எறும்புகள் ஆறு கால் மனிதர்கள். மனித இனத்துக்கு மிக நெருக்கமான இனம் சிம்பன்சி அல்ல, எறும்புகள்தாம். உலகின் முதல் விவசாயி, முதல் நெசவாளி, முதற் பொறியாளர் மனிதர்களல்ல, அவையும் எறும்புகள்தாம். நமக்கு உணவு, உடை, இருப்பிட அவசியத்தைக் கற்றுத் தந்ததும் எறும்புகள்தாம். ஒரு மனிதருக்கு ஈடாக ஒன்றரைக் கோடி எறும்புகள் இவ்வுலகில் உள்ளன. தம் உடல் எடையை விட 50 மடங்கு எடையைச் சுமக்கக் கூடியவை எறும்புகள். மனிதரால் இருமடங்குதான் சுமக்க முடியும். இத்தகைய பெருமைமிக்க எறும்புகளையே நாம் கொன்றொழிக்கிறோம்.
சூழலியலாளர் நக்கீரன், உத்வேகம் பெற்றுவரும் பசுமை இலக்கியத்தின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவர். கவிஞர், குழந்தை இலக்கியவாதி, பேச்சாளர் என பல முகங்கள் கொண்டவர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு 'அ.முத்துலிங்கம் கட்டுரைகள்' படித்துக் கொண்டிருந்தேன். அதில் அ.மு. எறும்புகளைப் பற்றி அருமையான ஒரு கட்டுரை எழுதியிருப்பார். அதன் மூலமாகவே எறும்புகளுக்கு இரு வயிறு உண்டென்று அறிந்துகொண்டேன். ஒரு வயிற்றை தனக்காகப் பயன்படுத்திக் கொள்ளுமாம். மற்றொரு வயிற்றில் உணவினை சேர்த்துவைத்துக்கொண்டு பிற எறும்புகளுடன் பகிர்ந்து கொள்ளுமாம். இதனை படித்தப் பின்பு எனக்கு எறும்புகளின் மீது பெரும் மதிப்பு ஏற்பட்டுவிட்டது. அதன் பிறகு எறும்புகளை நிறைய கவனிக்கத் தொடங்கினேன். மற்றவற்றைவிட சாமி எறும்புகளை எனக்கு இன்னும் நிறைய பிடிக்கும். பாவம், கடிக்கத் தெரியாத எறும்புகள்...மழலை எறும்புகள். வழிதெரியாமல் சிலவேளைகளில் என் மீது ஏறிவிடும். அதற்கு வலிக்காமல் தட்டிவிடுவேன். பின்னர் அதுபாட்டுக்குச் சென்றுவிடும். நல்ல உயிரினம்.
அ.மு.வினுடைய கட்டுரையைப் படித்த பிறகு எறும்புகளை பற்றி இன்னும் நிறைய அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அதன் பயனாய் இன்று படித்ததுதான் நக்கீரன் எழுதிய "எறும்புகள்: ஆறு கால் மனிதர்கள்". இந்நூலினை படிக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வெறும் முப்பது பக்கங்கள்தான். ஆனால் எறும்புகளைப் பற்றி நிறைய அறிந்துகொள்ளலாம்.
சிறிய குழந்தைகள் இந்நூலினைப் படிப்பது நன்று. பெரிய குழந்தைகள் இந்நூலினைப் படிப்பது அதனிலும் நன்று. இதனைப் படித்தால் நீங்களும் சாமி எறும்புகளை கொல்ல மாட்டீர்கள். பாவம், தட்டிவிட்டாலே அதுபாட்டுக்கு சென்றுவிடும் எனும்போது அதை தேய்த்துக் கொல்வானேன்?
பிற உயிர்களைப் பற்றி அறிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் அவற்றை தேவையில்லாமல் வருத்துவதை நாம் நிறுத்துவோம். டோடோக்கள் இவ்வுலகிற்கு அடுத்தமுறை வரும்போது, நாம் அவற்றுடன் சேர்ந்து வாழ்வதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
புரிதலில் இருந்து வருவதே கனிவு. கனிவிலிருந்து கற்பதே அறம். அறமே வாழ்வின் முழுமை. முழுமையடையா மனதிற்கு அமைதி எப்போதும் கிட்டாது.