுத்தி அவசியமானதுதானே!
தமிழகம், இலங்கை என பல இடங்களுக்கு பயணம் செய்து திரு.கல்கி அவர்கள் இந்நாவலை எழுதியதாக கூறப்படுகிறது. 1950 களில் இப்படியான பயண மெனக்கெடல்களை மேற்கொண்டு அற்புதமான படைப்பை தந்ததற்கு, திரு.கல்கி அவர்களுக்கு தமிழ்ச்சமூகம் எப்போதும் நன்றி தெரிவித்துக்கொண்டிருக்கும்.
ஆகையால், இப்பேற்பட்ட நாவல் புனைவு என்றாலும் இத்தனை ஆண்டுகளும், வாசகர்கள் மனதில் பசுமையாகவும் உயிர்ப்புடனும் 'பொன்னியின் செல்வன்' இருக்கிறான் என்றால் அதில் வியப்பில்லை.
***********************************
இனி Spoilers:
இப்புதினத்தில் வந்த சம்பவங்கள் பல திரைப்படங்களில் எடுத்தாளப்பட்டருக்கிறது:
* நந்தி மண்டபம் அருகில் வானதியை காளையிடம் இருந்து அருள்மொழிவர்மர் காப்பாற்றியது - படையப்பா: ரஜினி, சௌந்தர்யா, காளை
* பிறந்த வாரிசு(சேந்தன் அமுதன்/மதுராந்தகர் ) மாற்று இடத்தில் வளர்வது/ஆள்மாறாட்டம் - பல படங்கள்
* பொய்யும் கபடமுமாய் திரிந்த வந்தியத்தேவன், அருள் மொழிவர்மரின் குணத்தை வியந்து அதனை ஏற்றுக் கொள்ள முனைவதும்., போலவே, வந்திதயத்தேவனின் பலவித சூழ்நிலைக்குத் தக்க சமயோசித குணங்களை கொண்டுள்ளதை வியந்து அருள் மொழிவர்மர் அதைக் கைகொள்ள முனைவதும் - ‘ரங்கா’ திரைப்பட ரஜினி - கராத்தே மணி
* நாவலின் கடைசிபாகத்தின் முடிவில் குந்தவை-வந்தியதேவனின் சந்திப்பும் அவர்கள் பேசிக் களிக்கும் உவமைகளும்- ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலின் ரஜினி-ஷோபனா காட்சிகள்.
நான்கு பாகத்தில் யாரையும் கொல்லாத திரு. கல்கி இப்பாகத்தில்,
* ஆதித்த கரிகாலர்
* ஊமைராணி
* பிணாகபாணி
* பழுவேட்டரையர்கள்
* மணிமேகலை
போன்றோர்களை சிவலோகம் அனுப்பி வைத்திருக்கிறார்.
***********************************
ஐந்தாம் பாகத்தின் கதைச்சுருக்கம்:
நாகைப்பட்டின புத்த விகாரத்திலிருந்து, புயல் பெருவெள்ளம் காரணமாக, அருள்மொழிவர்மர் ஆனைமங்கலத்து அரண்மனைக்கு சென்று அங்கிருந்து வெளிப்படுவதாக ஆரம்பிக்கிறது. பின்பு தஞ்சை நோக்கி யானைமீது செல்கிறார்.
நந்தினி சொற்படி, பழுவேட்டரையர் மதுராந்தகரை தஞ்சையிலிருந்து கடம்பூருக்கு அழைத்து செல்ல வருகிறார். வரும் வழியில் புயலினால் ஆற்று வெள்ளப்பெருக்கில் சிக்கி திருப்புறம்பிய பள்ளிபடை மண்டபத்துள் ஒதுங்குகிறார். ஆபத்துதவிகள் ரகசிய பேச்சான சுந்தர சோழர், ஆதித்தர், அருள்மவழிவர்மர் கொலைச்சதி பற்றி ஒளிந்து கேட்டு, நந்தினி யார்? அவள் நோக்கம் என்ன? என மொத்த உண்மையையும் தெரிந்து கொள்கிறார். புயல் மழையினால், அந்த மண்டபம் அவர்மேல் சரிந்து மூர்ச்சையாகிறார்.
தூமகேது விழுந்துவிட்டபடியால், அரச குலத்தவரை ஆபத்து நெருங்கிவிட்டதென கடம்பூருக்கு திரும்ப விரைந்தார் பழுவேட்டரையர். வழியில் குடந்தை சோதிடர் வீட்டில் இளையபிராட்டியையும் குந்தவையையும் சந்திக்கிறார். அவர்களின் ரதத்தை எடுத்துக்கொண்டு கடம்பூர் விரைகிறார்.
குடந்தை சோதிடர் வீட்டில் குந்தவையை சந்தித்த பூங்குழலி, 'தனது அத்தை(ஊமைராணி) நிலவறையில் ஒளிந்துள்ள சோமன் சாம்பவனை தடுப்பதற்காக சென்றிருக்கிறார்' என தெரிவிக்கிறாள். வானதி, 'தான் பட்டமகிஷியாய் சிங்காதனம் ஏறப்போவதில்லை' என சபதம் செய்கிறாள். புயல் மழை பெய்ததால், அனைவரும் மண்டபத்தில் ஏறிகொள்ள, பெருவெள்ளம் குடந்தை சோதிடர் குடிசையை பெயர்த்தெடுத்து செல்கிறது., வானதி மட்டும் கூரையின் மேலேறி மாட்���ிக்கொண்டாள்.
அங்குசத்தில் விஷம் தடவி அருள்மொழிவர்மரை கொள்ள நினைத்த பாகனை, யானை தூக்கி எரிந்தது. பின்பு தஞ்சையை நோக்கி யானைமீது வருகிறார். ஆற்று வெள்ளத்தில் சிக்கிய வானதியை காப்பாற்ற பூங்குழலி வர, பின்பு முதலையிடம் தப்பிக்க அவ்விருவரும் மரக்கிளையில் ஏற, அருள்மொழி வர்மர் தனது யானையின் மூலம் அவர்களை காக்கிறார்., அவர்கள் தஞ்சையை வந்தடைகின்றனர்.
பெரிய பழுவேட்டரையர் அறிந்த ரகசியங்களை குந்தவை, வானதி மூலமாக சின்ன பழுவேட்டரையரிடம் தெரியப்படுத்துகிறார். நிலவறை வழியாக அரண்மனையில் சுந்தர சோழர் வசித்த இடத்திற்கு வந்த ஊமைராணி, சோமன் சாம்பவன் மறைந்திருந்து எறிந்த வேலை சுந்தர சோழர் மீது படாதவாறு தாங்கினாள். அதனை கண்டு சுந்தர சோழர் எழுந்து நின்றார். சோமன் சாம்பவன் அவரை கத்தியல் குத்த முயன்று, தோற்று, தப்பிச் சென்றான். ஈழத்தரசி உயிர்விட்டாள்(சிங்கநாச்சியார் கோவில்).
கடம்பூரில், வந்தியத்தேவனுக்கு ஆதித்தன் மற்றும் கந்தமாறனால் ஆபத்து என நந்தினி மணிமேகலையை நம்பவைக்கிறாள்.
மந்திரவாதி, தன்னை பழவேட்டரையர் கொள்ளிடக்கரையில் தாக்கியதை நந்தினியிடம் தெரியப்படுத்தினான். கடம்பூர் வேட்டை மண்டபம் வழியாக நந்தினி இருக்குமிடத்திற்கு வந்தியத்தேவனை மணிமேகலை அழைத்து வருகிறாள். நந்தினி தான் யார் என்பதையும், அவளின் நோக்கம் என்ன என்பதையும் அவர்களிடம் விளக்குகிறாள். ஆதித்த கரிகாலன் நந்தினியின் இடத்திற்கு வரும்முன் வந்திதயத்தேவன் யாழ் களஞ்சியத்திற்குள்ளும், மணிமேகலை திரைச்சீலைக்கு பின்னும் ஒளிந்து கொள்கிறார்கள். முன்பு , ஆதித்தனுடன் சேர்ந்து வாழ்வதற்காக, நந்தினி ஆதித்த கரிகாலனிடம், பழவேட்டரையரை கொன்று, சுந்தர்சோழரையும் இளைய பிராட்டியையும் சிறையிலைடத்து, தான் சிங்காதனம் ஏறவேண்டும் என்றதால், கரிகாலன் அவளை வெறுத்து காஞ்சி சென்றதாக கூறுகிறான். காளமுக வேடத்தில் பழுவேட்டரையர் வந்தியத்தேவனை யாழ் களஞ்சியத்தில் தாக்குகிறார். பின் நந்தினியை தாக்க கத்தியை உருவிகொண்டு வரும்போது, ஆதித்தர் மரணம் அடைந்து வீழ்ந்து கிடக்கிறார். நந்தினியும், பாண்டிய ஆபத்துதவிகளும் வேட்டை மண்டபம் வழியே தப்பிக்கிறார்கள். வந்தியத்தேவன் ஆதித்தனை மடியிலிட்டு அழுவதையும் மணிமேகலை, தான்தான் ஆதித்தரை கொன்றதாக பிதற்றுவதையும், கந்தமாறனும் சம்புவராயரும் காண்கிறார்கள். வேட்டை மண்டபத்திலிருந்து தீ சம்புவரையர் மாளிகையை கொஞ்சம் கொஞ்சமாக எரிக்கிறது. சம்புவரையர் மாளிகைக்கு வந்து மலையமான் பாட்டனிடம் ஆதித்தனின் உடலை சேர்த்துவிட்டு வந்தியத்தேவன் மயங்கி விழுகிறான்.
திருப்புறம்பிய பள்ளிப்படை அருகே இடும்பன்காரி, சோமன் சாம்பவன், க்ரமவித்தன், ராக்கம்மாள் போன்றவர்களை மறைந்திருந்து கவனிக்கிறான் ஆழ்வார்க்கடியான். தனது அத்தையின் கொலைக்கு பழிவாங்க வந்த பூங்குழலி அவர்களை தொடர்ந்து வந்ததால் ஆழ்வார்கடியானை சந்திக்கிறாள்.
பாண்டிய ஆபத்துதவிகளை தொடர்ந்து ஆழ்வார்க்கடியான், குகைக்குள் காளாமுக வேஷத்தில் இருந்த பழுவேட்டரையரை கவனிக்கிறான், பக்கத்தில் தலைவிரி கோலமாய் நந்தினி இருக்கிறாள். பழுவேட்டரையரும் நந்தினியும் பேசுகையில், பழுவேட்டரையரின் சுருள் கத்தி நந்தினி மேல் பாய்வதற்கு பதில், ஆதித்தரின் மேல் பாய்ந்தது பற்றியும், நந்தினி பழுவேட்டரையரிடம் விடை பெற்று செல்வது பற்றியும் ஆழ்வார்கடியானுக்கு தெரிய வருகிறது. ஆழ்வார்க்கடியான் பூங்குழலியிடம் உண்மையை விளக்கியபோது , ரவிதாசன் ஆட்கள் திருமலையை சூழ்ந்துகொள்கிறார்கள், பின்பு தப்பிக்கிறான்., பூங்குழலி நந்தினியை பார்த்து தன் அத்தையை பார்த்தது போல பிரமிக்கிறாள்.
பூங்குழலியை தேடி வந்த சேந்தன் அமுதனின் உதவியுடன், சின்ன பழுவேட்டரையரும் கந்தன்மாறனும் அங்கு வருகிறார்கள். பெரிய பழுவேட்டரையர் சின்ன பழுவேட்டரையரிடம் தஞ்சை கொலை முயற்சி தகவல்களை கேட்டறிந்தார். யாரும் எதிர்ப்பாரா நேரத்தில், சின்ன பழுவேட்டரையரின் குதிரையை பற்றிக்கொண்டு நந்தினி மறைகிறாள். பழுவேட்டரையரும் யாரும் தடுக்க வேண்டாம் என கட்டளையிடுகிறார்.
ஆதித்தரின் சடலம் தஞ்சையில் பார்வைக்கு வைக்கப்பட, மக்கள் கண்ணீர் விட்டு போனார்கள். வந்தியத்தேவன் பாதாள சிறையில் அடைக்கப்படுகிறான்.
தஞ்சையில், செம்பியன் மாதேவி அநிருத்தர் முன்னிலையில் மதுராந்தகன் ஊமைராணியின் மகன் என்றும், கண்டராதித்தர், அந்த மகன் ராஜ்ஜியம் ஆளக்கூடாதென சத்தியம் வாங்கியதையும், சேந்தன் அமுதன்தான் தான் ஈன்ற மகன் என்றும் மதுராந்தகரிடம் தெரிவிக்கிறார். இந்த உண்மை ஏற்கனவே குந்தவைக்கும் தனக்கும் தெரியுமென அருள்மொழி வர்மர் அவர்களிடம் தெரிவிக்கிறார்.
ஆதித்தர், வந்தியத்தேவன் பற்றி நல்ல விதமாக எழுதிய ஓலையை மணிமேகலை மூலம் குந்தவையிடம் கொடுக்க செய்திருக்கிறார்.,
ஈழத்தீவிலிருந்து சுந்தர சோழர் வந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மதுராந்தகரும் நந்தினியும் ஊமைராணிக்கு பிறந்தவர்களாதலால், மதுராந்தகருக்கு சோழ சிங்காதனம் ஏறும் தகுதியில்லை என தாம் அறிந்த உண்மையை அருள்மொழி வர்மர் இளைய பிராட்டிக்கு தெரிவிக்கிறார். வந்தியத்தேவன் பாதாள சிறையில் இருப்பதை குந்தவை அருள்மொழி வர்மருக்கு தெரிவிக்கிறார். உடனே பாதாள சிறைக்கு விரைகிறார். அங்கே மலையமானும் வேளாரும் அருள்மொழி வர்மரை தடுக்கின்றனர். பல வாக்குவாதங்களுக்கு பிறகு அனைவரும் பாதாள சிறைக்கு சென்றதால், வந்தியத்தேவன் தப்பித்து விட்டிருக்கிறான்.
முன்பு, பாதாள சிறையில் இருக்கும் பைத்தியகாரனுக்கு மதுராந்தகரை பற்றி உண்மை(மற்றும் ஈழத்திலிருக்கும் பாண்டிய மணிமகுடம்/இரத்தின ஹாரம்) தெரியும் என பினாகபாணி(வைத்தியர் மகன்) அநிருத்தரிடம் கூறியதால், அவனை முத்திரை மோதிரத்துடன் சிறைக்கு பைத்தியக்காரனை மீட்க அனுப்பினார். பைத்தியக்காரனுக்கு பக்கத்து அறையிலிருந்த வந்தியத்தேவன் பினாகபாணியை அங்கே கட்டிவிட்டு இருவரும் முத்திரை மோதிரத்துடன் வெளிவருகிறார்கள். அநிருத்தரின் காவலர்களுடன் அவர்கள் செல்லும்போது, பைத்தியக்காரன் தனது பெயரை, 'கருத்திருமன்' என வந்தியத்தேவனிடம் தெரிவிக்கிறான். காவலர்களிடமிருந்து தப்பி பழுவேட்டரையரின் மாளிகைக்குள் சென்றுவிடுகிறார்கள்.
கருத்திருமன் தன் கதையை வந்தியத்தேவனிடம் தெரிவிக்கிறான்.
"25 வருடங்களுக்கு முன் கடலில் மிதந்த ஊமை பெண்ணை காப்பாற்றியதாகவும், அவளை ஈழத்தில் விடச்சொல்லி அங்கு குதிரைகளில் வந்த அரச அதிகாரி ஒருவர் கூறியதாகவும் தெரிவித்தான். மேலும், அப்படி கூட்டி செல்கையில், நடுக்கடலில் இன்னொருவரை கருத்திருமன் தன் படகில் ஏற்றி செல்கிறான். ஈழத்தரசனுக்கு தனது ஓலையை சேர்க்கும்படி அவர் கூறியதால், அவர் பாண்டிய அரசன் என அறிகிறான்.
ஈழத்து அரசர் பரிவாரங்களுடன் அப்பாண்டிய மன்னனை வரவேற்று, அவருக்கும் கருத்திருமனுக்கும் இலங்கையை சுற்றிக்காட்டுகிறார். பள்ளத்தாக்கு ஒன்றில் பாண்டிய மணிமுடியம் இரத்தின ஹாரமும் இருப்பதை காட்டியுள்ளார். பாண்டிய மன்னன் பொற்காசுகளை கருத்திருமனிடம் கொடுத்து அந்த ஊமை பெண்ணை நன்கு கவனித்துக்கொள்ளும்படியும், பாண்டிய நாட்டில் அவளை தன்னிடம் சேர்த்துவிடும்படியும் கூறியுள்ளார்.
கருத்திருமன் அவளை பூதத்தீவில் தேடிவரும்போது கோடியக்கரைக்கு சென்றுவிட்டதாக அறிகிறான். அங்கு அவள் கர்ப்பவதியாக இருக்கிறாள் என்பது தெ��ியவருகிறது. இதனை பாண்டிய மன்னனிடம் தெரிவிக்க கருத்திருமன் சென்ற நேரத்தில், செம்பியன் மாதேவி அந்த ஊமைப்பெண்ணை பழையாறை அழைத்து சென்றுவிடுகிறார். இதையறிந்து பழையாறைக்கு வரும் கருத்திருமன், அரசாலாற்றங்கரையில் தான் விரும்பிய வாணி குழி தோண்டிக்கொண்டிருப்பதையும், பக்கத்தில் குழந்தை ஒன்று துணிக்குவியலில் அழுதுகொண்டிருப்பதையும் காண்கிறான். இதன் பிறகு நடந்தவற்றை, சக்ரவர்த்தியிடம்தான் கூறுவேன் என
கருத்திருமன் வந்தியத்தேவனிடம் கூறுகிறான்.
பிறகு இருவரும் நிலவறைக்கு சென்று பொற்காசுகள் கொஞ்சம் எடுத்துக்கொண்டு, படகு மூலம் கோடியக்கரைக்கு செல்ல தயாராகிறார்கள். அப்போது சிறைக்காவலர்களுள் ஒருவன் ஓடிவந்து, அவர்களை படகோடு கட்டி விடுகிறார்கள். அவன் ஆழ்வார்கடியான் என அறிந்த வந்தியத்தேவன், அவனை படகில் கட்டி விட்டு, தப்பிக்க குதிரை கேட்கிறான். வாணி அம்மையார் வீட்டில் தனது குதிரையும், சேந்தனை கீழே தள்ளி சுரம் ஏற்படுத்திய அவனது குதிரையும் உள்ளதாக ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனிடம் தெரிவிக்கிறான். வாணி என்ற பெயரைக்கேட்ட கருத்திருமன், 'சேந்தன் சுரம் கண்டது பற்றி அவனது (எந்த தாயார்?) தாயார் செம்பியன் மாதேவிக்கு தெரியுமா?' என கேட்டான். மூவரும் சேந்தன் அமுதன் வீட்டிற்கு செல்கிறார்கள்.
சுரம் கண்ட சேந்தன் அமுதனை கவனித்து வந்த பூங்குழலி அவனை மணக்க சம்மதம் தெரிவிக்கிறாள்.
அந்த இருள் சூழ்ந்த நேரத்தில், அவர்கள் வீட்டிற்கு செம்பியன் மாதேவியும் மதுராந்தகரும் வருகிறார்கள். சேந்தன் அமுதன் தனக்கும் பூங்குழலிக்கும் பெரிய பிராட்டிதான் திருமணம் செய்து வைக்கவேண்டும் என கேட்கிறான். அவரும் ஆசீர்வதிக்கிறார். பிறகு, அவர்கள் கிளம்பி பல்லக்கு நோக்கி செல்லும்போது, பெரிய பிராட்டி மதுராந்தகனிடம், "சேந்தன் பிறந்து ஐந்து வருடம் கழித்து, வாணி அவனை உயிரோடு கொண்டு வந்தாள். அப்போதும் உன்னை விட்டுவிடாமல் மகனாக வளர்த்து வந்தேன். அவனை இக்குடிசையிலே வாணியிடம் வளர விட்டேன். ஆதலால் சிங்காதனம் வேண்டாம் என சொல்" என்கிறார். மதுராந்தகன் தனக்கு பிறந்த குழந்தை ஏன் இரண்டு வயதாகியும் பேசவில்லை என்ற காரணம் புரிந்தது. சிங்காதனம் வேண்டாம் என்கிறான் மதுராந்தகன்.
பெரிய பிராட்டியை அனுப்பிவிட்டு அந்த குடிசையின் ஓரமாக மதுராந்தகன் தங்கி விடுகிறான். அப்போது, கருத்திருமனும் வந்தியத்தேவனும் அங்கு வருகிறார்கள். கருத்திருமனை கண்டு 'பைத்தியக்காரன்' என பயந்து, மதுராந்தகன் குத்துவாளை ஓங்குகிறார். மதுராந்தகன் யாருடைய மகன் என்பதை ரகசியமாக அவனிடம் சொல்கிறான் கருத்திருமன். அதற்கு "உண்மையிலேயே தான் (பாண்டிய)இளவரசன்தானா!" என ஆச்சர்யப்படுகிறான் மதுராந்தகன். இதை சொல்ல வந்தபோதுதான் சின்ன பழுவேட்டரையர் தன்னை பாதாள சிறையில் அடைத்ததாக கருத்திருமன் கூறுகிறான். வாணி அம்மையாரை பார்க்க வந்தபோது, மதுராந்தகன் குடிசைக்கு திரும்பி வந்ததால், வந்தியத்தேவன் வெளிப்பக்கம் ஓடிவிட்டதாகவும் தான் மதுராந்தகனை காண வந்ததாகவும் கூறினான் கருத்திருமன். வேலி மறைவில் இருக்கும் குதிரைகளுடன் கருத்திருமனும் மதுராந்தகனும் கோடியக்கரை/இலங்கை நோக்கி பயணப்பட்டார்கள்.
பினாகபாணி, பைத்தியக்காரனை தப்பிக்கவிட்டதால், அநிருத்தர் அவன் பேரில் எரிந்து விழுகிறார். இதற்கு காரணம் வந்தியத்தேவன்தான் என பினாகபாணி அவன் மீது வஞ்சம் கொண்டு தேடி, சேந்தன் அமுதன் வீட்டை அடைகிறான். வந்தியத்தேவனை கொல்ல எத்தனித்த பினாகபாணி, தான் காதல் கொண்ட பூங்குழலி, சேந்தன் அமுதன் காதல் மொழி பேசியதை கண்டு ஆத்திரம் கொள்கிறான். சேந்தன் அமுதன் மீது எரியவிருந்த குத்தீட்டியை, வந்தியத்தேவன் தன்னை தாக்க வந்ததால், அவனை நோக்கி எறிந்தான் பினாகபாணி. வந்தியத்தேவன் வேலினை தனது விலாவில் தாங்கி மூர்ச்சையானான். இருட்டில், அது மதுராந்தகன் என நினைத்து பினாகபாணி தப்பி ஓடினான். வாணி அம்மையார் வந்தியத்தேவனுக்கு வைத்தியம் செய்கிறார்.
ஆழ்வார்க்கடியான் கட்டப்பட்ட படகு, கரை ஒதுங்கியதும் வீரர்கள் வந்து அவனை விடுவித்தனர். வடவாற்றங்கரையோடு சென்ற கருத்திருமனை மிரட்டி அவனுடன் வரும் மதுராந்தகனை பற்றியும் அவன் பிறப்பு ரகசியம் பற்றியும் கேட்டு தெரிந்துக்கொண்டான் ஆழ்வார்க்கடியான். அவனை தப்பிக்கவும்விட்டான்.
பிறகு தஞ்சை கோட்டை பக்கம் சென்ற ஆழ்வார்க்கடியான், ஓடிவரும் பினாகபாணியை நிறுத்தி விவரம் கேட்டான். கந்தமாறனும், பினாகபாணியும் வடவாற்றங்கரை ஓரம் வந்தியத்தேவன் சென்றதாக நினைத்து தேடி செல்கிறார்கள். பாலத்தை தாண்டி சென்ற மதுராந்தகனையும் கருத்திருமனையும் கண்ட பினாகபாணி வேகமாக பாலத்தை கடக்க எண்ணியபோது பாலம் அறுக்கப்பட்டதால் கீழே விழுந்தார்கள். மதுராந்தகனை வந்தியத்தேவன் என எண்ணி, வேல் எறிந்து வீழ்த்தினான் கந்தமாறன். இதைக்கண்ட கருத்திருமன் பினாகபாணியை கொன்றான். கந்தன்மாறனை தாக்கிவிட்டு, மதுராந்தகனை தெப்பம் போன்ற பாலத்தின் மிச்சங்களில் ஏற்றி தப்பித்தான். கந்தன்மாறனும் தாம் கொன்றது வந்தியத்தேவனைத்தான் என நம்பி தஞ்சைக்கு திரும்பினான்.
ஆழ்வார்க்கடியான் சேந்தன் அமுதன் வீட்டில் அடிபட்ட வந்தியத்தேவனை காண்கிறான். மதுராந்தகன் விட்டு சென்ற கிரீடத்தையும் ஆபரணத்தையும் சேந்தன் அமுதன் அணிந்து யானைமேலும், குத்துப்பட்ட வந்தியத்தேவன் மூடுபல்லக்கிலும் அநிருத்தரின் மாளிகைக்குள் அழைத்துச் செல்கிறான் ஆழ்வார்க்கடியான்.
சுந்தர் சோழர், செம்பியன் மாதேவியிடம் மதுராந்தகனை சிங்காதனம் ஏற்றுக் கொள்ள வேண்டுகிறார். அனைவர் முன்னும், மதுராந்தகன் கோட்டைக்குள் வந்தும் காணவில்லை என கேள்வி எழுப்பிகிறார் சின்ன பழுவேட்டரையர். அப்போது, ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதனை அழைத்து வருகிறான். 'திருவயிறு உதித்த தேவர்' , 'மதுராந்தக உத்தம சோழர்' என சேந்தன் அமுதனை அழைக்கிறார் அநிருத்தர் . செம்பியன் மாதேவி சேந்தன் அமுதனை ஆரத்தழுவி கண்ணீர் வடிக்கிறார். சேந்தன் அமுதனும் தன்னை 'மகன்' என்று பெரியபிராட்டி அழைத்ததே போதும் என்றும், தனக்கு ராஜ்ஜியம் தேவை இல்லை என்றும் கோடியக்கரைக்கு செல்ல அனுமதி வேண்டினார். சுந்தர சோழர், சின்ன பழுவேட்டரையர் ஆச்சரியத்தில் மூழ்கினாலும், பழைய மதுராந்தகர் இருக்கும் இடம் தெரியும் வரை, இவர்கள் அரண்மனையிலேயே வசிக்க வேண்டும் என்கிறார் சுந்தர சோழர்.
வானதியை தொடர்ந்து சென்று குணமடைந்து வரும் வந்தியத்தேவனை கண்டுபிடிக்கிறார் அருள்மொழி வர்மர். கடம்பூர் அரண்மனையில் நடந்த சம்பவங்களையும், காளாமுகர் வேஷத்திலிருந்த பழுவேட்டரையர் பற்றியும் வந்தியத்தேவன் அருள்மொழி வர்மருக்கு கூறினான். உடனே, வந்தியத்தேவனை காக்கும் பொருட்டு, 'தாமே சிங்காதனம் ஏறப்போவதாக' அருள்மொழிவர்மர் தெரிவிக்கிறார். உத்தமசோழர் பற்றிய உண்மை அறிந்த குந்தவை, அருள்மொழி வர்மரை மணிமகுடம் ஏற்கவேண்டாம் என்கிறாள். அப்போது, அநிருத்தர், ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதன், பூங்குழலி அங்கே வருகிறார்கள். குந்தவை அனைத்து உண்மைகளையும் அருள்மொழிவர்மருக்கு எடுத்துரைக்கிறாள். அருள்மொழி வர்மர் சேந்தன் அமுதன் எனும் தனது சித்தப்பனை ஆரத்தழுவிக்கொள்கிறார். சேந்தன் அமுதன் தான் முன்பு பாதாள சிறையில் அடைபட்டிருந்த போதே தன் தாய் யாரென்ற உண்மையை பற்றி பக்கத்து சிறையிலிருந்து பைத்தியக்காரன் மூலம் அறிந்தததாக கூறினார். அனைத்து வாதங்களையும் ��ேட்ட அருள்மொழி வர்மர், மீண்டும் 'சித்தப்பாவின் உத்தரவும் கிடைத்துவிட்டது. தாமே முடிசூட்டி கொள்ளப்போகிறேன்' என்றார்.
தஞ்சை மந்திராலோசனை கூட்டத்தில் அரசகுடும்பத்தினர் அனைவரும், பெரிய பழுவேட்டரையர், அநிருத்தர், ஆழ்வார்க்கடியான், சம்புவரையர், கந்தமாறன், பார்த்திபேந்திரன் போன்றோர் பங்குபெற்றனர். ஆதித்தரை கொன்றது பற்றிய விசாரணையில், வந்தியத்தேவனே குற்றவாளி என்றும், வடவாற்றங்கரையில் அவனை தானே கொன்றதாகவும் சாதித்தான் கந்தமாறன். சம்புவரையர் பெரிய பழுவேட்டரையரை, அனைத்து உண்மைகளையும் கூறவேண்டும் என கேட்கிறார். இடும்பன்காரியின் உதவியினால் காளாமுக வேடம் பூண்டு மறைந்திருந்து, நந்தினி-ஆதித்தர் பேச்சுக்களை கேட்டு கொண்டிருந்ததாகவும், ஆதித்தரை காப்பாற்ற சென்ற போது விளக்கணைந்து, தம்மை பலர் அடித்து பச்சைமலை ஒன்றுக்கு தூக்கி சென்றதாகவும் கூறினார் பெறிய பழுவேட்டரையர். இவை அனைத்தும் கூறிய பிறகு, தனது வாளால் மாய்த்துக்கொள்ள எண்ணியபோது, அருள்மொழி வர்மர், 'தாங்கள் உயிரோடு இருந்து, பட்டாபிஷேகத்தில் எனக்கு மணிமூட சூட்டவேண்டும்" என்கிறார். பெரிய பழுவேட்டரையர், மேலும் தகவல்களை பெறுவதுற்குள் வந்தியத்தேவனை இந்த இளஞசம்புவரையன் கொன்றுவிட்டதாக தெரிவித்தார். அநிருத்தர் மறுத்ததற்கு, வடவாறு மேற்கே திரும்பினாள், ஒருவேளை வந்தியத்தேவன் உயிருடன் திரும்பலாம் என கேலியாக சிரித்தான் பார்த்திபேந்திரன். அப்போது வந்தியத்தேவன் ஈரம்சொட்ட அங்கே திடும்மென வருகிறான்.
1/n