கட்டக் கட்ட தகர்ந்துகொண்டு இருக்கிறது காமத்திற்கும் மரணத்திற்கும் இடையிலான கல்பாலம். பொங்கிப் புரண்டு புனலோடிக்கொண்டு இருக்கிறது கங்கு கரையற்ற கானல் நதியில்.
கல்யாண்ஜி (வண்ணதாசன், சி.கல்யாணசுந்தரம்) (பிறப்பு: ஆகஸ்ட் 22, 1946) தமிழின் நவீன கவிஞர், எழுத்தாளர். கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளையும், வண்ணதாசன் ( Vannadasan) என்ற பெயரில் புனைவுகளையும் எழுதியவர். கனடா இலக்கியத்தோட்டம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது, விஷ்ணுபுரம் இலக்கிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
‘கொல்லும் ஒரு நொடியற்ற காலத்துடன் அல்லவா ஓடிகொண்டு இருக்கிறது என் கடிகாரம். கருணையின் பாடலைப் பாடி அல்லவா குதித்துக் குதித்துச் செல்கிறது அந்த மூன்றாவது முள்’
விளையாட்டை முடித்து கருகருத்த நேரத்தில் வீட்டுக்கு வரும் சமயம், அல்லது பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பும் பாதையில், தெருவிலிருந்து வீட்டு நடை வரைக்கும் இடையே உண்டாகும் தனிமையில் ஒரு சிறுமி அப்படித்தான், தன் ஒரு பாதத்தைத் தரையில் செதுக்கி, மறுபாதம் தூக்கி, மறுபாதம் தரையில் செதுக்கி, முதல் பாதம் உயர்த்திக் குதித்துக் குதித்துச் செல்லும். நீங்கள் பார்த்திருப்பீர்கள். நான் பார்த்திருப்பதால், நீங்களும் பார்த்திருப்பீர்கள் என்று நினைத்துக் கொள்கிறேன். அது அந்த மூன்றாவது முள்ளின் குதிப்பு.
மொத்தம் 52 தலைப்புகளும் 63 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது. இந்த புத்தகத்தில் உள்ள எனக்கு பிடித்த கவிதைகள் சில.
உடைந்து சிதறாமல் மயிரிழை கீறல் இட்டிருக்கும் இந்த முட்டையை போல் இருக்கிறது இந்த வாழ்வும். என்ற இந்த முதல் கவிதை வாழ்வு என்பது முட்டையின் கூட்டை போல் உடையாமலும் அதேநேரம் உடையும் நிலையிலும் இருக்கும் ஒரு நிலையைப் போன்றது என்று கூறியிருக்கிறார்
அதுபோல் மற்றொரு கவிதையில் முத்தத்தைப் பற்றி சொல்லியிருப்பார் ஒரு முத்தத்தை அது முத்தம் என்று அறியாமலேயே இதுவரை எத்தனை முத்தங்கள் கொடுத்து விட்டேன் முத்தம் இது முத்தம் என அறிந்தபின் ஒரு முத்தமிட்டேன் அது முத்தம் போலில்லாமல் வேறு ஏதோ ஒன்றாக இருந்தது ஒரு கேள்வி போல ஒரு விடை போல இந்தக் கவிதைத் தொகுப்பில் முத்தத்தை அறியாமல் கொடுப்பதற்கும் அது தெரிந்த பிறகு கொடுப்பதற்கும் உள்ள ஒரு மனநிலையை பற்றி சொல்வது போல் உள்ளது. உதாரணம் சிறுவயதில் தாய்க்கு தரும் முத்தமும். பிறகு காதலிக்கு தரும் முத்தத்திற்கும் உள்ள வேறுபாடு போல
அதுபோல் இன்னொரு கவிதையில் கட்ட கட்ட தகர்ந்து கொண்டிருக்கிறது காமத்திற்கும் மரணத்திற்கும் இடையி லான கல் பாலம் என்ற கவிதை காமத்திற்கும் மரணத்திற்கும் நடுவில் உள்ள பாலம் தான் வாழ்க்கை என்பதுபோல் இந்த கவிதை அமைந்திருக்கிறது இதுபோல ஏகப்பட்ட கவிதை இந்த புத்தகத்தில் இருக்கிறது கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது
இதுவரை எழுத்தாளர், கவிஞர் கல்யாண்ஜி/ வண்ணதாசன் அவர்களின் கவிதையை ஆங்காங்கே வாசித்திருந்தாலும் அவரின் பொத்தகம் ஒன்றை முழுமையாக வாசிப்பது இதுவே முதல் முறை. வண்ணதாசனின் எழுத்துக்களை வண்ணமயமாக அறிமுகப்படுத்திய அக்கா சரண்யா @books.paper.coffee அவர்களுக்கு எனது நன்றிகள் ❤️🙏.
இத்தனை நாட்கள் இவரது எழுத்துக்களை வாசிக்காமல் இருந்து விட்டோமே என்ற வருத்தம் இந்த கவிதைத் தொகுப்பை வாசிக்கும் போது என்னை ஒட்டிக்கொண்டது. என் சொந்த ஊரை சார்ந்த ஒரு எழுத்தாளரை வாசிக்காமல் இருந்து விட்டோமே என்றும் வெட்கம் கொண்டேன்.
இந்த கவிதைத் தொகுப்பில் சின்னச் சின்ன விஷயங்களை கூட மிகவும் அழகாக ரசித்து, நயம்பட எழுதியிருக்கிறார் கல்யாண்ஜி அவர்கள். சில கவிதைகள் இரண்டு மூன்று முறை வாசித்து விட்டால் புரிந்து விடுகிறது. சில கவிதைகளின் அர்த்தம் இப்போதும் எனக்கு புரியவில்லை. இன்னும் நிறைய கவிதைத் தொகுப்புகள் தொடர்ந்து வாசித்தால் புரிந்துக் கொள்வேன் என்றே நம்புகிறேன். எனக்கு புரியாத கவிதைகளை புரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். 60 பக்கங்களே கொண்ட இந்தக் கவிதைத் தொகுப்பை மிகவும் ரசித்து வாசித்தேன். நிறைய கவிதைகள் மனதிற்கு நெருக்கமாக மாறிவிட்டன. நிறைய கவிதைகளை தினமும் வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
இந்த கவிதைத் தொகுப்பை பற்றி சொல்வதை விட வாசித்து அனுபவப்படுங்கள் என்றே சொல்வேன்.
கல்யாண்ஜி/வண்ணதாசனின் எழுத்துக்களை இதுவரை வாசிக்காதவர்கள் கட்டாயம் வாசித்து பாருங்கள், அதன் பிறகு நீங்கள் விரும்பும் எழுத்தாளராக அவர் மாறிவிடுவார்.
பேருந்துக்காகக் காத்திருப்பவர் இல்லை. சிந்தாமணி அக்கா கடை முன் உதிரும் நாவல் பழம் பொறுக்கக் குனியவில்லை. நிர்வாணத்திற்கும் அணிதலுக்கும் நடுவில் நின்றது நெடிய பசி நீத்த உடல், தன்னிச்சையாக வளர் மயிரின் தீவிரம் படர் புழுதிக் கன்னம். எச்சில் வழிந்து ஒழுகும் வாயுடன் தென் திசை பார்த்து ஓயாச் சிரிப்பு. கடந்தவன் தானே கடவுள் என்பதால் கும்பிட்டு நானும் கடந்து போனேன்.
என் மணிக்கட்டில் ஊரும் பூச்சியைச் சுலபமாய்க் கொன்றுவிடலாம். கொல்லும் அந்த ஒரு நொடி அற்ற காலத்துடன் அல்லவா ஓடிக்கொண்டு இருக்கிறது என் கடிகாரம். கருணையின் பாடலைப் பாடி அல்லவா குதித்துக் குதித்துச் செல்கிறது அந்த மூன்றாவது முள்.
பழைய சேலை கேட்டு ஒருத்தி வாசலுக்கு வெளியே நிற்கிறாள். கூடுதல் அனுதாபத்திற்காக எல்லாம் வெள்ளத்தில் போய்விட்டதாக ஒரு பொய் சொல்கிறாள். வாசலுக்கு உட்புறம் இருப்பவர்கள் இன்னொரு தடவை வந்தால் தருவதாகச் சொல்கிறார்கள். தங்கள் கருணையை மெய்ப்பிக்க இப்போதுதான் அனாதை விடுதிக்குக் கொடுத்தோம் என்று ஒரு பொய் சொல்கிறார்கள் அந்தப் பக்கம் ஒரு பொய்யும் இந்தப் பக்கம் ஒரு பொய்யுமாக அசையாமல் இருக்கிறது வாசல் கதவு உண்மையின் துருப்பிடித்த மௌனத்துடன்.
கடிகாரத்தில் எப்போதும் வேகமாக சுத்துகிற மூன்றாவது முள்ளைப் பற்றி எழுதிய கவிதையின் காரணமாக அதையே புத்தகத்தின் தலைப்பாக வைத்துள்ளார் ஆசிரியர். தன் கையில் ஊர்ந்த பூச்சியை அடிக்காமல் போனதால் அந்த நேரத்தில் கடிகாரத்தில் சுத்திக் கொண்டிருந்த மூன்றாவது முள் கருணையின் பெயரில் சுற்றுகிறது என்ற கவிதையை படித்ததும் எனக்கு பிடித்துப் போனது.
ஒரு படித்துறையில் அமர்ந்து "நான் நான் தானா" என்று கேட்ட தருணம், தான் என்னும் எண்ணமே ஒரு மாயைப்போல் தோன்றியது.
தன்னைச் சுற்றியுள்ள இயற்கையின் வர்ணனைகள் - தினம் தினம் வடிவம் மாறும் மேகக் கூட்டங்கள், நெருங்கியவரின் அழுகையைக் காணும்போது ஏற்படும் கனத்த துயரம், பல தடவை நாம் பார்த்த ஒருவர் நம்மை கண்டுகொள்ளாது கடந்துபோகும் போது ஏற்படும் வித்தியாசமான உணர்வு, அறுப்பு ரொட்டியை குடும்ப உறவுகளின் அன்போடு ஒப்பிடுவது மற்றும் பூனை வளர்ப்பு என பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றிய கவிதைகள் அடங்கியுள்ளது.
இரண்டாவதாக நான் படிக்கும் கல்யாண்ஜி அவர்களின் கவிதை தொகுப்பு. நுண் உணர்வுகளின் கூடாரமாக 52 கவிதைகள். அருமையான படைப்பு.