தமிழில் அறிவியல் நூல்கள் வருவது மிகச் சிலவே. அதிலும் தற்கால தொழில்நுட்ப சம்பந்தமான நூல்கள் வருவது மிக அரிது. ஆசிரியர் பிரபு அவர்கள் அறிவியல் தமிழுக்கு மிகச்சிறப்பான தொண்டு ஆற்றி இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
என் பால்ய காலங்களில் கலைக்கதிர் எனும் தமிழ் மாத அறிவியல் நூல் வெளிவரும். அது இயற்பியல், வானவியல், வேதியியல், உயிரியல் சம்பந்தமான நவினகால கட்டுரைகளில் சுமந்து வரும். அதுபோன்று தாய் மொழியில் வெளிவந்த கட்டுரைகளே என்னை அறிவியலின் நோக்கி செல்ல ஆர்வமூட்டியது.
ஆனால் தற்காலத்தில் தமிழில் அது போன்ற கட்டுரைகள், நூல்கள் வெளிவருவது இல்லாமல் சென்றுவிட்டது. என்னதான் ஆங்கிலத்தில் அறிவியல் நூல்களை படித்தாலும் நம் தாய்மொழி தமிழில் அதைப் படித்து புரிந்து கொள்ளும் அளவிற்கு சிறப்பாக இருப்பதில்லை.
குவாண்டம் இயற்பியல் பற்றிய அறிமுகம் எனக்கு ஏற்கனவே இருந்தாலும், ஆசிரியர் தமிழில் அது எவ்வாறு சொல்வார் என்ற ஆர்வம் என்னை இப்புத்தகத்தைப் படிக்கத் தூண்டியது. ஆசிரியர் மிக சிறப்பாகவே தன் பணியை செய்து முடித்திருக்கிறார்.
குவாண்டம் இயற்பியலை பற்றிய அறிமுகம் தேடுவோரும், அறிந்தோர் அனைவரும் தமிழில் இந்நூலைப் படித்து மகிழலாம். செரிவான தகவல் உள்ள ஒரு முழுமையான புத்தகம்.
ஆசிரியர் இது போன்ற தொண்டினை தமிழுக்கு தொடர்ந்து செய்யுமாறு வேண்டி, அவருக்கு வாழ்த்துக்களை சமர்ப்பிக்கிறேன்.