ஒவ்வொரு கதையும் வெவ்வேறு பயணம். மின்சாரம் - மின்னல் - மயிலிறகு - மாற்றம் - முறுவல் - மௌனம் - முத்தம் - மிதப்பு என எதுவும் தரலாம் ஒரு கதை. என்றபோதும், தருவதல்ல அதன் நோக்கம். மலர்வது மட்டும்தான். அதன் மணம் ஒரு நுழைவாயில்.- கபிலன் வைரமுத்து
புத்தகம்: அம்பறாத்தூணி எழுத்தாளர்: கபிலன் வைரமுத்து பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் பக்கங்கள்: 119 நூலங்காடி: ஈரோடு புத்தகத் திருவிழா 2023 விலை: 100
💫 கபிலன் அவர்களின் படைப்புகளில் நான் வாசிக்கும் முதல் புத்தகம் இது . கதைகள் என் மனதில் இடம் பிடித்ததை விட கதாபாத்திரங்களின் பெயர்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டன. வாமன் பொய்யாமொழி, யாழ்மதி, அறிவுடைநம்பி, மணியமுதன், சீவகன் போன்றவை
💫 வள்ளி- 1806ஆம் ஆண்டு வேலூர் கோட்டையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. பல துரோக கதைகளை நாம் கேட்டுள்ளோம். ஆனால் கோட்டையில் நிகழ்ந்த கலவரத்தில் கொலையுண்ட தன் காதலன் ஓய்மாவுக்காக கிளம்பிய வள்ளியை நாம் நிச்சயம் அறிய வேண்டும்.
💫 யாழ்மதி- மதங்கள் மனிதர்களங மீது நடத்தப்படும் வன்முறையை எதிர்த்து பல்கலைக்கழக மாணவர்கள் நாடகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கருத்துக்கு எதிர் கருத்து கொண்ட மாணவர் குழு வந்து மாணவர்களை தாக்கி காயப்படுத்தியது. பதாகைகளில் ஓவியங்களை வரைய யாழ்மதி தயாரானாள். தாக்குதலை கண்டு அடைந்து அதிர்ச்சியை விட அந்த கூட்டத்தில் அவளுடைய காதலனை கண்டபோது வாயடைத்து போனாள் அவள் .
💫 மணி அமுதன் சிறுவயதில் தனது வீட்டில் மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாடிய நாட்களை நினைத்து தன் மனதை ஆறுதல் படுத்தி கொண்டான். தற்போது வெளிநாட்டு கம்பெனி ஒன்று நல்ல பதவியில் இருப்பவன். கணினி வழியாக எப்போது நினைத்தாலும் தனது வீட்டையும் மொட்டை மாடியையும் பார்க்க முடியும். ஆனால் அந்த சந்தோஷம் ......
💫 15 சிறுகதைகளுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை ஆனால் நம் மனதில் நீங்கா இடம் கொள்ளும்.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி .
வார்த்தை ஜாலங்கள் தவிர பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை.. மூலா னு sci fi கதை சுத்தமா புரியல.. அதை முழுமையாக படிக்க முடியலை. Science related terms தமிழ் படுத்தி புரியாமல் போச்சு..
புத்தகம் : அம்பறாத்தூணி ஆசிரியர் : கபிலன் வைரமுத்து பக்கங்கள் : 120 பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ்
கவிஞர் வைரமுத்து அவர்களின் மகனாக, பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் கபிலன் வைரமுத்துவாக இதுவரை அறிந்தவரை எழுத்தாளர் கபிலன் வைரமுத்துவாக கண்டது புதிய அனுபவமாக இருந்தது.
வெவ்வேறு கதைக்களங்கள் கொண்ட பதினைந்து சிறுகதைகள் அம்பறாத்தூணி யிலிருந்து புறப்பட்டு வார்த்தைகளாக நம் புலன்களை வந்தடைகிறது.
"காணும் யாவையும் அணுவால் ஆனது போல் எல்லா கலை இலக்கிய வடிவங்களுக்குள்ளும் சிறுதுளி சிறுகதை உண்டு. கவிதைகள் எழுத ஒரு மனம் போதும். நாவல்களுக்கு ஒரு களம் போதும். சிறுகதைகளுக்குக் கூடுதலான கதை உளவியல் அவசியமாகிறது. அது கதாபாத்திரங்களின் இயல்பை மதிப்பதில் இருந்துத் தொடங்குவதாக நினைக்கிறேன். ஒவ்வொரு கதையும் வெவ்வேறு பயணம். மின்சாரம், மின்னல், மயிலிறகு மாற்றம், முறுவல், மௌனம், முத்தம், மிதப்பு என எதுவும் தரலாம் ஒரு கதை என்றபோதும் தருவதல்ல அதன் நோக்கம். மலர்வது மட்டும்தான். அதன் மணம் வாசகருக்கு ஒரு நுழைவாயில்."
என்று சிறுகதையின் இலக்கணத்தை கவிதையாக முகவுரையில் வர்ணிக்கிறார்.
" கதைகள் மனிதர்களாலானது எல்லா கதைகளுக்கும் மனிதர்களின் பெயர்களையே சூட்டியிருக்கிறேன். கதை எழுத நான் முயற்சிக்கவில்லை. கதை மாந்தர்களின் உணர்வாடலை முயன்றிருக்கிறேன்." என்று மனம் திறக்கிறார்.
அவர் கதைமாந்தர்கள் பல காலகட்டங்களை, பல நாடுகளை, பல விதமான உணர்வுகளின் குவியல்.
சில கதைகள் உண்மை நிகழ்வுகளின் ஒரு வரித் தகவல்களிலிருந்து சில பக்கங்களாக விரிந்து அவர் கற்பனையில் உதிர்த்தவை.
ஆனால் வள்ளி மாட்டிக் கொள்ளக் கூடாது, டிமிட்ரி தப்பித்து விட வேண்டும், அறிவுடைநம்பிக்கு நிஞ்சா ஹட்டோரிக்கு குரல் கொடுப்பாரா? சிவநேசனுக்கு அந்த ரொட்டித் துண்டு கிடைக்குமா? இருதய பிரகாசத்தைப் போன்ற அன்றாட மனிதர்கள் எப்போது மாறுவார்கள்? என்றெல்லாம் நாம் கதைக்குள்ளும் கதை மாந்தர்களோடும் ஒன்றிவிட வைக்குமளவும் அருமையான எழுத்து நடை.
"சோகமாக இருக்கற மனுஷனுக்கு மிகப் பெரிய ஆறுதலே இன்னொரு மனுஷனோட சோகம்தான்"
என்ற வரிகளில் எதார்த்தம்.
"பகுத்தறிவு என்பது ஆன்மிகத்துக்கு மட்டுமே எதிரானது என்று பொதுப்புத்தியை இவர்கள் பராமரிக்கும் வரை அது ஆதிக்கத்திற்கு எதிரானதாக மாறாது"
என்ற வரிகள் சிந்திக்க வைப்பவை.
" எதற்குமே கலங்காத என் தாய் அன்று அடிபிடித்த தோசை போல் கதி கலங்கினார்."
என்பன போன்ற உவமைகள் அழகு.
மொத்தத்தில் இயல்பான மனிதர்களைக் கொண்டு புனையப்பட்ட எளிய கதைகளின் தொகுப்பு இந்த அம்பறாத்தூணி.
கபிலன் வைரமுத்து அவர்களின் சிறுகதை தொகுப்பு. இந்த அம்பறாத்தூணியிலிருந்து புறப்பட்ட ஒவ்வொரு சிறுகதையும், அம்பின் கூர்மை கொண்டும், எழுத்தில் லாவகம் கொண்டும், சிந்திக்க தூண்டுகின்ற பல சம்பவங்களை ஒன்றாக தைத்த மாலையென கருத்து விதைகளை நட்டு செல்கின்றன. 14 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு, சில இடங்களில் மென்மையாக கடந்து செல்கிறது, சில இடங்களில் வேகமாய் சீறி செல்கிறது, சில சமயங்களில் பல பயணங்களை காட்டி செல்கிறது. சிறுகதை எழுதும் பொழுது மிகப்பெரும் சவாலை இருக்கும் கதைக்களம் ஒவ்வொரு கதையிலும் மிகவும் வித்தியாசப்பட்டு நகர்கிறது. கபிலன் வைரமுத்து அவர்கள் மிக கச்சிதமாக கதைகளை சித்தரித்து கொடுத்திருக்கிறார்.
சில கதைகள் உண்மை சம்பவங்களை தழுவி எழுதியதென குறிப்பிடப்பட்டுள்ளது. சில கதைகள் முழுவதும் புனைவென தெரிகிறது. ஆயினும் வாமன் பொய்யாமொழியும், கோஸ்ட் குருநாதனும், பின்க்மேனும், அறிவுடைநம்பியும், சீவகனும், வள்ளியும், மூலாவும், டிமிட்ரியும், ரய்யானும், நாகமனும், இருதயப்பிரகாசமும், யாழ்மதியும், மணியமுதனும், எல்விசும் - சொல்லுகின்ற கதையின் கரு மிக மிக வித்தியாசமானவை. உள்ளூர கனன்ற சோகங்கள், புன்சிரிப்பு, நகைச்சுவை, எதிர்காலத்துளிகள், மனிதர்களின் யதார்த்தம், கனவுகளின் விலை, துரோகங்குளுக்கான பரிசு, சமூக ஊடகத்தின் பிறழ்வு நிலை, உலகை சீர்குலைக்கும் ஆராய்ச்சிகள், கடந்து போன காலங்களின் நினைவுகள் என்று ஒவ்வொரு கதையின் பாதையும் வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறது.
மணியமுதன் கதையில் வரும் மொட்டைமாடி கிரிக்கெட் என்பது நம்மில் பல பேரின் வாழ்க்கையிலும் இருந்த ஒன்று. கடந்து போன காலத்தின் பிடியில் சிக்குண்டு சிதைவது நினைவுகள் மட்டுமல்ல மொட்டைமாடியின் காலாவதியான வாழ்வும் தானே!
"இன்றும் அந்த குடியிருப்பில் சிறுவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மொட்டை மாடிக்கு விளையாட வருவதில்லை. உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த ராமானுஜம் தாத்தா அங்கே மயங்கி விழுந்து இறந்ததால் அவரது ஆன்மா இன்னும் உடற்பயிற்சி செய்வதாய் நம்பிக்கை. அவ்வப்போது வத்தல் காய்வதற்காக வந்த காமாட்சி பாட்டியும் இனி படியேறக்கூடாது என மருத்துவர் சொல்லிவிட்டார். அந்த வெளி யாருமற்று கிடக்கிறது. அதில் சில அறைகள் கட்டி வாடகைக்கு விடப்போவதாய் தகவல். மனிதர்களுக்கு இருப்பதை போலவே மொட்டை மாடிகளுக்கும் பிறப்பும் இறப்பும் உண்டு."
ஆண் குழந்தையின் வருகைக்கு காத்து கிடந்து, பெண் பிள்ளை பிறந்தது என்றவுடன் வாழ்வின் நடைப்பயணத்தை வேறு விதமான கோணத்தில் பார்ப்பதாய் நினைத்து தன் கர்வத்தை மறைக்க முயன்று தோற்கும் இருதயப்பிரகாசத்தின் கதை கூர் நுனி கொண்ட அம்புதான்!
"சிரித்துக்கொண்டே அவள் தலையைக் கோதினார். கார்லஸ் அவரைக் கட்டிப்பிடித்த போது அவரையும் அறியாமல் அவர் கண்களில் நீர்த்தேக்கம். அது அவர் இதயத்தின் எந்தப் பகுதியில் இருந்து வழிந்தது என்று தெரியவில்லை. மூவரும் சில நிமிடங்கள் கர்த்தருக்கு முன்னாள் கண்மூடி நின்றோம்."
மூலா என்ற கதையில் நியூரோ தேசத்தின் உள் சிறையில் இருக்கும் நாயகன் சொல்லும் சில கருத்துக்கள் ஆணி அடிக்கக் காத்திருக்கும் கைகளின் வலுவுடன் தான் கடந்து செல்லுகின்றன,
"உயிரினங்களின் எலும்பியல் வழி பிரிவை அறியும் ஆராய்ச்சியகம் அங்கே அமைக்கப்பட்டிருந்தது. அதில் வேறொரு செய்தியைக் காண முடிந்தது. இருபதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மனிதர்களுக்குக் கழுத்து எலும்பில் அதிக தேய்மானம். அதற்கு சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்களுக்கு முதுகு எலும்புத் தேய்மானம். முதுகு வளைந்து சாதிக்கு அடிமையானவர்கள் பின்னாளில் கழுத்து வளைந்து கருவிகளுக்கு அடிமையாயினர்."
கொடும்பஞ்ச காலத்தில் நடப்பதை புனைவுடன் காட்டிய சிவநேசன் கதை பரங்கிகளின் சித்திரவதையை உணர்வுக்குள் எய்தி நகர்கிறது.
"விஜயராகவாத் தெருவின் குறுக்குச் சந்தில் அவர்கள் திரும்பிய போது டெம்பிள் ஊதியம் பெறுவதற்காக சத்திர வாசலில் ஒரு நீண்ட வரிசை நின்றிருந்தது. வயது வந்தவர்களுக்கு ஆளுக்கு நாளொன்றிற்கு ஓர் அணாவும் நானூற்று ஐம்பது கிராம் தானியமும் வழங்க சுகாதார ஆணைய அதிகாரிகள் வந்திருந்தனர். வரிசையில் நின்றிருந்த பலரின் கால்களில் ஈரம் காயாத மலக்கழிவுகள். எங்கெங்கோ மிதித்து காலில் வாங்கியவற்றை சத்திரத் தெருவுக்குள் பத்திரமாய் கிடத்தியிருந்தார்கள். ஹூப்பர் தன் கைகுட்டை கொண்டு மூக்கின் துவாரங்களை அழுத்தி மூடினார்.
சொன்னது போலவே ஒவ்வொரு கதையும் வேறொரு உலகிற்கு கொண்டுச்செல்கிறது. குறிப்பாக, நிகழ்கால கதைகளை எழுதுவதில் கபிலன் அவர்களுக்கு தனித்திறமை உள்ளது. எதிர்காலத்தை ஒட்டிய ஒரு கதையும் சிந்திக்கும்படி எழுதியிருந்தார். சிறிய நூலாக இருந்தாலும் பெரிய அனுபவத்தை தந்தது.
'ஒரு காய்ந்த புல்லில் எறும்பின் கால் தடம் பதிந்தது போல்' - என்ற வரிகளுக்கு ஏற்ப சிறுகதையின்றி காய்ந்து கிடந்த என் மனதினுள் அம்பறாத்தூணியின் அம்புகள் பாய்ந்து தனித்துவமான தடத்தை பதித்துக் கொண்டன.