Jump to ratings and reviews
Rate this book

ஒரு கடலோர கிராமத்தின் கதை [Oru Kadalora Kiramathin Kathai]

Rate this book
Oru Kadalora Kiramathin Kathai (Modern Tamil Classic Novel)

Audiobook

First published January 1, 1988

31 people are currently reading
373 people want to read

About the author

Thoppil Mohamed Meeran

15 books13 followers
Thoppil Mohamed Meeran was an Indian Nagercoil based author who wrote in Tamil.

Meeran was awarded the Highest Indian Government award for Literature, Sahitya Akademi Award in 1997 for his novel Saivu Narkali (The Reclining Chair). He also received the Tamil Nadu Kalai Ilakkiya Perumantam Award, the Ilakkiya Chintanai Award, and the T N Govt. Award. He published six novels and seven short story collection.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
55 (33%)
4 stars
81 (50%)
3 stars
17 (10%)
2 stars
4 (2%)
1 star
5 (3%)
Displaying 1 - 19 of 19 reviews
Profile Image for Satheeshwaran.
73 reviews222 followers
July 3, 2022
நாவல் பற்றிய சுருக்கமான அறிமுகம், மீரான் அவர்களின் புனைவு உலகம், தமிழ் இலக்கியத் தளத்தில் அவரின் முக்கியத்துவம் என மனதில் பட்டதைப் பேசியிருக்கிறேன்.

YouTube காணொலியாக:
https://youtu.be/4HFRvWzgRJ8
Profile Image for Sharavanan Kb.
35 reviews26 followers
November 14, 2021
ஏமாற்றுபவன் வாழ்வான் ஆனால் அவன் வம்சம் வாழாது சில நாட்களுக்கு முன் ஒரு காரின் பின்புறம் எழுதபட்டிருந்த வாசகம் கிட்டதட்ட அதே நீதியை நினைவுபடுத்தும் கதை இது.

கடலோர இஸ்லாமிய கிராமம் தேங்காய்பட்டினம் அதில் வாழும் வடக்கு வீட்டு முதலாளி அகமது கண்ணு அவரது அதிகார வெறியால் அவர் செய்யும் செயல்கள் பின்பு அவரது வீழ்ச்சி இவையே இந்த நாவல் .

ஆனால் இந்த புத்தகம் தனிதுவம் பெறுவது தீவிர மத நம்பிக்கை எவ்வாறு மூட நம்பிக்கைகளை துன்பத்தை, ஏமாற்றத்தை , கொடுமைகளை உருவாக்குகிறது என்பதை கதையினுடே காட்டும்விதம் அதை வேற்று மதத்தவர் செய்தால் ஏற்றுக்கொள்ள கடிணமாக இருந்திருக்குமோ என்னவோ எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மிரானே தன் மதத்தினரின் களைய வேண்டிய சில நம்பிக்கை, பழக்கங்கள் பற்றி கூறி மத, சாதி பற்றுகளை கடந்து வாசகனுக்கு உண்மையை வழங்கும் உயர்ந்த கடமை எழுத்தாளனுக்கு உண்டு என உணர்த்தியிருக்கிறார்.

இன்று புகழ்பெற்று விளங்கும் பல சாமியார்களின் கோவில்கள் எவ்வாறு உருவாகியிருக்கும் என்பதை சாதாரண மணிதன் அஸனார் லப்பை எப்படி தங்கல் என்பவருக்கு கட்டுகதைகளின் மூலம் பெரிய மசூதியை உருவாக்கினார் என்பதை வாசிக்கும் போது புரிந்துகொள்ள முடிகிறது.

மதங்களின் பேரால் நடக்கும் கொடுமைகளை எதிர்க்க அழிக்க தைரியமும் , தெளிவும்தான் வழி என்பதை மகமது என்ற கதாபாத்திரம் மூலமும் , மூடநம்பிக்கை, அடிமைதனத்திலிருந்து மீள கல்வியே சிறந்த வழி என்பதை மொய்தீன் என்ற பாத்திரம் மூலமும் விளக்குகிறார். 

முதலாளியின் அதிகார திமிரில் தொடங்கி அவரது மகளின் தற்கொலையில் முடியும் இந்த அருமையான சாகத்திய விருது வென்ற  நாவல் இஸ்லாமிய வட்டார வழக்கில் எழுதபட்டுள்ளது ஆனால் அது வாசிக்க புரிந்துகொள்ள கடிணமானதாக இல்லை. 
Profile Image for Muthu Vijayan.
37 reviews14 followers
January 27, 2024
வடக்குவீட்டு அகமதுக்கண்ணு முதலாளி எனும் அதிகாரத்தின் வீழ்ச்சியினூடாக தீவிர மத நம்பிக்கை மற்றும் மூடநம்பிக்கைகளால் நிறைந்த ஒரு இனக்குழுவின் 'சமூக மாற்றத்தை' சொல்லக்கூடிய நாவல்.

Pure reading pleasure தரக்கூடிய நடை

நாவலிலிருந்து:

"மேக்கு வீட்டுக்காரங்க வீடு இடிச்சுக் கட்டப் போறாணு கேள்விப்பட்டேன் உள்ளது தானா?"

"உள்ளது தான்"

"நீ ஏன் என்கிட்ட இதச் சொல்லல?"

"தெரிஞ்சிருக்கும்னு நெனைச்சேன்"

"சரி, வீட்டுக்கு முகப்பு எந்தப் பக்கம்?"

"நம்ம வீட்டுக்குப் பின்னாடி."

"அப்படின்னா, நம்ம வீட்டுக்குப் பின்னாடி மேக்கு வீட்டுக்க முகப்புக்கு நேரா ஒரு தண்டாசு (கக்கூஸ்) வெட்டணும்"

"ஓ"

"தண்டாசுக்க நாத்தம் அங்க அடிக்கணும்"

"ஓ"

"அப்படின்னா குட்டன் மேஸ்திரியை ஏற்பாடு பண்ணப் போலாம்."
//

(வடக்கு வீட்டு அகமதுக்கண்ணு முதலாளியின் முன் அடங்க மறுக்கிறான் சுறாப் பீலி வியாபாரம் செய்யும் மஹ்மூது)

"மஹ்மூதின் மனைவி வாசல் மறைவிலிருந்து இதையெல்லாம் கேட்டாள்.

"வடக்கு ஊட்டு முதலாளியில்லியா கூப்பிடுது. போய்க் கேட்டா என்ன?"

"எதுக்குப் போவணும்? அவன் செலவுலயா நான் இருக்கேன்."

"முதலாளி இல்லையா?"

"முதல் இருந்தா அவன் பெண்டாட்டிக்கும் பிள்ளைக்கும் நல்லது."
Profile Image for Arunmozhi Ganesan.
108 reviews23 followers
November 13, 2017
சுதந்திரத்துக்கு முந்தைய ஒரு கடலோர கிராமத்தின் வழியாக அக்கால இஸ்லாமிய சமூகத்தின் பதிவாகவே இந்நாவலை கருத நேர்கிறது. வெகு சில புத்தகங்களே வாசிக்கும் பொழுது மன சஞ்சலங்களுக்கு இடமளிக்காமல் ஒரு நிறைவை தரும். அது ஒரு கடலோர கிராமத்தின் கதை மூலமாகவும் உங்களுக்கு கிடைக்கலாம்
Profile Image for Thirumalai.
89 reviews13 followers
June 30, 2019
தமிழ் இசுலாமிய வாழ்க்கை அல்லது குறிப்பாக தெற்கில் உள்ள தேங்காய் பட்டிணம் என்ற ஒரு கிராமம் மற்றும் அதில் வாழும் மக்களைப்பற்றி மிக முக்கியமான நாவல்.

கதையில் வரும் வட்டார வழக்குகளுக்கு தனியாக அர்த்தங்கள் கொடுக்கபட்டுள்ளன.
Profile Image for Vairamayil.
Author 0 books22 followers
March 10, 2023
Unexpected surprise. நாகர்கோயில் முசுலீம் வட்டார நடை. முதலாளியின் வறட்டு கௌரவம்,தனிமனித சுயசிந்தனை, ஒரே கேள்வியில் புத்திசாலி ஆகத்துடிக்கும் மக்கள், மூடநம்பிக்கையுடன் மந்தப்படத்தப்பட்ட சிற்றூர் நிலை, கல்விப்புறக்கணிப்பு, normalized slutshaming handled very differently!
Profile Image for Ahmed Yahya Ayyaz.
28 reviews1 follower
January 26, 2023
தோப்பில் முஹம்மது மீரானின்
"ஒரு கடலோர கிராமத்தின் கதை " புத்தக விமர்சனம்

எங்கிருந்து தொடங்குவது..? ஹ்ம்ம் ஆற்றங்கரையிலிருந்தே துவங்கலாம். அதுதானே எல்லாவற்றையும் பார்த்து எந்தக் கவலையுமின்றி ஓடிக் கொண்டிருக்கிறது. சிறுவர்களின் விளையாட்டினை, மதரஸாவினை கட் அடித்துவிட்டு ரெண்டுக்கு என பொய் சொல்லி கைலியை அவிழ்த்து மீன் பிடிக்கும் அழகியலை, லெப்பெ மோதின் பின்னாலே வந்து சிறுவர்களை வெளுக்கும் கொடூரத்தினை, மொஹல்லாதீவு தங்களிடம் ஏமாற வந்து கொண்டிருக்கும் கூட்டத்தினை, பெரும் வெள்ளத்தின் போது கொத்துக் கொத்தாக மிதந்து வரும் உடல்களை , உடமைகளை, சிலபோது வடக்கு வீட்டு முதலாளியின் ஏவலில் கொல்லப்பட்ட பிணங்களை, சில போது ஆயிஷாவை..? அந்த ஆறு எல்லாவற்றையும் பார்த்திருக்கிறது. ஒரு இளம் வயது பெண் தனது கண்முன்னால் தன் வாழ்வு நொடிந்து போனதை கடைசியாக பகிர்ந்து கொண்டதும் இந்த ஆற்றிடம் தான்.

சிலபோது நான் கற்பனை செய்து பார்ப்பதுண்டு, ஏன் பரீது சிலோனுக்கு போக வேண்டும்..? ஏன் ஆயிஷா ஆற்றுப்பள்ளிக்கு அருகில் உள்ள ஆற்றின் பாறை மேல் நள்ளிரவில் நிற்க வேண்டும்..? வைக்கம் முஹம்மது பஷீரின் பால்யகால சகியில் மஜீது கால் ஒடிஞ்சு போனதும், சோகரா மரிச்சு போனதும் போல. ஏன்..? அவர்கள் தங்களுக்கு பிடித்தவர்களோடு வாழக் கூட இலக்கியங்களால் இடம் தர முடியாதா.?

மஹ்மூதை போன்று ஊரில் ச��லர் இருக்கத்தான் வேண்டும். ஆதிக்கத்தை எதிர்ப்பதை, அதன் கொட்டத்தை எந்த அடாவடித்தனமும் இன்றி லேசாக கடந்து போவதின் ஊடாக ஒடுக்கும் நபர்கள் ஒவ்வொரு கிரமாங்களிலும் வாழ்கிறார்கள். சிறுவர்களின் பால்யகால சின்னசிறு ஆசைகளை உதாசீனப்படுத்த ஒவ்வொரு கிராமத்திலும் மீசை மம்மாசீனைப் போன்று சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் கிராமத்தில் நல்லது/கெட்டது களின் கத்தம்/பாத்திஹா வின் போது வழங்கப்படும் ஊர்சோறில் சிறுவர்களை அனுமதிப்பதே இல்லை, எல்லாம் தீர்ந்துபோனபின் மிச்சம் மீதிதான் அவர்களுக்கு. பசி என்பது பெரியவர்களுக்கு மட்டும் உடையதா என்ன.?

இந்த நாவலில் இடம்பெற்றுள்ள ஜின்களை பற்றிய வர்ணனை எனது பால்யத்தை நினைவூட்டுகிறது. எனது நண்பன் ஒருவன் தான் ஜின் சூராவை இரவில் ஓதி 40நாள் விடிய விடிய வாசலிலே படுத்திருந்ததாகவும் அதன் மூலம் தனக்கு ஜின் வசப்பட்டுவிட்டதாகவும் கதை விட்டான். சிலர் நம்பினர், சிலர் நகைத்தனர். ஒரு நாள் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது ஒரு சிறுவனின் மலவாய்க்கு சற்று தள்ளி ஒரு சிப்பியோ, முள்ளோ கீரீ இரத்தம் வந்து கொண்டிருந்தது. வீட்டிற்கு தெரிந்தால் திட்டோடு அடியும் கிடைக்கும். உடனே ஜின்னை அடக்கி வச்ச நண்பன் நான் தான் ஜின்னை ஏவி விட்டேன். அதான் அடிச்சிருச்சி இதை குணப்படுத்த வேண்டுமெனில் மாலை முறுக்கு, மிக்சர், ஊறுகாய் எல்லாம் வாங்கி வர வேண்டும் என உத்தரவு போட்டான். அப்படியே அந்த சிறுவனும் வாங்கி கொடுத்தான். அதே போன்று ஜின்களின் பெயரைச் சொல்லி தங்கள்மார்கள் செய்யும் தகிடுதத்தங்களையும், முட்டை ஓதி வைத்தியம் பற்றியும் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது இந்நூல்

இந்நூலில் ஒவ்வொரு பாகத்தின் தொடக்கத்திலும் இயற்கை குறித்து தோப்பில் மீரான் ஒருபத்திக்கு வர்ணனையை சொல்வார். அது அழகியலின் உச்சம் எனலாம். மாட்டுவண்டி காளை, பூமி, அரபிக்கடல், மழை இரவு, குளிர்காலம் என வர்ணனை அவ்வளவு அழகானவை. அதில் ஒரு வரி இப்படி வரும் "குளிர்ந்த இரவு, குளிர்ந்த காற்று, பிந்தி உதித்த சந்திரன், தென்னை ஓலைகளினூடே உதித்த வெள்ளி நாணயங்கள் விழுந்து கிடக்கும் முற்றம்."

சுற்றிலும் நான் இருக்கிறேன். ஆனால் நான் பிரதிபலிக்கப்படவே இல்லை. கலை , அரசியல், இலக்கியம் என புறக்கணிக்கப்பட்டு அனாதையாக உணர்ந்த போதுதான் என் வாழ்வியலை தாங்கிய கதாபாத்திரங்களை பேசும் இலக்கியங்களை தேடினேன். அப்படித்தான் ஹசனை அடைந்தேன், பின்பு பஷீர், பின்பு தோப்பில். இப்படித்தான் தோப்பிலின் கடற்கரைக்கு நான் வந்தேன். அங்கே என்னைப் போன்றே ஒரு சிறுவன் இருக்கிறான். என்னைப் போன்றே நிறைவேறாத ஆசைகளை ஏந்தி, விம்மிக் கொண்டிருக்கும் பலர் இருக்கிறார்கள். என்னைப் போன்றே மதரஸாவில் லெப்பை மோதீனை கிண்டலடிக்கும் பலர் இருக்கிறார்கள். ஒட்டுபீடியக் கூட பத்திரமாக வைத்திருக்கும் உசேன் பிள்ளையைப்போல என் கிராமத்திலும் சிலர் இருந்தார்கள்.

இந்த நாவலை வாசித்த பின் எத்தனையோ கதாபாத்திரங்கள் இதில் வந்து சென்றாலும், இறுதியாக ஆயிஷாவும், பரீதும்தான் நினைவில் நீங்காமல் இருக்கிறார்கள். பஷீரின் மஜீதும், சொகாராவும் போல. எல்லோருக்கும் துரோகம் செய்கிற முதலாளிமார் இருக்கும் போது, எல்லோரையும் ஏய்த்து பிழைக்கும் தங்கள்மார் இருக்கும்போது, ஆயிஷாவும், பரீதும் இருந்தாலென்ன.? ஒன்று கூடி வாழ்ந்தால்தான் என்ன.? ஒருவேளை பரீது சிலோனிலிருந்து வந்தபின்பு நிச்சயம் ஆயிஷா இருக்கமாட்டாள்.! கிருக்குப்பய பரீதுஅப்பொழுதும் இதைத்தான் சொல்வான் " நீ.. போனா என்ன நான் உன் நினைப்புலேயே வாழ்ந்துருவேன்".

தேங்காய் பட்டினத்தை சுற்றிய கடலோர கிராமத்தின் வட்டார வழக்கு சொற்கள் இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. முஸ்லிம்களுக்கு மத்தியிலான வட்டார வழக்கும், மாற்று மதத்தினருக்குண்டான வட்டார வழக்கும் வேறுபடுகிறது. அதனை அழகாக கையாண்டுள்ளார் ஆசிரியர். சில இடங்கள் மிகைப்படுத்தி சொல்லப்பட்டாலும் இறுதியில் இது ஒரு புனைவு என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும். புத்தகம் வாசிப்போரை நித்திரை கொள்ளச் செய்யாது, உங்களை இழுத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

வல்லோன், தோப்பில் முஹம்மது மீரானின் மறுமை வாழ்வை பொருந்திக் கொள்வானாக.. ஆமீன்.

புத்தகம்: #ஒரு_கடலோர_கிராமத்தின்_கதை
ஆசிரியர் : தோப்பில் முஹம்மது மீரான்
பக்கம் : 215
விலை : ₹175
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
Profile Image for Kalaiselvan selvaraj .
134 reviews18 followers
August 5, 2019
மூடநம்பிக்கைகள் அதிகமான இருந்த காலகட்டத்தில் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வசித்த ஒரு கடலோர கிராமம் ஒன்றில் அதிகார பலம் உள்ள மனிதர் வடக்கு வீட்டு அமதுக்கண்ணு முதலாளி. தன் கட்டளைக்கு ஊர் கட்டுப்படுவதை நினைத்து மகிழ்ந்திருக்க ஊரில் மஹ்மூத் என்பவர் இவரை எதிர்த்து பேசுகிறார் இவரின் செயல்களை எதிர்க்கிறார். ஊரில் அரசு, பள்ளிக்கூடம் ஒன்றை நிறுவ முதலாளியிடம் அவரின் நிலத்தை கேட்க்கிறது. இங்கிலிஷ் பள்ளியை ஊரில் நிறுவ எதிர்பதோடு நிலம் தரவும் மறுத்துவிடுகிறார் முதலாளி. அறியாமையின் இருள் அகல கல்வி அறிவு நமக்கு வேண்டும் அதற்கு இங்கு ஒரு பள்ளி வேண்டும் நான் என் நிலத்தை பள்ளிக்கூடம் கட்டத் தருகிறேன் என மஹ்மூத் முடிவு செய்து தனது நிலத்தை அரசு பள்ளிக்கூடம் அமைக்க தானமாக தருகிறார். இந்த நிகழ்வு மஹ்மூத்தை பழிவாங் வேண்டும் என்ற எண்ணம் முதலாளிக்கு முதல் குறிக்கோளாக அமைய காரணமாகிறது. அதிகார பலத்தின் அழிவே ஒரு கடலோர கிராமத்தின் கதை. -கலைச்செல்வன் செல்வராஜ்

ஒரு கடலோர கிராமத்தின் கதை - நெகிழ்சியான சில வரிகள்;

“உப்பு அழுகினால் உலகத்தில் மருந்துண்டா?”

குளிர்ந்த இரவு. குளிர்ந்த காற்று. பிந்தி உதித்த சந்திரன். தென்னை ஓலைகளினூடே உதித்த வெள்ளி நாணையங்கள் விழுந்து கிடக்கும் முற்றம்.

“கழித்த புடிச்சா என்ன”
“மரிப்பாங்கோ”
“மரிச்சா ஒனக்கென்ன?”
“எனக்கென்னவா?”
“மச்சான் மரிக்கக் கூடாது. ஹயாத்தோட இருக்கனும்”
“எதுக்கு?”
“எனக்காக”
“ஒன் கல்யாணத்துக்குப் பாத்திரம் கழுவவா?”
“இல்ல மச்சான்”
“தண்ணி எடுக்கவா?”
“இல்ல... இல்ல...”
“பின்ன எதுக்குன்னு சொல்லு!”
“மச்சானுக்கு என்ன விருப்பமில்லியா?”
“நீ என் மாமா மவ, பின்ன விருப்பமில்லாமலா இருக்கும்!”
“என்ன எப்படி விரும்பியோ?”
“நீ நல்ல சிவப்பு, நீ சிரிச்சா நல்ல அழகு.”
“நான் கறுப்பாயிருந்தேண்ணா?”
“நீ என் மாமா மவ கறுப்பானாலும் எனக்கு விருப்பந்தான்”
“மாமா மவ ஆனதுனாலதான் விருப்பமா?”
“ஆமா, நான் வேற ஒரு பொண்ணு முகத்தையும் பார்க்கவும் மாட்டேன், பேசவும் மாட்டேன்.”
“அப்பொ என்கூடப் பேசுறது?”
“மாமாக்க மவ ஆனதுனாலே”
“மச்சானுக்கு என்ன விருப்பமில்லியா?”
“விருப்பமுண்ணு சொன்னேன்லா”
“அப்படிப்பட்ட விருப்பமில்ல.”
“பின்ன எப்படிப்பட்ட விருப்பம்?”
“என்ன கட்ட விருப்பந்தானா?”
“அல்லா! அதா?”
“ஆமா”
“மாமாவுக்கு தெரிஞ்சா என்ன கொன்னு போடும்”
“எதுக்கு”
“உன்ன கட்டணும்னு சொன்னா. மாமா உனக்கு வேற மாப்பிள்ளை பாக்காரு”
“என்ன?”
“ஆமா! பெரிய பணக்காரனெ. கல்யாணம் நடந்தா நான் வென்னி போட்டுத் தருவேன்.”
“யாருக்கு?”
“உம் புது மாப்பிள்ளைக்கு”
“எம் புது மாப்பிள்ளைக்கா?”
“ஆமா, பெரிய பணக்காரன்.”
“பெட்���ி நிறைய துணியும், சோப்பும், பூவெண்ணெயும் கொண்டு வருவாரு. எனக்கு கொஞ்சம் பூவெண்ணெய் தருவியா?”

இதைக் கேட்டதும் அவள் உள்ளத்தில் ஏக்கத்தின் சிற்றிலைகள் உயர்ந்தன. களங்கத்தின் கறைபடியாத பரீதின் உள்ளத்தை நினைத்த போது அவள் மனம் வருந்தியது. வேதனையைக் கடித்து அமர்த்தினாள். பாவம்! குழந்தை உள்ளம்! கள்ளம் தெரியாத வெள்ளை உள்ளம்!.

ஆயிஷா நீ என்ன மறந்திடு! நான் பைத்தியக்காரன், ஆனா நான் உன்னெ மறக்க மாட்டேன். இந்தச் சங்கில் உயிருள்ள வரை உன்னெ நான் என்னைக்கும் நினைச்சுக் கொண்டேயிருப்பேன்.

வடக்கு வீட்டு அமதுக்கண்ணு முதலாள���யின் வீழ்ச்சி! அந்தக் கண் பார்வையில் குடிகொண்ட கட்டளைத் திறனின் இடத்தில் பொருளற்ற பார்வையின் பொய்க்கோலம். சக்திவாய்ந்த பொருளடங்கிய சொற்களைப் பொழிந்த அந்த நாவில் முன்னுக்குப் பின்னானா பயன்ற்ற சொற்கள் உளறி வீழ்கின்றன.

-தோப்பில் முஹம்மது மீரான்
Profile Image for Ananthaprakash.
83 reviews2 followers
April 22, 2024
ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முஹம்மது மீரான்

முதலாம் உலகப் போர் முடிவுக்கு பின்னான ஒரு கடலோர கிராமம் - தேங்காய்ப்பட்டினம். அங்கு வாழும் கடலோர இசுலாமிய மக்களின் வாழ்வியல், தீவிர மத நம்பிக்கை, அறியாமை, மூடபழக்க வழக்கம் அதனால் அந்த கிராமத்திற்கும் அதன் மனிதர்களுக்கும் ஏற்படுகிற மாற்றங்கள் இது எல்லாமும் தான் இந்த நாவல்.

இந்த நாவல் நடக்கிற நிலமோ இல்ல  கதாபாத்திரங்களின் வாழ்வியலோ எனக்குக் கொஞ்சம் கூட பரிச்சயம் இல்லாத ஒன்றா இருந்தாலும், படித்து முடித்ததும் ஏனோ தேங்காய்ப்பட்டினமும் அதன் மனிதர்களும் மனதிற்கு நெருக்கமான ஒன்றாக மாறிப்போயின.

அதிலும் முக்கியமாக பரீதும், ஆயிஷாவும், அவர்களின் களங்கமில்லா காதலும், ஆயிஷா கூட இனிமே நான் சண்டையென்று குழந்தை மாதிரி கோவித்துக்கொண்டு போகிற பரீதையும், அதை பார்த்துக் குலுங்கிக் குலுங்கி சிரிக்கிற ஆயிஷாவையும், அந்த காட்சியையும் ஒரு போதும் என்னால் மறக்கவே முடியாது.

ஊருடைய முதல் கூடி வடக்கு வீடு முதலாளி அஹமது கண்ணு அவருடைய அதிகார வெறியும், சுயபெருமையை நிலைநாட்ட அவர் செய்கிற காரியங்களும் அதனால் அவருக்கு  ஏற்பட்ட வீழ்ச்சியும் தான் கடலோர கிராமத்தின் கதை.

ஊரே அடங்கிப் போகிற முதலாளி முன்னாள் அடங்க மறுக்கிற மஹ்முது, அறியாமையிலிருந்து மீளக் கல்வி தான் ஒரே வழியென்று நினைக்கிற மஹ்பூப்கான், எந்த இன்பத்தையும் பார்க்காமல் விதவை ஆன நூஹ் பாத்துமா, தன்னோடு சுய இச்சையைத் தீர்க்க மதத்தை பயன்படுத்திக்கொண்ட தங்கள், கட்டுக்கதைகளை மட்டுமே வைத்து ஆதாயம் தேடிக்கிற அசனார் லெப்பை, அகமது ஆசானின் சுக்கு நீர் கடை, உஸன்பிள்ளையின் நியாயவிலைக்கடை, கணக்கர் அவுக்காரு இப்படி இரத்தமும் சதையுமாக அத்தனை மனிதர்கள் நாவல் முழுவதும்.

இசுலாமியச் சமூகத்தின் இருண்ட பக்கங்களைப் பத்தி பேசுகிற இந்த நாவல் - அது எதையும் பிரச்சார நெடிலையோ, சீர்திருத்த பாணியிலோ பேசலை மாறா அறியாமையால் மூழ்கிக் கிடக்கிற மனிதர்களின் வாழ்வியல் எதார்த்தமாகத் தான் பேசுகிறது.

கதாபாத்திரங்கள் செய்கிற குற்றத்தை எல்லாம் அழுத்தமா வைக்கிற அதே சமயத்தில், அதிகாரத்தாலும், அறியாமையாலும் உந்தி தள்ளப்படும் உண்மையான மனிதர்களின் பிரதிகள் தான் இவர்களும் அப்படிங்கிற எதார்த்தத்தையும் சேர்த்தே பேசுகிறது இந்த நாவல்.

அதனால்தான் என்னமோ வெறுத்து ஒதுக்க நினைக்கிற கதாபாத்திரங்களும் கூட மனதுக்கு நெருக்கமானவர்களா மாறி போய்ட்டாங்கன்னு நினைக்கிறேன்.

முதலாளியின் இரக்கமற்ற செயல்களின் மீது கோபப்பட வைக்குறே அதே சமயத்தில் அதன் விளைவா நசிந்து போன அவருடைய குடும்பத்து மேல் பரிதாபமும் பட வைக்கிறது, முதலாளியின் கைப்பாவையா பல குற்றங்களைச் செய்கிற கருப்பன் மீது வெறுப்பு இருந்தாலும் கதையின் பிற்பகுதியில் இத நான் கட்டாயம் செய்ய மாட்டேன்னு முதலாளியை மறுத்து பேசுகிற இடத்தில் அவனுக்கு ஆதரவா நிற்கவும் வைக்கிறது, முதலாளியை எதிர்த்து ஒரு கேள்வி கூட கேட்காமல் விசுவாசமா வேலை செஞ்ச கணக்கர் அவுக்காரு வாயில்லா ஜீவனுக்காகவும், முதலாளியின் குடும்பத்திற்காகவும் கதறி அழுது நிற்கிற நேரத்தில் நம்மையும் கலங்கி நிற்க வைக்கிறது அதுதான் இந்த கதாபாத்திரங்களை இன்னும் உயிர்ப்புள்ளதா மாற்றுவதா நான் பார்க்கிறேன்.

மொத்தமாக ஒரு அரை நூற்றாண்டுக்கு முந்தைய ஒரு இசுலாமியச் சமுகம் - அது பின்பற்றுகிற மூடநம்பிக்கைகளும், பிற்போக்கான பழக்கவழக்கங்களும், அறியாமையும், பெண் அடிமைத்தனமும் எப்படி அந்த சமூகத்தையும், தனி மனிதர்களையும் வீழ்ச்சியின் பாதைக்குக் கொண்டு போகிறதென்று பேசுகிறது இந்த நாவல்.

வெறும் 200 பக்கங்கள் மட்டுமே இருக்க இந்த நாவலின் சட்டென முழுமை பெறாமல் முடிந்த முடிவு மட்டும் ஏனோ மனதிற்கு ஒரு சின்ன ஏமாற்றம்.

மற்றபடி தமிழ் சமுகம் பெரிதும் பேசாத இல்ல நான் படித்திராதா தமிழ் இசுலாமியச் சமூகத்தின் எந்த ஒரு மேல் பூச்சும் இல்லாத வாழ்வியலின் எதார்த்த பிரதி தான் ஒரு கடலோர கிராமத்தின் கதை.
Profile Image for t_for_tippu.
12 reviews3 followers
January 22, 2023
ஒரு கடலோர கிராமத்தின் கதை.!

இஸ்லாமிய வாழ்வியலை இலக்கியப் படுத்திய பெருமைமிக்கவர்களில் தோப்பில் முஹம்மது மீரானும், கீரனூர் ஜாகிர் ராஜாவும் எனக்கு விருப்பமானவர்கள்.

இவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இருப்பதாகவே தோன்றுகிறது.

கீரனூர் ஜாகிர் ராஜாவின் துருக்கித் தொப்பி எட்டுக்கல் பதித்த வீட்டின் வீழ்ச்சியைப் பற்றிப் பேசுவதைப் போல மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதையும் வடக்கு வீட்டின் வீழ்ச்சியைப் பற்றிப் பேசுகிறது.

வடக்கு வீட்டின் முதலாளி அகமதுக்கண்ணு, அவர் மனைவி,மகள் ஆயிஷா, சகோதரி நுஹூ பாத்திமா, அவளின் மகன் பரீது வடக்கு வீட்டில் வசிக்கின்றனர்.
ஊரே அவரின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டுக்கிடக்கிறது. அவரின் உத்தரவுகளை செயலாற்றும் மோதினார் அசனார் லெப்பை,அவுக்காரு,  கருப்பன் போன்ற கதாபாத்திரங்களுடன் ஓஸன்பிள்ளை நியாயவிலை கடை,அகமது ஆசானின் சுக்கு வெண்ணீர்க்கடை,  அந்திக்கடை போன்றவை அப்பட்டினத்தின் அடையாளங்களாக வருகின்றன. மேலும், செய்யிதினா முகம்மது முஸ்தபா இம்பிச்சிக்கோயாத் தங்ஙள் ஒரு பெரிய மகானாகக் கிராம மக்களிடம் செல்வாக்குப் பெற்று இருக்கிறார். மதத்தின் பெயரால் இவர்களைப் போன்றவர்கள் எப்படிக் கிராம மக்களைத் தங்களின் கைக்குள் வைத்திருந்தனர் என்பதை சுயசாதி எள்ளலாகத் தெளிவுபடுத்துகிறார்.

கதையில் நமக்கு நம்பிக்கைத் தரும் மனிதர்களாக வருபவர்கள் சுறாப்பீலி விற்கும் மஹ்மது,ஆங்கிலப் பள்ளி ஆசிரியராக வரும் மெஹ்பூப்கான் இருவரும்தான்.  இருவரும் சுரண்டுப்படும் அச்சமூகம் மாறவேண்டும்,மாற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் அன்றைய இஸ்லாமிய சமூகத்தின் ஒட்டுமொத்த மனவோட்டத்துக்கு எதிராகச் செயல்படுகிறார்கள்.

இஸ்லாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம். அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது  எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெரிந்த நாவல் என இந்நாவலைப்பற்றி சிறப்பாகக் கூறும் எம்.ஏ.நுஃமான்,இந்நாவல் தமிழ் நாவலுக்கு ஒரு புதிய களத்தையும் ஒரு புதிய வாழ்க்கை முறையையும் அறிமுகப்படுத்தி அதன்மூலம் ஒரு புதிய பரிமாணத்தை அளித்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Profile Image for Sathya Narayanan.
44 reviews
December 25, 2025
Oru Kadalora Kiramathin Kathai by Thoppil Mohamed Meeran

This book feels like sitting quietly in a coastal village and listening to life unfold.

Oru Kadalora Kiramathin Kathai is not about big twists or dramatic events. It’s about ordinary people, their routines, their struggles, their faith, and their relationship with the sea. The village itself feels like the main character.

Thoppil Mohamed Meeran’s writing is simple, calm, and deeply rooted in reality. You can almost smell the sea breeze, hear the waves, and feel the slow rhythm of life by the shore. The characters don’t try to impress you—they just exist, and that’s what makes them real.

What stayed with me is the honesty. No exaggeration. No glamour. Just life as it is—hard, hopeful, unfair, and beautiful at the same time.

This is a book to read slowly. Let it sink in. Let it stay.

Perfect for readers who love depth over drama.
Profile Image for Prakash Chella.
3 reviews
November 7, 2025
எளிய மக்களின் முதுகில் வரலாறு முழுதும் சுமத்தப்பட்ட ஒடுக்குமுறைக்கு,
அதன் உருவமாய் நிற்கிறான் ஊர்தலைவர் —
அதிகாரத்தின் கம்பியை கைப்பிடியாய் எடுத்தவன்.

அந்த அதிகாரத்தைப் புண்ணாக உணர்ந்து
அதனை எதிர்த்து எழ முயலும் இரண்டு ஆன்மாக்கள் —
வாழ்க்கை கடல் உப்பைத் தாங்கிய மீன் வியாபாரி,
அறிவின் ஒளியைச் சுமந்த பள்ளி ஆசிரியர்.

அவர்களைச் சுற்றி
ஒரே அச்சத்தில் அடைக்கலம் தேடித் தடுமாறும் கிராம மக்கள் —
அறியாமையே அவர்களின் சங்கிலி,
அச்சமே அவர்களின் தெய்வம்.

அன்பு எனும் விதையைத் தன்னுள் சுமந்து,
அது முளைக்காத மணலில் கூட நம்பிக்கையாய் நின்றிருக்கிறாள் ஒரு பெண் —
அவளே இக்கதையின் உயிர்.

அலைகள் கரையை எத்தனை முறை அடித்தாலும்
அந்த கரை அமைதி போலத் தோன்றும்.
ஆனால் மனித உள்ளம் —
ஒரு நாள் நிச்சயம் வெடிக்கும்.

இந்தக் கதையில் கடலும் சாட்சி, மணலும் சாட்சி,
மனிதன் போராட்டமும் வலி,
அன்பும் வன்முறையும்,
அரசியலும் உயிர்வாழ்வும்
ஒன்றாக கலந்திருக்கின்றன.

அப்படிப் பிறந்த சாட்சிப்படமே —
ஒரு கடலோர கிராமத்தின் கதை. 🌊
Profile Image for Vinothkanna M.
58 reviews
September 10, 2024
என்னவோ தெரியவில்லை, எனக்கு இக்கதையை நெருக்கமாக உணரமுடியவில்லை.. ஒருவேளை புத்தகத்தில் படிக்காமல் போனதாலா என்று தெரியவில்லை.. சில நேரம் அந்த ஊரை மனதில் நன்றாக உணரமுடிகிற அளவிற்கு அமைந்த வட்டார மொழியோடு கூடிய சொல்நடை.. ஆனால் மற்றவர்களுக்கு நிச்சயம் பிடிக்க வாய்ப்புண்டு.. படியுங்கள்
Profile Image for Thirumalai.
89 reviews13 followers
July 18, 2019
மிக அருமையான கதை. முசல்மான்களின் வாழ்க்கை சித்திரம் அருமையாக பதிவு செய்துள்ளார்.
Profile Image for Hamid Shah.
18 reviews1 follower
August 18, 2019
Excellent read. Another fantastic story / read from the author.
Profile Image for Arkam Frz.
55 reviews3 followers
July 28, 2021
மிகவும் அற்புதமான ஒரு படைப்பு...
Displaying 1 - 19 of 19 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.