இளம் கவிஞர்களில் ஒருவரான ஜெ.பிரான்சிஸ் கிருபாவிடம் காணப்படும் புனைவு ஆற்றல் ஒரு வியப்பூட்டும் அம்சமாக இருக்கிறது . அசாதாரணமான ,கரைபுரளும் வெள்ளம் போன்ற கற்பனையின் நம்பமுடியாத செறிவும் பின்னலும் எதற்காக ? வானத்தை முதற்திணை என்று பிதற்றுகிறார் கிருபா . அவரது நிதானமான வரிகளாய்க் கவிதை வெளிப்படும் இடங்களில் காணப்படும் வெளிச்சமானது யோசிக்கத் தூண்டுவதாகும் . மனக்கொந்தளிப்பின் வேர் ஆழமான ஒரு கவிபோதம்தான் என்றே படுகிறது . ‘சொற்களிலிருந்து அர்த்தங்கள் மெளனத்துக்குத் திரும்பும் வழி இது.’
ஜெ. பிரான்சிஸ் கிருபா ஒரு தமிழ் நவீன கவிதை எழுத்தாளர். இவர் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர். பள்ளிப்படிப்பே பயின்றுள்ளார்.
இவர் கவிதை, புதினம் எழுதியுள்ளார். மல்லிகைக்கிழமைகள், ஏழுவால் நட்சத்திரம் எனும் கவிதை நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய கன்னி எனும் புதினம் 2007 ஆம் ஆண்டில் ஆனந்த விகடனின் சிறந்த புதினம் எனும் வகைப்பாட்டில் விருது பெற்றுள்ளது. 2008 ஆம் ஆண்டுக்கான நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருது பெற்றவர்.
படைப்புகள்
புதினம் கன்னி
கவிதை தொகுப்புகள் மல்லிகைக் கிழமைகள் சம்மனசுக் காடு ஏழுவால் நட்சத்திரம் நிழலன்றி ஏதுமற்றவன் மெசியாவின் காயங்கள் வலியோடு முறியும் மின்னல்.
விருதுகள் சுந்தரராமசாமி விருது - கவிதைக்கான விருது (2008) சுஜாதா விருது - சம்மனசுக்காடு (2017) மீரா விருது ஆனந்த விகடன் விருது
வாழ்வின் மீட்சி! அன்பு... அவ்வளவு பிடித்த புத்தகம் ஆக மாறியது..🌻 ஏதோ தொலைந்து விட்ட ஒன்றை கண்டடையும் பொருட்டு உண்டாகும் சந்தோஷம் ஒவ்வொரு கவிதைகளும் உண்டு. எப்பொழுதெல்லாம் வாழ்வு கசந்து கொண்டிருக்கிறது என்று எண்ணுகிறேனோ அப்பொதெல்லாம் இவரின் கவிதைகளை எடுத்து வாசித்து மீண்டும் இவ்வாழ்வின் மீதும் ஒரு ஆவல் கொள்ள செய்யும்! அன்பு.
புத்தகம்: ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள் ஆசிரியர்: ஜெ.பிரான்சிஸ் கிருபா
தலைப்பு: கவிதைத் தொகுப்பு
ஜெ.பிரான்சிஸ் கிருபா அவர்களின், ‘மெசியாவின் காயங்கள்', 'வலியோடு முறியும் மின்னல்', நிழலின்றி ஏதுமற்றவன்', 'மல்லிகைக் கிழமைகள்', 'ஏழுவால் நட்சத்திரம்' ஆகிய ஐந்து தொகுதிகளையும் ஒரே நூலாக பிரசுரிக்கப்பட்ட புத்தகம் இது.
“என் உலகளவு எனக்கன்பு”
என்று முடியும் அவரின் ‘போதும்’ என்ற கவிதையை இணையத்தில் வாசித்து, கவிஞரின் வார்த்தைகளில் காதல் கொண்டு, அந்த புத்தகத்தை சென்னை புத்தகக் கண்காட்சியில் தேடிப் பிடித்து, புத்தகம் கையில் வந்து சில வருடங்கள் ஆகின்றன. ஒரு முறை தொடங்கி ஐம்பது பக்கங்கள் தாண்ட முடியாமல் வைத்துவிட்டேன்.
காரணம் - என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை !!!!
ஆம், நெடுக்கவிதைகளில் பத்து வரிகளில் இருக்கும் இருபது சம்பந்தமற்ற வர்ணனைகள் கொண்டு அவர் எதைச் சொல்ல முயல்கிறார் என்று இரண்டு மூன்று முறை வாசித்து புரிந்து கொள்ள முயன்று, தோற்று, மறுபடியும் நிறுத்தலாம் என்று தோன்றியது.
ஆனால் குறைந்த பட்சம் எந்த கவிதைக்காக இந்த புத்தகத்தை தேடித் தேடி வாங்கினேனோ, அதை வாசிக்கும் வரையாவது புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற பிரயர்த்தனப்படும் வேளையில்,
"இச்சன்னல் வழியே தெரிவது வானத்தின் ஒரு பகுதிதான்" என்றான்
முழுவானமும் தெரியும் வசமாய் ஒரு ஜன்னல் செய்ய முடியுமா?
என்பது போன்ற அழகான புரிந்து கொள்ள முடிகின்ற சிறு கவிதைகளும், அந்த புரிந்து கொள்ள முடியாத பெரிய கவிதைகளையும் அழகாக்கும்,
“மழையில் நனையும் வெயில்”
“அடுத்த கட்டமில்லாத ஒரு கட்டத்தில்”
என்பன போன்ற சொல்லாடல்கள் புத்தகத்தை மூடவிடாமல் கைகள் பக்கங்களோடு பறக்க, 94 ஆம் பக்கத்தில் நான் தேடிய கவிதை!!!
*போதும்*
“ஒரு துண்டு பூமி இரண்டு துண்டு வானம் சிறு கீற்று நிலவு சில துளிகள் சூரியன் ஒரு பிடி நட்சத்திரம் கால்படிக் கடல் ஒரு கிண்ணம் பகல் ஒரு கிண்ணிப்பெட்டி இருள் மரக்கூந்தல் காற்று நூலளவு பசும் ஓடை குடையளவு மேகம் ஒரு கொத்து மழை குட்டியாய் ஒரு சாத்தான் உடல் நிறைய உயிர் மனம் புதைய காதல் குருதி நனைய உள்ளொளி இறவாத முத்தம் என் உலகளவு எனக்கன்பு.”
அதை வாசித்த போது அத்தனை மகிழ்ச்சி !!! எத்தனை எளிமையான வரிகள்?
ஆனால் இது போல் இந்த முழு புத்தகமும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
‘போதும்’ என்ற கவிதையைத் தேடிய என்னை ‘போதும் போதும்’ என்ற அளவுக்கு இந்த புத்தகம் வைத்து செய்துவிட்டது!!
வெண்முரசு நீலத்தில் அதீத வர்ணனைகளால் , ஒரு வருடத்துக்கு வெண்முரசையே கைவிடும் சூழல் வந்தது. அளவுக்கு மிஞ்சிய அமுதம் நஞ்சானது போல திகட்ட வைத்து விட்டார் ஜெ.மோ.
அதே போல் இந்த கவிதை என்னதான் சொல்ல வருகிறது என்று புரியாமலே வாசித்து வாசித்து,வாசிப்பையே வெறுக்கும் நிலைக்கு இந்த புத்தகமும் தள்ளிவிட்டது என்பதே உண்மை.
இதை அழகாக இரசித்து உணர்ந்து கொண்ட பலர் இருக்கலாம். ஆனால் என்னால் முடியவில்லை. அதே நேரத்தில் புத்தகம் இறுதி வரை வாசித்ததன் காரணம்.
“அவள் அவள் வெளிச்சம் அவள் அவளுக்கு”
“சிறகுகளில் இத்தனை வண்ணங்கள் கொண்டிருந்த வண்ணத்துப் பூச்சியின் பிரிந்துபோன உயிரில் எத்தனை எத்தனை வண்ணங்கள் இருந்திருக்கும்?”
போன்ற அழகான வரிகள் தான். நா.மு போன்ற எதார்த்த கவிஞர்களின் வரிகளில் எளிதாக ஒன்றிப்போய் ரசிக்க முடிந்த அளவுக்கு, இவரின் கவிதைகளில் ரசித்து வாசிக்க முடியவில்லை என்பது எனக்கும் வருத்தம் தான்.
தலைப்புகளே அழகான ஹைக்கூ கவிதைகளாய், இயற்கை வர்ணனைகள் அழகு சேர்த்தாலும், பொருள் புரியாத கவிதைகளின் குவியலாகவே இந்த புத்தகம் எனக்குத் தோன்றியது!!!
என்றேனும் மீண்டும் வாசிக்கும் போது இந்த புத்தகத்தை நான் ரசிக்கக் கற்றுக் கொள்ளலாம். இல்லை அது நடக்காமலும் போகலாம்…..
wonderful collections of poetry, a lot of poems are in surrealist style I like that very much. A set of poems has rain as a main character while reading those poems I personally felt that if rain comes outside of my window means the entire situation will be so catharsis. But that didn't happen, but I love to read these poems. And it is very easy for beginners to read poems like me.
வாழ்க்கையில் எதுவும் இல்லாத போதும் எதோ ஒன்று இவ்வாழ்வினை நகர்த்தி செல்வதற்கு பற்றுகோலாக இருப்பது போல... கசப்பான நாட்களின் போது கிருபாவின் கவிதைகள் ஒரு கோப்பை மதுரசம் போல மனதினை ஆட்கொண்டு விடுகிறது 🫠