எழுத்து என்பது ஒரு கலை, சாதாரணக்கலையல்ல உலகையே மாற்றிய ஒரு உன்னதக்கலை. இந்த மாற்றம் பேனா பிடித்த அத்தனைப் பேராலும் சாத்தியப்பட்டதில்லை. சாத்தியப்படுத்தியவர்கள் சாத்தியப்படும் என்று எழுதத் தொடங்கியவர்களும் இல்லை. எழுத்தின் மூலம் நல்ல விசயங்களை மனிதர்களுள் கடத்தலாம். எழுத்து ஒருவனை முழுமையாய் திருத்திவிடும் என்று சொல்வதற்கில்லை. அப்படித் திருத்துவதாய் இருந்திருந்தால் தமிழனுக்கு வள்ளுவர் ஒருவரே போதும். எழுத்தின் வேலை ஒருவனைச் சிந்திக்க வைப்பதோ, யோசிக்க வைப்பதோ மட்டுமல்ல அவனை ஆற்றுப்படுத்துவதும், அமைதிப்படுத்துவதும் கூட எழுத்தின் வேலை தான். அப்படி ஒருவன் மனநிலையை சமநிலைப்படுத்த உதவுவதில் சிறுகதைகளின் பங்கும் நிச்சயம் உண்டு.