* கடைசியாக நான் எழுதிய புத்தகப்பதிவு கடந்த வருடம் பிப்ரவரி மாதம். ஓராண்டிற்கு பிறகு நண்பர்களை காண்பதில் மகிழ்ச்சி 🙂 *
இந்த வருடம் நான் படிக்க ஆரம்பித்த புத்தகம் இது. ராஜம் கிருஷ்ணன் அனைவரும் அறிந்திருப்பீர்களா என்று தெரியாது. தமிழ்நாட்டின் முக்கிய பெண்ணிய எழுத்தாளர்களில் ஒருவர்.
எளிய மனித வாழ்க்கையின் பல்வேறு சிக்கல்களையும், பிரச்சனைகளையும், அவர்களின் உழைப்பு சுரண்ட படுவதையும், குறிப்பாக பெண்களின் துயரங்கள், அவலங்கள், போராட்டங்களை அரசியல், சமூக, பொருளாதார களத்தில் கையாண்ட ஆளுமை இவர்.
"உயிர் விளையும் நிலங்கள்" - ஹிந்து மத புராணங்களில் பெண்களின் நிலைகளை பேச ஆரம்பித்து, மக்கள் தொகைப் பெருக்கக் கட்டுப்பாட்டில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், திருமணம், குடும்பம், அரசியல், சமூகம் என்ற பெயரால் அவர்களின் உரிமை பறிக்கப்படுவதையும் தெளிவாக அலசுகிறது.
ஒரு பெண்ணின் தாய்மை, மகப்பேறு அடைவது, கற்பு, கருத்தடை என்று அனைத்தும் ஆணாதிக்க கோட்பாட்டில் அவர்கள் அடிமையாக்கப்படுவதை பற்றி பேசுகிறார்.
ஒரு பெண் பூப்படைந்து முதல் மாதவிடாய் முதல் குழந்தை பிறப்பு வரை அனுபவிக்கும் வலிகளையும், அவள் கருவுறாமலோ / வேண்டாம் என கலைக்கும் போது இந்த சமூகம், அவளின் நடத்தையை எப்படி மதிப்பீடு செய்கிறது என்பதை வலியுடன் விவரிக்கிறார்.
அன்றும் இன்றும் இந்திய பெண்களின் நிலையை அறிய, பெண்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்